பிணி வீட்டுபடலம்

சுந்தர காண்டம்
கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
பிணி வீட்டுபடலம்
அரக்க வீரர்கள் அனுமனை இலங்கையின் தெருக்கள் வழியே இழுத்துச் சென்றனர். மறுபுறம் அனுமன் பிரம்மாஸ்த்திரத்தால் கட்டப்பட்டான் என்ற செய்தியை திரிசடை சொல்ல சீதை கேட்டாள். அதனைக் கேட்டு அடுத்த கணமே அவள் மிக்கத் துன்பத்துடன், அனுமனை எண்ணி," பேருருவம் கொண்டு பேர் அறிவு படைத்த மாவீரனே, உனக்கா இந்த நிலை? பல கோடி கொடிய அரக்கர்களை வதைத்து உயிரோடு நின்றாய் இப்படிப்பட்ட நீ அரக்கர் கைகளில் சிக்கிக் கொண்டதால், எனக்கு இங்கு வந்து மேலும் துன்பத்தைத் தந்து விட்டாயே! எனது கணவரின் கணையாழியை அளித்த நீ , பிரளய காலத்தைப் பார்க்கின்ற வரையில் நீண்ட ஆயுளைப் பெறுவாய் என்று வாழ்த்துதல் சொன்னனே! ஆனாலும், அப்படி நான் உன்னை வாழ்த்தியது பொய் ஆகாது. நீ நிச்சயம் சிரஞ்சீவியாக இருப்பாய், இருந்தும் பாவி அரக்கர்கள் உன்னை எப்படியெல்லாம் துன்பப் படுத்துகின்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லையே! நீ சென்று எனது கணவரிடம் நான் இலங்கையில் இருக்கும் செய்தியைக் கூறி, அவர் என்னை சிறை மீட்கும் படி பெரிய சேனையுடன் அழைத்து வருவாய் என்று நான் துன்பம் தீர்ந்து இருந்தேனே! இப்போது நீ கொடிய அரக்கர்களின் வசம் அநியாயமாக சிக்கிக் கொண்டாயே! இறைவா நடப்பது திரேதாயுகமா இல்லை கலியுகமா? நல்லவர்கள் அழ, தீயவர்கள் சிரிக்கின்றனரே!" என்று பலவாறு கூறித் திரிசடையிடம் புலம்பித் தவித்தாள் சீதை. இறுதியில் அதிக உணர்ச்சிவயப்பட்டு சீதை மயக்கம் அடைந்தாள்.
மறுபுறம் வெற்றிக் களிப்பில் திளைத்த இந்திரஜித் அனுமானை இராவணனின் அரண்மனைக்கு இழுத்துச் சென்றான். வெளியிலேயே, அனுமனை நிறுத்தி விட்டு. அரண்மனையைக் காக்கும் துவார பாலகர்களிடம் அனுமனை சிறைபிடித்த செய்தியை தந்தையிடம் சென்று உடனடியாகக் கூறுமாறு பணித்தான். அதன் படியே வாயில் காப்பவர்கள் விரைந்து சென்று இராவணனிடம் இந்திரஜித் பெற்ற வெற்றியைக் கூறினார்கள். அது கேட்ட இராவணன் மிகவும் சந்தோஷித்து, அந்தச் செய்தியைக் கூறிய வாயில் காப்பவர்களுக்கு கழுத்தில் இருந்த விலை உயர்ந்த முத்து மாலையைப் பரிசு அளித்தான். பிறகு அவர்களிடம், "உடனே சென்று இந்திரஜித்திடம் சொல்லி அந்தக் குரங்கை சபைக்கு இழுத்து வரும் படி செய்யுங்கள்" என்று பணித்தான்.
