நகர் நீங்கு படலம் - 1747

கவிக்கூற்று
கோசலையின் பெருந்துயர்
1747.
‘போவாது ஒழியான்' என்றாள்,
புதல்வன் தன்னை; கணவன்
சாவாது ஒழியான் என்று என்று,
உள்ளம் தள்ளுற்று அயர்வாள்;
‘காவாய்' என்னாள் மகனை;
கணவன் புகழுக்கு அழிவாள்;
ஆ! ஆ! உயர் கோசலை ஆம்
அன்னம் என் உற்றனளே!
புதல்வன்தன்னை- மகனாகிய இராமனை; ‘போவாது ஒழியான்'
என்றாள் - வனம் போகாமல் இருக்கமாட்டான் என்று சொன்னாள்;
கணவன் ‘சாவாது ஒழியான்' என்று என்று-(அப்படி இராமன் காடு
செல்லின்) கணவனாய தயரதன் சாகாமல் இருக்க மாட்டான் என்று கருதி;
உள்ளம் தள்ளுற்று அயர்வாள் - மனம் தடுமாறிச் சோர்வாள்;
‘மகனைக் காவாய்' என்னாள் - வனம் போகாமல்இருந்து தந்தையின்
உயிரைக் காப்பாற்றுவாய் என்று மகனைப் பார்த்துச் சொல்லமாட்டாள்;
கணவன்புகழுக்கு அழிவாள் - தயரதனது புகழுக்குக்கேடு வருமோ
என்று மனம் வருந்துவாள்; ஆ! ஆ!- ; உயர்கோசலை ஆம்
அன்னம் - உயர்ந்த கோசலையாகிய அன்னம் போல்வாள்; என்
உற்றனள் - என்ன துன்பப்பட்டாள்.
மகனைத் தடுத்தால் கணவன் புகழுக்கு அழிவு, மகனைத் தடுக்காது
விட்டால் கணவன் உயிர்க்குஅழிவு. இரண்டில் எதனையும் செய்ய
இயலாது உள்ளம் தடுமாறினாள். ஆ! ஆ! இரக்கக் குறிப்பு.அந்தோ,
ஐயகோ என்னும் பொருளது. 53