நகர் நீங்கு படலம் - 1714

1714.
‘வரி வில் எம்பி இம் மண் அரசு ஆய், அவற்கு
உரிமை மா நிலம் உற்றபின், கொற்றவன்
திருவின் நீங்கித் தவம் செயும் நாள், உடன்,
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே!
‘வரிவில் எம்பி - கட்டமைந்த வில்லினை உடைய என்தம்பி பரதன்;
இம் மண்அரசு ஆய் - இந்தக் கோசல நாட்டுக்கு அரசன் ஆகி;
அவற்கு - அந்தப் பரதனுக்கு; மாநிலம் உரிமை உற்றபின் - பெரிய
இராச்சியத்தின் உரிமை நிலைப்பட்ட பிறகு; கொற்றவன் - தயரதன்;
திருவின் நீங்கி - அரச போக வாழ்க்கையிலிருந்துவிலகி; தவம்
செய்யும் நாள் - தவம் செய்கின்ற காலத்தே; உடன் - அவனோடு
சேர்ந்து; அருமை நோன்புகள் - செயற்கரிய விரதங்களை; ஆற்றுதி
ஆம் -செய்வாயாக.’
வரத்தால் அரசன் ஆயினும், மக்கள் அவன் வழிப்படவும் அவன்
ஆட்சி உறுதி பெறவும்சிலகாலம் செல்லுமாகலின், ‘மாநிலம் உரிமை
உற்றபின்’ என்றான் இராமன். வானப்பிரந்தநிலையில் மனைவியை
உடன்கொண்டு தவம் செய்தல் உண்டாதலின் உடன்சென்று அரிய
விரதங்களைச்செய்க என்றானாம். ‘அன்று’ , ‘ஏ’ அசைகள். 20