மாயக்கிணறின் அபாய வரங்கள்

bookmark


ஒரிசா மாநிலத்தில் அப்தல்பூர் என்ற கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்னாள் நடந்த சம்பவம் இது

அப்தல்பூரில் ஊர் எல்லையில் ஒரு கிணறு இருந்தது. அது மக்களால் தெய்வமாக வணங்கப்பட்டு வந்தது. அந்தக் கிணற்றின் மகத்துவம் யாதெனில் அது கேட்ட வரத்தை அப்படியே தரும். ஆரம்பத்தில் மக்கள் இதனைப் பெரிதாக நம்பவில்லை, ஆனால் சிலரது பிரார்த்தனை அப்படியே நடந்தேறியது. இந்த விஷயம் எல்லா பட்டி தொட்டிகளிலும் பரவியது. பிரச்சனை இல்லாத மனிதர்கள் தான் இந்த உலகத்தில் உள்ளனரா என்ன? அனைத்து மக்களும் அந்த கிணற்றை நோக்கி நாள் தோறும் படையெடுக்கத் தொடங்கினார்கள். தங்கள், தங்கள் எதிர்பார்ப்புகளை வரமாக அந்தக் கிணற்றிடம் கேட்க, அவையெல்லாம் அப்படியே நடந்தேறியது.

இந்த விஷயத்தை பக்கத்து கிராமத்தில் வசித்த அஞ்சனா என்ற பெண் கேள்விப்பட்டாள். அவள் கணவர் ஒரு அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு பல வருடங்களாக பதவி உயர்வு தடைபட்டுக் கொண்டே இருந்தது. அதனால் அவரது கணவர் மனம் நொந்தார். இந்த நிலையில் தான் அஞ்சனா வரம் தரும் அந்த மாயக் கிணறு பற்றிக் கேள்விப்பட்டு அவ்விடம் நோக்கி பூஜை செய்ய வந்தாள். பூஜையை முடித்து விட்டு கிணற்றிடம் தனது கணவருக்கு நல்ல சம்பளத்தில் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று மனம் நெகிழ வேண்டிக் கொண்டாள். பிறகு வீடு திரும்பினாள்.

இரண்டு மாத காலம் மெல்ல நகர்ந்தது. அஞ்சனா தனது அன்றாட வேளையில் கிணற்றிடம் தான் கேட்ட வரத்தை மறந்தாள். ஒரு நாள் மாலை அஞ்சனாவின் கணவன் பாவேஷ் மிகவும் சந்தோஷத்துடன் வீடு திரும்பினான். தனக்கு பதவி உயர்வு கிடைத்த செய்தியை மனைவி மற்றும் தம்பி விக்ரமிடம் கூறினான். வீட்டில் இருந்த அனைவரும் இந்த விஷயத்தைக் கேட்டு மகிழ்ந்து பூரித்தார்கள்.

இந்த சம்பவம் நிகழ்ந்து சில மாதங்கள் நகர்ந்தது விக்ரம் ஒரு லாட்ரி டிக்கெட்டை வாங்கி இருந்தான். அதில் பரிசு விழுந்தால் அவன் ஐம்பது லட்சத்துக்கு அதிபதி. ஆனால் விக்ரமுக்கே பரிசு விழும் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை. வாங்கிப் பார்ப்போம் என்று தான் அந்த லாட்ரி டிக்கெட்டை அவன் வாங்கினான். தனது அண்ணி அஞ்சனாவிடம் ஒரு நாள் தான் வாங்கிய அந்த லாட்ரி டிக்கெட்டை பற்றி விக்ரம் பேச்சு வாக்கில் எடுத்து உரைத்தான். அப்போது பேசும் போது விக்ரம் அஞ்சனாவிடம் ," அண்ணி பரிசு விழுந்தால் நாம் லட்சாதிபதி, ஒரு வீடு, கார் போன்ற அனைத்தும் வாங்கிவிடலாம். ஆனால் எங்கே பரிசு விழப் போகிறது? ஏதாவது அதிசியம் நடந்தால் தான் உண்டு. சாமி வரம் கொடுத்தால் பரிசு கிடைக்கும்" என்று சொல்லிவிட்டுப் போனான்.

