வட இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு பழமையான சம்பவம்

bookmark


சந்தௌலி என்னும் கிராமத்தில் "ஜமீலா" என்னும் பெயர் கொண்ட தொண்ணூறு வயது மூதாட்டி நோய் வாய்ப் பட்டு மரணப் படுக்கையில் இருந்தாள். அவளது மனதில் பழைய ஞாபகங்கள் ஓடிக் கொண்டே இருந்தது. சிறு வயதில் இருந்தே ஜமீலா ஏழ்மையில் வளர்ந்தவள். அதே ஊரில் பாஷா என்னும் பெயர் கொண்ட சீமான் ஒருவர் இருந்தார். அவரது தொழிலே வட்டி கொடுப்பதும், வாங்குவதும் தான். ஜமீலா வின் தந்தையான அகமது, பாஷா விடம் ஏராளமாக கடன் வாங்கி இருந்தார். அகமதுவால் ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியவில்லை. பாஷாவுக்கோ அகமதுவின் மகள் ஜமீலா என்றாள் அப்படி ஒரு ஆசை.

இந்நிலையில் பாஷா கடன் பெற்ற அகமதுவை பணம் கேட்டு நெருக்கினார். அகமதுவால் பணத்தை கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் பாஷா அகமதுவிடம் "நீ பணத்தை கொடுக்காவிட்டால் பரவாயில்லை, உனது மகள் ஜமீலாவை எனக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொடு" என்றார். 

பாஷாவுக்கு வயது முப்பத்தி ஒன்பது, ஜமீலாவுக்கோ அப்போது வயது இருபது. இருந்தாலும் தந்தை படும் அவமானத்தை பார்க்க சகிக்காமல் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டாள் ஜமீலா. பாஷா – ஜமீலா நிக்கா (திருமணம்) நல்ல முறையில் நடந்தது. பாஷாவின் முதல் தாரமான மெகர் சிறு வயதிலேயே இறந்து விட்டார். மனைவி இறந்து ஐந்து வருடத்தில் பாஷா ஜமீலாவை திருமணம் செய்து கொண்டார், எனினும் அவள் மீது பேரன்பு கொண்டு இருந்தார். வட்டித் தொழிலில் கிடைத்த பெரும் பணத்தைக் கொண்டு ஜமீலாவுக்கு கிலோ கணக்கில் நகைகளை வாங்கிக் குவித்தார். ஜமீலா வந்த நேரம் பாஷா அந்த ஊரிலேயே பெரும் செல்வச் செழிப்புடன் காணப்பட்டார். இவர்கள் இருவரது இல்லறத்தின் பயனாக ஜமீலா எட்டு குழந்தைகளை பெற்று எடுத்தாள். எல்லாமே அவர்கள் வாழ்க்கையில் நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது.

ஜமீலா ஏழ்மையான வீட்டில் பிறந்து வறுமையில் வாடியவள். ஆனால் இப்போதோ அவளது நிலையே வேறு. எனினும் சிறு வயதில் பணம் இல்லாமல் தான் பட்ட அவமானத்தை மறக்க, அந்த நினைவுகளில் இருந்து வெளிவர, தன்னை பணக்காரியாக எல்லோரிடமும் காட்டிக் கொள்ள, ஜமீலா உயர் ரக விலையுர்ந்த ஆடைகளையே (எப்போதும்) அணிந்து கொண்டாள். அது மட்டும் அல்ல, கணவன் தனக்கு அன்பளிப்பாக கொடுத்த பல சவரன் நகைகளை எல்லாம் எப்போதும் தனது உடலில் பூட்டி காணப்படுவாள். பார்ப்பவர்களுக்கு ஒரு நகைக் கடையே எதிரில் இருப்பது போலத் தோன்றும். பெற்ற பிள்ளைகள் கூட அவளது நகைகளை தொடக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருந்தாள். இந்நிலையில் ஜமீலாவுக்கு 63 வயது ஆகும் போது பாஷா மரணம் அடைந்தார்.

ஜமீலா அதிக துக்கம் அடைந்தாள். ஆனாலும் அவளது உடலில் கணவன் தனக்கு முதன் முதலில் பூட்டிய பல சவரன் நகைகளை அணிந்து காணப்பட்டாள். எல்லோரும் கணவன் இறந்த பிறகும் கூட ஜமீலா இவ்வாறு இருப்பதை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் ஜமீலா அதனைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தனது முதல் மகன் முகம்மதுவிடம் அடிக்கடி ஜமீலா சொல்லுவாள், "முகம்மது! உனக்கும் உனது உடன் பிறந்தவர்களுக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. அவற்றின் முன்னாள் இந்த நகைகள் ஒன்றும் பெரிதல்ல. அதனால் ஒருவேளை, நான் இறந்து விட்டாலுமே கூட நீ இந்த நகைகளை எனது உடலில் இருந்து அகற்றி விடாதே. அப்படி ஒரு வேளை நீ செய்துவிட்டால் நான் உன்னை செத்தும் மன்னிக்க மாட்டேன். என்னை இந்த நகைகளுடனேயே நீ இடுகாட்டில் புதைக்க வேண்டும். இது தான் எனது கடைசி ஆசையாக எப்போதும் இருக்கும்" என்றாள்.

