தாலாட்டு: வா, பசுவே வா

bookmark

தாய் தன் மகனது வருங்காலப் புகழில் ஈடுபடுகிறாள். இவன் வருங்காலத்தில் துரைமகனாவானோ கைநிறைந்த புத்தகத்தைக் கையில் எடுத்துப் போதிக்கும் ஆசிரியனாவானோ? எப்படியாவது புகழ் பெற்று வாழப் போகும் இவனுக்கு பால் கொடுக்கும் பசுவிற்கும் பெருமை உண்டல்லவா? அப்பெருமையைத் தேடிக்கொள்ள பொழுதிறங்க ஓடிவாவென்று தாய் பசுவை அழைக்கிறாள்; முதற் பாடல் நெல்லை மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடல் சேலம் மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடலில் மருமகன் பால்குடிக்க மாமன் தங்கச் சங்கு செய்தளித்த விவரம் கூறப்படுகிறது தமிழ்நாட்டில் sஇப்பொருள் பரவலாக பாடப்படுகிறது.

கண்ணே கண்மணியே 
கண்ணுறங் காயோ!

காரவீடோ கச்சேரியோ, 
கைநிறைந்த புத்தகமோ! 
ஸ்ரீ வில்லிபுத்தூர் கச்சேரியோ, 
செல்லத் துரைமகனோ! 
மானுறங்கும் மெத்தை, நீ 
மயில் உறங்கும் பஞ்சுமெத்தை 
தான் உறங்கா என் கண்ணே 
தவம் பெற்று வந்தவனோ! 
பட்டால தொட்டில், 
பவளக் கிலுகிலுப்பை
முத்தாலா பரணம் 
முடியப் பிறந்தவனோ! 
மலையேறிப் பசுமேய 
மலைக்கெல்லாம் ஓசையிட 
பொழுதிறங்க வா பசுவே என் 
பொன்னு மகன் பால்குடிக்க 
மலை மேலே பசு மேயும் 
மலைமுடியும் ஓசை விடும் 
காலையிலே வா பசுவே 
கண்ணு மகன் பால் குடிக்க 
பொழுதுறங்க வா பசுவே 
என் பொன்னு மகன் பால் குடிக்க

மாட்டுப் பால் போட்டால் 
மறுவழிஞ்சு போகுமின்னு: 
ஆட்டுப்பால் போட்டா 
அறிவழிஞ்சு போகுமின்னு: 
கலையம் கழுவி 
காராம் பசுக் கறந்து 
அடுப்பு மொழுவி 
அரும்பரும்பாக் கோலமிட்டு
செம்பு வெளக்கி 
சிறு உமி பரப்பி 
தங்க வெற கொடிச்சு 
வெங்கலத்தால் பால் காச்சி
பொன்னு சங்கெடுத்து
போட்டாராம் உன் மாமன்
இத்தனையும் செய்வதற்கு 
என்ன வெகுமதியோ
கிண்ணத்திலே சந்தனமாம் 
கிளிமூக்கு வெத்திலையாம் 
சருகைத் தலைப்பாவாம் 
ஜாடை செய்யும் சால்வையாம்

வட்டார வழக்கு: மொழுவி-மெழுகு போட்டா-புகட்டினால்.

சேகரித்தவர் ம. கிருஷ்ணன் 
இடம்: போத்தனூர், சேலம் மாவட்டம்.
அனுப்பியவர்: கு. சின்னப்ப பாரதி 
-----------