இராவணன் மந்திரப்படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
இராவணன் மந்திரப்படலம்
(எரியுண்ட இலங்கையை மயன் புதுப்பித்தலும், இராவணன் ஆலோசனை மண்டபத்தில் வீற்றிருத்தலும், முனிவர் முதலியோரை விலக்குவதும், எல்லாத்திசைகளிலும் வீரர்களைக் காவலுக்கு நிறுத்துவதும், இராவணன் பேசுவதும், படைத்தலைவர் பேசுவதும், கும்பகருணன் கூற்றும், அதற்கு இராவணன் இசைவதும், இந்திரஜித் 'வென்று வருவேன்' என்று கூறுவதும், அவன் கூற்றைக் கண்டித்து விபீஷணன் பேசுவதும் - விபீஷணன் இராவணனுக்கு மேலும் சில உறுதி மொழிகளைக் கூறுவதும் இராவணன் மறுமொழியும். விபீஷணன் இரணியனது சரிதம் கூறத் தொடங்குவதும் இப்படலத்துள் காணப்படும் செய்திகளாகும்)
அனுமனால் எரிந்து போன இலங்கை நகரத்தை மீண்டும் பழைய அழகைக் காட்டிலும், கம்பீரமாக உருவாக்க அரக்க சிற்பியான மயனை அழைத்து கட்டளை பிறப்பித்தான் இராவணன். இராவணனின் கட்டளையை ஏற்ற மயன், இலங்கையை மீண்டும் பழைய கம்பீரத்துடன் நிர்மாணித்துத் தந்தான். அது கண்ட தேவர்களும் வியந்து நின்றனர். இராவணனும் மயனால் உருவாக்கப்பட்ட தன்னுடைய நகரத்தின் எழிலை நோக்கி வியந்தான். மகிழ்ச்சியுடன் மயனுக்கு வேண்டியவற்றை கொடுத்து அனுப்பினான். மயனும், இராவணனிடம் மகிழ்ச்சியாக விடை பெற்றுச் சென்றான்.
ஒருவழியாக அனைத்தும் நல்ல படியாக முடிந்தவுடன். தனக்கே உரிய அழகான இராஜசபையில் இரத்தினத்தால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்தான் இராவணன். இனி என்ன செய்வது? என்ற சிந்தனையில் மூழ்கிக் கொண்டு இருந்தான் அவன். அப்போது இராவணனின் பரிவாரங்கள் அனைத்தும் அவனைச் சூழ்ந்து இருந்தன. அதில், அவனது சுற்றத்தவரும், மந்திரிகளும், சேனைத் தலைவர்களும், தேவசாதியினரும், முனிவர்களும், மகளிரும், சிறுவர்களும் கூட இருந்தனர்.
வெகு நேரம் யோசித்துக் கொண்டு இருந்த இராவணன் ஒரு முடிவுக்கு வந்தான். அதைக் குறித்து உடனே தனது அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்க விரும்பினான். அதனால், அவன் முனிவர்களையும், தேவ சாதியினரையும், மகளிரையும், சிறுவர்களையும் சபா மண்டபத்தில் இருந்து நீங்கிப் போகும் படி ஆணையிட்டான். அதன்படி அவர்கள் அனைவரும் வெளியேறினார்கள்.
மேலும், அப்போது இராவணன் தன்னிடத்தில் மிகுந்த அன்புடையவர்களும், வீரத்தில் சிறந்தவர்களுமான தனது இரு தம்பிகளையும், மகன்களையும், மற்றும் சிறந்த விசுவாசமுள்ள அரக்க வீரர்கள் மற்றும் மந்திரிகளையும் தனது ஆலோசனை மண்டபத்தில் அனுமதித்தான். தவிர போர் கலைகளில் வல்லவர்களான பெரும் வீரர்களை அந்த ஆலோசனை மண்டபத்தை சுற்றி காவல் காக்கும் படி பணித்தான். அந்த வீரர்கள் போர் கலைகளில் மட்டும் அல்ல, மாய வித்தைகளிலும் கை தேர்ந்தவர்கள்.
இவ்வாறாக மந்திராலோசனை மண்டபத்தில், அனைத்து ஏற்பாடுகளையும் நடத்தி முடித்து வெகு நேரமாக அமைதியாக அமர்ந்து இருந்த இலங்கேஸ்வரன் சபையோர்களைப் பார்த்து பேசத்தொடங்கினான். அவன் பேசிய வார்த்தைகள் வருமாறு. " இவ்வளவு பெரும் வீரர்கள் இருந்தும், எனது பெருமை ஒரு அற்பக் குரங்கால் சங்கடத்துக்கு உள்ளாகிவிட்டதே! இதை விட எனக்கு வேறு ஒரு இழிவு தான் வேண்டுமோ? இலங்கையை கொடிய நெருப்பானது உண்ணும் படி ஒரு குரங்கு தீ வைத்து சென்று விட்டதே! ஆனால், நம்மால் அந்தக் குரங்கை கொல்லக் கூட முடியவில்லையே!. ஒருவேளை, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாவது அந்தக் குரங்கின் கதையை அன்றே முடித்து வைத்து இருந்தீர்கள் என்றால், இச்சமயம், நானும் மகிழ்ந்து இருப்பேன், இந்த மந்திர ஆலோசனைக்கும் அவசியம் இருந்திருக்காது. ஆனால், என்ன செய்ய? அந்த பாக்கியம் தான் நமக்குக் கிடைக்கவில்லையே! இலங்கை மீண்டும் பழைய அழகுடன் புதிப்பிக்கப்பட்டாலுமே கூட, நாம் நமக்கு ஏற்பட்ட அவமானத்தை என்ன செய்ய? ஏனெனில் இறந்தவர்கள் அனைவரும் நம்மவர்கள். அதுவும், இந்த இராவனேஸ்வரன் உயிருடன் இருக்கும் போதே இவை அனைத்தும் நடந்துள்ளதே! அத்துடன், அந்தக் குரங்கு எனக்கு ஏற்படுத்திய அவமானத்தின் செய்தி வேறு, எட்டு திசையிலும் பரவி விட்டதே! அது கண்டு இப்போது தேவர்களும் நகைக்கின்றனரே! நான்கு அக்ரோணி சேனைகளை அல்லவா அந்தக் குரங்கு முற்றிலும் அழித்து விட்டு சென்றுள்ளது. அதனால், இன்னும் கூட இலங்கையில் இறந்த அரக்கர்களின் உடலில் இருந்து அன்று வெளியேறிய இரத்தத்தின் துர் வாடை வீசி வருகிறதே! மேலும், அதன் காரணமாக இப்போதும் கூட, கிணறுகளில் தண்ணீருடன் இரத்தமும் அல்லவா சேர்ந்து வருகிறது! என்ன கொடுமை?... என்ன கொடுமை?...
