நகர் நீங்கு படலம் - 1788

1788.
புண் உற்ற தீயின்
புகை உற்று உயிர் பதைப்ப,
மண் உற்று அயர்ந்து
மறுகிற்று, உடம்பு எல்லாம்,;
கண் உற்ற வாரி
கடல் உற்றது; அந் நிலையே,
விண் உற்றது, எம் மருங்கும்
விட்டு அழுத பேர் ஓசை.
உடம்பு எல்லாம் -மக்கள் உடல்கள் எல்லாம்; புண் உற்ற தீயின்-
புண்ணில் பட்ட நெருப்புப் போல; புகை உற்று - அனல் மூச்சு விட்டு;
உயிர் பதைப்ப- உயிர் துடிதுடிக்க; மண் உற்று - நிலத்தில் பொருந்தி;
அயர்ந்து -சோர்ந்து; மறுகிற்று - சுழன்று புரண்டது; கண் உற்ற வாரி -
கண்ணிலிருந்து வந்தநீர்ப்பெருக்கு; கடல் உற்றது - கடலாகப் பெருகியது;
எம் மருங்கும் - எப்பக்கத்திருந்தும்; விட்டு அழுத பேரோசை -
(எல்லோரும்) வாய்விட்டு அழுத குரல் ஒலி;விண் உற்றது - வானத்தை
அடைந்தது.
‘உடம்பு எல்லாம் மறுகிற்று’ ஒருமை பன்மை மயக்கம். தொகுதி
ஒருமை எனக் கூறி வழாநிலைஎனலும் ஆம். கண்ணீர்ப் பெருக்கு கடலைச்
சென்று அடைந்தது எனலும்ஆம். 93