பன்கர்ஹ் கோட்டை இல் நடந்த சம்பவம்

bookmark


ஆவி நடமாடும் இடங்களின் மீது நாட்டம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக பன்கர்ஹ் கோட்டையைப் பற்றி தெரிந்திருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்கர்ஹ் என்ற புகழ்பெற்ற நகரம், இந்தியாவில் உள்ள ஆவி நடமாடும் இடங்களில் ஒன்றாகும். இந்த இடத்தைப் பற்றி பல கதைகள் உள்ளது. இங்கே தொலைந்து போனவர்களைப் பற்றி பல புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பிரச்சனைகளை தவிர்க்க, அந்த மாநிலத்தின் அரசாங்கம் ஒரு எச்சரிக்கை பலகையை அதன் நுழைவாயிலில் மாட்டியுள்ளது.

இருந்தும் கூட நடு இரவில் அந்த எச்சரிக்கைப் பலகைகளை உதாசினப்படுத்திச் சென்ற பலர் அவ்விடத்தில் பிரச்சனையில் மாட்டி கொண்டு சில சமயங்களில் உயிரையும் கூட விட்டு உள்ளார்கள். அதிலும் குறிப்பாக அந்தக் கோட்டையில் ஒரு பழங்காலப் புதையல் ஒன்று இருப்பதாகவும், அது கோட்டையில் ஒரு இடத்தில் நிற்காமல் பூமிக்கு அடியில் அன்றாடம் நகர்ந்து கொண்டே உள்ளதாகவும் நம்பப்படுகிறது. இது தவிர அந்தப் புதையலை அக்கோட்டையை ஆண்ட அரசன் ஒருவன் தனது படைத் தளபதியிடம் கொடுத்து பாதுகாக்க உத்தரவு பிறப்பித்ததாகவும், அந்த அரசனும், படைத்தளபதியும் இறந்த பிறகும் கூட அந்தப் படைத் தளபதி இன்றும் கூட அந்த செல்வங்களை பூதம் போல பாதுக்காத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர் சிலர். இந்த கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட இந்தப் புதையலை தேடிச் சென்றவர்களின் நிலை என்ன ஆனது என்பதைத் தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

சஞ்சய் ரத்தோர் ஒரு கல்லூரி மாணவன். அவனும், அவனது நான்கு நண்பர்களும் (முகுந்த், தேஷ் பாண்டே, போஸ், அப்தல்) மிக ஏழ்மையில் வாழ்பவர்கள். அவர்களது ஏழ்மையை சாதகமாக்கிக் கொண்ட பத்ரா என்னும் மந்திரவாதி ஒரு நாள் அவர்கள் நால்வரையும் அணுகினான். மேற்கண்ட கோட்டையை பற்றி அவர்களிடம் கூறி அங்கு இருக்கும் புதையல் பற்றிய தகவல்களையும் அவர்களிடம் பகிர்ந்தான். மேலும், பத்ரா அந்தப் புதையலை தனது மந்திர தந்திரத்தால் எளிதாக எடுத்து விட முடியும் என்று சொல்லி அந்த இளைஞர்களை நம்ப வைத்தான்.

அதனால் தங்களுக்கு என்ன லாபம் என்று சஞ்சய் கேட்க, பத்ரா சொன்னான் அந்தப் புதையலை நாம் அனைவரும் பங்கிட்டு எடுத்துக் கொள்ளலாம். அப்படிச் செய்தால் உலகத்தில் இருக்கும் பணக்காரர்களின் பட்டியலில் நாமும் இடம் பெற்றுவிடலாம் என்று. இதனைக் கேட்ட முகுந்த் "இவ்வாறு நாம் செய்யக் கூடாது. இன்றைய காலத்தில் புதையல் என்பதெல்லாம் கிடையாது. அப்படியே இருந்தாலும் பொதுவாக புதையலை பூதங்கள் காக்கும் என்பார்கள். அது நமது உயிருக்கே ஆபத்தை தந்து விடும்" என்று வாதாடினான். ஆனால், அவனது பேச்சை அவனது நண்பர்கள் கேட்கவே இல்லை.