அன்று அந்தக் குரங்கு மூட்டிய அந்த நெருப்பு இப்போதும் கூட எனது மனதினில் எரிந்து வருகிறது. மங்கையர்களின் நறுமணமுள்ள கூந்தலில் இருந்து தீப்பற்றிய நாற்றம் இப்போதும் கூட வீசி வருவதைக் காணலாம்" என்றான்.
உடனே இராவணனின் வார்த்தைகளைக் கேட்ட சேனாதிபதி," வேந்தே! தங்களிடம் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. தயை கூர்ந்து அதனைக் கேட்பீராக! 'மனிதரை வஞ்சித்து சீதையைக் கவர்ந்தது வீரருடைய செயலாகாது. அஞ்சியவருடைய செயலாகும்' என்று முன்பே உமக்குத் தெரிவித்தேன். அதனை நீர் உணர்ந்து கொள்ளவில்லை. கரன் முதலிய பல்லாயிரக்கணக்கான அரக்க வீரர்களைக் கொன்ற கள்ளத்தனமுடையவரும், உமது தங்கை சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து எறிந்தவரும், நமக்குப் பழியை உண்டாக்குபவரான இராம லக்ஷ்மணரைத் தாங்கள் இன்னும் கொல்லவில்லை. அப்படியிருக்கிற நீர், உமது அரசாட்சி அழிந்தது என்று வருந்துகின்றீர் போலும்! தீங்கிழைத்த பகைவரைப் பொறுப்பதல்ல வீரத்திற்கு அழகு. அப்பகைவரை அழிப்பதே வீரத்திற்கு அழகாகும்.
மேலும் மன்னா! பகைவரைக் கொன்று குவிக்க வேண்டியிருக்க, அப்படிச் செய்யாது இலங்கையில் சுகமாகத் தங்கி இன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருப்போமானால், நம்மை எதிர்த்துப் போர் செய்வது என்பது ஒரு குரங்குடன் மட்டும் நின்றுவிடுமோ? இல்லை! ஒரு கொசுவும் நம்மை எதிரியாகக் கொண்டு போரிட வந்தால், அதைக் கூட போரிட்டு நம்மால் அழிக்க முடியாததாகிவிடும்! இலங்கையைக் கொளுத்திய அந்தக் குரங்கைத் தொடர்ந்து சென்று, அதனை அனுப்பியவர்களைக் கொன்று மனவருத்தம் நீங்கி இன்புறாமல், நிகழ்ந்தவற்றை எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பதாலும் என்ன பயன்? அவ்வாறே வாழ்ந்தோமானால், எஞ்சியுள்ள நமது வலிமையும் குறைந்துவிடும்!" என்று இராவணனின் மனத்தினில் படுமாறு அவன் கூறிமுடித்தான்.
பின்பு மகோதரன் எழுந்தான். அவன் கண்களில் கோபத் தீ பறக்க இராவணனை நோக்கி," கொற்றவனே! சேனாதிபதியின் வார்த்தைகளையே நானும் ஆதரிக்கிறேன். மேலும் அரசே அத்துடம் நான் சொல்வதையும் கேட்பீராக உமது வலிமையின் முன் தேவர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் அடங்கி விட்டார்கள். மும்மூர்த்திகள் கூட உங்களுக்கு பிரமன் அளித்த வரத்தின் காரணமாக எதிர்க்க வலிமை இன்றி இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? மற்றவர் உயிரைப் பறிக்கும் எமன் கூட தங்களிடத்தில் " நீயே எனது காவலன்" என்கிறான். அவனும் கூட உமது கட்டளையை சிரம் மேற்கொள்கிறான். ஈசனுடன், அந்தக் கைலாய மலையையே பெயர்த்து ஆட்டி வைத்தவர் தாங்கள். மேலும், முக்கண் ஈசன் மகிழும் படி சாமகானம் பாடியவர் தாங்கள். உமது பேராற்றலை சொல்ல இனியும் வார்த்தைகள் உண்டோ? இப்படிப் பட்ட நீர், அந்த அற்பக் குரங்கின் வலிமைக்கு முன் உமது தோள்வலிமையைக் குறைத்து எங்களிடம் சொல்வீர் போலும்! மூன்று உலகத்திலும் உம்மை வெல்லக் கூடிய ஆற்றல் யாருக்குத் தான் உள்ளது. அப்படி இருக்க, அற்ப குரங்கை வீழ்த்தவும், இரண்டு மனிதர்களை அழிக்கவும் நாம் இங்கு மந்திராலோசனை நடத்திக் கொண்டு இருப்பதை தேவர்கள் கேள்விப்பட்டால் நகைக்க மாட்டார்களோ?
மேலும், அந்தக் குரங்கை அழிக்க நான் ஒருவன் கூட போதுமே, இப்போதே ஆணையிடுங்கள் நான் போய் அந்தக் குரங்கை கொன்று வருகிறேன், அதுபோலவே, யாராலும் வெல்ல முடியாது என்று சொல்லும் அந்த மனிதர்களையும் தூக்கி வந்து உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்றான்.
மகோதரன் பேசி முடித்ததும், வஜ்ஜிரதந்தன் எழுந்தான்.அவன் இலங்கை வேந்தனை வணங்கி விட்டுத் தனது கருத்தை சொல்லத் தொடங்கினான்," இலங்கேஸ்வரா! ஏன், ஆலோசனை என்ற பெயரில் நேரத்தைக் கொல்ல வேண்டும்? உங்கள் ஆணைக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம். நீங்கள் சொன்னால், இப்போதே பகைவர்களைக் கொல்லப் புறப்பட்டுச் செல்கிறோம் இல்லை உங்களுக்கு அந்தப் பகைவர்கள் அனைவரும் உயிருடன் வேண்டும் என்றாலும் சொல்லுங்கள். நாங்கள் கொண்டு வந்து கொடுக்கிறோம். எங்களால், இதனை செய்ய முடியுமா என்று மட்டும் சந்தேகம் கொள்ளாதீர்கள். இலங்கையின் வேந்தன் இலங்கேஸ்வரனின் வீரர்கள் நாங்கள். எங்களால் செய்ய முடியாத காரியம் தான் உண்டோ? தாங்கள் உத்தரவு கொடுத்தால், இந்தப் பூமியில் குரங்கு இனமே இல்லாதபடி அழித்து விட்டு வருகிறோம்" என்றான்.
