நகர் நீங்கு படலம் - 1799

bookmark

1799.    

கையால் நிலம் தடவி,
     கண்ணீர் மெழுகுவார்
‘உய்யாள் போல் கோசலை’ என்று,
     ஓவாது வெய்து உயிர்ப்பார்;
‘ஐயா! இளங்கோவே!
     ஆற்றுதியோ நீ’ என்பார்;
நெய் ஆர் அழல் உற்றது
     உற்றார், அந் நீள் நகரார்.

     அந்நீள்நகரார் - அந்தப் பெரிய அயோத்தி நகரத்தில் உள்ளவர்கள்;
கையால் நிலம் தடவிக் கண்ணீர் மெழுகுவார் -கையால் தரையைத்
தடவித் தம் கண்ணீர்கொண்டு அதனை மெழுகுவாராயினர்; ‘கோசலை
உய்யாள்’ என்று - ‘இனிக் கோசலை பிழைக்கமாட்டாள்’ என்று சொல்லி;
ஓவாது வெய்து உயிர்ப்பார் - இடைவிடாமல்வெப்பப் பெருமூச்சு
விடுவார்கள்;  ‘ஐயா! இளங்கோவே! நீ ஆற்றுதியோ?- ‘ஐயனே
இளைய அரச குமாரனாகிய இலக்குவனே நீ இதனைப் பொறுத்துக்
கொள்வாயோ; ’ என்பார் -; நெய் ஆர் அழல் உற்றது உற்றார்-நெய்பொருந்திய நெருப்பில் விழுந்தால் ஒத்த தன்மையை அடைந்தார்கள்.

     ‘போல ’் என்பது  உரையசை. ‘ஆங்க உரையசை’  ஒப்பில் போலியும்
அப்பொருட்டாகும்’(தொல்.சொல்.279, 280) என்னும் நூற்பாக்களைப்
பார்த்து அறிக.  இராமன்பால் அன்பிற்செறிந்தவன் ஆதலின் இராமனுக்கு
வந்த தீங்கை இலக்குவன் பொறுத்துக்கொண்டு சும்மா இரான்என்பது
மக்கள் கணிப்பு.                                              104