இராவணன் பணித்த அந்த ஆணையை வாயில் காப்பவர்கள் பணிவுடன் இந்திரஜித்திடம் கூறினர். அதன்படி சிறைபிடிக்கப் பட்ட அனுமனை இந்திரஜித் சபா மண்டபத்துக்கு இழுத்து வந்தான். அப்போது சபா மண்டபத்தில் கைது செய்யப்பட்ட அனுமனைக் கண்ட அரக்கர்கள் எள்ளி நகையாடினார்கள். அப்போது அனுமன் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து இருந்த இராவணனைக் கண்டான். கண்ட மாந்திரத்தில்," உடனே பாய்ந்து சென்று இராவணனைக் கொன்று விடலாமா?" என்று எண்ணினான். ஆனால், அது இராமபிரானின் கட்டளை இல்லை என்று மீண்டும் அமைதி காத்தான்.
இந்திரஜித் தந்தையை நோக்கி," அரசர்களுக்கு எல்லாம் அரசே, இதோ நிற்கும் இந்த வானரன் சாதரணமானவன் என்று நினைக்கவேண்டாம். இவன் மும்மூர்த்திகளில் ஒருவன் எனக் கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அப்படிப் பட்ட இவனது போர் திறனை நான் நேரில் கண்டேன்!" எனக் கூறியபடி தனது இருகைகள் கூப்பி தந்தையை வணங்கினான்.
மகனின் சொல்லால் அனுமனை அறிந்து கொண்ட இராவணன் மிகவும் கோபம் கொண்டு தேவர்களும் அஞ்சும் படி தனக்கே உண்டான பெரிய குரலில் அனுமனிடம்," ஏ வானரமே! நீ யார்? இங்கு வந்ததன் காரணம் என்ன? நீ ஒரு வேளை மும்மூர்த்திகளுள் ஒருவனோ? முருகக் கடவுளோ? இந்திரனோ? யமனோ? இல்லை இந்த இலங்கையை அழிப்பதற்காகவே தேவர்களால் தேர்ந்து அனுப்பப் பட்ட வேறு ஒரு புதிய தேவனோ? உன்னை அனுப்பியது தான் யார்? உன்னை நான் சரியான படி அறிந்து கொள்ள எனது இந்த சபையில் உண்மையை மட்டும் கூறுவாயாக" என்றான்.
இராவணனின் வார்த்தைகளைக் கேட்ட அனுமான் தனது பதிலைக் கூறத் தொடங்கினான்," இராவணா, நான் நீ கூரியவர்களுள் யாரும் இல்லை. மேலும் அவர்களை போன்ற சாதாரணமானவர்களின் கட்டளையையும் ஏற்று நான் இங்கு வரவில்லை. ஒரு மாபெரும் வில் வீரனின் தூதனாக நான் இங்கு வந்துள்ளேன். நீயோ அவரது கால் தூசி பெறமாட்டாய். அவர், உன்னைப் போன்ற கொடிய அரக்கர்களிடம் இருந்து நல்லோர்களைப் பாதுகாக்க வல்லவர். உன் குலத்தை அழிக்கப் பிறந்தவர். என்னைக் காட்டிலும் பல அரக்கர்களை கொன்று குவித்தவர். அந்த வில் வீரர் தேவனோ, அசுரனோ, திக்பாலகனோ, யக்ஷனோ இல்லை, அவர்களை விட மேலானவர் பெரும் வலிமை கொண்டவர். சத்தியத்தின் மறு ரூபம். ஒளியின் முன்னாள் எப்படி இருளால் நிற்க முடியாதோ! அப்படியே உன்னைப் போன்ற ஒருவன் அவரை எதிர்த்துப் போரிடவும் முடியாது. அவர் ஸ்ரீ மந் நாராயணனின் அவதாரம். இந்தப் பூமியில் மக்களின் துன்பத்தைப் போக்க அவதரித்தவர்! அவர் தான் ஸ்ரீ இராமர். நான் அவரின் சாதாரண அடியவன், எனது பெயர் அனுமான். நீ சிறை பிடித்த அபலைப் பெண்ணான சீதா பிராட்டியை தேடிக் கொண்டு இந்த இலங்கைக்கு, ஸ்ரீ ராமன் சொல்படி அங்கதன் உத்தரவு பிறப்பிக்க வந்தவன்" என்று முழு விவரங்களையும் கூறி முடித்தான் அனுமான்.
