கடிமணப் படலம் - 1275
1275.
மன்னவர் வருவாரும். மறையவர் நிறைவாரும்.
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும்.
சென்னியர் திரிவாரும். விறலியர் செறிவாரும்.
கன்னலின் மண வேலைக் கடிகைகள் தெரிவாரும்.
மன்னவர் வருவாரும் - (திருமணத்திற்கென) அரசர்கள் வந்து
சேர்பவர்களும்; மறையவர் நிறைவாரும் - வேதியர்கள் வந்து
நிறைபவர்களும்; இன்இசை மணியாழின் இசைமது நுகர்வாரும் -
இனிய இசை பொழிகின்ற அழகிய யாழ் இசையெனும் தேனை
நுகர்பவர்களும்; சென்னியர் திரிவாரும் - (இன்னிசை பாடியவாறே)
பாணர்கள் (எங்கும்) சஞ்சரிப்பவர்களும்; விறலியர் செறிவாரும் -
விறல்படப் (பாணர்பாட்டுக் கேற்ப) ஆடும் விறலியராகிய மகளிர்
நெருங்குவாரும்; கன்னலின் மண வேலைக் கடிகைகள் தெரிவாரும்-
நாழிகை வட்டில்களைக் கொண்டு. திருமண நேரத்தைத் (துல்லியமாக)
ஆராய்ந்து கொண்டிருப்பவர்களும் (ஆயினர்.)
வருவாரும் நிறைவாரும். நுகர்வாரும். திரிவாரும். செறிவாரும்.
தெரிவாரும் எனும் வினைகளை அடுக்கியே மணம் நிகழவுள்ள
மிதிலை நகரின் ஆரவாரத்தையும். ஆர்வத்தையும் துடிப்பையும்
கற்பார் மனக்கண்முன் கொண்டுவந்து காட்டி விடுகிறார். 31
