இரணியன் வதைப் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
இரணியன் வதைப் படலம்
(எந்த விதத்திலாவது இராவணனுக்கு நல்லுரை கூறி நெறிப்படுத்த நினைத்த விபீஷணன், இரணியனது வரலாற்றைக் கூறலானான். இரணியன் காசிபருக்கு திதி வயிற்றில் பிறந்தவன். பொன்னிற முடையவன் என்பதால் இரணியன் எனப்பெயர் பெற்றான். பிரமனை நோக்கித்தவம் செய்து எவராலும் தனக்குச் சாவு நேராதபடி வரம் பெற்றவன்.
இரணியனுக்கு ஒரு தம்பி இருந்தான், இரணியாட்சன் என்பது அவன் பெயர்; திருமால் வராக அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார் என்பதால் திருமாலிடம் இரணியன் பகைமை பாராட்டலானான். தனது வரபலத்தால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்திவந்தான். தன்னையே தெய்வமாக வணங்கும்படி வாழ்ந்தான். இரணியனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனைத் தக்க ஆசிரியரிடம் அனுப்பி, வேதம் முதலான கலைகளை கற்பிக்க முற்பட்டான். ஆசிரியன் 'இரண்யாயநமஹ' என்று
சொல்ல, பிரகலாதன் 'நமோ நாராயணாய' என்றான். அஞ்சிய ஆசிரியன், இரணியனிடம் தெரிவிக்க, மகனை அழைத்து வரச் செய்து இரணியன் பலவாறு நயந்தும், நலிந்தும் பிரகலாதன் கருத்தினை மாற்ற முயன்றான். பிரகலாதன் உறுதி காட்டினான்.
அவன் உயிரைப் பறிக்கும் முயற்சியிலும் இரணியன் இறங்கினான். இரணியன் கருத்து நிறைவேறவில்லை. இறுதியில், 'நீ கூறிய அரி எங்கே இருக்கிறான்' எனக் கேட்டான். 'அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்' என்று பிரகலாதன் கூறினான். இந்தத் தூணில் நீ சொன்ன அரி இல்லாமல் போனால் உன்னைக் கொன்று தின்பேன் என்று கூறி, இரணியன் தூணைக் கையால் எற்ற, தூணிலிருந்து திருமால் நரசிங்கமாக வெளிப்பட்டு இரணியனைக் கொன்று, பிரகலாதனுக்கு அழிவற்ற பேற்றை உதவினார் என்பது
இரணியன் வரலாறு.
இறைவனாகிய திருமாலை இகழ்ந்து, உலகினுக்குத் தீங்கு செய்து
வாழ்வோர் எவராயினும் அழிந்து படுவர் என்பதை இராவணனுக்கு எடுத்துக் கூறி, அப்பரமனுக்குப் பணிந்து, அவனை அடைக்கலம் புகுந்தவர்கள் பிரகலாதனைப் போ(ல)ப் பெரும் பேறு பெறுவர் என்பதை இராவணனுக்கு உணர்த்த விபீஷணன் இந்த வரலாற்றைக் கூறியதாகக் கம்பர் அமைத்துள்ளார். உயர்ந்த குறிக்கோளும், சிறந்த
கவிநயமும், இலக்கியச் சிறப்பும் வாய்ந்ததாக இப்படலம் அமைந்திருப்பதைக் கற்போர் மகிழ்ந்து போற்றுவர் எனலாம்)
இரணியன் காசிபருக்கு திதி வயிற்றில் பிறந்தவன். பொன்னிற மேனியை உடையவன் என்பதால் இரணியன் எனப்பெயர் பெற்றான். இரணியனுக்கு ஒரு தம்பி இருந்தான், இரணியாட்சன் என்பது அவன் பெயர். ஒரு முறை இரண்யாட்சன் பூமாதேவியை தன் பலம் கொண்டு துன்புறுத்தினான், மேலும் இந்தப் பூமியை ஒரு பந்து போல உருட்டி விளையாடினான். அதனால், பூமித்தாய் தனது நிலை மாறி சூழலத் தொடங்கினாள். பூமியில் இருந்த சகல உயிர்களுக்கும் அதனால் கேடு ஏற்பட்டது. அத்துடன், அவன் நிறுத்திக் கொள்ளாமல், முழு பூமியையும் பாதாள உலகம் கொண்டு சென்றான். அப்போது, அபயம் வேண்டி பூமித்தாய் ஸ்ரீ மந் நாராயணரை அழைத்தாள்.