மைத்துனன் விக்ரம் கூறிய "வரம்" என்ற அந்த வார்த்தை மட்டும் அஞ்சனாவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அப்போது தான் அவளுக்கு அருகில் இருந்த கிராமத்தில் இருந்த மாயக் கிணற்றின் நினைவு அஞ்சனாவுக்கு வந்தது. உடனே அந்த கிணற்றை நோக்கி ஓடிச் சென்றாள். அந்த கிணற்றை அடைந்து அதனை வணங்கினாள். பூஜை செய்தாள் மைத்துனர் விக்ரமுக்கு லாட்டரி டிக்கெட்டில் ஐம்பது லட்சம் பரிசு விழ வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொண்டாள். மீண்டும் இன்னொரு அதிசியத்தை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் வீடு திரும்பினாள் அஞ்சனா.

நாட்கள் மெல்ல நகர ஒரு நாள் மைத்துனன் விக்ரம் சந்தோஷத்துடன் அண்ணி அஞ்சனாவிடம் ஓடி வந்து "அண்ணி சந்தோஷமான விஷயம் நாம் லட்சாதிபதி ஆகி விட்டோம். நாம் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ஐம்பது லட்சம் பரிசு விழுந்து விட்டது" என்றான். அப்போது அவர்கள் அனைவரும் சந்தோஷத்துடன் துள்ளிக் குதித்தார்கள். அன்றைய நாள் முதலாக அந்தக் கிணறை அஞ்சனா வரம் தரும் கற்பக மரமாகப் பார்த்தாள். ஆனால், அவளுக்குத் தெரியாது அந்தக் கிணறு தான் அவளது உயிருக்கு எமனாகப் போகிறது என்று.

மீண்டும், மீண்டும் சென்று அந்தக் குறிப்பிட்ட கிராமத்தில் இருந்த கிணற்றை பூஜை செய்து வந்தாள் அஞ்சனா. அப்படி இருக்கும் போது ஒரு நாள் இரவு அவளது வீட்டில் சமைத்துக் கொண்டு இருந்த சமயம் அவள் பின்னால் யாரோ நிற்பது போன்ற ஒரு உணர்வைப் பெற்றாள் அவள். அனால் அவள் திரும்பிப் பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. எல்லாம் மனப் பிரமை என்று நினைத்தபடி தனது வேலையை தொடங்கினாள். அன்று மாலை இனிமையாக பொழுது சாய்ந்தது. அனைவரும் உறங்கச் சென்றனர்.

அஞ்சானா படுக்கையில் உறங்கிக் கொண்டு இருக்க அவளது மன எண்ணங்கள் அனைத்தும் ஒரு உருவம் கொண்டு அந்த கிணற்றை நோக்கிப் போனது. அப்போது அந்தக் கிணற்றில் விழுந்து அவள் முழுகுவதாக ஒரு உணர்வைப் பெற்றாள் அஞ்சனா. மூச்சுத் திணறல் அப்போது உண்மையிலேயே அவளுக்கு ஏற்பட்டது. படுக்கையில் இருந்த அஞ்சானா கத்த முயற்சி செய்தாள் ஆனால் அவள் தேகம் முழுவதும் தண்ணீருக்குள் சென்று விட்டதால் அவளால் ஒன்றும் முடியவில்லை. அந்தப் போராட்டத்தில் அஞ்சனா தனது கால்களை வேகமாக உதறினாள். அவள் படுத்திருந்த கட்டில் வேகமாக அசைந்தது. அவள் அருகில் படுத்து இருந்த அவளது கணவன் பாவேஷ் கண் விழித்து அஞ்சனாவின் நிலையை கண்டு திடுக்கிட்டான். அவளை எழுப்பினான். ஆனால் அவள் எழும்பவில்லை. அவள் இரு கன்னங்களிலும் ஓங்கி, ஓங்கித் தட்டினான். மெல்ல சுய நினைவு பெற்றாள் அஞ்சனா. நடந்த விவரங்கள் அனைத்தையும் கணவனிடம் கூறினாள் அவள். அப்போது தான் அஞ்சனா தன்னைத் தானே கவனித்தாள். அவள் உடலில் இருந்த ஆடைகள் அனைத்தும் நனைந்து இருந்தது. தான் கிணற்றில் உண்மையிலேயே முழ்கி விட்டோமா! இல்லை நடந்தது அனைத்தும் தனது கற்பனையா? கற்பனை என்றாள் ஆடைகள் நனைந்தது எப்படி? என்ற கேள்வியை அவள் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அதிக குழப்பத்தில் இருந்தாள் அவள். அப்போது பாவேஷ் அவளுக்கு ஆறுதல் அளித்து," நீ இரவு நேரத்தில் எப்போதும் போல குளித்து விட்டு சரியாக துடைத்துக் கொள்ளாமல் வந்து படுத்திருப்பாய். அதனால் உறக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையில் இருந்த உனக்கு கனவு வந்து இருக்கும்" என்று ஆறுதல் சொன்னான். ஆனால் அஞ்சனா இந்த சம்பவத்துக்குப் பிறகு பிரமை பிடித்தவள் போல எப்போதும் காணப்பட்டாள்.