வஜ்ஜிரதந்தன் தனது கருத்தை முன் வைத்தவுடன் துன்முகன் என்னும் பெயருடைய அரக்கன் எழுந்தான். அவன் இராவணனை வணங்கி விட்டு," உமது வலிமையின் முன் அஷ்டதிக்கஜங்களும் வலிமை இழந்தன. தேவர்களும் பலம் இழந்தார்கள். சிவபெருமானின் கைலாய மலையும் பல இழந்து விட்டது. அப்படி இருக்கத் தாங்கள் ஒரு சாதாரண குரங்கையும், இரண்டு மனிதர்களையும் நினைத்துக் கவலை கொள்ளலாமா? பூமியில் வாழ்கின்ற மனிதர்களும், குரங்குகளும், கரடிகளும் மற்றுமுள்ள அனைத்து வகை ஜந்துக்களும் நாம் உண்பதற்காகவே அமைந்தவை ஆகும். அப்படி இருக்கையில் நமக்கு உணவாகும் அவைகளிடத்தில் அஞ்சுவது எதற்காக? அவ்வாறு அஞ்சுவோமானால், மிக்க வலிமை படைத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரக்கராகிய நம்மைக் காட்டிலும் கோழைகள் வேறு யார் இருக்கின்றார்கள்?. ஒருவேளை, நாம் அந்த உணவுப் பொருள்களிடத்தில் அஞ்சுவதாக இருந்தால், இந்த ஆலோசனை செய்ய வேண்டிய ஒன்று தான்! தவிர, கடலைத் தாண்டி நமது அரக்கர்களை கொன்று, நமது நகரத்தையும் தீக்கு இரையாக்கிச் சென்றது ஒரு சாதாரண குரங்கு. யோசித்துப் பார்த்தால் அது ஒரு வன விலங்கு. நாமோ, தேவர்களையும் வென்ற அரக்கர்கள், நம்மால் இந்தக் கடலை தாண்டிச் சென்று அந்தக் குரங்குக் கூட்டத்தையும், இராம லக்ஷ்மணர்களையும் கொல்ல முடியாதா என்ன? அவ்வளவு, வலிமை இல்லாதவர்களா நாம்?" என்று சொல்லி முடித்தான்.
உடனே மகா பார்சுவன் என்னும் பெயருடைய அரக்கன் எழுந்திருந்து, துன்முகனை அடக்கி அமரச் செய்து விட்டு இராவணனை பார்த்து," வேந்தர் வேந்தே! ஒரு குரங்குக்காக நாம் இத்தனை கவலை கொண்டால், நமக்கு இனிமேல் என்ன வீரம் இருக்கின்றது? அக்குரங்கு இலங்கைக்கு வந்த போது, அதனை எதிர்த்துப் போர் செய்து வலிய சில அரக்கர்கள் இறந்து விட்டார்கள் என்பதால், அத்துடன் நமது வீரம் அடியோடு போய் விட்டதா? இல்லை, அந்தக் குரங்கு வைத்த தீயில் அரக்கர்களின் முழு பலமும் எரிந்து சாம்பலாகி விட்டதா? இல்லையே! மேலும், அந்தக் குரங்கை ஏவியர்களோ நமக்கு கால் தூசியும் பெறாத சாதாரண மனிதர்கள். அப்படி இருக்க பெரும் வலிமை வாய்ந்த அரக்கர்களாகிய நாம் இது பற்றி கவலை கொண்டு ஆலோசனை நடத்துவதைக் கண்டால் உலகம் சிரிக்காதா? ஆகவே, இங்கே சும்மா உட்கார்ந்து நம்மை, நாம் சிறுமைப்படுத்துவதையும், அம்மனிதர்களையும் ஒரு குரங்கையும் நாம் பெருமைப் படுத்திப் பேசுவதையும் என்னால் இனியும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இனி அந்த ஜந்துக்களை பிடித்து நன்றாகத் தின்ன வேண்டும். இதைத் தவிர வேறு என்ன ஆலோசனை இருக்க முடியும்?" என்று கோபத்துடன் கூறினான்.
பிறகு அரக்கர்களில் கொடுமையின் ரூபமான பிசாசன் கோபத்துடன் எழுந்து நின்றான். அவன்," நமது அரசர் பெருமான் பயந்து விட்டார். ஆகவே, இனி செய்ய வேண்டிய செயலைக் குறித்து நம்மை வினவினார். இந்த மானக்கேடான செயலை எண்ணியபடி, நாம் எல்லோரும் திக்குகள் தோறும் சென்று உயிர் துறப்போம்!" என்று வெறுப்போடு கூறினான். பின்பு சூரியசத்துரு," நமது அரசர் இப்படி அஞ்சுவாராகில், நாம் ஆலோசிக்கின்ற காரியம் நமக்குப் பயனற்றதாகப் போய் விடும். ஆதலால், மனிதரே மேம்பட்டவராய்; நாம் தாழ்ந்தவராவோம்!" என்றான்.
சூரியசத்துரு தனது கருத்தை சொல்லி முடித்தவுடன், யஜ்ஞஹா என்ற அரக்கன் எழுந்தான். அவன்," நாம் இப்படி ஆலோசனை செய்வது மனிதர்களின் பொருட்டு எழுந்ததாகும். ஆகவே, அரக்கரின் வலிமையையும் உலகாளும் திறமையையும் தாழ்வடைய செய்யும் செயல் இதைக் காட்டிலும் வேறு ஒன்று இருக்கின்றதா?" என்று கூறி, தமது நிலையை எண்ணி நாணமடைந்தான்.
தூமிராட்சன் பின்பு எழுந்து பேசத் தொடங்கி," நமக்குத் தீங்கு செய்தான் என்று எண்ணி சிவபெருமான் மேல் போருக்கு எழுந்தாலும், அதுவும் பிறர் கேலி செய்து சிரிப்பதற்க்குக் காரணமாகும். அப்படியிருக்க குரங்குப் படையை கொண்ட மனிதர் மீது, நமக்குத் தீங்கு செய்தார் என்று சொல்லி போருக்கு எழுவதால், பிறர் நம்மை கேலி புரிந்து சிரிப்பதற்கு இடமாகும். ஆதலால், அவர்கள் நம்மிடத்துக்கு வந்தால் அவர்களைப் போர் செய்து அழிப்போம். அதுவே நல்லது!" என்று சொல்லிவிட்டு, கோபம் வெளிப்படத் தோன்ற நின்றான்.