அது கண்ட ஸ்ரீ மந் நாராயணர், வராக ரூபம் எடுத்து (காட்டுப் பன்றி) இரண்யாட்சனை கடும் போர் புரிந்து வதைத்தார். அவ்வாறு பூமாதேவிக்கு அபயம் அளித்துப் பிறகு பூமியையும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தார். தனது தம்பியை திருமால் வராக ரூபம் எடுத்துக் கொன்ற விஷயத்தை அறிந்தான் இரணியன், உடனே கோபமும், வருத்தமும் ஒருங்கே பெற்ற நிலையை அடைந்தான். அவனது மனதில் திருமாலை பழி வாங்க வேண்டும் என்று எண்ணம் பிறந்தது.
அதற்காக திருமால் மீதே போர் தொடுக்க எண்ணினான். ஆனால், அவன் பிறக்கும் போதே பலவீனமாகப் பிறந்ததாலும், திருமாலை எதிர்க்கும் திராணி இல்லாததாலும், அசுர குரு சுக்கிராச் சாரியாரின் அறிவுரைப் படி தனது பாட்டனார் பிரம்ம தேவனை நோக்கிக் கடும் தவம் புரிய சித்தம் கொண்டான். அப்போது இரணியனின் மனைவி கற்பவதியாக இருக்கவே, அவள் இரணியனை தடுத்தாள். ஆனால், பாசத்தை விட திருமாலை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு இருந்ததால் மனைவி தன்னைத் தடுத்தும் அது கேளாமல் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்யச் சென்றான். அப்போது, தனியாக இருந்த இரணியனின் மனைவியை இந்திரன் கவர்ந்து சென்றான். மேலும் அவள், பயத்தில் மயங்கிய நிலையில் இருக்க, அவளது வயிற்றில் இருக்கும் இரணியனின் சிசுவை கொல்ல முற்பட்டான். அப்போது நாரதர் அவன் செய்ய இருந்த அந்தப் பெரும் பாவத்தை தடுத்து, தனது ஆசிரமத்திற்கு இரணியனின் மனைவியை மயக்கம் தெளிவித்து அழைத்துச் சென்றார். மேலும், இரணியனின் மனைவியை தனது மகள் போல பாவித்து நல்ல முறையில் கவனித்து வந்தார் நாரதர். அனுதினமும் நாரதர் சொல்லும் நாராயண நாமத்தை கேட்டே, இரணியனின் மனைவி வயிற்றில் இருந்த அவனது குழந்தை வளர்ந்து வந்தது. காலமும் கனிந்தது, இரணியனின் மனைவி தங்க விக்கிரகம் போன்றதொரு ஆண் பிள்ளையைப் பெற்றாள். நாரதரே, அக்குழந்தைக்குப் பிரகலாதன் என்று பெயர் சூட்டினார். குழந்தை பிறந்த அக்கணத்தில், அதுவரையில் தவத்தில் இருந்த இரணியனின் தவமும் வெற்றி பெற்றது.
பிரமதேவனே இரணியன் முன் தோன்றினார். அப்போது பிரமதேவன் இரணியனிடம்," இரணியா! உனது தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். நீ கேட்கும் வரம் எதுவானாலும் உனக்குக் கிட்டும்" என்றார்.