இப்போது அதே ஜமீலாவுக்கு வயது தொண்ணூறு படுத்த படுக்கையாக மரணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருந்தாள். அந்நிலையிலும் அவள் உடல் முழுக்க நகைகளை அணிந்து இருந்தாள். ஜமீலாவை பரிசோதித்த மருத்துவர், அவள் அதிக நேரம் உயிருடன் இருக்க மாட்டாள் என்று அடித்துச் சொன்னார். உண்மை தான் ஜமீலா மரணத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தாள். அவளது மகள்களுக்கோ ஜமீலா எப்போது இறப்பாள் அவளது உடலில் பூட்டிய நகைகளை எப்போது எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்.

ஆனால் ஜமீலா வெகு நேரம் ஆகியும் மூச்சு இழுத்தபடியே இருந்தாலே தவிர அவள் இறக்கவில்லை. எரிச்சல் அடைந்த அவள் மகள்களில் இருவர் வெகுண்டு எழுந்து போய், ஜமீலா அணிந்து இருந்த நகைகளை பற்றி எடுக்க முயற்சி செய்தார்கள். அதனை உணர்ந்த ஜமீலா சாகப் போகும் அந்த நிலையிலும் அதீத கோபம் கொண்டு" அதனை எடுத்தாள் நான் உங்களை மகள்கள் என்று கூட பார்க்க மாட்டேன். எடுக்காதீர்கள் கொன்றுவிடுவேன்" என்று கத்தியபடி இறந்து போனாள். ஜமீலா போட்ட சத்தத்தில் அந்த வீடே அதிர்ந்தது. பயத்தால் ஜமீலாவின் மகள்கள் நகைகளை எடுக்காமல் பயந்து ஒதுங்கினார்கள். ஜமீலாவின் மூத்த மகன் முகம்மது அவளது கடைசி ஆசையின் படி அவள் அணிந்து இருந்த நகைகளுடனேயே அவளை இடுகாட்டில் புதைத்தான்.

ஜமீலாவின் உறவினர்கள் பலர் அவளது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். அச்சமயம் அவளது தூரத்து சொந்தக்காரரான இம்ரான் என்பவர் ஜமீலா நகைகளுடன் புதைக்கப் படுவதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தார். இம்ரான் பேராசை கொண்டவர். இவ்வளவு நகைகளை அவர் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. ஜமீலாவின் உடலில் இருந்து அந்த நகைகளை திருட சந்தர்ப்பம் பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார். ஜமீலா புதைக்கப் பட்டவுடன் சில கணங்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய பிறகு அனைவரும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டனர். ஆனால் இம்ரான் மட்டும் போகவில்லை. ஜமீலாவின் நகைகளை எடுக்க தருணம் பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார். அச்சமயம் குளிர்ந்த காற்று வீசியது, இடியுடன் மழை பெய்ய, அந்த இடத்தில் இப்போது யாருமே இல்லை.

இம்ரான் சற்றும் தாமதிக்காமல் ஜமீலாவின் சவக் குழியை தோண்டினார். அவளது அனைத்து நகைகளையும் எடுத்து மூட்டையாக கட்டிக் கொண்டார். இன்றோடு நமது அனைத்துக் கவலைகளும் தீர்ந்தது என்று மகிழ்ந்தார். ஆனால், இம்ரானுக்குத் தெரியாது உண்மையில் அவருக்கு பெரும் கவலைகளே இனிமேல் தான் ஆரம்பிக்கப் போகிறது என்று. இம்ரான் மெல்ல ஜமீலாவின் உடலை போர்த்தியபடி அவளது சவக்குழியில் இருந்து வெளியே பாய முற்பட்டார். யாரோ அவரை பிடித்து இழுப்பது போல ஒரு பிரமை இம்ரானுக்கு அப்போது ஏற்பட்டது. மிகவும் திகில் அடைந்தார் அவர். மனதை தேற்றிக் கொண்டு மெல்ல ஜமீலாவின் சவக் குழியை கண்டார். அப்போது தான் அவருக்குப் புரிந்தது ஜமீலாவின் கை விரல்களில் அவரது அங்கியின் ஒரு முனை மாட்டிக் கொண்டு இருப்பது. மெல்ல அதனை எடுத்துக் கொண்டு மீண்டும் சவக் குழியை பழையபடி மூடிவிட்டு நகைகளுடன் தனது வீட்டுக்குத் திரும்பினார்.