அனுமன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட இராவணன் தனது பல் வரிசைகள் வெளியில் தெரிய வானில் தோன்றிய இடி போலச் சிரித்தான். அந்தச் சிரிப்புடன் அனுமனை நோக்கி," வாலியின் மகனால் அனுப்பட்ட தூதானே, எனது நண்பன் வாலி நலம் தானா?" என்றான்.
அது கேட்ட அனுமான் இராவணனைப் பரிகசிக்கும் விதத்தில் அவனைப் போலவே சபை நடுங்க சிரித்து விட்டு, பிறகு இராவணனை நோக்கி," கொடிய அரக்கனே! அஞ்சாதே. கொடுமையில் உனக்கு நிகரான வாலி, எப்போதோ இந்த மண்ணுலக வாழ்வை முடித்துக் கொண்டு விண்ணுலகம் சென்று விட்டான். இனி அவன் திரும்பி வரப்போவதில்லை. ஸ்ரீ ராமரின் வலிமை மிக்க அந்த ஒரே பாணம் வாலியின் வஜ்ஜிரம் போன்ற மார்பைப் பிளந்து அவனது உயிரைக் குடித்தது. இப்பொழுது எங்களுக்கு அரசனாக இருப்பவர் சூரியனின் மைந்தர் சுக்கிரீவர்!" என்றான்.
தனது வலிமை மிக்க நண்பன் வாலி இறந்த செய்தியைக் கேட்ட இராவணன் திடுக்கிட்டான். உடனே அனுமனிடம்," வாலி இறந்தானா? அதுவும் ஒரே பாணத்தால் இராமன் அவனைக் கொன்றானா? இது ஏன்? எப்படி? எப்போது நடந்தது? முழு விவரத்தையும் எனக்குக் கூறுவாயாக" என்றான்.
மாருதி அதன்படியே நடந்த வரலாற்றை கொடிய இராவணனிடம் கூறி முடித்தான்.
இராவணன் அனுமன் கூறிய அனைத்தையும் கேட்டு மிகவும் பரிகாசமாகச் சிரித்தான். "ஆகா! என்ன உங்கள் குலத்தின் ஒற்றுமை உங்கள் குலத் தலைவனான வாலியைக் கொன்ற இராமனை நீங்கள் தலைவனாக ஏற்று அடிமைத் தொழில் செய்து வருகின்றீர்கள். அதிலும் தந்தையைக் கொன்ற இராமனை தலைவனாகப் பார்க்கிறான் வாலியின் மகன் அங்கதன். ஆகவே, உங்கள் புகழ் எப்படி அழியும்? அது ஒரு புறம் இருக்கட்டும், சொந்த சகோதரனின் மரணத்துக்கு காரணமான இராமனிடம் அன்பு கொண்ட உங்கள் அரசன் சுக்கிரீவன் என்னிடம் சொல்லச் சொன்ன செய்தி யாது? அதை முதலில் எனக்குக் கூறுவாயாக! நீ தூதனாய் வந்துள்ளதால் நாங்கள் உன்னைக் கொல்ல மாட்டோம். அதனால் பயமின்றி உண்மையைச் சொல்!" என்றான் இராவணன்.
அனுமன் சிறிது நேரம் சிந்தித்து மறுமொழியாக இராவணனிடம்," இராவணா! நான் இங்குத் தூதனாக வந்தது எங்கள் அரசர் சுக்கிரீவர் கூறிய செய்தியை உனக்குக் கூறத் தான். அதனை பொறுமையுடன் கேட்டால் நீயும் நன்மை பெறுவாய். உனது புகழும், செல்வங்களும், நீ பெற்ற வரமும் கூட அழியாது. அத்துடன் அது இன்னும் பெருகும். பிறர் மனைவியான சீதா பிராட்டியை சிறை பிடித்து நீ பெரும் பாவத்தை செய்து விட்டாய். நீ செய்த அந்தப் பாவத்தில் இருந்து நீ தப்ப வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி தான் உள்ளது. அது யாதெனில், உடனே சீதா பிராட்டியை அனைத்து விதமான மரியாதைகளுடன் ஸ்ரீ இராமரிடம் ஒப்படைத்து விடு. பிறகு அப்படியே நீ செய்த தவறுக்காக அவரிடம் மன்னிப்பு வேண்டு. அவர் கருணைக் கடல் உன்னை நிச்சயம் மன்னிப்பார். இதைத் தவிர வேறு ஒரு வழி இல்லை. அதனை விடுத்து உனது வர, பலன்கள் உன்னைக் காப்பாற்றும் என்று நம்பாதே. ஏனெனில், எப்போது நீ பிராட்டியை பஞ்சவடியில் இருந்து அபகரித்தாயோ, அப்போதே உனது வர பலன்கள் எல்லாம் அழிந்து விட்டது. அதனால், நீ இன்னமும் அவைகள் உன்னிடம் உள்ளாதாக நம்பிக்கொண்டு இருக்காதே!தவிர 'ஒருபோதும் பாவமானது புண்ணியத்தை' வெல்லாது.