பிரமதேவனின் வார்த்தைகளைக் கேட்ட இரணியன் பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரை வணங்கி ,"வேதங்களின் நாயகனும் எனது பாட்டனாருமான பிரம தேவரே. எனக்கு இந்த அண்ட சராசரத்தில் உள்ள அரக்கர்கள், தேவர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், மிருகங்கள், பூதங்கள், பேய்கள், பிசாசுகள், கின்னரர்கள், மும்மூர்த்திகள், கந்தர்வர்கள், பறவைகள், ஊரும் தன்மை கொண்ட உயிரினங்கள், கடல் வாழ் உயிரினங்கள் என எதனாலும் மரணம் ஏற்படக் கூடாது. மேலும் எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது. காலையிலோ, மத்தியான வேலையிலோ, இல்லை இரவிலோ எனக்கு மரணம் நேரக் கூடாது. வீட்டின் உள்ளேயும் மரணம் நேரக் கூடாது, வீட்டின் வெளியிலும் மரணம் நேரக் கூடாது. ஆகாயம், பாதாளம் உட்பட ஈரேழு பதினான்கு உலகத்திலும் எனக்கு மரணம் ஏற்படக் கூடாது. அத்துடன் எனக்கு அதிக உடல் வலிமையையும் மூவுலகத்தையும் வெல்லும் ஆற்றலையும், பஞ்ச பூதங்களின் சக்தியையும் தாருங்கள். இவையே நான் உம்மிடத்தில் எதிர் பார்க்கும் வரம்" என்றான்.
அது கேட்ட பிரமதேவன் அவன் கேட்ட மாத்திரத்தில் அவனது தவத்தை புகழ்ந்து " உனது விருப்படியே தந்தோம்" எனக் கூறி மறைந்தார். இவ்வாறாக தனது மனதுக்குத் தோன்றியபடி எல்லாம் பிரமனிடம் வரம் கேட்ட இரணியன் நேராக வைகுண்டம் போனான். திருமாலையே போருக்கு இழுத்தான். ஆனால், அப்போது திருமால் அவன் பெற்ற வரபலத்தினால் அவனை எதிர்க்கும் வல்லமை இருந்தும் பிரமனின் வாக்கை பொய் ஆக்க விருப்பம் இல்லாமல் அவனது கண்களுக்கே புலப்படாமல் அமைதியாக இருந்து விட்டார். அதனால், இரணியனின் கர்வம் இன்னும் அதிகமானது. பல கொடுமைகளை செய்யத் தொடங்கினான். திக்கஜங்களுள் இரண்டை ஆட்டுக் கடாப் போலப் பிடித்து இழுத்துச் சண்டைக்கு விட்டு வேடிக்கை பார்ப்பான். ஏழு கடல்களையும் எளிதாகத் தாண்டி அப்பால் செல்வான்.
அவைகள் போதாது என்று நேராக ஒரு நாள் இந்திர லோகம் போனான், இந்திரனை சிறை பிடித்தான். பிறகு இந்திரனை நோக்கி," நீ அனுதினமும் மீன்களையும், மாமிசங்களையும், மதுவையும், தேவ கன்னிகைகளையும் அரக்கர்களுக்கு கொண்டு வந்து கொடுக்கும் சேவகனாக மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் ஆசைப்படக் கூடாது" என்றான். வாயுவை நோக்கி," இனி எனது நாட்டில் தென்றலாக மட்டும் தான் நீ வீச வேண்டும்" என்றான். பிறகு அக்கினி தேவனிடம் " நீ, எனது அரக்க குலத்துப் பெண்களின் அடுப்பில் மட்டும் தான் இருக்க வேண்டும். நான் வேறு எங்கும் உன்னைப் பார்க்கக் கூடாது" என்றான். பிறகு வருண தேவனிடம்," நீ, நான் கூறும் போது மட்டும் தான் மழை பொழிய வேண்டும்" என்றான். அனைத்து தேவர்களும் அவனது உத்தரவுக்குப் பணிந்தனர்.