இம்ரான் தனது மனைவி ஆயிஷாவிடம் கூட நடந்த விஷயங்கள் எதையும் கூற வில்லை. ஆனால் அன்று இரவு இம்ரான் மிகவும் சந்தோஷத்துடன் காணப்பட்டார். அத்துடன் பத்திரமாக ஜமீலாவின் நகைகளை ஒரு இடத்தில் பதுக்கி வைத்தார். பிறகு சில கணங்களில் அவர்கள் இருவரும் உறங்கத் தொடங்கினார்கள். மழையோ நிற்காமல் பெய்து கொண்டு இருந்தது. இரவு பன்னிரெண்டு, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க ஆயிஷா மெல்ல தூக்கம் களைந்து கண் விழித்தாள். மூன்றாவது முறையாக கதவு பலமாக தட்டப்பட ஆயிஷா அலறி அடித்தபடி எழுந்தாள். ஆனால், இத்தனைக்கும் மத்தியில் இம்ரான் தூக்கம் கலையாமல் உறங்கிக் கொண்டே இருந்தான். ஆயிஷாவுக்கே இம்ரானின் அந்நிலை ஆச்சர்யத்தை தந்தது. சரி என்று, ஆயிஷாவே மெல்ல சென்று கதவை திறந்தாள். ஆனால் அங்கு யாரும் இல்லை.

"யார் கதவை தட்டியது?" என்ற வியப்புடன் ஆயிஷா மீண்டும் உறங்கச் சென்றாள். அந்த நேரம் மின்தடை ஏற்படவே இம்ரானின் வீடே இருள் அடைந்தது. ஜன்னலின் வெளியில் இருந்த மின்னல் ஒளி பளிச், பளிச் சென்று மின்னியது. அந்த ஒளியில் ஆயிஷா வயதான மூதாட்டி ஒருத்தி தனது அருகில் முகத்தை போர்த்தியபடி நிற்பதை கண்டாள்.

"யார் நீங்கள்? எப்படி பூட்டிய வீட்டுக்குள் வந்தீர்கள்? முகத் திரையை உடனே அகற்றுங்கள்" என்று ஆயிஷா சொல்ல அந்த வயதான மூதாட்டி அமைதியாக நின்று கொண்டு இருந்தார்கள். மீண்டும் ஆயிஷா அந்த மூதாட்டியை யார் என்று அறியாமல் முகத்திரையை அகற்ற சொல்லி அதட்ட, அந்த மூதாட்டி அவளது முகத் திரையை மெல்ல அகற்றினாள். அக்கணமே ஆயிஷா அந்த மூதாட்டியின் முகத்தை கண்டு அலறினாள். மயங்கி கீழே விழுந்தாள். காரணம் அந்த முகம் விழிகளே இல்லாத முகம்.

அடுத்த நாள் காலைப் பொழுது புலர்ந்தது. இம்ரான் மெல்ல எழுந்தான். ஆயிஷா தரையில் விழுந்து அடிபட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். உடனே மருத்துவரை அணுகி ஆயிஷாவின் காயங்களுக்கு மருந்து இட்டான். மயக்கம் தெளிந்த ஆயிஷாவின் நடவடிக்கைகளில் பல மாற்றங்களைக் கண்டான். ஆயிஷா, மயக்கம் தெளிந்த மாத்திரத்தில் இம்ரானை வெறுப்புடன் பார்த்தாள். அத்துடன் இம்ரான் மறைத்து வைத்து இருந்த நகைகளை கண்டுபிடித்து அணிந்து கொண்டாள். அதனைக் கண்ணாடியில் பார்த்து, பார்த்து ரசித்தாள். ஆயிஷாவின் குரலும் கூட மாறி இருப்பதை இம்ரான் கவனித்து திகைத்தான். அவனுக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது. அன்று இரவு இம்ரான், இறந்த ஜமீலாவின் நகைகளில் ஒரு விலையுர்ந்த மோதிரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போய், தனது ஆசை நாயகியிடம் கொடுத்தான். அன்று இரவு அவள் வீட்டிலேயே கழித்தான்.

