அண்ணியாள் அவதி

bookmark

கணவனை இழந்தபின் புகுந்த வீட்டில் மாமியார், கொழுந்திமார் பேசும் பேச்சுத் தாங்க முடியாது போய்விட்டது. சில நாட்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்று அவள் பிறந்த வீடு சென்றாள். அங்கே அண்ணிமார்கள் `தவித்த வாய்க்குத் தண்ணீர் ஊற்ற`க்கூட மனமி்ல்லாமல் முகத்தைச் சுளிக்கிறார்கள். மழை பெய்து செடிக்குப் பாயும் தண்ணீரைக் கூட குடிக்கவிட அவர்களுக்கு மனமில்லை. புகுந்த வீட்டில் உள்ள உரிமைகூட பிறந்த வீட்டில் இல்லாது போய் விட்டது. சில ஆண்டுகள் முன்பு வரை சட்டப்படி அவளுக்கு ஒரு உரிமையும் இல்லைதானே ! சமூக வழக்கப்படி இன்னும் பிறந்த இடத்தில் தாய் தந்தையர் மறைவுக்குப் பின் மகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இதை எண்ணி அழுதுகொண்டே அவள் புகுந்த வீட்டிற்குத் திரும்பி விடுகிறாள்.

பொன்னு மழை பெய்யும்
பூஞ்செடிக்கு நீர் பாயும்
பொறந்த எடத்துத் தண்ணியின்னும்
பூந்து குளிக்கப் போன
பெரியண்ணிங்கிறவ
பூச்சி விழுந்திச்சு இன்னா
புதுப்பாசி கப்பிச்சுன்னா
போட்டேனே பொந்தியிலே
புடிச்சனே தடம் வழியே !
தங்க மழை பெய்யும்
தாமரைக்கு நீர் பாயும்
வளர்ந்த வீட்டுத் தண்ணியின்னும்
வாரிக்குடிக்கா போனா
சின்னண்ணி இங்கிறவ
வண்டு படர்ந்ததின்னா
மலைப் பாசி கப்பிச்சின்னா
வடிச்சனே கண்ணீரை
வந்திட்டான் வளநாடு.

வட்டார வழக்கு : பொறந்த-பிறந்த ; இன்னும்-என்றும் ; பூந்து-புகுந்து ; என்கிறவள்-இன்னா என்றாள் ; பொந்தி-வயிறு ; புடிச்சன்-பிடித்தேன் ; கப்பிச்சின்னா-கப்பித்து என்றாள் ; படர்ந்ததின்னா-படர்ந்தது என்றாள்.

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
-----------