பிறகு யம லோகம் போனான். வீரம் கொண்ட யமன் அவனுடன் போர் புரிந்தான். ஆனால், இரணியன் பெற்ற வர பலன்களால் நொடிப் பொழுதில் தோற்றான் யமன். பிறகு எமனையும் வெற்றி கொண்டவன் சிவ லோகம் போனான், ஆனால் சிவனை அவன் எதிர்க்கவில்லை," அரக்கர்களின் தெய்வமே! என்னை வாழ்த்துவாயாக" எனக் கூறி புகழ்ந்து அவரிடம் இருந்தும் வரங்கள் பல பெற்றான். பிறகு, வரம் கொடுத்தவரையே ஏளனம் செய்து " எனது வழியில் நீர் என்றும் தலையிடாமல் இருந்தால் உமக்கு நல்லது உண்டு" என்று கூறிச் சென்றான். இவ்வாறாக சென்ற இடங்களில் எல்லாம் அவனுக்கு எதிர்ப்பு இல்லாத காரணத்தால் தன்னையே கடவுளாக வழிபடும் படி அனைவரையும் கூறினான்.
இரணியன் மீது கொண்ட பயத்தால் மூன்று உலகமும் " இரண்யாய நமஹ" என்று அந்தக் கொடியவன் பெயரையே சொல்லி வழிபட்டது. இரணியனுக்கு கோவிலும் சிலைகளும் உருவானது. அந்தணர்கள் வேதம் சொல்லி அவனையே வழிபட்டனர். நாட்கள் சென்றன இரணியன் மகன் பிரகலாதன் வளர்ந்தான். பிறக்கும் போதே நாராயண நாமம் கேட்டுப் பிறந்த பிரகலாதன். தூய குணங்களைக் கொண்டு விளங்கினான். நல்லொழுக்கத்துடன் வளர்ந்தான். எனினும், தனது மகனுக்கு முறைப்படி கல்வி அறிவு புகட்ட விரும்பிய இரணியன், தனது நாட்டிலேயே சிறந்த அந்தணனை அழைத்து, தனது மகனுக்கு ஆசிரியராக நியமித்தான். அந்த அந்தணனும் முறைப்படி பிரகலாதனுக்கு அனைத்து வகை வேதங்களையும் சொல்லிக் கொடுத்தான். பிரகலாதனோ குருவை மிஞ்சும் சிஷ்யனாகத் திகழ்ந்தான். அப்படி இருக்கும் போது ஒரு நாள் பிரகலாதனின் குரு "நான் சொல்வதை இரு கரங்கள் கூப்பி திரும்பச் சொல்” என்று கூறி " இரணியாய நமஹ" என்றார்.
தனது குருவின் அந்த வார்த்தைகளைக் கேட்டப் பிரகலாதன் தனது இரு காதுகளையும் பொத்திக் கொண்டு தனது குருவை நோக்கி, " என்ன வார்த்தைகளைச் சொன்னீர்கள் குருவே! இந்த உலகத்தில் நிகர் இல்லாத நாமம் என்று ஒன்று உண்டு என்றால் அது ஸ்ரீ மந் நாராயணனின் நாமம் தான். அதுவே முக்தியை நமக்குத் தர வல்லது. அந்த நாராயணன் தான் வேதங்களின் வடிவமாகவும் இருக்கிறார். மேலும், அந்த நாராயணர் யாராலும் உணர்ந்து கொள்ள முடியாத பரமாத்மா. அந்தப் பெருமானின் நாமத்தை சொன்னால் போதும் நான்கு வேதங்களையும் ஓதிய பலன் கிடைக்கும். அதனால் தாங்களும் அவர் நாமத்தையே சொல்லுங்கள் ’ஓம் நமோ நாராயணாய நமஹ’ என்றான்.
