ஆறுசெல் படலம்

ஆறுசெல் படலம்

bookmark

அயோத்தியா காண்டம்

இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

ஆறு செல் படலம்

(இராமன் காட்டிற்குப் பயணப்பட்டுச் சென்ற வழியில் பரதனும் அவனைச் சார்ந்தவர்களும் செல்வதைச் சொல்கிற படலம் என்பது ஆறு செல் படலம் என்பதன் பொருளாகும். ஆறு - வழி.)

வஷிஸ்டன் பரதன் மருங்குள்ளான் என்றறிந்த மந்திரத் தலைவர்கள் அங்கு வந்து சேர்கிறார்கள். மூத்த அமைச்சனாகிய சுமந்திரன் குறிப்பை உணர்ந்த வஷிஸ்டர் பரதனைநோக்கி அரசு ஏற்று உலகைக் காப்பாற்றக்கோருகிறார். பரதன் அது கேட்டு உளம் நடுங்கி மனம் வெதும்பி இந்நாட்டுக்கு இனி இராமனே அரசன்; அவனைக் கொண்டுவந்து முடிசூட்டிக் காண்பதே முறை; அது இயலாவிடின் அவனோடு காட்டில் தவம் செய்வேன்; வேறு கூறின் உயிரை விடுவேன் என்கிறான். அது கேட்ட அரசவையோர் மகிழ்ச்சி அடைந்து பரதனைப் பாராட்டுகிறார்கள். இராமனை அழைத்துவரச் சத்துருக்கனன் மூலம் முரசு அறைவிக்கிறான் பரதன், முரசொலி கேட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் புறப்படுகிறான். இடையில் உடன்வந்த கூனியைச் சத்துருக்கனன் பற்றிக்கொல்ல முயல, பரதன் தடுக்கிறான். பரத சத்துருக்கனர்களும் உடன் வந்தோரும் இராமன் முன்பு தங்கிய சோலையில் தங்குகிறார்கள். இரவு தங்கிப் பின்னர் ஊர்திகளில் செல்லாமல் இராமன் நடந்து சென்ற வழியில் சேனைகள் தொடரப் பரதன் நடந்து செல்கிறான் என்னும் செய்திகள் இங்குக் கூறப்படின்றன.

பரதனைச் சுற்றி எல்லோரும் சூழ்ந்து இருந்தனர். அப்பொழுது சுமந்திரரும் அங்கு வந்தார். அவர் பரதனை ராஜ்ஜியம் ஆளச் சொல்லுமாறு வசிஷ்ட முனிவரைப் பார்த்தார். சுமந்திரரின் கண்ஜாடையை உணர்ந்தார் வசிஷ்ட மாமுனிவர். பின்னர் பரதனின் அருகில் சென்றார், "பரதா! இனி ராஜ்யத்தைக் காப்பது உனது கடமை. அதனைச் சொல்லத் தான் நாங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளோம். அரசன் இல்லாத இராஜ்ஜியம் பாழ், இது நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டும் என்பதல்ல. நீயே இதனை நன்கு உணர்ந்தவன். எந்த ஒரு நாடும், மன்னன் இல்லாமல் ஆளப்பட்டு நாங்கள் கண்டதும் இல்லை, கேள்விப் பட்டதும் இல்லை. மேலும், மன்னன் இல்லாத நாடு சூரியன் இல்லாத பகல் போன்றது, சந்திரன் இல்லாத இரவு போன்றது. ஆகவே நீயே இந்த அரசை ஆள வேண்டும்.

பரதனே, நீ ஒருவேளை இந்த ராஜ்யத்தை ஏற்க மறுத்தால், கடல் நடுவே உடைந்த கப்பல் போல, அரசன் இல்லாத நம் நாடும் பகைவரால் பெரும் துன்பத்துக்கு ஆளாகும். எனவே பொறுப்பு உணர்ந்து செயல் பட வேண்டிய இடத்தில் இருக்கிறாய், இதனை நீ மறவாதே. மேலும் இந்த அரசு உனது தாய் பெற்றது. எனவே, உனக்கே உரிமை உள்ளது. ஆதலால் உன் தாயால் வேண்டப்பட்டு, உன் தந்தையும் உன் தமையனும் கொடுக்க உனக்கு உரிமை ஆகிய இந்த இராஜியத்தை நீ அனுபவிப்பாயாக! எங்கள் கருத்தும் இதுவே!" என்று கூறினார் வஷிஸ்டர்.