அதிலும் சஞ்சய் ,"நாம் எத்தனை காலமாகத் தான் ஏழ்மையில் இருப்பது. இப்போது நாம் இந்த வாய்ப்பை தவற விட்டால். நாம் தான் உலகத்தில் முட்டாள்களாக இருப்போம். அப்படியே பூதங்கள் வந்தால் தான் என்ன. பத்ரா இருக்கிறார். அவர் நம்மை பார்த்துக் கொள்வார். நாம் அவருக்கு உதவுவோம்" என்றான். அதையே மற்ற நண்பர்களும் ஆமோதித்தார்கள். அனைவரும் அந்தக் கோட்டை நோக்கிய பயணத்தை (பத்ராவுடன் இணைந்து) தொடங்கினார்கள். அப்போது பத்ரா அவர்களிடம்," கோட்டையில் இருக்கும் புதையலை ஒரு வீரனின் ஆவி பாதுகாத்து வருகிறது. அதனை சமாதனப்படுத்த சில சடங்குகளை செய்ய வேண்டி உள்ளது. நாம் முதலில் சென்று அந்த சடங்குகளை முடித்து விட்டு வருவோம் வாருங்கள்" என்று கூறி கோட்டைக்குள் ஒரு இரவு நேரம் அவர்களை அழைத்துச் சென்றான். பொதுவாக இரவு நேரத்தில் அந்தக் கோட்டையை சுற்றி யாரும் இருக்க மாட்டார்கள். இது பத்ராவுக்கும் அவன் உடன் வந்த கல்லூரி மாணவர்களுக்கும் மிகவும் சாதகமாக இருந்தது.

தன்னைச் சுற்றி ஒரு மந்திர வலையத்தை போட்டுக் கொண்டான் பத்ரா. பிறகு அந்தப் போர் வீரனின் ஆவியை சமாதானப் படுத்த மந்திரங்களை உச்சாடனம் செய்தான். இவ்வாறு வெகு நேரம் அவன் மந்திரத்தை சொன்னதன் விளைவாக கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரது கண்களுக்கும் அந்தக் கோட்டையில் இருந்த புதையல் கண நேரம் தென்பட்டு மறைந்தது. அந்த கண நேரத்தில் அவ்வளவு தங்கக் காசுகளையும் பெரிய பானை, பானையாக பார்த்த மாணவர்கள் சொக்கிப் போனார்கள். ஆனால் அந்தக் காட்சி கண நேரத்தில் மறைந்து போனதால். கோபம் கொண்டு பத்ராவை திட்டத் தொடங்கினார்கள்.

அப்போது பத்ரா ," பொறுங்கள் விடியப் போகிறது. போர் வீரனின் ஆவி ரத்த பலியை கேட்கிறது. அதனைத் தந்தாள் நாளை நமக்குப் புதையல் கிடைத்து விடும்" என்று கூறி அனைவரையும் சமாதானம் செய்தான். பிறகு அடுத்த நாள் இரவுப் பொழுது துவங்கியது. அது ஒரு பெளர்ணமி இரவு. அதில் அந்தக் கோட்டையே பல , பலத்தது. பத்ரா மீண்டும் உடன் மாணவர்களை அழைத்துக் கொண்டு கோட்டைக்குள் சென்றான். அப்போது சஞ்சயின் கண்களுக்கு கூறிய போர் வாள் ஒன்று தெரிந்தது. அது பெளர்ணமி வெளிச்சத்திலும் பல, பலத்தது. அது சஞ்சயின் தலையை வெட்டுவது போல ஒரு காட்சியை அவனே கண்டான். கண்டது கனவா இல்லை நினைவா? என்று அஞ்சியபடி அலறினான்.

பத்ரா அவனிடம் "நான் இருக்கிறேன்" என்று கூறி ஆறுதல் அளித்தான். பிறகு மீண்டும் கோட்டையின் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து தன்னை சுற்றி மந்திர வலையத்தை அமைத்துக் கொண்டான் பத்ரா. பிறகு தன்னுடன் வந்த நான்கு கல்லூரி மாணவர்களிடமும் "நீங்கள் இந்த இடத்தை சுற்றித் தேடுங்கள் நான் மந்திரம் சொல்லச் சொல்ல உங்கள் கண்களுக்கு அந்த புதையல் இருக்கும் இடம் தெரியும். எங்கு அதிகப்படியான ஒளியை பார்க்கின்றீர்களோ அங்கு தான் புதையல் உள்ளது" என்று கூறி அவர்களை நாற்புறமும் புதையலை தேடச் சொன்னான். பிறகு மந்திரத்தை சொல்லத் தொடங்கினான்.

மாணவர்களும் புதையலை தேடிச் சென்றார்கள். அப்போது தேஷ்பாண்டே ஒரு இடத்தில் பிரகாசிக்கும் ஒளியைக் கண்டான். அந்த பிரகாசம் ஒரு மேட்டின் மேல் தெரிந்தது. ஆனால் தேஷ்பாண்டே அருகில் செல்லச் செல்ல அந்த ஒளி மங்கி மறைந்தது. அங்கு மேடு மட்டுமே காட்சி அளித்தது. அந்த இடத்தில் பல விதமான சத்தத்தை கேட்டான் தேஷ் பாண்டே. அது அந்த மேட்டுப் பகுதிக்குள் இருந்து தான் வந்து கொண்டு இருந்தது. உடனே அதில் தனது காதுகளை வைத்து என்ன சத்தம் என்று கேட்கத் தொடங்கினான். அப்போது அந்த மேட்டில் இருந்து அவனது அந்த ஒரு காதை யாரோ இழுக்க, அலறித் துடித்தான் தேஷ்பாண்டே. அவனது மற்ற இரு நண்பர்கள் உதவிக்கு வர. அவனது தலையை அவர்கள் அந்தப் மேட்டுப் பகுதியில் இருந்து போராடி தூக்கி விட்டனர். அப்போது தான் தேஷ்பாண்டே ரத்தம் சொட்ட, சொட்ட தனது காது துண்டாக அந்த மேட்டுப் பகுதியில் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்தான்.