ஒரு வேளை நீ பிராட்டியை ஸ்ரீ இராமரிடம் ஒப்படைக்க மறுத்தால் இராமபாணத்துக்கு நீ பதில் சொல்ல வேண்டி வரும். நீ நரம்பு மீட்டிப் பாடிய பாடலைக் கேட்டு முன்பு சிவ பெருமான் உனக்குக் கொடுத்த வரம் தவறிப் போனாலும் போகும். ஆனால், இராமபிரானின் அம்பு ஒரு நாளும் தவறிப் போகாது! அதனால் நீ சாகவே சாவாய்" என்று கூறி முடித்தான்.
அனுமானின் வார்த்தைகளைக் கேட்ட இராவணன் இகழ்ச்சி தோன்றச் சிரித்தான். "ஆகா, மிக நன்று! எல்லாம் அறிந்த எனக்கு இத்தனை உபதேசங்களையும் செய்வது குன்றிலும், மரத்தில் வாழும் கிளைகளையும், பழங்களையும் தின்னும் ஒரு சாதாரண குரங்கு! இச்செயல் நன்றாக இருக்கிறது. மிக, மிக நன்றாக இருக்கிறது" என்றான். பிறகு மீண்டும் அனுமனைப் பார்த்த இராவணன்," குரங்காகிய சுக்கிரீவனின் வார்த்தையும், மனிதர்களான இராமலக்ஷ்மணர்களின் வெற்றியும் கிடக்கட்டும். அவற்றை நீ சொல்வதும் நிற்கட்டும். ஒருவர் அனுப்பிய தூதனாய் வந்து இந்த நகரில் புகுந்து நீ, ஏன் அரக்கர்களைக் கொன்றாய்? இதற்கு என்ன காரணம்? அதை முதலில் சொல்!" என்று அதட்டிக் கேட்டான்.
அதற்கு அனுமான்," நீ தான் இராவணன், என்று எனக்குக் காட்டுபவர்கள் யாரும் இல்லை. ஆதலால், அசோகவனத்தை அழித்தேன், நான் எதற்காக அப்படிச் செய்கிறேன் என்று அறியாமல், என்னிடம் வந்து விவரத்தைக் கூட கேட்காமல், உன் அரக்கர் சேனை வழிய வந்து என்னைத் தாக்கியது. ஒரு சுத்தமான வீரன், தன்னைத் தாக்க வருபவர்களை விடுவானோ? இல்லை தாக்க வரும் அவர்களிடம் பேசிக் கொண்டு தான் இருப்பானோ? ஆகவே தான் உனது வீரர்களைத் தாக்கினேன். மேலும், என்னைத் தாக்க வந்த உனது வீரர்களையும் கொன்று குவித்தேன். அவர்கள் மட்டும் என்னிடம் சரியான முறையில் நடந்து இருந்தால் நான் ஏன் அவர்களைக் கொல்லப் போகிறேன்? இப்போதும் கூட இராவணா, என்னால் இந்த அஸ்த்திரக் கட்டில் இருந்து தன்னிச்சையாக விடுவித்துக் கொள்ள முடியும், ஆனால் பிரம்மனின் இந்த தெய்வத் தன்மை வாய்ந்த பாணத்திற்கு மதிப்பு அளித்தே நான் அமைதியாகக் கட்டுண்டு இருக்கிறேன்" என்று அனுமான் பதில் அளித்தான்.
