மாலை பொருத்தமில்லை

bookmark

தன் மகளை தன் தம்பிக்கு மணம் செய்து வைப்பதனால் தனது பிறந்த வீட்டுச் சொந்தம் தன்னுடைய பரம்பரைக்கும் உறவு நெருக்கமாகி,சொந்தம் விட்டுப் போகாமல் இருக்கும் என்பதற்கும் தான் உடன் பிறந்தவளாதலால், தன் தம்பி நன்றாக கவனித்துக் கொள்வான் என்றெண்ணி மணம் செய்து வைக்கிறாள் தாய். ஆனால் தான் எண்ணியதற்கு மாறாகத் தன்னுடைய மகள் சந்தோஷப்படாமல் துன்பமான வாழ்க்கை நடத்துகிறாள் என்பதை அறிவதற்கு முன் இவ்வுலகைவிட்டுப் போய்விட்டாள். மகள் தாய் இறந்த துக்கத்துடன் தன் துக்கத்தையும் கூறி அழுகிறாள். தனது தாய் மாமன் வீடு தனக்கு ஆடுமாடு போன்ற மிருகங்கள் அடைக்கும் பட்டியாகத் தோன்றுகிறதேயன்றி மனிதர்கள் வாழக்கூடிய இடமாகத் தோன்றவில்லை என்பதையும் குறிப்பிடுகிறாள்.

மாதா பொறந்த இடம்
மல்லியப்பூ கச்சேரி
மாலைப் பொருத்தமில்லை-எனக்கு
மாமன் வீடு சொந்தமில்லே
தாயார் பொறந்த இடம்
தாளம்பூ கச்சேரி
தாலி பொருத்தமில்லே-எனக்கு
தாய் மாமன் சொந்தமில்லே
மாட டைக்கும் பட்டியிலே-நீ பெத்த
மங்கை யாளப் போட்டடைச்சு
மாடு படும் தும்பமெல்லாம்-இந்த
மங்கை பட்டு நிக்கிறனே
ஆடடைக்கும் பட்டியிலே-நீ பெத்த
அல்லியாளைப் போட்டடைச்சி
ஆடு படும் தும்ப மெல்லாம்-இந்த
அல்லி பட்டு நிக்கறனே.

வட்டார வழக்கு : தும்பம்-துன்பம் ; நிக்கிறனே-நிற்கிறேனே.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
-----------