நகர் நீங்கு படலம் - 1806

இலக்குவன் சீற்றநிலை (1806-1814)
இலக்குவன் சினம்
கலித்துறை
1806.
கேட்டான் இளையோன்;
‘கிளர் ஞாலம் வரத்தினாலே
மீட்டாள்; அளித்தாள் வனம்
தம்முனை, வெம்மை முற்றி;-
தீட்டாத வேல் கண் சிறு
தாய்’ என, யாவராலும்
மூட்டாத காலக்
கடைத் தீ என மூண்டு எழுந்தான்.
இளையோன் - இளைய பெருமாளாகிய இலக்குமணன்; ‘தீட்டாத
வேல் கண்சிறு தாய் - (இயல்பில் கூர்மை உடைய) தீட்டப் படாத வேல்
போன்ற கண்ணை உடையசிற்றன்னையாகிய கைகேயி; வெம்மை முற்றி -
கொடுமை மிகுந்து; கிளர் ஞாலம் -விளங்குகின்ற பூமியை; வரத்தினாலே
மீட்டாள் - அரசனிடம் பெற்ற வரத்தால்(தன்மகன் பரதன் பக்கமாக)
திருப்பிக்கொண்டாள்; தம்முனை - தன் அண்ணனாகியஇராமனுக்கு;
வனம் அளித்தாள்.’ காட்டைக் கொடுத்தாள்; என - என்று;கேட்டான் -
கேள்விப்பட்டு; யாவராலும் மூட்டாத - ஒருவராலும் உண்டாக்கப்படாத
(இயற்கைச் சீற்றம் ஆகிய); காலக் கடைத்தீ என - ஊழி இறுதியில்
உண்டாகும் பெருநெருப்பு என்று சொல்லும்படி; மூண்டு எழுந்தான் -
சீற்றம் மிகுந்து எழுந்தான்.
மீட்டல்- இராமனிடம் சென்ற அரசாட்சியைப் பரதனுக்குத் திருப்பியது.
‘தம்முனை -உருபுமயக்கம் - நான்காவதன்கண் இரண்டாவது வந்தது.
‘தமன்முனுக்கு’ என வரும். 111