அரசியல் நுழைவு
1922 இல் வேல்ஸ் எனும் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும் வேல்ஸ் இளவரசரை வரவேற்க நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால் சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரித்தானிய இளவரசரின் வருகையை இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். மும்பை துறைமுகத்தை வேல்ஸ் இளவரசர் வந்தடையும் போது நாடு முழுதும் எதிர்க்க காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கில அரசாங்கம் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.
இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும் வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது கல்கத்தாவில் மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்து. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோஸை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு போஸின் தலைமையிலான தொண்டர் படையை சட்ட விரோதமானது என அறிவித்து, போஸையும் சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் ஜவகர்லால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கைதானதால் மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும் கொல்கத்தாவில் மறியல் சிறப்புற மக்களால் நடக்கப் பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ் 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது காந்தியும் ஒத்துழையாமை இயக்கத்தையும், வரிகொடா இயக்கத்தையும் விரிவுபடுத்தியிருந்தார்.