அஞ்சனாவின் கணவன் பாவேஷ் வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தம். வருவதற்கு ஒருவாரத்திற்கு மேல் ஆகும் என்று கூறிச் சென்றான். வீட்டில் அஞ்சனாவும் அவளது மைத்துனன் விக்ரமும் தான் இருந்தனர். விக்ரமும் அலுவலகம் சென்று விட்டான். அஞ்சனா தனிமையில் வீட்டில் இருந்தாள், அப்போது வீட்டுக் குழாயில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குழாயை பல முறை அஞ்சனா மூடினாள். ஆனால் குழாயோ தானாக திறந்து கொண்டது. அஞ்சனா திடுக்கிட்டாள் யாரோ அவளது முடியை பற்றி இழுப்பது போல உணர்ந்தாள். ஆனால் அது பிரமை அல்ல. தர, தரவென்று அவளது முடியைப் பற்றியபடி ஒரு கரும் உருவம் முக்காடு அணிந்து கொண்டு வீடு முழுவதும் அவளை கீழே விழச் செய்து இழுத்துச் சென்றது. அவளால் அந்த உருவத்தை படுத்த நிலையிலேயே பார்க்க முடிந்தது. மயங்கி தரையிலேயே மாலை வரை கிடந்தாள். அந்த சமயம் மைத்துனன் விக்ரம் வங்கியில் இருந்து லாட்டரியில் தனக்கு கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு அண்ணியிடம் அதனைக் காட்ட வேகமாக ஓடி வந்தான். ஆனால் அவனது அண்ணி அஞ்சனாவோ ரத்தம் சொட்ட அடிபட்ட நிலையில் கீழே விழுந்து கிடந்தாள். அஞ்சனாவின் அந்த நிலையைக் கண்ட விக்ரம் துடித்துப் போனான். உடனே மருத்துவரை அழைத்து அவளுக்கு சிகிச்சை அளித்தான். நடந்த விவரத்தை கேட்டான். அஞ்சனாவும் அனைத்தையும் விவரமாகச் சொன்னாள். விக்ரம் நன்கு படித்த இளைஞன் அவனால் அண்ணி அஞ்சனா சொன்ன விஷயங்களை ஏற்க முடியவில்லை. அவளுக்கு அறுதல் கூறி, வீட்டில் நடந்த விஷயத்தை அண்ணன் பாவேஷ்க்கு தொலைப்பேசி மூலம் தெரிவித்தான். பிறகு அஞ்சனாவிடம் தனக்கு லாட்டரியில் கிடைத்த ஐம்பது லட்ச ரூபாய் பணத்தை சூட்கேஸ் இல் வைத்துக் காட்டினான். அஞ்சனா அந்நிலையிலும் கூட மைத்துனனின் சந்தோஷத்தை கண்டு பூரித்தாள்.

பிறகு விக்ரமிடம் அஞ்சனா," தம்பி இதற்கெல்லாம் காரணம் அந்த கிராமத்தில் இருந்த கிணறு தான்" என்று கூறி அவனையும் சென்று அந்தக் கிணற்றை தொழுது வருமாறு கூறினாள். அண்ணியின் விருப்பப்படி பூஜை சாமான்களை வாங்கிக் கொண்டு விக்ரம் அந்த மாயக் கிணற்றை நெருங்கி பூஜை செய்யத் தொடங்கினான். அப்போது அவனது அருகில் ஒரு நடுத்தரப் வயது கொண்ட பெண் நின்று இருப்பதைக் கண்டான். அந்தப் பெண் விக்ரமிடம் பேசத் தொடங்கினாள் "தம்பி! இந்தக் கிணற்றை ஏன் வழிபட்டாய்? இது நீ நினைப்பது போல ஒருவரை வாழ வைக்கும் தெய்வீகக் கிணறு அல்ல. இந்த கிணற்றில் சூன்னியக் காரி " அம்பாவின்" சாபம் உள்ளது" என்றாள்.

விக்ரமுக்கு ஒன்றும் புரியவில்லை, அவன் சொன்னான் "அம்மா இந்தக் கிணறு தெய்வீகக் கிணறு தான். இதன் மூலம் எனது அண்ணியின் இரண்டு வரங்கள் நிறைவேறியது தெரியுமா?" என்றான்.

