நகர் நீங்கு படலம் - 1774

1774.
‘ “ஐயா! யான் ஓர் அரசன்;
அயோத்தி நகரத்து உள்ளேன்;
மை ஆர் களபம் துருவி,
மறைந்தே வதிந்தேன், இருள்வாய்;
பொய்யா வாய்மைப் புதல்வன்
புனல் மொண்டிடும் ஓதையின்மேல்,
கை ஆர் கணை சென்றதுஅலால்,
கண்ணின் தெரியக் காணேன்.
‘ஐயா! - சுவாமி; யான் அயோத்தி நகரத்து உள்ளேன் ஓர்
அரசன் -அயோத்தி நகரத்தில் உள்ள ஓர் அரசனாவேன்; மைஆர்
களபம் துருவி மறைந்து வதிந்தேன்- கருமை பொருந்திய யானையைத்
தேடி மறைந்து தங்கியிருந்தேன்; இருள்வாய் -இருட்டில்; பொய்யா
வாய்மைப் புதல்வன் - சத்திய வாக்கினை உடைய உங்கள் மகன்; புனல்
மொண்டிடும் ஓதையின்மேல் - நீரை முகக்கும் ஓசையினிடமாக; கை
ஆர் கணைசென்றது அலால் - கையில் உள்ள அம்பு சென்றதே
அல்லாமல்; கண்ணில் தெரியக்காணேன்’ - (நீர் முகப்பாரைக்) கண்ணில்
விளங்கப் பார்த்தறியேன்’ ஆயினேன்.
ஓசையின் மூலம் அம்பு எய்தேன். பார்த்து எய்தேனில்லை என்பதால்
அறிவுபூர்வமாகநிகழ்ந்த கொலை அன்று என்றானாம். ‘மறைந்தே’ ‘ஏ’
காரம் தேற்றம். 80