நகர் நீங்கு படலம் - 1745

1745.
மாற்றாள் செயல் ஆம் என்றும்,
கணவன் வரம் ஈந்து உள்ளம்
ஆற்றாது அயர்ந்தான் என்றும்,
அறிந்தாள்; அவளும், அவனைத்
தேற்றா நின்றாள்; மகனைத்
திரிவான் என்றாள்; ‘அரசன்
தோற்றான் மெய்' என்று, உலகம்
சொல்லும் பழிக்கும் சோர்வாள்.
மாற்றாள் செயல் ஆம் என்றும்- (இது) மாற்றாளாகிய கைகேயியின்
செயலாகும் என்றும்; கணவன் வரம் ஈந்து உள்ளம் ஆற்றாது
அயர்ந்தான் என்றும் - கணவனாய தயரதன்கைகேயிக்கு வரம் கொடுத்து
அதனால் மனம் பொறுக்கமாட்டாமல் சோர்வடைந்தான் என்றும்;
அறிந்தாள் - அறிந்துகொண்ட; அவளும் - கோசலையும்; அவனைத்
தேற்றாநின்றாள் - தசரதனைத் தெளிவித்த வண்ணமிருந்தாள்; மகனைத்
திரிவான்என்றாள் - தன் மகனாகிய இராமனைப் பற்றி அவன்
காட்டகத்தே திரிவான் (வேறு வழிஇல்லை)எனத் தன்னுள் சொல்லிக்
கொள்வாள்; ‘அரசன் மெய் தோற்றான்' என்று - தசரதன்சத்தியத்தில்
தவறினான் என்று; உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் - உலகத்தார்
சொல்லும் பழிச்சொல் கருதியும் மனம் சோர்கின்றவளானாள்.
மகனைக் காட்டுக்குப் போக வரம் ஈந்து மன்னன் இறந்துபடும்
நிலையில் வருந்துகிறான். மகனைக் காட்டுக்குச் செல்ல வேண்டாம்
என்றாலோ மன்னன் சத்தியம்தவறினான் என்று உலகம் பழி சொல்லும்;
என்கின்ற அறச் சங்கடத்தில் அகப்பட்டுத்தவிக்கிறாள் கோசலை
என்றவாறாம்.