பாசப் படலத்தின் பாடல்கள்

சுந்தர காண்டம்
கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது
பாசப் படலம்
இளவல் இறந்தது கேட்டு, இந்திரசித்து சினத்துடன் போருக்கு எழுதல்
அவ் வழி, அவ் உரை கேட்ட ஆண்தகை,
வெவ் விழி எரி உக, வெகுளி வீங்கினான் -
எவ் வழி உலகமும் குலைய, இந்திரத்
தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான்.
அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல்
உரம் சுட, எரி உயிர்த்து, ஒருவன் ஓங்கினான் -
புரம் சுட வரி சிலைப் பொருப்பு வாங்கிய
பரஞ்சுடர் ஒருவனைப் பொருவும் பான்மையான்.
ஏறினன், விசும்பினுக்கு எல்லை காட்டுவ
ஆறு-இருநூறு பேய் பூண்ட ஆழித் தேர்;
கூறின கூறின சொற்கள் கோத்தலால்,
பீறின நெடுந் திசை; பிளந்தது அண்டமே.
ஆர்த்தன, கழலும் தாரும் பேரியும், அசனி அஞ்ச;
வேர்த்து, உயிர் குலைய, மேனி வெதும்பினன், அமரர் வேந்தன்;
சீர்த்தது போரும் என்னா, தேவர்க்கும் தேவர் ஆய
மூர்த்திகள்தாமும், தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார்.
தம்பியை உன்னும்தோறும், தாரை நீர் ததும்பும் கண்ணான்,
வம்பு இயல் சிலையை நோக்கி, வாய் மடித்து உருத்து நக்கான்;
கொம்பு இயல் மாய வாழ்க்கைக் குரங்கினால், குரங்கா ஆற்றல்
எம்பியோ தேய்ந்தான்? எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது? என்றான்.
இந்திரசித்தை வந்து சூழ்ந்த படையின் பெருக்கம்
வேல் திரண்டனவும், வில்லு மிடைந்தவும், வெற்பு என்றாலும்
கூறு இரண்டு ஆக்கும் வாள் கைக் குழுவையும் குணிக்கல் ஆற்றேம்;
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மதச் சிறு கண் யானை,
ஆறு-இரண்டு அஞ்சுநூற்றின் இரட்டி; தேர்த் தொகையும் அஃதே.
இராவணன் மாளிகை சென்று, இந்திரசித்து அவனுடன் பேசுதல்
ஆய மாத் தானைதான் வந்து அண்மியது; அண்ம, ஆண்மைத்
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர, தேரின்
ஏ எனும் அளவில் வந்தான்; இராவணன் இருந்த, யாணர்
வாயில் தோய் கோயில் புக்கான்;-அருவி சோர் வயிரக் கண்ணான்.
தாள் இணை வீழ்ந்தான், தம்பிக்கு இரங்குவான்; தறுகணானும்
தோள் இணை பற்றி ஏந்தித் தழுவினன், அழுது சோர்ந்தான்;
வாள் இணை நெடுங் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க,
மீளிபோல் மொய்ம்பினானும் விலக்கினன்; விளம்பலுற்றான்:
ஒன்று நீ உறுதி ஓராய்; உற்றிருந்து உளையகிற்றி,
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும், அன்னோ!
"சென்று நீர் பொருதிர்" என்று, திறத் திறம் செலுத்தி, தேயக்
கொன்றனை நீயே அன்றோ, அரக்கர்தம் குழுவை எல்லாம்?
கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர், என்றுஇப்
பைங் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதிச் சேனை,
இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய்!
சங்கரன், அயன், மால், என்பார்தாம் எனும் தகையது ஆமே!
திக்கய வலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற
முக்கணன் கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்;
"அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை, ஆற்றல் காட்டி,
புக்கு இனி வென்றும்" என்றால், புலம்பு அன்றி, புலமைத்து ஆமோ?
இராவணனிடம் விடைபெற்று, இந்திரசித்து போர்க்குச் செல்லுதல்
ஆயினும், ஐய! நொய்தின், ஆண் தொழில் குரங்கை, யானே,
"ஏ" எனும் அளவில் பற்றித் தருகுவென்; இடர் என்று ஒன்றும்
நீ இனி உழக்கற்பாலை அல்லை; நீடு இருத்தி என்னா,
போயினன் -அமரர் கோவைப் புகழொடு கொண்டு போந்தான்.
