நகர் நீங்கு படலம் - 1761

தயரதன் நிலை
தயரதன் நிலையும் கோசலை புலம்பலும்
1761.
முனிவன் சொல்லும் அளவில்,
‘முடியும்கொல்?’ என்று, அரசன்
தனி நின்று உழல் தன் உயிரைச்
சிறிதே தகைவான்; ‘இந்தப்
புனிதன் போனால், இவனால்
போகாது ஒழிவான்’ என்னா,
மனிதன் வடிவம் கொண்ட
மனுவும் தன்னை மறந்தான்.
முனிவன் சொல்லும் அளவில் - முனிவன் இவ்வாறு (இராமனை
வனம்போகாது தடுப்பேன்)என்று சொல்லுகின்ற போது; ‘முடியும் கொல’-
(இது இவனால்) முடியும்போலும்; என்று-எனக் கருதி; அரசன்- தயரதன்;
தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகைவான்- தனியாக நின்று
(வருந்துகிற) போவது வருவதாய் உள்ள தன்னுடைய உயிரைச் சிறிதளவு
தடுத்து நிறுத்தி; இந்தப் புனிதன் போனால் - இந்த வசிட்டன் போய்ச்
சொன்னால்; இவனால் போகாது ஒழிவான்' என்னா - இவன்
சொற்கேட்டு இராமன்வனம் போகாமல் தங்குவான் என்று கருதி; மனிதன்
வடிவம் கொண்ட மனுவும் - மானுடவடிவம் தாங்கியுள்ள வைவஸ்வத
மனுச் சக்கரவர்த்தியாகிய தயரதனும்; தன்னை மறந்தான் -
நினைவிழந்தான்.
வசிட்டன் வார்த்தை கேட்டு நம்பிக்கை எய்திப் போகிற உயிரைத்
தடுத்து நிறுத்திமூர்ச்சையானான் தயரதன். வைவஸ்வதமனு - சூரியன்
மகன் - தயரதன் குலத்து முன்னோன்.ஆட்சிச் சிறப்பாலும், ஆற்றல்
முதலியவற்றாலும் அவனை ஒத்தவன் என்றார். 67