தூமிராட்சன் சொன்ன பிறகு மற்றைய அரக்கர்களும்," இதுவே நல்லது! அவர்கள் இங்கே வந்தால் நிச்சயம் போர் செய்து அழிப்போம்! இதைத் தவிர வேறு ஆலோசனை இல்லை!" என்று, தம் மனதிற்கு உகந்த யுக்திகளைச் சொன்னார்கள்.
அப்போது, இராவணனின் தம்பி கும்பகர்ணன் எழுந்தான். தலைக்குத் தலை ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டு வந்த அரக்கர்களை எல்லாம் தடுத்தி நிறுத்தி உட்காரச் செய்தான். பின்பு இராவணனை நெருங்கி," அண்ணா! நான் உனது தம்பி. உனது உப்பை என்றும் தின்பவன். உன்னிடம் பக்தியும் விசுவாசமும் கொண்டவன். இவை எல்லாம் நான் சொல்லித் தான் உனக்குத் தெரிய வேண்டும் என்பது இல்லை. நீயே, இவற்றை எல்லாம் அறிவாய். அண்ணா! நான் உனக்கு சில வார்த்தைகளைச் சொல்வேன். தயவு செய்து எனக்காகக் கேட்பாயாக" என்றான்.
அது கேட்டு " அப்படியே ஆகட்டும்" என்றான் இராவணன். பிறகு கும்பகர்ணன் தொடர்ந்தான்," வேந்தே! அரக்கர்களுள் நீர் ஒப்பற்றவர். சாமவேதம் மட்டும் அல்ல, அனைத்து வேதங்களையும் குற்றம் இல்லாமல் கற்றவர் நீர். இசையில் வல்லவர் நீர். அதனால், தான் அரக்க குலத்தில் பிறந்தும் வீணைக் கொடியை வைத்துள்ளீர். கலாரசிகன் நீர், அதற்கு இந்த இலங்கை நகரத்தின் வடிவமைப்பே சாட்சி. இப்படிப் பட்ட நீர், இப்போது ஒரு குரங்கு வந்து இந்த நகரத்தில் வாழும் அரக்கர்களை கொன்று தீ வைத்துச் சென்றதை நினைத்து வருந்துகிறீர். ஆனால், இதற்கெல்லாம் காரணத்தை ஆராய்ந்து பார்த்தீரா? நீர் மட்டும் நமது குலத்தை விட உயர்ந்த குலத்தில் பிறந்த ஸ்ரீ இராமரின் மனைவியான சீதையை அபகரித்து வராமல் இருந்திருந்தால், இந்த அவமானம் உமக்கு வந்து இருக்குமா?. மேலும், என்று நீர் சீதாபிராட்டியை சிறை எடுத்து வந்தீரோ, அப்போதே நீர் பெற்ற வரம், பலம் எல்லாம் ஒன்றன் பின், ஒன்றாக அழியத் தொடங்கிவிட்டது. இதனை இன்னும் ஏன் உணராமல் இருக்கிறாய்? பெரியோர்கள் செய்ய விரும்பும் செயலையா நீ செய்து இருக்கிறாய்? பிறந்த குலத்துக்கு இழிவை தரக் கூடிய செயலை அல்லவா செய்து இருக்கிறாய்!
ஐயனே! அற்பச் செயலைச் செய்தவர், புகழைப் பெறுவர் என்பது அறிவுடைமையோ? குற்றமில்லாத பிறன் மனையாளை அழகிய சிறையில் அடைப்போம்; குற்றமற்ற புகழை விரும்புவோம்; வளம் படப் பேசுவதோ மானம்; நாம் பேணுவதோ காமம்; பின்வாங்குவதோ மனிதரை நினைத்து; மனிதர்க்கே அஞ்சுகின்ற நமது வெற்றி நன்றாக இருக்கிறது! அண்ணா, நடந்ததைப் பற்றி பேசிப் பிரயோஜனம் இல்லை. அதனால், இப்போதாவது நான் சொல்வதைக் கேள். எத்தனையோ பெண்களை மானபங்கம் செய்த நீ, இனியாவது பெண்கள் விஷயத்தில் தர்மம் தவறாதே. அழகிய பெண்களை சிறை பிடித்து வருவதை நிறுத்து. மேலும், சீதை போன்ற அபலைப் பெண்கள் சிந்திய கண்ணீர் தான் அன்று தீயின் வடிவம் எடுத்து இலங்கையை எரித்தது. மொத்தத்தில், இனியும் சீதையை நீ இராமனிடம் கொண்டு போய் சேர்க்காவிட்டால் நாம் அனைவரும் தர்மதேவனால் அழிவது நிச்சயம்" என்றான்.
கும்பகர்ணன் கூறிய வார்த்தைகளால் ஆத்திரம் அடைந்தான் இராவணன். கோபம் கொண்ட தொனியில் கும்பகர்ணனைப் பார்த்து," கும்பகர்ணா! நீ எனக்கு நிகாரன வீரன். குழந்தைப் பருவத்திலேயே இந்திரனின் யானையான ஐராவதத்தின் தந்தத்தை உடைத்து, அதன் காதுகளை கிழித்து, அதன் கர்வத்தை அடக்கியவன் நீ. அப்படிப் பட்ட நீ இப்படிப் பேசலாமா? நான் செய்யும் செயலுக்கு என்றும் ஆதரவாக இருப்பவன் நீ என்றல்லவா இதுவரையில் நம்பியிருந்தேன். இப்போதோ, நீ எனக்கே உபதேசம் செய்யும் அளவுக்கு வந்து விட்டாயா? நீ எனது பக்கமா, இல்லை அந்த இராமனின் பக்கமா? அதை முதலில் தெளிவுபடுத்து" என்றான்.
அது கேட்ட கும்பகர்ணன்," அண்ணா! என்ன வார்த்தையை சொல்லி விட்டாய்? இந்த உயிரும் உடலும் உனக்காகத் தானே உள்ளது. நீ செய்வது அதர்மமாகவே இருந்தாலும், நான் உனது பக்கம் தான் இருப்பேன். நீ என்னை சோறு போட்டு வளர்த்தவன். நாளைக்கே, அந்த இராமன் வந்து இலங்கையைத் தாக்கினால், அவனை அழிப்பேன் இல்லை எல்லோரும் சொல்வது போல அவன் விஷ்ணுவின் அவதாரமாக இருந்து என்னால் அவனை அழிக்க முடியாமல் போனால், குறைந்தபட்சம் அவனது படைகளையாவது அழித்து அவனைப் படைகள் இல்லாமல், தனி மரமாக யுத்தகளத்தில் நிற்க வைப்பேன். ஆனால் ஒன்று, தேவர்கள், மும்மூர்த்திகள் என யார் உன்னைக் கொல்ல சித்தம் கொண்டாலும், நான் உன்னை கவசமாக இருந்து பாதுகாப்பேன். என்னுயிர் போன பிறகு தான் உனது உயிர் போகும் இது நமது பாட்டனார் நான்முகனான பிரமனின் மீது ஆணை" என்றான்.