ஆழிஅம் தேரும், மாவும், அரக்கரும், உருக்கும் செங் கண்
குழி வெங் கோப மாவும், துவன்றிய நிருதர் சேனை,
ஊழி வெங் கடலின் சுற்ற, ஒரு தனி நடுவண் நின்ற
பாழி மா மேரு ஒத்தான்-வீரத்தின் பன்மை தீர்ப்பான்.
சென்றனன் என்ப மன்னோ; திசைகளோடு உலகம் எல்லாம்
வென்றவன் இவன் என்றாலும், வீரத்தே நின்ற வீரன்,
அன்று அது கண்ட ஆழி அனுமனை, அமரின் ஆற்றல்
நன்று என உவகை கொண்டான்; யாவரும் நடுக்கம் உற்றார்.
போர்க் களம் நோக்கிய இந்திரசித்தின் மன நிலை
இலை குலாம் பூணினானும், இரும் பிணக் குருதி ஈரத்து,
அலகு இல் வெம் படைகள் தெற்றி, அளவிடற்கு அரிய ஆகி,
மலைகளும், கடலும், யாறும், கானமும் பெற்று, மற்று ஓர்
உலகமே ஒத்தது, அம்மா! போர்ப் பெருங் களம் என்று உன்னா,
வெப்பு அடைகில்லா நெஞ்சில், சிறியது ஓர் விம்மல் கொண்டான்;
அப்பு அடை வேலை அன்ன பெருமையார், ஆற்றலோடும்
ஒப்பு அடைகில்லார், எல்லாம் உலந்தனர்; குரங்கும் ஒன்றே!
எப் படை கொண்டு வெல்வது, இராமன் வந்து எதிர்க்கின்? என்றான்.
கண் அனார், உயிரே ஒப்பார், கைப் படைக்கலத்தின் காப்பார்,
எண்ணல் ஆம் தகைமை இல்லார், இறந்து எதிர் கிடந்தார் தம்மை
|மண்ணுளே நோக்கி நின்று, வாய் மடித்து, உருத்து, மாயாப்
புண்ணுளே கோல் இட்டன்ன மானத்தால், புழுங்குகின்றான்.
கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும், கரனார் பாடும்,
யானுடை எம்பி வீந்த இடுக்கணும், பிறவும் எல்லாம்,
மானிடர் இருவராலும், வானரம் ஒன்றினாலும்,
ஆனதே! உள என் வீரம் அழிகிற்றே அம்ம! என்றான்.
இறந்த தம்பியின் உடலைக் கண்டு, சோகமும் கோபமும் கொள்ளுதல்
நீப்புண்ட உதிர வாரி நெடுந் திரைப் புணரி தோன்ற,
ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிணக் குவடு இடறிச் செல்வான்;
தேய்ப்புண்ட தம்பி யாக்கை, சிவப்புண்ட கண்கள் தீயில்
காய்ப்புண்ட செம்பின் தோன்ற, கறுப்புண்ட மனத்தன், கண்டான்.
தாருகன் குருதி அன்ன குருதியில், தனி மாச் சீயம்
கூர் உகிர் கிளைத்த கொற்றக் கனகன் மெய்க் குழம்பின் தோன்ற,
தேர் உக, கையின் வீரச் சிலை உக, வயிரச் செங்கண்
நீர் உக, குருதி சிந்த, நெருப்பு உக உயிர்த்து நின்றான்.
வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையைக் கருதி, ஆவி
வவ்வுதல் கூற்றும் ஆற்றான்; மாறு மாறு உலகின் வாழ்வார்,
அவ் உலகத்து உளாரும், அஞ்சுவர் ஒளிக்க; ஐயா!
எவ் உலகத்தை உற்றாய், எம்மை நீத்து, எளிதின்? எந்தாய்!
ஆற்றலன் ஆகி, அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை,
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி,
தோற்றிய துன்ப நோயை உள்ளுறத் துரந்தது அம்மா!-
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செலக் கடாயது என்ன.
இந்திரசித்தை நோக்கிய அனுமனின் சிந்தனை
ஈண்டு இவை நிகழ்வுழி, இரவி தேர் எனத்
தூண்டுறு தேரின்மேல் தோன்றும் தோன்றலை,
மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனின்,
ஆண் தகை வனை கழல் அனுமன், நோக்கினான்.
வென்றேன், இதன் முன், சில வீரரை என்னும் மெய்ம்மை
அன்றே முடுகிக் கடிது எய்த அழைத்தது அம்மா!
ஒன்றே, இனி வெல்லுதல் தோற்றல்; அடுப்பது உள்ளது
இன்றே சமையும்; இவன் இந்திரசித்து! என்பான்.