பல முறை பிரகலாதனால் கூறப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட அவனது குரு மனம் கலங்கி தனது சீடனிடம்," என் உயிரைப் பறிக்க சீடன் என்ற ரூபத்தில் வந்திருக்கும் கோடாரிக் காம்பே! நீ சொல்லிய வார்த்தைகளைக் கேட்டால் உனது தந்தை என்னைக் கொன்று விடுவாரே! அடப் பாவி, எனது உயிரைப் போக்க எத்தனை நாட்களாக சித்தம் கொண்டு இருந்தாயடா?" என்றார்.
பிறகு வெகு நேரம் யோசித்த அந்த வேதியர் உடனே பிரகலாதனை அழைத்துக் கொண்டு இரணியனின் அரண்மனைக்கு வந்தார். அவ்வாறு வந்த அந்த வேதியர் சபையில் அமர்ந்து இருந்த இரணியனை நடுக்கத்துடன் வணங்கினார். வேதியர் வந்த விவரத்தைக் கேட்டான் இரணியன்.
அப்போது இரணியனை நோக்கி கை, கால்கள் உதற," ஐயனே ! நான் கூறப்போவதை பொறுமையுடன் கேளும்! தங்கள் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துமாறு தங்கள் மகன் தகாத வார்த்தைகளைக் கூறுகிறான். அந்த வார்த்தைகளை எவரும் உமது ராஜ்யத்தில் சொன்னதில்லை, நானும் கூட அந்த வார்த்தைகளை எவருக்கும் போதித்ததும் இல்லை. உமது மகன், தான் பெற்ற சுய அறிவினாலேயே அந்த வார்த்தைகளைச் சொல்கிறான்" என்றான் அந்த வேதியன்.
அந்தணன் தனது மகன் பற்றிக் கூறக் கேட்டு இரணியன் மிகுந்த கோபம் கொண்டான். " வேதியனே! நமக்குத் தகாததும், முன்பு எவரும் சொல்லாததும், தன் மனத்தில் தோன்றிய அறிவினால் தானே புதிதாகக் கொண்டதுமாக எனது மகன் சொன்னது என்ன? அதை முதலில் சொல்!" என்று கேட்டான்.
உடனே அந்த அந்தணன் மேலும் அஞ்சி, தனது தலை மேல் கைகளைக் கூப்பி இரணியனைத் தொழுது நின்று," ஐயனே! எனது காதுகளில் கொடிய பாம்பு போல் நுழைந்த அவ்வார்த்தைகளை நான் உமக்குச் சொன்னால் நரகத்தை அடைவேன். அதனால் எனது நாவும் வெந்து ஒழியும் . அதனால், தாங்கள் உமது மகன் கூறிய அந்த வார்த்தைகளை அவனிடமே கேளுங்கள்! " என்றான்.
இரணியன் உடனே தனது அன்பு மகனை அருகில் அழைத்தான். அன்போடு அவனைத் தனது அருகில் அமர்த்திக் கொண்டான். அவனை நன்றாகப் பார்த்து," மகனே, பிரகலாதா! உனது குரு உன்னை வெறுக்கும் படி நீ அவரிடம் கூறிய அந்தத் தவறான வார்த்தைகள் யாது? சொல்!" என்று வினவினான்.
அதற்குப் பிரகலாதன்," தந்தையே! நான் யாவருக்கும் முதல்வனாக இருக்கும் ஒப்பற்ற அந்தத் தனிக் கடவுளின் திருநாமத்தை தான் கூறினேன். இந்தக் கொடிய பிறவிக் கடலை கடப்பதற்கு உதவுகின்ற நாமம் அது. பாவங்களில் இருந்து நம்மை விடுவிக்கும் வல்லமை கொண்ட நாமம் அது. விரும்பிய அறம், பொருள், இன்பம் இவையெல்லாம் தரக் கூடிய நாமம் அது. அத்திருநாமத்தை தேவர்கள் மட்டும் அல்ல ஈசனும், பிரமனும் கூட ஜெபிக்கின்றனர். அப்படி இருக்க அந்த நாமத்தை சொல்லாதவர் இறந்தவராகத் தான் கருதப்படுவர். அப்படிப் பட்ட எட்டு எழுத்து நாமம் தான் ' ஓம் நமோ நாராயணாய நமஹ'. அந்த சுந்தர நாமத்தைத் தான் எனது குருவிடம் சொன்னேன்" என்றான் பிரகலாதன்.