வஷிஸ்டர் பெருமானின் சொல் கேட்ட பரதன் மிகவும் வருந்தினான். அவன் கண்கள் செந்நீரைக் கண்ணீராக வெளிப்படுத்தியது. "நீ விஷத்தை விழுங்கு" என்று வற்புறுத்த, அப்போது நடுங்குபவர்களைக் காட்டிலும் அதிகமாக பரதன் நடுங்கினான். பின்னர் அவன் என்ன முடிவெடுத்து இருக்கிறான் என்று கேட்க நின்று இருந்த சபையினரைப் பார்த்து மெல்லிய குரலில் வருத்தம் இழையூட, "மூத்தவன் இருக்க இளையவனாகிய நான் முடி புனைதல் தருமமே என்று இந்த வசிஷ்ட முனிவர் சொல்வாரேயானால், அப்பொழுது என் தாயின் செயலும் தவறாகாது! என் தாயின் கொடுஞ்செயலை நல்லது என்று அங்கீகரித்து என்னை அரசு புரியும் படி சொல்கிறீர்கள். ஆகவே, இது துரோகமில்லை அது போல துவாபரயுகமும் இல்லை. கலிபுருஷனின் ஆட்சியைக் கொண்ட தீய ஒழுக்கம் கொண்ட நான்காவது யுகமான கலியுகமே என்று நான் கருத வேண்டி இருக்கிறது.

மூத்தவர் இருக்கப் பின்னோர் அரசை மேற்கொள்வது, திருமால் தொடங்கி இன்று வரையில் உள்ள அரசரில் ஆராய்ந்துப் பார்த்தால் எங்குமே காணக் கிடைக்காதது. அப்படி ஒருவேளை இருந்தால் எனக்கு நிரூபித்துக் காட்டுங்கள். ஒரு கால் நீங்கள், உங்கள் கொள்கையை சொல் வண்மையால் நிலை நாட்டினாலும் நான் அதற்கு உடன்படமாட்டேன். கானகம் செல்வேன், அண்ணன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை அழைத்து வருவேன். அவருக்கே இம்முடியைச் சூட்டுவேன். இதுவே எனது லட்சியம். இதில் இருந்து நான் ஒரு போதும் பின் வாங்கமாட்டேன்! அப்படி ஒரு வேளை என்னால் இது முடியாவிட்டால், நானும் அண்ணனைப் போல கானகம் சென்று தவ வாழ்க்கை வாழத் தொடங்குவேன். என் அண்ணனுக்குக் கிடைக்காத ராஜ்ஜியம் எனக்கு மட்டும் எதற்கு?. அது மட்டும் அல்ல, நான் கொண்ட இந்த சபதத்தை யாராவது மாற்ற வேண்டும் என்று நினைத்தால், நான் உயிர் நீப்பேன்" என்றான்.

பரதனின் இந்த வார்த்தையைக் கேட்டு சபையினர் அனைவரும் அவனது நற்குணத்தை எண்ணி வியந்தார்கள். சிலர் பரதனின் செயலை வாய் விட்டே பாராட்டினார்கள். மேலும் சிலர் அவனை வாழ்த்தினார்கள். இருந்தாலும் பரதன் மனதில் அமைதி இன்றித் தவித்தான், அவன் சொல்லிய சொல்லுக்கு செயல் வடிவம் தரத் துடித்தான். அவன் இராமபிரானை அழைத்து வரும் விஷயமாய் ஆழ்ந்து சிந்தித்த படி இங்கும், அங்கும் உலாவித் திரிந்தான். பின்னர் பரதன், "நான் ஒருவனே அண்ணன் இராமபிரானை அழைத்து வரச் சென்றால், ஏதேனும் காரணம் சொல்லி அவர் என்னைத் திருப்பி அனுப்பினாலும் அனுப்பக் கூடும். தம்முடைய பிரிவால் வருந்தி அழும் மக்களைக் கண்டால், கருணாமூர்த்தி ஆகிய அவர் கண்டிப்பாக நகருக்குத் திரும்பி வருவார்" என்று சிந்தித்தவாறு ஒரு முடிவுக்கு வந்தான்.

பரதன் உடனே தனது அருமைத் தம்பி சத்துருக்கனனை அழைத்து, "சத்துருக்கனா! அயோத்தியைக்கு அரசனாக வேண்டிய நமது அண்ணன் இராமபிரானை கானகம் சென்று அழைத்து வரப் போகிறோம். இதனை நாட்டு மக்களுக்கும் தெரிவித்து, உடனே நமது பெரும் சேனையை தயார்படுத்து" என்று கூறினான்.

தமையனின் கட்டளைப் படி அந்தச் செய்தியை யாவருக்கும் அறிவித்தான் சத்துருக்கன். அது கேட்ட மக்கள் உயிரற்ற உடல் அமுதம் உண்டு உயிர் பெற்றது போல, மீண்டும் ராமபிரான் வரப்போவதை எண்ணி மகிழ்ந்தனர். சிலர் ஆரவாரத்துடன் ஆடிப் பாடினர்.

மறுகணமே இராமபிரானை அழைத்து வர பெரும் சேனை அயோத்தியில் இருந்து புறப்பட்டது. அதனுடன் அயோத்தியின் மக்களும் சேர்ந்து கொண்டனர். பல நாட்டு அரசர்களும் இராமனை அழைத்து வருவதில் சந்தோஷித்து அயோத்தியின் சேனையுடன் கலந்து கொண்டனர். இவ்வாறு இராமபிரானை அழைத்து வர புறப்பட்ட சேனையின் எண்ணிக்கை சுமார் அறுபத்தி ஆறாயிரம் அக்ரோணி சேனைகள் ஆகும் (ஓர் அக்ரோணி சேனை என்பது, 21870 தேர்கள்; 21870 யானைகள்; 65610 குதிரைகள்; 109350 காலாட்படைகள் அடங்கியது ஆகும்).

