திருக்கன்றாப்பூர் – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

611

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா

மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்
நாதனே யென்றென்று பரவி நாளும்

நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு

வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்
காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.1

612

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி

வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்

செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்

சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.2

613

எவரேனுந் தாமாக விலாடத் திட்ட

திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே அவரவரைக் கண்ட போது

உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி

இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.3

614

இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்

திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு

மெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்

உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.4

615

விருத்தனே வேலைவிட முண்ட கண்டா

விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி

நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்

புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.5

616

பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்

பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்

பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்

வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.6

617

ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு

ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி

மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு

அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.7

618

திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்

திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்

கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பருதிதனைப் பற்பறித்த பாவ நாசா

பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

6.61.9

619

குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்

கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந்

தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி
முனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும்

முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

6.61.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நடுதறிநன்னாயகர்,
தேவியார் - மாதுமைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்