கடிமணப் படலம் - 1289

bookmark

மண்டபம் அண்டகோளத்தை ஒத்தல்

மண்டபம் அண்ட கோளம் ஆதல்
 
1289.    

புயல் உள. மின் உள. பொரு இல் மீன் உள.
இயல் மணிஇனம் உள. சுடர் இரண்டு உள.
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம்.
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே.
 
மயன்  முதல் திருத்திய மணிசெய்  மண்டபம் -  மயன்  எனும்
தெய்வச்   சிற்பியால்.   ஆதியிலே   செப்பமுற  மணிகள்    பதித்துச்
செய்யப்பட்ட  (அந்த)  மணமண்டபத்தில்;  புயல்உள  -   (கைம்மாறு
கருதாமல்      கொடை     கொடுக்கும்    தன்மையுள்ளோர்    பலர்
கூடியிருத்தலால்)  மேகங்கள்  உள்ளன;  மின்  உள -  (ஒளி மயமான
ஒல்கி   ஒசியும்   மெல்லியலார்   பலர்    உள்ளமையால்)    (அங்கு)
மின்னல்கள்  உள்ளன;  பொருஇல்  மீ்ன்  உள  -  (புகழ்)  ஒளிரும்
மன்னர்கள்   பலர்   கூடியுள்ளமையால்   ஒப்பற்ற   நட்சத்திரங்களும்
(அங்கு)  உள்ளன; இயல்மணி இனம் உள - (அவர்கள்  அணிந்துள்ள
மாணிக்க  அணிகளின் வகையினால்) நவரத்தினக்  குலங்களும்  (அங்கு
உள்ளன;  சுடர் இரண்டு உள - (சூரிய குலத் தசரதனும் சந்திர  குலச்
சனகனும்   இருத்தலால்)   சூரிய  சந்திரர்   எனும்   இரண்டு  சுடர்க்
கடவுள்களும்  அங்கு  உள்ளனர்;  அயன் முதல் திருந்திய அண்டம்
ஒத்ததே  -  (ஆதலால்.  அம்  மண்டபம்)   நான்முகனால்  ஆதியில்
அழகுறப் படைக்கப்பட்ட அண்ட கோளம் போலவே இருந்தது.

மயன்:  தெய்வத் தச்சன். “மயன் முதல்  தெய்வத்  தச்சரும்” (கம்ப.
96);  மண்டபம்  ஒன்றை.  அண்ட  கோளமாக  ஆக்கிக்  காட்டுகிறார்.
வான்வெளியில்    உள்ள   முகில்.     மின்னல்.    சூரிய   சந்திரர்.
நட்சத்திரங்கள்.  கோள்கள்  ஆகியன   அங்கு   இருப்பதனால். மயன்
படைத்த   மண்டபம்   அயன்   படைத்த    அண்டம்    என்பற்குத்
தட்டில்லை   என   நிரூபித்தவாறு.  புயல்   உள  என்பதற்கு.  மேகம்
போன்ற   மகளிர்   கூந்தல்கள்    உள  எனினுமாம்.   தயரதனையும்
சனகனையும் சூரிய சந்திரராக  “சந்திரன் இரவி  தன்னைச்  சார்வதோர்
தகைமை தோன்ற” (1032) என எதிர்கொள் படலத்தும் உரைப்பார்.   45