இரவாணன் அனுமனின் வார்த்தைகளை கேட்டு மிகவும் கோபம் கொண்டான். பிறகு தனது ஏவலர்களை அழைத்து, " இந்தக் குரங்கை கொல்லுங்கள்" என்றான்.
கொலையாளிகளும் அந்தக் கணத்தில் அனுமனைக் கொல்லும் எண்ணத்துடன் அவனை நோக்கி விரைந்தார்கள்.
அது கண்டு தேவர்கள் அனைவரும்," இதோ தருமம் அழியப் போகிறது! அதர்மம் வாழப்போகிறது!" என்று எண்ணிக் கலங்கினர்.
அனால்...
சேற்றிலும் ஒரு செந்தாமரை இருப்பது போல, அந்த அதர்மக் கூட்டத்தின் நடுவிலும் ஒரு நீதிமான் இருந்தான். அவனது பெயர் தான் விபீஷணன். அவன் இராவணனுக்கு இளையவன். இராவணன் பார்வையில் "உடன் இருந்தே கொல்லும் வியாதி". ஆனால், அவன் உலகத்துக்கு நல்லவன். விஷ்ணு பக்தியில் சிறந்தவன். அரக்க குலத்தில் பிறந்து இருந்தாலும் ஒழுக்கம் தவறாதவன். அப்படிப்பட்ட விபீஷணன் உடனே தனது ஆசனம் விட்டு எழுந்தான், அனுமனை நெருங்கும் கொலையாளிகளிடம்," கொலையாளிகே சற்றே நில்லுங்கள்" என்றான். அது கேட்ட கொலையாளிகளும் நின்றனர். பிறகு அண்ணன் இராவணனை நோக்கி," அண்ணா, நீ என்ன காரியம் செய்யத் துணிந்தாய். இவன் ஒரு வானரனாகவே இருந்தாலும், இப்போது ஒரு தூதன். இவனைக் கொல்வது தங்களுக்குத் தீராத பழியை அல்லவா ஏற்படுத்திவிடும்?" என்றான்.
விபீஷணனின் வார்த்தைகளில் இருந்த சத்தியம், கொடிய இராவணனின் மனதையும் சற்றே தொட்டது. அவன் வார்த்தைகளில் இருந்த நியாயத்தை உணர்ந்து கொண்டவனாக," உத்தமனே! நீ நல்ல நீதிகளைச் சொன்னாய். இந்த வானரன் நமக்குத் தீங்கே செய்து இருந்தாலும், இவன் ஒரு தூதுவன். அதனால் நீ கூறியபடியே இவனை இப்போது உயிருடன் அனுப்புவோம்!" என்று விபீஷணனைப் பார்த்துச் சொன்னான் இராவணன்.
அவ்வாறு சொன்ன இராவணன் மீண்டும் தனது ஏவலர்களைப் பார்த்து," இந்தக் குரங்கை நான் கொல்ல விரும்பவில்லை, ஆனால் அதே சமயத்தில் இது இலங்கையில் செய்த அட்டகாசத்துக்கு தண்டனை அளிக்க விரும்புகிறேன். பொதுவாகவே, ஒரு வானரத்தை கர்வம் கொள்ள வைப்பது அதன் வால் தான். அதனால், இந்தக் குரங்கின் கர்வத்தை போக்க, இதன் வாலில் நெருப்பை வையுங்கள். பிறகு நகர வீதிகள் வழியே அழைத்துச் சென்று இதன் வால் முற்றிலும் எரிந்து முடியும் வரை, இந்தக் குரங்கு படும் அவஸ்தையை இலங்கை மக்கள் பார்த்துப் பரிகசிக்கும் படி செய்யுங்கள். பின், இது தனது வாலை முற்றிலும் இழந்த பிறகு. இலங்கையின் தெருக் கோடி எல்லையில் கொண்டு போய் அடித்து விரட்டி விடுங்கள்" என்றான்.