சேனைகள் புறப்பட்டு இராமபிரான் எந்த திசை வழியாகச் சென்றாரோ அந்தத் திசையை நோக்கிச் சென்றன. அந்தப் பெரும் சேனையைக் காண்போருக்கு, இந்த பூலோகத்திலேயே வெற்றிடம் இல்லையோ! என்று தோன்றும் படி செய்தது. அச்சேனையால் கிளம்பிய புழுதிப் படலம் பிரம்ம லோகம் வரை சென்று பிரம்மனின் கண் பார்வையையே மறைத்தது. சீதை தொடர்ந்து வர காடு சென்ற இராமரைப் போல, அந்தச் சேனையில் பெண் யானைகள் தொடர்ந்து வர ஆண் யானைகள் சென்றன. வானளாவ அச்சேனையால் எடுத்துச் செல்லப்பட்ட கொடிகள் பறந்தன. ஆனால், தசரதர் மாண்டு போனதால், எந்த வித மங்கள வாத்தியங்களும் முழங்கப்படவில்லை. அயோத்திப் பெண்கள் பலரும் அந்த சேனையுடன் உடன் சென்றார்கள், அப்பெண்களும் துக்கத்தின் காரணமாக எந்த ஒரு நகைகளையும் அணிந்து கொள்ளவில்லை.

சேனையைத் தொடர்ந்து, மரவுரி தரித்த பரதன் தன் தம்பி சத்துருக்கனுடன் தேரில் சென்றான். புறப்பட்ட சில நேரத்தில் பரதனுடைய தேர் அயோத்தி மாநகரின் மதில் வாயிலை அடைந்தது. பரதனின் தேரைத் தொடர்ந்து முனிவர்களும், அமைச்சர்களும், சுற்றத்தவரும், அந்தணர்களும் சென்றார்கள். அச்சமயத்தில் பயணப்பட்டுச் செல்பவரைத் தள்ளிக் கொண்டு கூனிக் கிழவி மந்தரை செல்வதை சத்துருக்கன் கண்டான். உடனே ரதத்தை விட்டு இறங்கி ஓடிச் சென்று அவளைப் பிடித்துக் கீழே தள்ளினான். மேலும், அவளைச் சித்திரவதைக்கு உள்ளாக்குவதற்குள் அதனைக் கண்ட பரதன் தேரில் இருந்து இறங்கி வந்து தம்பியைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான். "சத்துருக்கனா! நமது தமையனார் காடு செல்ல இந்தக் கூனி மட்டும் காரணமில்லை. என் தாயும் தான்! இந்த இருவர் மேலும், எனக்கு நிறைய கோபமும் வெறுப்பும் உண்டு. ஆனாலும், இவர்களை நான் கொள்ளாமல் உயிரோடு விட்டு இருக்கிறேன். காரணம் என்ன? நாம் இவர்களைக் கொள்வதை ஸ்ரீ ராமர் ஒருகாலும் விரும்பமாட்டார். அதனால்தான் எப்படியோ என் கோபத்தையும், வெறுப்பையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றேன். நீயும் இப்பொழுது உன் கோபத்தையும் வெறுப்பையும் கட்டுப்படுத்திக் கொள்!" என்று கூறினான்.

உடனே தமையனின் கட்டளைப்படி சத்துருக்கன் ஒருவாறு தன் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டான். இதனால் சற்று நேரம் தடைப்பட்ட அவர்களது பயணம் மீண்டும் தொடர்ந்தது. வெகு நேரம் கடந்தவுடன் முன்பு காட்டுக்குச் சென்று ஸ்ரீ ராமர் தங்கிய சோலையை சேனைகள் அடைந்தன. பரதனும் தனது தம்பியுடன் அந்த இடத்தை அடைய, அச்சமயம் ஆதவனும் மறைய இரவு வந்தது.

சுமந்திரரால் சொல்லிக் கேள்விப்பட்ட பரதன் அந்தச் சோலையைக் கண்டு கண்ணீர் வடித்தான். ஒருவாறு மனம் தேறிக் காய்கிழங்கு கனிகளை உண்டு, முன்பு இராமர் படுத்த அதே புழுதி தங்கிய இடத்தில் புல் படுக்கை அமைத்துப் படுத்தான். மறுநாள் காலையில் எழுந்த பரதன், ஸ்ரீ ராமர் அந்தச் சோலையில் இருந்து கால் நடையாகவே பயணம் சென்றதை எண்ணித் தானும் தேர் நீங்கி கால் நடையாகவே எல்லோரும் தன்னைத் தொடர்ந்து வர கங்கையை நோக்கி நடந்தான்!