கடிமணப் படலம் - 1278

1278.
கதிர் மணி ஒளி கால.
கவர் பொருள் தெரியாவாறு.
எதிர் எதிர் சுடர் விம்முற்று
எழுதலின். இளையோரும்.
மது விரி குழலாரும்.
மதிலுடை நெடுமாடம்
அது. இது. என ஓராது.
அலமரல் உறுவாரும்.*
கதிர் மணி ஒளி கால- ஒளிக்கற்றைகளையுடைய மாணிக்கங்கள்
ஒளியை உமிழ்தலால்; கவர்பொருள் தெரியாவாறு - கண் ஒளி சென்று
பற்றக் கூடிய பொருள்கள் தெரியாத வண்ணம்; எதிர் எதிர் சுடர்
விம்முற்று எழுதலின் - எதிர்வருவார் அணிகளின் ஒளி. அவர்கட்கு
எதிர் வருவார் அணிகளின் ஒளியோடு மோதி எதிர்ஒளித்துப்
பரவுவதால்; இளையோரும் மதுவிரி குழலாரும் மதிலுடை நெடு
மாடம் அது இது என ஓராது - (கண்கள் கூசுவதால்)
அந்நகரத்து இளைஞர்களும். தேன்வண்டுகள் மொய்க்கும் கூந்தலுடைய
மங்கையரும் தங்கள் தங்கள் மதில் சூழ்ந்த நெடியமாட வீடு அதுவோ
இதுவோ என அறியமாட்டாது; அலமரல் உறுவாரும் - மனஞ்
சுழல்பவர்களும் (ஆயினர்).
ஒளியும் ஒளியும் மோதி ஒளிமுறிவு ஏற்படுங்கால் இடையுள்ள
பொருள்கள் தெரியா எனும் ஒளியியல் தத்துவம் தெளிவுற
உரைக்கப்பட்டிருத்தல் காண்க. மணிஒளிகால. எதிர் பொருள்
தெரியாவாறு. சுடர் விம்முற்று எழுதலின். அது இது என ஓராது.
அலமரல் உறுவார் எனக் கூட்டுக. 34