பிரகலாதன் சொன்னதைக் கேட்டதும் இரணியனின் கண்களில் இருந்து நெருப்புப் பொறி பறந்தது பெரும் கோபத்துடன் விழித்து நோக்கினான். பின்பு கோபத்துடன் தனது மகனைப் பார்த்து,” நான் பிறந்தது முதல் இன்று வரையில் இந்தப் பெயரை சொன்ன அனைவரையும் நாக்கைத் துண்டித்துக் கொன்று உள்ளேன். ஆனால், நீயோ சிறிதும் பயம் இன்றி நமது குலத்துக்கே எதிரியான, மேலும் நான் கொல்லத் தேடிக் கொண்டு இருக்கும் அந்தத் திருமாலின் பெயரை சொல்கிறாயே! இதை உனக்கு சொல்லிக் கொடுத்தவர் யார்? பாம்பின் பெயரை எலி சொல்வது போல அல்லவா நீ சொல்கிறாய். அப்படி அந்த எலி பாம்பின் பெயரைத் தொடர்ந்து சொல்வதால் அதற்கு என்ன நன்மை உள்ளது. துர்புத்தி கொண்டவனே! நீ சொல்! எனது தம்பியான இரண்யாட்சன் பெரும் பலம் படைத்தவன் அவனை வஞ்சகமாக ஒரு காட்டுப் பன்றியின் உருவம் கொண்டு கொன்றவன் அந்த விஷ்ணு. அது மட்டும் அல்ல, நமது குலத்தில் உள்ள வலிமை மிக்க பல பெரியோர்களை கொன்று தீர்த்து உள்ளான் அந்த விஷ்ணு. அப்படிப் பட்ட நமது குலத்தின் விரோதியின் பெயரை சொல்லவா நான் உன்னைப் பெற்றேன்? பேதை மகனே! நீ தவறு செய்து விட்டாய். ஆயினும் உனது தவறை இப்போது நான் பொறுத்தேன். பிழைத்துப் போ. இன்னொரு முறை அந்தத் திருமாலின் நாமம் உனது நாவினில் வராமல் பார்த்துக் கொள்” என்று சொன்னான்.
தந்தை கூறிய அந்த வார்த்தைகளை பொறுமையுடன் கேட்டுக் கொண்டு இருந்த பிரகலாதன் தனது புன்னகை தவழும் முகத்துடன் தந்தையை நோக்கி,” தந்தையே! உமக்குச் சொல்ல வேண்டிய வார்த்தைகள் உள்ளது. மேலும், நான் சொல்வது மிகவும் முக்கியமானது. விதை இல்லாமல் எங்காவது மரங்கள் தோன்றிய வரலாறு உண்டா? அது போலத் தான், இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் அந்தத் திருமாலின் திவ்ய ரூபங்கள் தான். அவர் இல்லாமல் இந்த உலகம் ஏது? தங்களுக்கு வரம் பல கொடுத்த பிரமனையும் தோற்றுவித்தவர் திருமால். கைலாய மலையில் உள்ள சிவ பெருமானும் திருமாலின் நாமத்தையே அனுதினமும் தியானித்து வருகிறார். அவ்வளவு ஒப்பற்ற கடவுள் அவர். எல்லாப் பொருள்களிலும் நிறைந்து உள்ளவர் அவர். அவர் தனக்கு முன்னும், பின்னும் இல்லாதவர். ஆதியும், அந்தமும் அவரே. எந்நிலையிலும் மாறாதவர். அவர் பாதம் பற்றாமல் ஞானிகளுக்கும் முக்தி நிலை கிடையாது. அது மட்டும் அல்ல, நமது அரக்கர்களின் குரு சுக்கிராச்சாரியார் கூட திருமாலை யாகத்தின் போது ஒதுக்க