அப்போது இந்திரஜித் குறிக்கிட்டு," பிரமாஸ்த்திரம் இவனைக் கட்டி உள்ளதால், இவ்வாறு செய்வது தகுதி இல்லை. அதனால், நான் முதலில் இவனைக் கட்டிய பிரமாஸ்த்திரத்தை திரும்பப் பெறுகிறேன். அதன் பின், இவன் தப்பிப் போகாதவாறு பலதரப்பட்ட கயிறுகள் கொண்டு இவனைக் கட்டுங்கள். பிறகு, இவனது வாலில் நாம் விருப்பப்படி தீ வைப்போம்" என்றான்.
அந்தக் கணத்திலேயே அரக்கர்கள் தங்களது வீட்டு ஊஞ்சலில் இருக்கும் கயிறுகள், தேர் கயிறுகள், கிணற்றில் தண்ணீர் எடுக்கும் கயிறுகள், யானைகளைக் கட்டும் கயிறுகள் எனப் பலதரப்பட்ட கயிறுகளைக் கொண்டு வந்து அனுமனை கட்டினார்கள். அது கண்டு அனுமான்," இந்த அஸ்திரத்தின் தெய்வத் தன்மையை மதித்தே நான் இதுவரையில் அமைதியாக இருக்கிறேன். ஆனால், இப்போது அரக்கர்கள் அவர்களாகவே முன்வந்து இந்த அஸ்திரத்தில் இருந்து என்னை விடுவிக்கும் ஏற்பாடுகளை செய்கின்றனர். இனி இவர்களின் வெற்றியை, வெற்றி கொள்வது எனக்கு மிகவும் லேசான காரியம் தான். மேலும், இராவணன் எனது வாலில் தீ வைப்பது, இந்த இலங்கை நகரத்தின் மீதே தீ வைப்பதற்கு சமானம்" எனத் தனது மனதினில் கூறிக் கொண்டான். பிறகு இந்திரஜித் அந்த பிரமாஸ்த்திரத்தை அனுமன் உடலில் இருந்து திரும்பப் பெற்றான்.
மறுபுறம் பிரமவித்தையை அறிந்து இருந்த அனுமனை அரக்கர்கள் வீதிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அனுமான் அச்சமயத்தில் தனது மனதில் ரகசியமாக வேறு ஒரு திட்டத்தை தீட்டிக் கொண்டு இருந்தான். அதனால், அச்சமயத்தில் தனது பலத்தை அவன் வெளிக் காட்டாமல் அமைதியாக இருந்தான். அனுமனை ஒரு வெற்றுத் திடலில் கொண்டு வந்து நிறுத்தினார்கள் அந்தக் கொடிய அரக்கர்கள். பிறகு, அவனுடைய நீண்ட பெரிய வாலில் சீலைகள் பலவற்றை சுற்றி, அதனை நன்கு எண்ணெயில் முக்கினார்கள். பிறகு அதில் தீயிட்டனர். அனுமனின் வாலில் தீ பற்றி எரிவதைப் பார்த்து, அங்குக் கூடியிருந்த அரக்கர்கள் பூமியே அதிரும் படி ஆரவாரம் செய்தனர்; பின் அது கண்டு பரிகசித்தனர்; மகிழ்ந்தனர்.
"அசோகவனத்தை துவம்சம் செய்து பல அரக்கர்களைக் கொன்ற வலிய குரங்கின் நிலையை வந்து பாருங்கள்" என்று இலங்கை முழுவதும் அரக்கர்கள் பறை அடித்து எல்லோருக்கும் அறிவித்தார்கள். அதனால், அனுமனின் வாலில் பற்றிய தீயைக் காண அவ்விடத்தில் இலங்கைவாசிகள் கோடிக்கணக்கில் வந்து குவிந்தனர்.
இந்த விஷயம் அசோகவனத்தில் சோகத்தின் வடிவமாய் இருந்த சீதையின் காதுகளிலும் வந்து விழுந்தது. அது கேட்ட சீதை துடித்துப் போனாள்; உயிர் பதைத்தாள்; வேர்த்தாள்; தவித்தாள்; விம்மினாள்; விழுந்தாள்; அழுதாள்!