விக்ரமின் வார்த்தைகளை கேட்டு திடுக்கிட்ட அந்த நடுத்தர வயதுப் பெண் "என்ன உனது அண்ணி இந்தக் கிணற்றிடம் வரம் கேட்டார்களா! அதுவும் இரு வரங்கள் நிறைவேறி விட்டதா? இனி உனது அண்ணியை யாராலும் காப்பாற்ற இயலாது. அவர்கள் மரணத்தின் பாதையில் சென்று கொண்டு இருக்கிறார்கள்" என்றாள்.

அது கேட்டு விக்ரம் திடுக்கிட்டு மேற்கண்ட விஷயத்தை சொன்ன அந்தப் பெண்ணிடம் முழு விவரத்தையும் கேட்டான்.

அந்த நடுத்தர வயதுப் பெண் சொல்லத் தொடங்கினாள்," தம்பி முன்னொரு காலத்தில் இவ்விடத்தில் "அம்பா" என்ற சூனியக் காரி தங்கி இருந்தாள். அவளது வேலையே செய்வினை, பில்லி சூனியம் வைப்பது தான். ஆனால் இதனை அறியாத ஊர் மக்கள் அவளை ஆரம்பத்தில் தெய்வமாகப் போற்றினார்கள். அவளிடம் வந்து வேண்டினால் எப்பேர்பட்ட பிரச்சனைகளும் அம்பாவின் ஒரு வரத்தால் தீர்ந்து விடும் என நம்பினார்கள். அதன்படியே அம்பாவும் அவர்கள் கேட்ட வரங்களை எல்லாம் நிறைவேற்றி வந்தாள். ஆனால் ஊர் மக்களுக்குத் தெரியாது அம்பா இரு முறை மட்டுமே அவர்கள் கேட்கும் வரங்களை பிசாசின் ஏவலால் நிறைவேற்றுவாள், அதன் பின்னர் கொடுத்த இரண்டு வரங்களுக்கு இணையாக, தன்னிடம் வரம் கேட்டவர்களைக் கொன்று அவர்களது உடலில் இருந்து ஆத்துமாவை பிரித்துத் தனது மந்திர சித்திக்கு அதனை பயன்படுத்திக் கொள்வாள் என்று.

அம்பாவிடம் வரம் கேட்டவர்கள் அனைவரும் இரண்டாவது வரம் நிறைவேறியதும் துடி துடித்து இறந்தனர். ஒரு நாள் இந்த விஷயம் ஊர் மக்களுக்குத் தெரியவந்தது. இனியும் அம்பாவை விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்து அவளை அடித்துத் துரத்த அவள் இருப்பிடம் வந்தார்கள். அம்பா தனது கடுமையான பூஜையை அப்போது செய்து கொண்டு இருந்தாள். பூஜையின் முடிவில் பூதங்களுக்கு ரத்தச் சோறை படைத்துக் கொண்டு இருந்தாள்.

"அவளை விடாதீர்கள்... அவளை விடாதீர்கள் ..." என்று அந்த ஊர் மக்கள் கத்திக் கொண்டு ஆவேசத்துடன் கைகளில் தடியுடன் விரைந்து வருவதை அம்பா பார்த்தாள். தனக்கு இவர்களால் மரணம் ஏற்படப்போகிறது. தன்னை அடித்துக் கொல்லத் தான் வருகிறார்கள் என்று தீர்மானித்த அம்பா. நீ இப்போது பூஜை செய்த இதே கிணற்றில் தான் விழுந்து உயிர் துறந்தாள். அன்றைய தினத்தில் இருந்து அம்பாவின் பிரதே ஆத்மா இன்னமும் இந்த இடத்தில் உலாவிக் கொண்டு உள்ளது. பலருக்கு இரு முறை வரம் அளித்து. தனது இரண்டாவது வரம் நிறைவேறியவுடன் அவர்களை அம்பா சித்திரவதை செய்து கொன்று விடுவாள்" என்று கூறி முடித்தாள் அந்த நடுத்தர வயதுப் பெண்.

அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு வெளு வெளுத்துப் போனான் விக்ரம். இவ்வளவு விஷயத்தை சொன்ன அந்தப் பெண்ணிடமே விக்ரம் தனது அண்ணியைக் காப்பாற்ற ஒரு வழியைக் கேட்டான். அவள் சொன்னாள்," தம்பி உனது அண்ணி பிழைக்க வேண்டும் என்றாள் அந்த இரண்டாவது வரத்தை நீ அம்பாவிடமே திருப்பிக் கொடுத்து விட வேண்டும் அல்லது அந்த இரண்டாவது வரம் நிறைவேறாமல் செய்து விடு" என்று.

