திருப்பாம்புரம்

bookmark

பண் - தக்கராகம்

437

சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்

திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்

மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்

கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர்

பாம்புர நன்னக ராரே.

1.41.1

438

கொக்கிற கோடு கூவிள மத்தங்

கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக

அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்

விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்

பாம்புர நன்னக ராரே.

1.41.2

439

துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்

சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்

பித்தராய்த் திரியுமெம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும்

மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்

பாம்புர நன்னக ராரே.

1.41.3

440

துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்

சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்

நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட

மாடமா ளிகைதன்மே லேறி
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்

பாம்புர நன்னக ராரே.

1.41.4

441

நதியத னயலே நகுதலை மாலை

நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக்

கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி

செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும்

பாம்புர நன்னக ராரே.

1.41.5

442

ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்

ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல்

மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய

அலைகடல் கடையவன் றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர்

பாம்புர நன்னக ராரே.

1.41.6

443

மாலினுக் கன்று சக்கர மீந்து

மலரவற் கொருமுக மொழித்து
ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி

அனலது ஆடுமெம் மடிகள்
காலனைக் காய்ந்து தங்கழ லடியாற்

காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள்

பாம்புர நன்னக ராரே.

1.41.7

444

விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க

மெல்லிய திருவிர லூன்றி
அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்

அனலது ஆடுமெம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட

வந்திழி அரிசிலின் கரைமேற்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்

பாம்புர நன்னக ராரே.

1.41.8

445

கடிபடு கமலத் தயனொடு மாலுங்

காதலோ டடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்

தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடையமரர் முனிகணத் தவர்கள்

முறைமுறை யடிபணிந் தேத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும்

பாம்புர நன்னக ராரே.

1.41.9

446

குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்

குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்

கையர்தாம் உள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க

வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்

பாம்புர நன்னக ராரே.

1.41.10

447

பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த

பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக்

கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான

சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்

சிவனடி நண்ணுவர் தாமே.

1.41.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாம்புரேசர்,
பாம்புரநாதர் என்றும் பாடம். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை,
வண்டார்பூங்குழலி என்றும் பாடம்.

திருச்சிற்றம்பலம்