கடிமணப் படலம் - 1267

1267.
அன்ன மென் நடையாரும்.
மழ விடை அனையாரும்.
கன்னி நல் நகர். வாழை
கமுகொடு நடுவாரும்.
பன்ன அரு நிறை முத்தம்
பரியன தெரிவாரும்.
பொன் அணி அணிவாரும்.
மணி அணி புனைவாரும்.
அன்ன மெல் நடையாரும்- அன்னம்போல் நடக்கும் நடையுடைய
(மிதிலைநகரப்) பெண்டிரும்; மழவிடை அனையாரும் -
இளமைபொருந்திய காளைகளின் பீடுநடையுடைய ஆடவரும்; கன்னி
நல் நகர் - பிற மன்னரால் வெற்றி கொள்ளப்படாத அந்நன்னகரில்
எங்கும்; வாழை கமுகொடு நடுவாரும் - வாழை மரங்களையும் கமுக
மரங்களையும் கொண்டுவந்து நாட்டுபவர்களும்; பன்ன அரு நிறை
முத்தம் பரியன தெரிவாகும் - விலைகூற முடியாத மதிப்புடைய
நிறைந்த முத்துக்களில். பெரியனவாகவுள்ள முத்துக்களைத் தேர்ந்து
எடுத்து அணிந்துகொள்வார்களும்; பொன் அணி அணிவாரும் -
பொன்னால் ஆன அணிகளே (போதுமென)
அணிந்துகொள்பவர்களும்;மணி அணி புனைவாரும்- மணியால் ஆன
அணிகளே (எமக்கு வேண்டும் என)அலங்கரித்துக்கொள்பவரும்(ஆயினர்).
சுவையும் விருப்பமும் மாந்தர்க்கு மாந்தர் வேறுபடுவன ஆதலின்.
“பொன் அணி அணிவாரும். மணி அணி புனைவாரும்” என்றார்.
பெண்மையின் மென்மையும். ஆண்மையின் வன்மையும் இணைகிற
போது. உலகு அழகு சிறத்தலால். “அன்ன மென்நடையாரும்.
மழவிடையனையாரும்” என இணைத்துள்ள அழகுத்திறம் காண்க.
அவர்களை வாழ்நாளில் மிகப்பெரிய திருநாள் இதுவே யாதலால்.
இருக்கும் முத்துக்களில் பெரிய முத்துக்களை அணியத் தேடுகின்றனர்
என்பார். “பன்னரும் நிரைமுத்தம் பரியன தெரிவாரும்” என்றார்.
ஏராளமான விலை மதிப்பு உரைக்க அரிய முத்துவளம் ஒவ்வோர்
இல்லத்திலும் உண்டு எனப் பொருள்வளம் சுட்டுவார். பன்னரு
நிறைமுத்தங்களுள் பரியன தேடுவார் என்றார். 23