கும்பகர்ணனின் வார்த்தைகளைக் கேட்ட இராவணன் மகிழ்ந்தான். பிறகு கும்பகர்ணனிடம்," தம்பி நன்றாகச் சொன்னாய், நீ என்னுடன் இருக்கும் போது, தேவர்களின் பெரும் சேனை என்னைத் தாக்கினாலும் தளரமாட்டேன். நீ, ஒருவன் போதும் எனக்கு, இராமனுடன் யுத்தம் ஏற்பட்டால் அந்த யுத்தத்தை ஒரே நாளில் முடித்து விடுவாய். எனக்கு வலது கை போன்றவேனே! என் நம்பிக்கையின் நக்ஷத்திரமே! நீ எனக்கு இருக்க, இன்றே நாம் போர் கோலம் புகுவதும் நல்லது" என்றான்.
இராவணன் அவ்வாறு சொன்ன போது, இந்திரஜித் தந்தையை பார்த்து," அரசே! சிவபெருமானும், பிரமதேவனும் கொடுத்த விசித்திரத் தன்மையுள்ள பாசம் முதலிய கொடிய படைகளைத் தாங்கிய பலர் இந்த அவையிலே இருக்கின்றார்கள். பிறர் பழித்துக் கூறுமாறு சும்மா திரிந்து கொண்டு இருக்கின்ற நானும் இருக்கின்றேன்! எங்களை எல்லாம் ஏவாமல் நீரே மானிடர் மீது படையெடுத்துச் செல்ல சித்தம் கொள்வது மிகவும் நன்றாயிருக்கிறது! மூவுலகுக்கும் முதலாக இருக்கும் கடவுளே ஆனாலும், அவரையும் எதிர்த்துப் போர் செய்து பெறுகின்ற வெற்றியை உமதாகச் செய்யாவிட்டால், என்னைப் பெற்றும் நீர் பெறாதவராவீர்! நான் முறையாகப் பிறந்தவனும் ஆகமாட்டேன்! குரங்குகள் எல்லாம் அழியவும், மனிதர்கள் துன்பத்தைப் பெறவும், தாங்கள் ஆணையிட்டால் நான் இப்போதே சென்று இராமலக்ஷ்மணரின் சிரசை கொய்து எடுத்து வருகிறேன். ஆகவே, அதிக பலம் பெற்றவரே! பகைவென்று வருமாறு எனக்கு விடைதருக!" என்றான்.
இந்திரஜித் இராவணனை இவ்வாறு வேண்டியதும், அதுவரையில் அமைதியாக இருந்த விபீஷணன் எழுந்தான். அப்படி எழுந்தவன் இந்திரஜித்தை நோக்கி," இப்போதைக்கு ஏற்றத்தைக் கூற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவனே! சாஸ்த்திரத்தில் கூறி உள்ளதை நுணுகி ஆராய்ந்து அறிந்தவன் போலப் பேசுகிறாய். ஆனால், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சோகமான சம்பவங்களை அறிவதற்கு கூட உனக்கு ஞானம் இல்லாமல் போய் விட்டதே! உனது வீரம் உனக்குத் தந்த கர்வத்தால் உனது கண்கள் மறைக்கப் பட்டதோ? பெற்ற வரத்தால் தேவர்களை வெல்லும் திறன் கொண்டவன் என்று சொல்கிறாயே! அந்த வரமும் பிரமன் போன்ற தேவர்கள் உனக்கு அளித்ததே. நீ ஒன்றைப் புரிந்து கொள் மகனே, வலிமை கொண்டு, உலகையே வென்றவர்களானாலும் நல்லோருக்கு செய்யும் கெடுதல் அவர்களுக்கும் அழிவைத் தான் தரும். அதைக் கூடப் புரிந்து கொள்ளாத நீ, கூறிய வார்த்தைகள் அனைத்தும் சிறு பிள்ளைத்தனமானவை" என்று சொல்லி அதட்டினான்.
பின்பு இராவணனைப் பார்த்து," அண்ணா! எனது பேச்சைக் கேட்டு இகழாமல் இருப்பீர்களானால், நான் தெளிந்து கண்ட பொருளைக் கூறுகிறேன்" என்றவன் மீண்டும் தொடர்ந்து," எனக்கு தந்தை, தாய், ஆசான், தமையன் என அனைத்து ரூபத்திலும் காட்சி அளிப்பவரே, மேலும் என் பார்வைக்கு உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களின் வடிவமாய் இருப்பவரே! வலிமை படைத்தவரே! உங்களுக்கு நல்லதையே எந்நாளும் நினைக்கின்ற எனது வார்த்தையைக் கேட்டு அருள வேண்டுகிறேன். கற்புடைய லோகமாதாவான சீதையை தாங்கள் கடத்திய காரணத்தாலேயே இந்த இலங்கை எரிந்தது. அதைவிடுத்து, ஒரு வானரம் இதனை அழித்ததாகச் சொல்லலாமா? அந்த வானரம் வெறும் கருவி தான். அந்த வானரம் வராவிட்டாலும் சீதை விடும் கண்ணீர் இலங்கையை எரிக்கக் கூடியது. அதை முதலில் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணின் மீது கொண்ட தீராத காமம் என்னும் பாவம் எத்தனை வல்லவனாக இருந்தாலும் ஒருவனைச் சாய்த்து விடும். அதிலும், பிறர் மனைவியை அபகரிப்பது என்பது பாவத்திலும் பெரும் பாவம். அதற்கு விமோசனமே கிடையாது.