அடுத்த நாள் விடிந்தது, ஆயிஷா எழுவதற்குள் இம்ரான் பின்வாசல் வழியாக வீடு திரும்பினான். படுக்கையில் நகைகளுடன் படுத்து இருந்த ஆயிஷாவைக் கண்டு அதிர்ந்தான். அவளது முடிகள் கொட்டிக் கிடக்க, முகத்தில் பல சுருக்கங்களைக் கண்டான். உற்று ஆயிஷாவின் முகத்தை கவனித்தான். அதில் ஒரு சவக் கலை தெரிந்தது. அப்போது ஆயிஷா கண் விழித்தாள். "எங்கே எனது மோதிரம்?" என்று இம்ரானின் சட்டையை பிடித்து உலுக்கினாள். அப்போது தனது வீட்டுக் கண்ணாடியில் ஆயிஷாவின் முகத்தைக் கண்டான் இம்ரான். ஆம், அது ஜமீலாவின் முகம் தான். அக்கணமே இம்ரான் அலறி அடித்தபடி ஓடினான். அப்படி ஓடியவன் தான் செய்த தவறை உணர்ந்தான். உடனே ஜமீலாவின் மூத்த மகன் முகமதுவை சந்தித்து தான் செய்த தவறை கூறி அழுதான். முகம்மது, இம்ரானின் நிலையைக் கண்டு மனம் உருகினான். உடனே தனக்கு மிகவும் நம்பிக்கைக் குரிய மவுலி ஒருவரை உடனே அழைத்தான். அவரிடம் முகம்மது நிலைமையை கூற, அனைத்து விஷயங்களையும் பொறுமையாகக் கேட்ட மவுலி "இம்ரான் செய்தது மிகப் பெரிய தவறு தான். இருந்தாலும், அவன் செய்த தவறை எப்போது உணரந்தானோ. அப்போதே அவனுக்கு சொர்கத்தில் இருந்து மன்னிப்பும் கிட்டிவிட்டது. கவலை வேண்டாம், ஜமீலாவின் நகைகளை இன்று இரவு அவளது சவக் குழியிலேயே போட்டுவிட்டால் போதும். நகைகள் இருக்கும் இடத்தில் தான் ஜமீலா இருப்பாள். எனில், மீண்டும் அவள் தனது சவக்குழிக்கு திரும்பி விடுவாள்" என்றார்.

அதற்குள் ஆயிஷாவின் உடலில் இருந்த ஜமீலா, இம்ரானின் ஆசை நாயகியின் இருப்பிடம் தேடிச் சென்று அவளிடம் தனது வைர மோதிரத்தை கேட்டு பயமுறுத்தினாள். இருந்தாலும் இம்ரானின் அந்தக் காதலி மோதிரத்தை தர மறுக்கவே. கோபம் கொண்ட ஜமீலா, அவளது விரலை மோதிரத்துடன் வெட்டி எடுத்துக் கொண்டு சென்றாள். அன்றைய பொழுதும் சாய்ந்தது. இந்நிலையில் மீண்டும் அனைத்து நகைகளும் கிடைத்த திருப்தியில் ஆயிஷாவை பிடித்து இருந்த ஜமீலா உறங்கச் சென்றாள். இது தான் சமயம் என்று காத்து இருந்த முகம்மது, மவுலியின் துணையுடன் புனித நீரை ஆயிஷா மீது தெளித்தான். ஜமீலா அக்கணமே தற்காலிகமாக ஆயிஷாவை விட்டு நீங்க, இம்ரான் வேகமாக ஆயிஷா அணிந்து இருந்த ஜமீலாவின் அனைத்து நகைகளையும் ஒன்றுவிடாமல் கழற்றினான்.

முகம்மது, இம்ரான், மௌலி மூவரும் இடுகாடு நோக்கி விரைந்தனர். இம்ரான் ஜமீலாவின் சவக் குழியை தோண்டி அத்தனை நகைகளையும் அவளது சிதைந்த பிணத்தின் மீது பழையபடி பூட்டினான். வேகமாக சவக் குழியை விட்டு வெளியில் வர முயன்றான். அப்போது ஜமீலாவின் பிரதே உடல் அவனை பற்றி இழுத்தது. மௌலி மீண்டும் புனித நீரை தெளிக்க அவரது உதவியுடன் இம்ரான் சவக் குழியை மீண்டும் மூடினான். அன்றில் இருந்து ஆயிஷா பழைய நிலைக்குத் திரும்பினாள். ஆனால் ஆயிஷா, முடிகள் அனைத்தும் கொட்டிய நிலையில் கிழத் தோற்றம் பெற்றே எப்போதும் காணப்பட்டாள். அவள் நிலையை பார்த்துப் பார்த்து இம்ரான் அழுதான்.

இந்தக் கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது :-

பிறர் பொருளுக்கு ஆசைப் படாமல் இருப்பதே நல்லது. அதுவே வாழ்விற்கு நிம்மதி தரும்.

இது பற்றி மனோதத்துவ நிபுணர்கள் சொல்வது:-

ஆயிஷா, ஜமீலாவாக மாறியதற்கு "spiritual personality" என்ற மனக் கோளாறு தான் காரணம் என்கின்றனர் மனோதத்துவ மருத்துவர்கள்.