நகர் நீங்கு படலம் - 1790

1790.
‘ஆ! ஆ! அரசன் அருள்
இலனே ஆம்’ என்பார்;
‘காவா, அறத்தை இனிக்
கைவிடுவேம் யாம்’ என்பார்; -
தாவாத மன்னர் -
தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார்;
மா வாதம் சாய்த்த
மராமரமே போல்கின்றார்.
தாவாத மன்னர் - (வலி) அழியாத அரசர்; ஆ! ஆ! - அந்தோ!
அந்தோ; அரசன் - தசரதன்; அருள் இலன்ஆம்’ - இரக்கம்
இல்லாதவன்; என்பார்-; யாம் இனி அறத்தைக் காவா கைவிடுவேம்’-
நாங்கள் இனிமேல் தருமத்தைப்பாதுகாக்காமல் கைவிட்டு விடுவோம்;
என்பார்-; மா வாதம் சாய்த்த மராமரமேபோல்கின்றார் - பெருங்
காற்றால் வீழ்த்தப்பட்ட ஆச்சா மரத்தைப் போன்றவராய்;தலைத் தலை-
மண்மேல்; வீழ்ந்து ஏங்கினார் - விழுந்து அழுதார்.
தயரதன் தருமம் காத்து அவலத்திற் பட்டதால், இனி இத்தருமத்தை
யாமும் கைவிடுவோம் என்றார். ‘இலனே’ ‘ஏ’ காரம் தேற்றம். தலைத் தலை-
முதல்தலை இடப்பெயர். இராண்டாவது தலை ஏழன் உருபு - தாமிருந்த
இடத்தின்கண் விழுந்து அழுதார் ’என்பது பொருள். 95