இயலாதவர் ஆகிறார். காரணம், எப்படிப் பட்டவர்களும் யாகத்தின் முடிவில், அதன் பலன்களை நாராயணனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும். அதுவே சாஸ்திரம். அப்போது தான், செய்த யாகம் பூர்த்தி பெறும். மொத்தத்தில், அக்கடவுளின் தன்மையைப் பிரதியட்சம் முதலான பிரமாணங்களாலும் கூட அளந்திட முடியாது. அத்தன்மையானது அறிவுக்கும் எட்டாமல் அப்புறத்திலே இருக்கின்றது. எனவே, தாங்களும் அவரது பெயரை சொல்லிப் பாருங்கள். நிச்சயம் நலம் பல உண்டு” என்று இறங்கிக் கூறினான்.
பிரகலாதன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட இரணியன், எல்லா உலகங்களும் அஞ்சும் படியான பெரும் கோபத்தைக் கொண்டான். அவன் கோபம் பாற் கடலில் தோன்றிய ஆலாகால விஷத்துக்கு ஒப்பாக இருந்தது. அவன் இனி பிரகலாதனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்தான். உடனே கொலையாளிகளை அழைத்து வரும் படியாக தனது ஏவலர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். ஏவலர்கள் அழைக்க கொலையாளிகளும் உடனே வந்தனர். அந்தக் கடும் கொலையாளிகளைப் பார்த்து,” இந்தப் பிரகலாதனைக் காட்டிலும் வேறு ஒரு பகைவன் எனக்கு இல்லை. எனவே, இவனைக் கொன்று விடுங்கள்” என்று பணித்தான்.
உடனே அந்தக் கொலையாளிகள் பிரகலாதனை பிடித்துக் கொண்டுபோனார்கள். கொலைக் களத்தில் நிறுத்தி அவன் மேல் வலுவான ஆயுதங்கள் கொண்டு தாக்கின்றார்கள். ஆனால், திருமாலின் நாமத்தை அப்போது உச்சரிக்கத் தொடங்கிய பிரகலாதனின் உடலில் அந்த ஆயுதங்கள் ஒரு சிறு கீறலையும் உண்டு பண்ணவில்லை. மேலும், பாவிகளான அந்த அசுரர்கள் எறிந்த அத்தனை ஆயுதங்களும் எம்பெருமானை துணையாகக் கொண்ட பிரகலாதனின் உடம்பில் பட்ட மாத்திரத்தில் முறிந்து துகள்களாகப் போயின.
தாங்கள் ஏவிய ஆயுதங்களால் பிரகலாதன் ஒரு துன்பத்தையும் அடையாமல் நின்று கொண்டு இருப்பதைக் கண்ட அசுரர்கள் இரணியனிடம் போய் விஷயத்தை தெரிவித்தார்கள். அவர்கள் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட இரணியன்,” ஒ அப்படியா? மாயையை அறிந்தவன் பிரகலாதன். அதனால், தான் அவன் ஆயுதங்களை பலம் இழக்கச் செய்து விட்டான் போலும். சரி, இனி நெருப்பை மூட்டி அதில் அவனைத் தள்ளுங்கள்” என்றான்.
இரணியனின் உத்தரவுப் படி கொலையாளிகள், மலை போல விறகுகளைக் கொண்டு வந்து அடிக்கினார்கள். குடங்களில் நெய்யையும், வெண்ணையையும், எண்ணெயையும் கொண்டு வந்து அந்த விறகுகளின் மீது கொட்ட