பாசப் படலம்

சுந்தர காண்டம்
கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது
பாசப் படலம்
அட்சகுமாரன் இறந்த செய்தியைக் கேட்டவுடன் எதற்கும் கலங்காத இராவணன் முதல் முறையாகக் கண் கலங்கினான். அச்சமயத்தில், அவனது மனைவி மண்டோதரியின் நிலையோ இன்னும் பரிதாபமாக இருந்தது. தாய், தந்தை பரிதவிக்கும் இந்தக் காட்சிகளைக் கண்டான் இராவணனின் மற்றொரு மகனான இந்திரஜித்.
இந்திரஜித்தைப் பற்றி சொல்ல வேண்டும் எனில் முன்பு ஒரு சமயம் இராவணன் திக்விஜயம் செய்த போது தேவலோகத்தை அடைந்தான். இந்திரன், இராவணனுடன் கடும் போர் புரிந்தான். இந்திரனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சில கணங்களுக்கு இராவணனே திணறினான். அப்போது உடன் இருந்த இந்திரஜித், தனது தந்தையின் நிலை கண்டு, இந்திரனின் மீது கோபம் கொண்டு பல்வகை மாயப் போர்களை செய்து, இந்திரனைக் கலங்கடித்து, இறுதியில் தனது சக்தியை ஒன்று திரட்டி நாக பாசத்தால் தேவேந்திரனை சிறை பிடித்தான். அவ்வாறு சிறை பிடித்த தேவேந்திரனை, இலங்கையில் அரக்கர்கள் பார்த்து பரிகசிக்க இழுத்து வந்து சிறையில் அடைத்தான். அப்போது இது கண்ட பிரமன், மற்ற தேவர்கள் சூழ இராவணனிடம் வந்து, " இந்திரனை வென்றதால் இன்று முதல் உனது மகனை இந்திரஜித் என்று மூவுலகத்தில் உள்ள அனைவரும் அழைப்பார்கள். மேலும், இந்திரஜித் அறியாமலேயே பிரமாஸ்திரம் பிரயோகிக்கும் வித்தையை அறிவான்" என்று வரமும் அளித்து, இராவணன் சிறையில் இருந்த இந்திரனை, தான் கொடுத்து அருளிய வரத்திற்கு ஈடாக விடுவித்துச் சென்றார்.
அப்படிப் பட்ட திறமை கொண்ட இந்திரஜித் தான் இப்போது தனது தாய் மண்டோதரியின் கண்ணீரையும், தம்பி அட்சகுமாரனின் மரணத்தையும், தந்தையின் சோகத்தையும் காணப் பொறுக்காமல் தனது ஆசனம் விட்டு எழுந்தான். கோபத்தால் அவன் கண்கள் சிவந்தன. அதே சமயத்தில் தந்தை மீதும் அவனுக்கு ஒரு வருத்தம் எழுந்தது. உடனே தந்தையைப் பார்த்து," இலங்கையின் அதிபதியே! தாங்கள் நன்மை தரும் விஷயங்களை சிந்திப்பது இல்லை. துன்பம் வந்த பிறகு மட்டும் அதனை நினைத்து வருத்தம் கொள்கின்றீர். கடலைக் கடந்து வந்து அசோகவனத்தை அழித்த அந்தக் குரங்கின் வலிமையைத் தாங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள். அதுவே, இத்தனை அரக்கர்களின் மரணத்திற்க்குக் காரணம் ஆயிற்று. எப்போது சம்புமாலி உட்பட உடன் சென்ற மாவீரர்கள், பஞ்சசேனாபதிகள் மற்றும் சதுரங்க சேனைகள் ஆகிய அனைத்தும் அந்த வானரத்தால் கொல்லப்பட்டனரோ, அப்போதே தாங்கள் அந்தக் குரங்கு சாதாரண குரங்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு இருக்க வேண்டும். அது புரிந்த சமயத்தில் தாங்களே களத்தில் இறங்கியிருக்க வேண்டும் இல்லை இந்திரனை வென்ற என்னை அனுப்பி இருக்க வேண்டும். அதனை விட்டு, விட்டு எனது அருமைத் தம்பி அட்சகுமாரனைத் தாங்கள் அனுப்பியது தவறு. அதனால் வந்த விளைவு தான் இது. தந்தையே! இப்போதும் கூட ஒன்றும் கேட்டுப் போகவில்லை. தாங்கள் என்னை அனுப்புங்கள். எனது ஆற்றலை தாங்கள் பல யுத்தங்களில் கண்டு திளைத்து இருக்கின்றீர்கள். வந்திருக்கும் அந்தக் குரங்கு யாராக இருந்தாலும் சரி நான் போய் இழுத்து வருகிறேன். தாங்கள் இனி போனதை நினைத்து வருந்த வேண்டாம்." என்றான்.