அண்ணா! இலங்கை வேந்தன் தனது சிரசை பத்து முறை கொய்து பிரம்மனை மகிழ்வித்து செய்த பெரும் தவம், அவன் ஒரு பெண்ணின் மீது கொண்ட காமத்தால் வீணானது என்று எதிர்காலம் சொல்லும் படி தாங்கள் நடப்பது சரியோ? மேலும், நீர் பிரமனிடம் பெற்ற தவத்தை நினைத்துப் பாரும் தேவர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பூதர்கள், பிசாசுகள், பேய்கள், சக அரக்கர்கள், மும்மூர்த்திகள் என எவராலும் மரணம் நேரக் கூடாது என்று வரம் கேட்டீர்கள். ஆனால், இந்த வரிசையில் மனிதரைத் தவற விட்டீர்களே! இப்போது அதனால் தான் வந்தது உங்கள் அழிவு. ஸ்ரீ இராமன் தங்களை அழிக்க வந்த வைகுண்டாதிபதி. தனி ஒருவராக இருந்து தாடகை, சுபாகு, விராதன், கரன், தூஷணன், மாரீசன், கவந்தன் மற்றும் பல அரக்கர்களை வதைத்தவர். ஒரு சாதாரண மனிதன் செய்யும் காரியமா இது? இல்லை அந்த அரக்கர்களை சாதாரண மனிதனால் கொல்லத் தான் முடியுமா? அச்சமயம், தனி மனிதனாக இருந்த போதே ஸ்ரீ இராமர் இத்தனையும் சாதித்தார் என்றால் இப்போது அவருக்கு தமது இன்னுயிரையும் தரும் வானரப் படை துணை இருக்க அவரால் செய்யமுடியாத காரியம் தான் உலகத்தில் உண்டோ?
மேலும் அண்ணா! சபையில் கூடி இருக்கும் அரக்கர்களின் பேச்சைக் கேட்டு, மூச்சுக்கு முந்நூறு தரவை " அற்ப குரங்குகள்" எனக் கூறுகின்றாயே! உன்னை முன்பு தோற்கடித்த வாலியும் ஒரு குரங்கு தான் அதனை முதலில் மறக்காதே. அது மட்டும் அல்ல, முன்பு உனது பராக்கிரமத்தின் மீது கொண்ட அகம்பாவத்தால் கைலாய மலையை நீ வேருடன் தூக்கிய போது, அந்த மலையின் காவலரும், கணங்களில் மூத்தவருமான நந்தி தேவர் உன்னை தடுத்த போது, நீ அவரை ஒரு கட்டத்தில் ஏளனம் செய்து குரங்கு என்று பரிகசித்தாயே நினைவு உள்ளதா? அப்போது நந்தி தேவர் உனக்கு என்ன சாபம் கொடுத்தார்?
'இராவணா ! என்னைக் குரங்கு என்று பரிகசிக்கும் உனது சாவுக்கு, அந்தக் குரங்குகளே காரணம் ஆகட்டும்" என்று சொன்னாரே அந்த வார்த்தைகளாவது உனது நினைவில் உள்ளதா? அதன் விளைவு தான் அந்த அனுமன் அன்று இலங்கையை எரித்தான். அதுமட்டும் அல்ல, அந்தக் குரங்குகள் யாவும் தேவர்களின் அவதாரங்கள். அதிலும், அந்தக் கூட்டத்தில் இருக்கும் மதிமிகு ஜாம்பவான் பிரமனின் அவதாரம் ஆவான்.
இன்னும் சொல்கிறேன் கேள், முன்னொரு காலத்தில் வேதவதி என்ற பெண்ணொருத்தி இருந்தாளே! அந்தப் பெரும் தவசியை உனக்கு நினைவு இருக்கிறதா? மோக்ஷத்தை வேண்டி கானகத்தில் கடும் தவம் செய்து கொண்டு இருந்தாள். நீ அவளது பெரும் அழகில் மயங்கி தகாத முறையில் நடந்து கொண்டாய். அதனால், உன் பார்வைக்கு காமத்தை கொடுத்த இந்த தேகம் எரியட்டும் என்று அவள் தீக்குளித்தாள். அப்போது அவள் தீயில் கருகிக் கொண்டு இருக்கும் போது ," இராவணா! எனது அடுத்த ஜன்மத்தில் நான் உனது மரணத்துக்கு காரணம் ஆவேன்" என்று சொன்னாளே! அந்த வார்த்தைகளின் படி அவள் தான் இப்போது சீதையாக வந்துள்ளாள். தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பிறந்து இருக்கிறாள் அவள்.
அதுமட்டும் அல்ல, நான் தங்களுக்கு இச்சமயத்தில் ஸ்ரீ இராமபிரானைப் பற்றியும் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். ஸ்ரீ இராமபிரான் ஒரு சாதாரண மனிதர் அல்ல, அவர் பிறந்த சூரிய குலத்தின் பெருமை உனக்கும் தெரியும். இருந்தாலும் சொல்கிறேன். கேள்! எல்லா நதியிலும் மேலானது கங்கை அதனைப் பூமிக்குக் கொண்டு வந்த பெருமையைக் கொண்டவர் தான் பகீரதன். அந்த பகீரதன் ஸ்ரீ இராமபிரானின் வம்சத்தில் தோன்றியவர். மேலும், கடலை உண்டாக்கிய சகர புத்திரரும், நீதி தவறாத சிபிச் சக்கரவர்த்தியும் பிறந்தது இந்த சூரிய குலத்தில் தான். அதே சூரியகுலத்தில் பிறந்த தசரத சக்கரவர்த்தி தான், முன்பு தேவாசுர யுத்தத்தில் சம்பரன் என்னும் பேர் கொண்ட அரக்கனை வதைத்தார். அந்த தசரதச் சக்கரவர்த்தி அரும் தவம் புரிந்து பல காலம் வேண்டி நின்று பெற்ற பிள்ளைகளுள் இருவர் தான் நீ சாதாரண மனிதர்கள் என்று பரிகசித்த அந்த இராமலக்ஷ்மணர்கள்.
