கடிமணப் படலம் - 1284

bookmark

1284.    

வெண்குடை இள நிலா விரிக்க. மின் எனக்
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட.
பண் குடை வண்டினம் பாட. ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப. - ஏகினான்.
 
வெண்குடை  இளநிலா  விரிக்க  -  வெண்   கொற்றக்   குடை
இளநிலவின் ஒளிவீச;  மின் எனக்  கண்குடை  இனமணி வெயிலும்
கான்றிட  -  மின்னல் போன்று. காண்பாருடைய  கண்களைக் கூசுமாறு
(நிலவொளியேயன்றி)  வெயிலின்  ஒளியையும்  அக்குடை  வீச;  குடை
வண்டினம் பண்பாட - மலர்களைக்  குடைகின்ற வண்டினங்கள்  பண்
இசை     பாட;  ஆடல்  மா  மண்குடை  தூளி  விண்  மறைப்ப
எய்தினான்   -   வெற்றிக்   குதிரைகள்   மண்ணைக்    கால்களால்
மிதித்தலால்   உண்டான   புழுதி  வானத்தை   மறைக்கத்   (தசரதன்)
வந்தடைந்தான்.

மங்கல    நிகழ்ச்சிகளின்    அணிவகுப்பில்    வருவதற்கு   எனப்
பயிற்றுவிக்கப்பட்ட  ஆடற்குதிரைகள்.  நிலம் புழுதிபட  ஆடி  வந்தன
என்பார்.  “ஆடல்மா  மண் குடை தூளி  விண் மறைப்ப  எய்தினான்”
என்றார்.                                                  40