சற்று நேரத்தில் அவள் தெளிவடைந்தாள். அதீத துன்பம் கொண்டு அக்கினி பகவானை நோக்கி," அக்கினி தேவனே, நீ எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத புனிதத்துவன். அது போலத் தான் அனுமானும், நீதி மான்களுக்கு இன்றியமையாதவன். அப்படிப் பட்ட வாயுபுத்திரனின் வாலில் கொடியவர்கள் தீயிட்டனர், ஆனால் அது கண்டு நீ அமைதியாக இருக்கலாமா? வாயு பகவானின் துணை இல்லாமல், உன்னால் இவ்வுலகத்தில் பிராகாசிக்க முடியுமா? அப்படிப் பட்ட வாயு புத்திரனுக்கு வரும் ஆபத்து, உனக்கு வந்ததல்லவோ? அக்கினி தேவா, ஸ்ரீ இராமபிரானின் மீது ஆணை. இன்று வரையில், நான் பாதுகாக்கும் கற்பின் மீது ஆணை. நீ அனுமனை ஒன்றும் செய்யக் கூடாது. எரிவதாக இருந்தால், இந்த இலங்கை எரியட்டும்.ஆனால்,அனுமானை ஒன்று செய்து விடாதே" என்று வேண்டினாள்.
அக்கினி தேவன் அந்தக் கணமே சீதையின் சுயநலம் இல்லாத பக்தியை ஏற்றுக் கொண்டான். அனுமனின் வாலில் அரக்கர்கள் வைத்த தீ குளிர்ந்ததை அப்போது அனுமனே உணர்ந்தான். இது என் பொருட்டு சீதா பிராட்டியின் வேண்டுதலாகத் தான் இருக்கும் என்று ஒருவாறு நடந்ததை அனுமானித்துக் கொண்டான். அனுமானின் வாலில் வைக்கப்பட்ட தீ மட்டும் அல்ல, முனிவர்களின் யாகத்தில் காணப்படும் தீ, முக்கண் ஈசன் நெற்றிக் கண்ணில் அடங்கி இருந்த தீ, செங்கதிர்களைப் பரப்பும் செங்கதிர் தேவனான சூரியனிடத்தில் இருந்த தீ என அனைத்து வகை தீப்பிழம்புகளும் சீதையின் வேண்டுதலால் குளிர்ந்து.
பிறகு அனுமான், சீதா தேவியின் கற்பு நிலையை எண்ணி மெய்சிலிர்த்தான். அப்போது அரக்கர்கள் அனுமனை இலங்கையின் எல்லையில் இழுத்துக் கொண்டு வந்தார்கள். தான் அரக்கர்களிடம் இருந்து தப்பிச் செல்வதற்கு நேரம் பார்த்துக் கொண்டு இருந்த அனுமானுக்கு, அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. அடுத்த சில நொடிகளில் தன்னை கயிறு கொண்டு இழுத்து வந்த அரக்கர்களை அனுமன் திருப்பி இழுக்க, அந்த அரக்கர்கள் கீழே விழுந்தனர். அவர்கள் விழுந்த வேகத்தில் துடி, துடித்து இறந்தார்கள்.
அப்போது அனுமான் " கொடிய அரக்கர்கள் வாழும் இந்த இலங்கையை தீக்கு இரையாக்காமல் நான் இலங்கையை விட்டுச் செல்லப் போவதில்லை" என்று உறுதி கொண்டு. ஸ்ரீ இராமன் இருக்கும் திசையை வணங்கி, இலங்கை நகரத்தின் வீடுகளில் தனது வாலில் காணப்பட்ட தீயை வைக்க, அந்த அரக்க வீடுகள் அனைத்தும் பற்றி எரிந்தது. அது கண்ட அரக்கர், அரக்கியர்கள் தங்கள் மார்புகளில் அடித்து அழுதனர். விசுவகர்மாவால் உருவாக்கப் பட்ட அழகிய இலங்கை இவ்வாறாகப் பற்றி எரிந்தது.