நகர் நீங்கு படலம் - 1715

bookmark

1715.    

‘சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே?
எத்தனைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை
பத்தும் நாலும் பகல் அலவோ?’ என்றான்.

     ‘நீ சித்தம் திகைக்கின்றது  என்? -  தாயே,  நீ மனம் தடுமாறுவது
எதனால்; தேவரும் - தேவரும்;  ஒத்த - தம் நிலைக்குப் பொருந்திய;
மாதவம் செய்து -சிறந்த தவத்தைச் செய்து; உணர்ந்தார் அன்றே? -
தம் நிலைக்கு மேலாகஉயர்ந்தார்கள் அல்லவா; ஆண்டுகள் எத்தனைக்கு
உள - (நான் பிரிந்து செல்கிற)ஆண்டுகள் எவ்வளவு உள்ளன;  அவை
பத்தும் நாலும் பகல் அல்லவோ? - அந்தப் பதினான்குஆண்டுகளும்,
பதினான்கு நாள்கள் அல்லவா? (இதற்கு வருந்துவானேன்.)

     ‘நான் காட்டிற் சென்று தவம் புரிந்து  மேன்மை அடைய அல்லவா
போகிறேன்!  இதற்கு  நீமனம் தடுமாறலாமா’ என்று தாயைத் தேற்றினான்.
ஆண்டுகளை நாள்கள் என்று  குறுக்கியது தேறுதல்வார்த்தை யாகும்.
“எண்ணிய சில நாளில் குறுகுதும்’ என்று பின் (1984) குகனிடமும் இவ்வாறு
கூறுல் காண்க.                                                21