இந்திரஜித்தின் வார்த்தைகளைக் கேட்ட இராவணன் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான். இந்திரஜித்துக்கு அனுமனைப் பிடிக்க விடை கொடுத்து அனுப்பினான். இந்திரஜித்தும் அனுமனை கைது செய்ய இருநூறு பேய்கள் பூட்டப்பட்ட தனது உயர்ந்த வலிய தேரின் மீது ஏறிச் சென்றான். அந்தத் தேரை அவன் நிகும்பலா தேவியை மகிழ்வித்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தத் தேரில் இருந்து அவன் போர் செய்தால், ஈசனாலும் அவனை வெற்றி கொள்ள முடியாது. அப்படிப் பட்ட தேரைப் பேய்கள் விரைவாக செலுத்த, அத்துடன் ஒரு பெரும் படையும் தன்னை பின் தொடர அசோகவனம் நோக்கிப் புறப்பட்டான்.
உண்மையான வீரர்கள் பகைவரின் சிறந்த வீரத்தைக் கண்ட போது பாராட்டத் தயங்கமாட்டார்கள். போர் களத்துக்கு வந்து சேர்ந்த இந்திரஜித், அங்கே அனுமனால் கொல்லப்பட்டு கிடந்த யானைகளையும், குதிரைகளையும், வீரர்களையும் கண்டதும் அனுமனின் உண்மையான வீரத்தை அறிந்தான். அவனது பலத்தை மெச்சி தனக்குள் மகிழ்ச்சியுடன் பாராட்டிக் கொண்டான். அதே சமயம் இதுவரையில் துன்பத்தில் தவிக்காத இந்திரஜித் தனது சகோதரன் அட்சகுமாரனின் உடல் அனுமனின் கால்களால் மண்ணில் தேய்த்து அரைக்கப்பட்டதை பார்த்துக் கலங்கினான், சோகம் கொண்டான், அதனால் அதிக கோபம் கொண்டான். தனது கைகளில் இருந்த சக்தி வாய்ந்த வில்லைக் கண்டான்,"எனது தம்பியைக் காப்பாற்றாத இந்த வில் இனியும் எனக்கு எதற்கு?" என்று அவனது மனதில் பட்டது. அவன் கொண்ட அந்த எண்ணத்தால், அவன் கைகளில் தாங்கிய வில் சற்றே நழுவியது.
மீண்டும் அட்சகுமாரனைக் கண்டான் இந்திரஜித் கண்களில் கண்ணீர் மல்க," தம்பி! அட்சகுமாரா! உனது தந்தையின் கோபத்துக்கு அஞ்சிக் கூற்றுவனும் உன்னுடைய உயிரைக் கொண்டு போக மாட்டான். இலங்காதிபதிக்கு அவனும் அஞ்சுவான். மற்றவர்களும் அப்படியே. எனவே, உன்னைக் கொல்வதற்கு யாருமில்லை. அப்படி இருக்க, ஒருவேளை நீதான் எங்களுக்கு விளையாட்டுக் காட்ட இப்படி எங்காவது ஒளிந்து கொண்டு இருக்கிறாயோ?" என்று கூறிக் கொண்டான். இந்திரஜித்தால், தம்பி அட்சகுமாரன் இறந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
மறுபுறம் இந்திரஜித்தைக் கண்ட அனுமான்," நான், இதற்கு முன் கொன்ற அரக்கர்களை விட, இப்போது வந்து இருக்கும் இவன் அதிக வலிமை கொண்டவனாகத் தெரிகிறானே! இவன் வில்லைப் பிடிக்கும் பாணியே, போர் கலைகளில் இவன் வல்லவன் என்பதைப் பறைசாற்றுகிறேதே! இவன் முகத்தில் உள்ள வீர ஆவேசத்தைப் பார்க்கும் போது, இவனே இந்திரஜித்தாக இருக்கும் என்று படுகிறது. அப்படி இவன் இந்திரஜித்தாக இருந்து இவனை நான் வென்று விட்டால் அல்லது கொன்றுவிட்டால். இராமபிரான் மிகவும் எளிதாக இராவணனை அழித்து விடுவார். ஒருவேளை, இந்திரனையே தோற்கடித்த இவன் நம்மையும் தோற்கடித்து விட்டால்! அதுவும் கூட நன்மைக்குத் தான். நம்மை யார் என்று அறிய இராவணனின் சபைக்கு இழுத்துச் செல்வான். அப்போது இராவணனிடம், ஸ்ரீ ராமரின் பாராக்கிரமத்தை எடுத்துச் சொல்லி, அவனது தவறை அவனுக்குப் புரியவைத்து, அவனே சீதா பிராட்டியை பத்திரமாகவும், மரியாதையாகவும் கொண்டு வந்து ஸ்ரீ இராமரிடம் ஒப்படைக்கும் படி செய்து விடலாம். அதனால், பெரும் போர் தடுக்கப்படும் அல்லவா? இராவணனுக்கும் ஒரு வாய்ப்பை அளித்தது போல ஆகுமே?" என்று தனது மனதினில் சொல்லிக் கொண்டான்.