மற்றொரு நண்பனான போஸ் புதையலை தேடி வடக்குப் பக்கம் சென்றான். அங்கு ஒரு சுவற்றின் ஓட்டைகள் வழியே உட்பகுதியில் பிரகாசத்தை கண்டான். உண்மையில் அது புதையல் தானா என்று பார்க்க தனது ஒரு கண்ணை மட்டும் சுவற்றின் இடுக்கில் உள்ள ஓட்டை வழியே வைத்து அப்புறத்தில் உள்ளதைக் கண்டான். அவ்வளவு தான், போஸின் அந்த ஒரு கண்களை யாரோ கூறிய ஆயுதம் கொண்டு குத்தியதை உணர்ந்தான். வலியால் அலறித் துடித்தான். குத்தியது யார் என்பது மட்டும் அவன் அறியவில்லை. ஆனால் குபு, குபுவென்று ரத்தம் மண்ணில் கொட்டியது. அவன் அலறல் சத்தத்தை கேட்ட மற்ற நண்பர்கள் ஓடி வந்து அவன் நிலையைக் கண்டு அதிர்ந்தார்கள்.

இதேபோல அவர்களின் இன்னொரு நண்பனான அப்தல் கண்களுக்கும் பிரகாசமான ஒளி ஒரு சுவற்றிற்கு இடுக்கில் இருந்து வெளிப்பட்டதை தொடர்ந்து தனது வலது கையை சுவற்றில் விட்டு புதையல் ஏதேனும் கிடைக்கிறதா என்று துளாவிப் பார்த்தான். அப்போது அவனது கையை ஒரு மிருகம் பற்களால் கடிப்பது போல உணர்ந்தான். வலியால் துடித்தான். ஆனால், அவனால் தனது கைகளை மட்டும் எடுக்க முடியவில்லை. அவன் அலறல் சத்தத்தை கேட்டு நண்பர்கள் அனைவரும் அவ்விடம் விரைந்தனர். அவர்கள் அனைவரும் போராடி அப்தலின் கைகளை அந்த இடுக்கில் இருந்து எடுத்தார்கள். அப்தல் தனது பாதி கை துண்டாகி இருப்பதைக் கண்டு அலறித் துடித்தான். இப்போது அவர்கள் அனைவரது மனதிலும் புதையலை அடைய வேண்டும் என்ற ஆசை போய், உயிருடன் கோட்டையை விட்டுச் சென்றாள் போதும் என்ற எண்ணமே தலை தூக்கி இருந்தது.

உடனே மந்திரவாதி பத்ராவிடம் விரைந்து வந்தனர். தங்கள் நிலையை எடுத்துச் சொன்னார்கள். ஆனால் பத்ரா அதனைக் காதில் வாங்கவில்லை. மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் மாணவர்கள் அனைவரும் கொதிப்படைந்து பத்ராவை திட்டத் தொடங்கினார்கள். பத்ரா சற்றே மந்திரத்தை நிறுத்தியபடி அவர்களிடம் "உங்களை அழைத்து வந்ததே பலியிடத்தான்" என்று கூறி பலமாக சிரித்தான். அப்போது குதிரை கனைக்கும் சத்தம் கேட்க. அனைவரும் தங்களை பாதுக்காத்துக் கொள்ள ஓடத் தொடங்கினார்கள்.

குதிரையின் மீது ஒரு வீரன் அமர்ந்து இருந்தான். அவனது ஆடை ஜொலிக்க கைகளில் கூறிய வாள் கொண்டு அவன் காணப்பட்டான். முதல் பலியாக சஞ்சயை வெட்டினான். அடுத்தடுத்து நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் அந்த வீரன் பத்ராவையும் விட்டு வைக்கவில்லை. இவ்வாறு புதையல் மீது கொண்ட பற்று அவர்கள் அனைவரையும் கொன்றது.

இந்தக் கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது :-

புதையல் போன்ற விஷயங்களைப் பற்றி யாரேனும் கூறினாள் அதனை நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவர்கள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. உழைக்கும் காசு தான் எப்போதும் சந்தோஷத்தை தரும்.