கடிமணப் படலம் - 1281

1281.
விடம் நிகர் விழியாரும்.
அமுது எனும் மொழியாரும்.
கிடை புரை இதழாரும்.
கிளர் நகை வெளியாரும்.
தட முலை பெரியாரும்.
தனி இடை சிறியாரும்.
பெடை அன நடையாரும்.
பிடி என வருவாரும்.-
விடநிகர் விழியாரும்- (விரும்பாதார்க்கு) நஞ்சினையொத்த
கண்ணினரும்; அமுது எனும் மொழியாரும் - (விரும்புவார்க்கு)
அமுதினை யொத்த மொழியினரும்; கிடைபுரை இதழாரும் - சிவந்த
நெட்டியை யொத்த உதட்டினை யுடையாரும்; கிளர்நகை வெளியாரும்
- விளங்கும் பற்களோ வெண்ணிறமாக உடையாரும்; தடமுலை
பெரியாரும் - அகன்ற தனங்களின் பெருமை கொண்டவர்களும்;
தனிஇடை சிறியாரும் - தனித்தன்மை வாய்ந்த மிகச்சிறிய
இடையினை உடையவர்களும்; பெடை அன நடையாரும் - பெண்
அன்னத்தின் நடையினை யுடையவர்களும்; பிடி என வருவாரும் -
பெண்யானையைப் போல நடந்து வருபவர்களும் (ஆகிய பெண்டிர்
எங்கும்) (ஆயினர்).
ஒவ்வோர் அடியிலும் முரண் தொடையிட்டுப் பெண்மையினை
வர்ணித்துள்ள திறம் ஓர்க. விடம் என அவர்களை வெறுத்து விடற்கு
இல்லை; அருகிலேயே அமுதனைய மொழியும் உண்டு என்பார்.
“விடநிகர் விழியாரும். அமுதெனும் மொழியாரும்” என்றார். 37