கட்டு ஏறு, நறுங் கமழ் கண்ணி, இக் காளை என் கைப்
பட்டால், அதுவே அவ் இராவணன் பாடும் ஆகும்;
"கெட்டேம்" என எண்ணி, இக் கேடு அருங் கற்பினாளை
விட்டு ஏகும்; அது அன்றி, அரக்கரும் வெம்மை தீர்வார்.
ஒன்றோ இதனால் வரும் ஊதியம்? ஒண்மையானைக்
கொன்றேன் எனின், இந்திரனும் துயர்க் கோளிம் நீங்கும்;
இன்றே, கடி கெட்டது, அரக்கர் இலங்கை; யானே
வென்றேன், அவ் இராவணன் தன்னையும், வேரொடு என்றான்.
அரக்கர் படையுடன் அனுமன் பொருதல்
அக் காலை, அரக்கரும், யானையும், தேரும், மாவும்,
முக் கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றிப்
புக்கானின் முன் புக்கு, உயர் பூசல் பெருக்கும் வேலை.
மிக்கானும், வெகுண்டு, ஓர் மராமரம் கொண்டு மிக்கான்.
உதையுண்டன யானை; உருண்டன யானை; ஒன்றோ?
மிதியுண்டன யானை; விழுந்தன யானை; மேல் மேல்,
புதையுண்டன யானை; புரண்டன யானை; போரால்
வதையுண்டன யானை; மறிந்தன யானை, மண்மேல்.
முடிந்த தேர்க் குலம்; முறிந்தன தேர்க் குலம்; முரண் இற்று
இடிந்த தேர்க் குலம்; இற்றன தேர்க் குலம்; அச்சு இற்று
ஒடிந்த தேர்க் குலம்; உக்கன தேர்க் குலம்; நெக்குப்
படிந்த தேர்க் குலம்; பறிந்தன தேர்க் குலம், படியில்.
சிரன் நெரிந்தவும், கண் மணி சிதைந்தவும், செறி தாள்
தரன் நெரிந்தவும், முதுகு இறச் சாய்ந்தவும், தார் பூண்
உரன் நெரிந்தவும், உதிரங்கள் உமிழ்ந்தவும், ஒளிர் பொற்
குரன் நெரிந்தவும், கொடுங் கழுத்து ஒடிந்தவும் - குதிரை.
இந்திரசித்துக்கும் அனுமனுக்கும் பெரும் போர்
ஒடியுண்டார்களும், தலை உடைந்தார்களும், உருவக்
கடியுண்டார்களும், கழுத்து இழந்தார்களும், கரத்தால்
அடியுண்டார்களும், அச்சமுண்டார்களும்-அரக்கர்.
விட்ட விட்ட வெம் படைகளும், வீரன்மேல் வீழ்ந்த,
சுட்ட வல் இரும்பு அடைகலைச் சுடுகலாதது போல்,
பட்ட பட்டன திசையொடும் பொறியொடும் பரந்த.
மிகை எழும் சினத்து அனுமன்மேல் விட்டன, வெந்து,
புகை எழுந்தன, எரிந்தன, கரிந்தன போத,-
நகை எழுந்தன, குளிர்ந்தன, வான் உளோர் நாட்டம்.
பாரின் வீழ்தலும், தான் ஒரு தனி நின்ற பணைத் தோள்
வீரர் வீரனும், முறுவலும் வெகுளியும் வீங்க,
வாரும், வாரும் என்று அழைக்கின்ற அனுமன்மேல் வந்தான்.
உற்ற காலையின், உயிர்கொடி திசைதொறும் ஒதுங்கி
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர்-
சுற்றும் வந்து, உடல் சுற்றிய தொளை எயிற்று அரவைப்
பற்றி ஈர்த்தனர்; ஆர்த்தனர்; தெழித்தனர்-பலரால்.
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது; எம் மருங்கும்
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது; தேவர்,
அரக்கர் ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன், அனுமன்.
கறுத்த மாசுணம், கனக மா மேனியைக் கட்ட,
அறத்துக்கு ஆங்கு ஒரு தனித் துணை என நின்ற அனுமன்,
மறத்து, மாருதம் பொருத நாள், வாள் அரா அரசு
புறத்துச் சுற்றிய மேரு மால் வரையையும் போன்றான்
பந்து என ஆடிய பாய் பரி எல்லாம்;
பார்த்தன பார்த்தன பாய் பரி எங்கும்;