அதிலும், அந்த இராமபிரானைப் பற்றியும் உனக்கு எடுத்துச் சொல்ல நான் கடமைப் பட்டு இருக்கிறேன். அவர் சாக்ஷாத் அந்த மகா விஷ்ணுவின் அவதாரம். சீதையை அவர் திருமணம் செய்யும் போது, அவர் கைபட்டு உடைந்த சிவ தனுஷே அதற்கு சாட்சி. மேலும், ஒரு காலத்தில் உன்னைத் தோற்கடித்த கார்த்தவீர்யார்ஜுனன் என்ற கொடிய அரசனை அவனது வம்சத்துடன் அழித்தவர் தான் பரசுராமர். அந்த பரசுராமரே இராமனைக் கண்டு வியந்து, தமது தவ பலத்தை அவருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார். மேலும் விசுவாமித்திரரும், அகத்தியரும் ஸ்ரீ இராமலக்ஷ்மணருக்கு எண்ணற்ற திவ்ய அஸ்த்திரங்களை கொடுத்துள்ளனர். அது கொண்டு பல அரக்கர்களை அவர்கள் வதைத்த வரலாற்றையும் உனக்கு நான் ஏற்கனவே சொல்லி உள்ளேன். மேலும், ஸ்ரீ இராமபிரானின் வில்லில் இருந்து புறப்பட்ட இராமபாணத்தின் வலிமையை கண்டவர்கள் மீண்டதில்லை. மீண்டவர்கள் கண்டதில்லை. அப்படியும், உனக்கு அதன் வலிமையை அறிய வேண்டும் என்றால், அதற்கு சான்று தான் வாலியின் மரணம். இராமபாணம், அவனது வலிமையான மார்புகளை பிளந்து சென்ற சம்பவத்தை அனுமன் கூறக் கேட்டாய் அல்லவா? அதுமட்டும் அல்ல நமது ஒற்றர்கள் மூலம், நான் இன்னொரு தகவலையும் பெற்றேன். அது யாதெனில், வாலியைக் கொல்லும் முன்னர் சுக்கிரீவனுக்கு தனது தனுர் வித்தையின் மீது அவனுக்கு நம்பிக்கை ஏற்படும் படிக்கு, ஒரே கணைகொண்டு ஏழு மராமரங்களை ஸ்ரீ இராமர் ஒரே நேரத்தில் துளைத்தாரம். எனில், தனுர் வித்தையில் அவர் பெற்ற தேர்ச்சியையும், அவரது தோல் வலிமையையும் எண்ணிப் பார்! இத்தனையும் கேட்டு ஸ்ரீ இராமனை நீ சாதாரண மனிதன் என்று மீண்டும், மீண்டும் சொன்னால், எனது சொற்களை விட உனது விதி வலியது என்று உணர்கிறேன்" என்று சொல்லி முடித்தான்.
விபீஷணன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட இராவணன் மிகுந்த கோபம் கொண்டான் தனது இரு கைகளையும் ஓங்கி கையோடு, கையாக அறைந்து கொண்டான். பிறகு, பத்து வாய்களிலும் உள்ள பற்கள் வெளியே தெரிய மிகவும் கேலியாகச் சிரித்தான். பிறகு விபீஷணனை நோக்கி," விபீஷணா! விருப்பத்திற்கு இசைந்த நல்ல உறுதி மொழிகளைச் சொல்வேன் என்று கூறிப் பேசத் தொடங்கினாய். ஆனால், பித்தன் ஒருவன் பிதற்றுவது போல இருந்தது உனது வார்த்தைகள் அனைத்தும். என், முன்னாள் நீ இராமனைப் புகழ்ந்து பேசியது உண்மையில் அவன் மீது கொண்டு பக்தியாலா? இல்லை பயத்தாலா? அதை முதலில் கூறு. மேலும், 'நீ வரம் கேட்ட போது, மானிடப் பசுக்களை வெல்லுமாறு வரம் கேட்கவில்லை' என்று என்னைக் குறை கூறினாய். முன்னொரு காலத்தில் திக்கஜங்களை வெல்வதற்கும், சிவபெருமானைக் கைலாய மலையுடன் தூக்குவதற்கும் நான் என்ன வரமா பெற்றேன்? ஆனால், என்னால் அவை நடந்தேறியதே! அதற்கு என்ன சொல்கிறாய். மேலும், நீ வாலியை இராமன் கொன்றான் அதனால் அவன் மாவீரன் என்கிறாயே? நான் கேட்கிறேன், இராமன் என்ன வாலியுடன் நேருக்கு, நேர் மோதி அவனைத் தோற்கடித்தானா? இல்லையே! கோழை போல அவனை மறைந்து இருந்து அல்லவா கொன்றான். அதுவும் ஒரு வீரமா ? சீ ... வெட்கம்...
மேலும், என்னை வாலி தோற்கடித்ததாக சொன்னயே! நான் அவனுடன் யுத்தம் செய்யப் புறப்பட்ட போது அவன் பெற்ற வரம் எனக்குத் தெரியாது. அதனால், தான் நான் அவன் முன் யுத்தம் செய்ய நின்றபோது, எனது பலம் பாதியாகக் குறைந்து போனது. மேலும், எனது பாதி பலத்தை அவன் பெற்றான். அதனால், நானும் அந்த யுத்தத்தில் தோற்க வேண்டியதாயிற்று. அதுபோலத் தான், கார்த்தவீர்யார்ஜுனன் விஷயத்திலும் நான் சற்று அலட்சியமாக இருந்து விட்டேன். அந்தத் தோல்விகள் அனைத்தும் நான் அசந்த நேரத்தில் நடந்த ஒன்று. மேலும், அந்த இராமன் ஏதோ சிவ தனுசை உடைத்தான் என்று சொன்னாயே! ஏற்கனவே உடைந்த சிவ தனுசை உடைத்ததில் அவனுக்கு என்னடா பெருமை?
நீ சொன்ன இத்தனை வார்த்தைகளையும் கூட நான் போனால் போகிறது என்று மன்னித்து விடுவேன். ஆனால், கடைசியாக ஒன்று சொன்னாயே! தேவர்கள் என்னை அழிக்க குரங்கு ரூபம் எடுத்து வந்துள்ளனர் என்று. தேவர்கள்,தேவர்களாக வந்த போதே நான் அவர்களை அடித்து துவம்சம் செய்தவன். இப்போது அதிலும் வலிமை குறைந்து, அதுவும் குரங்குகளாக என்னை அழிப்பதற்கு அவதாரம் எடுத்து வந்துள்ளனர் என்றால் உனக்கே அது கேட்க பரிகாசமாக இல்லை? மேலும், நீ சொன்னபடி நந்திதேவரின் சாபமும், வேதவதியின் சாபமும் என்னை என்னடா செய்து விடும்? அப்படிப் பார்த்தால் நான் அவர்கள் சாபத்தை மட்டுமா பெற்றுள்ளேன். இந்திரன், சந்திரன், என அனைத்து தேவர்களின் வயிற்று எரிச்சலையும்,தேவ கன்னியர்களின் சாபத்தையும் ஒருங்கே சேர்த்து பெற்றுள்ளேன். அப்படி இருந்தும் இதுவரையில் நான் நன்றாகத் தானடா இருக்கிறேன். எந்த சாபம் என்னை என்னடா செய்து விட்டது?