மறுபுறம், இந்திரஜித் அனுமனைத் தாக்கத் தனது படைகளுக்கு ஆணையிட்டான். அப்பொழுது அரக்கர்களும், அவர்களுடைய யானைகளும், தேர்களும், குதிரைகளும் அனுமனை சூழ்ந்து கொண்டு நான்கு திசைகளிலும் இருந்து போர் ஆரவாரம் செய்தன, அனுமன் அதனைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டான். கோபத்தில் அருகில் இருந்த ஒரு மராமரத்தை வேருடன் பிடுங்கி கைகளில் எடுத்துக் கொண்டான்.
அடுத்தக் க்ஷணத்தில் இருந்து மிகவும் உக்கிரமாகப் போர் தொடங்கியது.
அனுமன் முன்னைக் காட்டிலும் பேருருவம் கொண்டு இந்திரஜித்தின் தேர்படைகளை அழித்தான். பிறகு கைகளில் இருந்த அந்தப் பெரிய மராமரத்தைக் கொண்டே இந்திரஜித்தும் காலாட்படைகளைக் கொன்று குவித்தான். யானைப் படைகளை கால் கொண்டே பூமியில் அழுத்திக் கொன்றான். அரக்கர்கள் விடுத்த ஆயுதங்கள் அவனை எதுவும் செய்யவில்லை.
இவ்வாறாக துணை வந்த படைகள் முழுதும் அனுமனால் அழிந்து போனதைக் கண்ட இந்திரஜித் கோபம் கொண்ட சிங்கம் போலக் கர்ஜனை செய்தான். அவனே, இப்போது களத்தில் இறங்கி அனுமானுடன் கடும் போரை செய்தான். அனுமானுக்கு இந்திரஜித் பெரும் சவாலாகவே இருந்தான். நிகும்பலா தேவியிடம் இருந்து இந்திரஜித் பெற்ற அதிசக்தி வாய்ந்த பதினான்கு அஸ்திரங்கள் அவனது வில்லில் இருந்து புறப்பட்டுச் சென்று அனுமானின் உடலைக் கீறிக் கிழித்து, பெரும் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்தியது. அதனால், அனுமன் மிகவும் சோர்ந்து போனான்.
ஆனால் மறுநிமிடமே அனுமான் சிறிது நேரத்தில் தனது பழைய பலத்தை மீண்டும் பெற்றான். அந்தக் கணமே ஒரு பெரிய மரத்தை எடுத்து " கொடியவர்களே! உங்கள் வாழ் நாள் முடியும் காலம் வந்து விட்டது" என்றுக் கூறி இந்திரஜித்தின் தலையில் ஓங்கி அடித்தான்.
கனமுள்ள பெரிய மரம் இந்திரஜித்தின் தலையில் தாக்கியதும் அவன் தலையில் இருந்து இரத்தப் பெருக்கு வழிந்து ஓடியது. அதனுடன் அவன் தலையில் அணிந்து இருந்த மகுடத்தில் காணப்பட்ட இரத்தினங்களும் சிதறி கீழே உதிர்த்தன. அதனால், ஒரு கணம் தனக்கு என்ன நேர்ந்தது என்பது புரியாமல் அதிர்ச்சி அடைந்து சிலை போல நின்றான். ஆனால், அனுமான் அவ்வளவு பலமாகத் தாக்கியும் அது இந்திரஜித்தாக இருந்ததால் தான் அவன் பிழைத்தான். அந்த இடத்தில் வேறு யாரேனும் அரக்கர்கள் இருந்தால் அனுமான் அடித்த அடியில் சுருண்டு விழுந்து இறந்து இருப்பார்கள். இந்திரஜித்தை பலம் கொண்டு தாக்கியும் அவன் இறக்கவில்லை என்பதைக் கண்ட அனுமான். அவனது பலத்தை வெகுவாகப் பாராட்டினான்.
மறுபுறம் இந்திரஜித் அனுமானிடம் பெற்ற அடியில் இருந்து மீண்டு கோபம் தலைக்கு ஏற அவனைப் பார்த்து, "ஏ குரங்கே! நீ மிகவும் பலசாலி! இந்தப் பூமியில் உனக்கு நிகரான பலசாலிகள் இல்லை. அதிக பலத்தில் நீ எல்லோரிடமும் மாறுபடுவதற்கு மிகவும் வல்லவன். ஆனால், இன்றே உனது வாழ் நாளின் கடைசி நாளாகும். உன்னால் முடிந்தால் இதோ எனது இந்த பாணத்தில் இருந்து தப்பித்துக் கொள் பார்ப்போம்" என்று கூறி பிரமாஸ்த்திரத்தை அனுமன் மீது பிரயோகித்தான்.
