கடிமணப் படலம் - 1259

1259.
‘கழியா உயிர் உந்திய காரிகைதன்
விழி போல வளர்ந்தது; வீகிலதால்;
அழி போர் இறைவன் பட. அஞ்சியவன்
பழி போல. வளர்ந்தது - பாய் இருளே!
பாய் இருள் - எங்கும் பரவியுள்ள இருளானது; கழியா உயிர்
உந்திய காரிகை தன் விழிபோல வளர்ந்தது; வீகிலதால் - என்
உடலினின்றும் நீங்காத உயிரை வெளியே உந்தித் தள்ளும் சீதையின்
விழியின் கருமை போல வளர்ந்து நின்றது; குறையும் பாட்டைக்
காணோம்; இறைவன் அழிபோர் பட அஞ்சியவன் பழி போல
வளர்ந்தது - (தன்னைக் காத்த) மன்னன் அழிகின்ற போரில்
பகைவரால் மரணம் உற. தன் உயிருக்கு அஞ்சி (அவனைப்
பாதுகாவாமல் கைவிட்டோடிய) ஒரு படை வீரனின் பழி வளர்வது
போல் (மேன்மேலும்) வளர்ந்தது.
‘புரந்தார் கண் நீர் மல்கச் சாக’ (குறள். 780) வேண்டியவன. ஊறு
வந்தபோது தலைவனைக் கைவிட்டு. உயிர் கொண்டோடிய பழி.
உலகம் உள்ளளவும் தேயாது வளரும் எனும் நீதியுரைத்தவாறு. “அமர்
அகத்து ஆற்று அறுக்கும் கல்லாமா அன்னார் தமரில் தனிமை தலை”
(814) என்னும் திருக்குறள். போரில் தலைவனுக்காக உயிர் தருபவன்
நடுக்கல்லாய்க் காலத்தை வென்று நிற்பான்; கைவிட்டோடியவன்
படுபழியாய்க் காலம் உள்ளளவும் நிற்பான்; காலம் செல்லச் செல்ல
அவன் பழி வளரும் என்றவாறு. பருகிய நோக்கு எனும் பாசத்தால்
(கம்ப. 516) பிராட்டி பிணித்து. கண்ணொடு கண்ணிணை கல்வி
நோக்கிய நோக்கு எனும் நுதிகொள் வேல் இணையால் (கம்ப. 515)
பிராட்டி பெருமானைத் தாக்கித் துயருறுத்தி உள்ளாள் ஆதலால்.
“கழியா உயிர் உந்தியகாரிகை” என்றான். `அவள் விழி நடத்திய
போராட்டம் நெஞ்சில் நிலைத்திருப்பதனால். உயிர் உந்திய காரிகை
தன் விழி போல் இருள் வளர்ந்தது என்றான். “கடலினும் பெரிய
கண்கள்” (கம்ப. 3136) அவட்கு அன்றோ? - உவமையணி. 15