மேலும், என்னை விட நீ வலிமையில் குறைந்தவன். அதை நீயும் அறிவாய். அப்படி இருந்தும் உன்னாலேயே மனிதர்களை வீழ்த்தி விட முடியும். அப்படி இருக்க என்னை அழிக்கவே இராமன் என்னும் அற்ப மனிதன் பிறந்துள்ளான் என்பது போல் பேசி ஏனடா தம்பி பிதற்றுகிறாய்? சூரிய குலத்தில் பிறந்து வளர்ந்ததாக நீ சொன்ன அந்த இராஜா இராமன், கேவலம்! கூனி என்னும் பேர் கொண்ட கிழவியின் சூழ்ச்சியால், அரசை இழந்து தரித்திர இராமனாக அலைந்து, திரிந்து, பிறகு எனது சூழ்ச்சியால் அவன் மனைவி சீதையையும் இழந்து, உயிர் உடலில் கொஞ்சம் போல ஓட்ட ஏதோ நடமாடி வருகிறான் என்பது நமது ஒற்றர்கள் எமக்குக் கொடுத்த தகவல். அதை நீ அறியாமல் பேசுவது, வேடிக்கை தான் போ! அத்துடன் ஏற்கனவே ஓட்டையான வருடக் கணக்கில் இத்துப்போன ஏழு மராமரங்களை துளைத்தது ஒரு விரமா?" என்றெல்லாம் இகழ்ந்து முடித்தான்.
பின்பு மேற்கண்டவாறு இகழ்ந்து முடித்த இராவணன், தனது படைத் தலைவர்களைப் பார்த்து," நல்லது! நாம் போருக்குப் புறப்படுவோம். எல்லோரும் என்னுடன் எழுக!" என்றான்.
அப்போது மீண்டும் விபீஷணன் இராவணனை அணுகினான், பணிவு கலந்த வார்த்தைகளுடன்," அண்ணா! நான் மீண்டும் சொல்கிறேன், ஸ்ரீ இராமன் விஷயத்தில் அவசரப் பட வேண்டாம். அவர் திருமாலின் மறு அவதாரம். நம்மைக் கொல்லவே தேவர்கள் பலர் துணை நிற்க அவர்களின் ஆலோசனைப் படி மானிட ரூபம் எடுத்து வந்துள்ளார். அதுபோல, தேவி சீதை லக்ஷ்மியின் ரூபம். நான் உன்னைத் தடுப்பதற்கு அது மட்டும் காரணம் இல்லை, சில காலங்களாகவே இலங்கையில் துர் சகுனங்கள் தோன்றுகின்றன, சுடுக்காட்டில் வாழும் இயல்புடைய நாய்களும், நரிகளும் இலங்கை நகரத்துக்குள் அடிக்கடி வந்து ஊளையிட்டுச் செல்கின்றன. மேலும் பகலில் காணும் சந்திரனைப் போல இருக்கும் தேவர்களின் முகங்கள், சில காலங்களாக சூரியனைப் போல பிரகாசித்து வருகின்றன. அத்துடன், நம்மிடம் அச்சம் கொண்ட யக்ஷர்கள் கூட சீதை இலங்கையில் சிறை வைக்கப் பட்ட நாளில் இருந்து மகிழ்ச்சியுடன், அதுவும் நம்மிடம் அச்சம் இன்றி இருக்கின்றனர். இவை யாவும் எனக்கு நல்லதாகப் படவில்லை. மொத்தத்தில் ஸ்ரீ இராமருடன் போர் புரிவது நமக்கு நல்லதல்ல. " என்று கூறி அவனது பாதத்தில் விழுந்து வணங்கினான்.
அது கேட்டு இராவணன் சினந்து விபீஷணனைப் பார்த்தான். பின்பு அவனை நோக்கி ," இராமன் திருமாலின் அவதாரம் என்று கூறினாய். அந்தத் திருமால் , போயும் ,போயும் அரக்கர்களாகிய நாம் அனுதினமும் கொன்று தின்னும் மானிட வடிவத்தை போய் எடுப்பானா என்ன? எனில், நான் மூன்று உலகங்களையும் வெற்றி பெரும் போதும், அத்துடன் அன்று சீதையைக் கவர்ந்து செல்லும் சமயத்திலும் அந்தத் திருமாலோ அல்லது அவனது அவதாரங்களோ எங்கு சென்று விட்டன? ஒரு வேளை அந்தத் திருமால் அவன் பரிவாரங்களுடன் பாம்புப் படுக்கையில் அயர்ந்து தூங்கிவிட்டானோ? மேலும், இராமன் திருமாலின் அவதாரம் என்றால் என்னைப் பொறுத்த வரையில், அது இன்னமும் நல்லதே. நமது அரக்க குலத்தில் தோன்றிய ராகு எவ்வாறு அங்கங்கள் இல்லாது இருந்தும் உலகத்துக்கு ஒளி கொடுக்கும் சூரியனையே விழுங்குகின்றானோ, அதுபோல, ஒரு வேளை அந்த இராமன் தப்பித் தவறி திருமாலின் அவதாரமாக இருக்கும் பட்சத்தில் அவனைக் கொன்ற பெருமை எனக்கு வரட்டும். மேலும், உனக்கும் ஒன்றை சொல்லி விடுகிறேன். நான் பராக்கிரமம் பொருந்திய இராவனேஸ்வரன்! இலங்கைக்கு மட்டும் அல்ல, இந்தத் திரேதாயுகத்துக்கே அரசன் நான். ஆதாலால், இராமனுடன் எனக்கு ஏற்பட விருக்கும் யுத்தத்தை நான் தனியாகவே எனது பரிவாரங்களுடன் உனது துணை இன்றி சமாளித்துக் கொள்கிறேன், இத்தனையும் பேசி விட்டு நீ அந்த யுத்தத்திற்கு வரவே வேண்டாம். சிறு பிள்ளை போல இங்கேயே, இனிது தங்கி இரு. பயம் கொள்ளாதே!" என்று சொல்லி விட்டுக் கொடிய இராவணன் தனது கைகளைத் தட்டி விபீஷணனை கேலி செய்வது போலச் சிரித்தான்.
ஆனால், மீண்டும் அண்ணனின் நலன் கருதி விபீஷணன், இராவணனைப் பார்த்து," ஐயனே! நீ வலிமை உள்ளவன் தான். அதற்காக திருமாலை நீ ஏளனம் செய்யாதே. இந்த உலகத்தில் உன்னை விட வலிமை வாய்ந்த அரக்கர்கள் எல்லோரும் தமது கூட்டத்துடன் திருமாலால் கொல்லப் பட்ட வரலாறுகள் உண்டு. அவர் சினம் கொள்ள உலகம் தாங்காது. அந்த வரிசையில் உனக்கு நான் இரணியன் என்ற அரக்கனைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக!" என்று சொல்லி, இரணியனுடைய கதையைக் கூறத் தொடங்கினான்!