கடிமணப் படலம் - 1283

தயரதன் மணமண்டபம் அடைதல் ((1283-1284))
மணவினை மண்டபத்திற்குத் தயரதன் வருகை
(வேறு) கலிவிருந்ததம்
1283.
கரை தெரிவு அரியது. கனகம் வேய்ந்தது.
வரை என உயர்ந்தது. மணியின் செய்தது.
நிரைவளை மணவினை நிரப்பு மண்டபம்.
அரைசர்தம் அரசனும் அணுகல் மேயினான்.
கரை தெரிவு அரியது- (அகல நீளங்களின்) எல்லை தெரியக்
கடினமானதும்; கனகம் வேய்ந்தது - பொன் வேயப்பட்டதும்; வரை
என உயர்ந்தது - மலை போன்று உயர்ச்சியுடையதும்; மணியின்
செய்தது - மாணிக்கங்கள் பதிக்கப்பட்டதும்; நிரை வளை மண வினை
நிரப்பு மண்டபம் - வரிசையாக வளையல்கள் அணிந்தவளான
சீதையின் திருமண நிகழ்வுகளுக்குரிய மங்கலப் பொருள்களை நிரப்பி
வைத்துள்ளதுமான அந்த மண மண்டபத்தை; அரசர் தம் அரசனும்
அணுகல் மேயினான் - அரசர்க்கரசனாகிய தசரத வேந்தனும்
வந்தடைந்தான்.
நிரைவளை - அன்மொழித் தொகை. சீதையைக் குறித்தது - உயர்வு
நவிற்சியணி. 39