பிரமாஸ்த்திரம் உடனே பாம்புகளுக்கு எல்லாம் அதிபதியான மகாநாகத்தின் வடிவத்தை எடுத்துக் கொண்டு சென்று, சிறந்த கருடனும் திடுக்கிட்டு நடுக்கம் அடையும் படி அனுமனின் பெரிய தோள்களைச் சேர்த்து நன்றாகப் பிணைத்து இருகக் கட்டிற்று!
பிரமாஸ்திரம் தன்னைக் கட்டிக் கொண்டவுடனேயே அனுமன், பூர்ணசந்திரன் இராகுவென்னும் பாம்புடன் வானிலிருந்து விழுந்தது போல, அன்றைய தினத்தில் தன் பின்னே வந்த தரும தேவதையின் கண்களில் இருந்து பெருகிய நீரோடு, பொன்மயமான அசோக வனத்தின் வெளிவாயில் தன் உடம்பில் படியுமாறு சாய்ந்து விழுந்தான்!
அப்படி விழுந்த அனுமான் தன் மேல் பிரயோகிக்கப்பட்டது பிரம்மாஸ்த்திரம் என்பதை அறிந்தான். அந்த அஸ்த்திரத்தின் தெய்வத் தன்மையை உணர்ந்து, அதில் இருந்து மீண்டு வரும் சக்தி தனக்கு இருந்தாலும் கூட, அப்படிச் செய்யாமல் கண்களை மூடிக் கொண்டு மயக்கம் வந்தது போல விழுந்து கிடந்தான். அது கண்ட இந்திரஜித் மகிழ்ந்து ஆரவாரம் செய்தான்.
இலங்கையில் வாழும் அரக்கர்கள் சிலர் அனுமான் வீழ்ந்ததை எண்ணி மகிழ்ந்தனர். சிலர் ஓடிவந்து அவனது உடம்பைச் சுற்றி இருந்த கயிறைப் பிடித்து இழுத்தனர். இன்னும் சில அரக்கர்கள் அனுமனை அதட்டினார்கள்.
பிரம்மாஸ்த்திரத்தால் கட்டப்பட்டு இருந்த அனுமான். முன்னொரு காலத்தில், வாசுகி நாகத்தால் கட்டப்பட்ட மந்திரமலையைப் போலக் காணப்பட்டான். இன்னும் இலங்கையில் வாழ்ந்த பல அரக்கர்கள், அரக்கியர்கள் அனுமானைக் காண அசோக வனத்திற்கு வந்த வண்ணம் இருந்தார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை. சிலர் அனுமனை அந்த நிலையில் கண்டவுடன்," இது தான் சமயம் இந்தக் குரங்கைக் கொல்லுங்கள், குத்துங்கள், கோடாலியால் பிளவுங்கள், குடலைப் பிடுங்கி எடுங்கள், கூறுபோடுங்கள், வஜ்ஜிராயுதம் கொண்டு தலையில் துளையிட்டுக் கொல்லுங்கள், இதனை உயிருடன் விட்டால், நாம் உயிருடன் இருக்க முடியாது" என்றனர்.
அனுமன் கற்றப்பட்டு இருக்கும் நிலையைக் கண்ட மற்றும் சில அரக்கர்கள் ," உன்னால் கொல்லப்பட்ட எமது தந்தையையும், தம்பியையும், அண்ணன்களையும் உயிருடன் திரும்ப எழச் செய்!" என்று சொல்லி, அனுமனை மறித்தார்கள். மற்றும் சிலர் ," இந்தக் குரங்கை தேவர்களே ஏவி விட்டு இருப்பார்கள்!" என்றனர்.
பின்பு அனைத்து அரக்கர்களும் அனுமனை பரிகசிக்க, வலிமை கொண்ட அரக்க வீரர்கள் ஐம்பதாயிரம் பேர் அனுமனை அவன் கட்டப்பட்ட நிலையில் இழுத்துக் கொண்டு இலங்கைத் தெருக்கள் வழியே ஊர்வலமாகக் கொண்டு போனார்கள்.
அப்படி இலங்கைத் தெருக்கள் வழியே இழுத்துச் செல்லப் பட்ட அனுமனைக் கண்டு இலங்கை மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தங்கள் இளவரசர் இந்திரஜித்தை நினைத்துப் பெருமிதம் கொண்டனர்.