விக்ரம் யோசித்துக் கொண்டு இருந்த போதே அந்த நடுத்தரவயதுப் பெண் மாயமானாள். அவள் பெயர், ஊர், விலாசம் எதுவுமே விக்ரமுக்குத் தெரியாது. என்ன செய்ய என தலையை பிய்த்துக் கொண்டான். அவனது மனதில் எப்படியாவது அண்ணியை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஓடியது. விறு, விறு வென்று வீடு திரும்பினான். அப்போது விக்ரமின் அண்ணி தனது வீட்டுக் கொல்லையில் கிணற்றுச் சுவரில் ஏறி கிணற்றுக்குள் தன்னிலை மறந்து குதிக்கத் தயாராக நிற்பதைக் கண்டான். ஏன் இப்படி அண்ணி நிற்கிறார்கள் என்று சிந்திப்பதற்குள் அஞ்சனா கிணற்றில் விழுந்தாள். அவளை ஒரு கை ஆழாமான கிணற்றுப் பகுதியை நோக்கி இழுத்துக் கொண்டு இருந்தது. அஞ்சனா அவ்வாறு விழுந்த நேரம் அவளது கணவன் பாவேஷும் வீடு திரும்பினான். தம்பி மூலம் தனது மனைவி ஆபத்தில் இருப்பதை அறிந்து. அவனும் மனைவியை காப்பாற்றும் நோக்கில் கிணற்றில் பாய்ந்தான். அண்ணன், அண்ணி இருவருமே கிணற்றில் விழுந்ததைப் பார்த்த விக்ரமுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது தான் அந்தப் பெண் சொன்னது நினைவுக்கு வந்தது. அம்பாவின் இரண்டாவது வரம் நிறைவேறக் கூடாது. அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்தவன். ஓடிச் சென்று தனக்கு கிடைத்த ஐம்பது லட்ச ரூபாய் பணத்தை எடுத்தான். மனதை தேற்றிக் கொண்டு "அம்பா நீ கொடுத்த இந்தப் பணம் என்னும் வரம் எனக்குத் தேவை இல்லை. இப்போதே நான் இதனை எரித்து விடுகிறேன்" என்று கூறி அந்தப் பணத்தை முழுவதுமாக அடுப்பில் வைத்துப் பற்றவைத்தான். அவ்வளவு தான், கிணற்றுக்குள் அஞ்சனாவை இழுத்துச் சென்று மேலும், மேலும் மூழ்கடித்துக் கொண்டு இருந்த அந்தக் கை நகர்ந்து சென்றது. அஞ்சனா அவளது கணவன் பாவேஷின் கண்களுக்கு தட்டுப்பட்டாள். பாவேஷ் பத்திரமாக அவளை காப்பாற்றி அழைத்து வந்தான். ஒரு பெரும் மரண வாசல் வரை சென்று அஞ்சனா திரும்பினாள்.

இந்தக் கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது :-

பிரதிபலன் பார்க்காமல் இந்த உலகத்தில் நமக்கு உதவி செய்பவர் அந்தக் கடவுள் மட்டுமே. அதை விடுத்து ஆவிகள், பேய்கள் இவைகளிடம் சென்று நான் வரம் கேட்டு தியானித்தால் நமக்கு தீமை மட்டும் தான் மிஞ்சும்.

இது பற்றி மனோதத்துவ நிபுணர்கள் சொல்வது :-

அஞ்சனா முரண் மூளைக் கோளாறு (schozophrenilc) என்ற மனச் சிதைவினால் பாதிக்கப் பட்டு இருக்கலாம். இந்த வகை நோயாளிகள் உண்மை நிலையை உணரமுடியாமல் மற்றவர்களுக்கு முரணாக உலகைக் காண்பார்கள் மருட்சி, பொய் நம்பிக்கை, அடம், மாயக்காட்சிகளை இவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். இல்லாதவற்றைப் பார்ப்பார்கள், கேட்பார்கள், வாசனை நகர்வார்கள், ருசிப்பார்கள், உணர்வார்கள். வாழ்க்கைச் சூழ்நிலையின் பரிமாணத்தை ஒன்று குறைத்து நோக்கி குமைந்து போவார்கள் அல்லது பெருக்கிப் பார்த்து வீண்பெருமிதங் கொள்வார்கள்.