திருக்குற்றாலம்

பண் - குறிஞ்சி
1069
வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள்.
1.99.1
1070
பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங்
கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள்.
1.99.2
1071
செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக
நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள்.
1.99.3
1072
பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன்
கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம்
அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும்
நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள்.
1.99.4
1073
மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி
குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம்
இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த
சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.
1.99.5
1074
மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக்
கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங்
கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம்
பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.
1.99.6
1075
நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக்
கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங்
காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெஞ்
சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.
1.99.7
1076
போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக்
கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம்
மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த
நாதன்மேய நன்னகர்போலு நமரங்காள்.
1.99.8
1077
அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று
குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்
பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.
1.99.9
1078
பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம்
இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.
1.99.10
1079
மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்
கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.
1.99.11
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குறும்பலாவீசுவரர், தேவியார் - குழல்வாய்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்