கிணறு வெட்டக் கிளம்பிய பூதம்

bookmark

கல்கத்தாவில் "பன்டேல்" என்னும் கிராமத்தில் மிகப் பெரும் பணக்காரராக இருந்தவர் தான் நரேந்தர். இவர் சொந்தமாகத் தொழில் செய்து வந்தார். இவரது தொழிலே தசரா போன்ற காலங்களில் காளி சிலைகளை அற்புதமாக வடித்து நாட்டின் பல இடங்களில் அதனை நல்ல விலைக்கு விற்பது தான். உள்நாடு மட்டும் அல்லாமல் வெளிநாட்டிலும் இவர் தனது வியாபாரத்தை விரிவு படுத்தி இருந்தார். இதனால் அந்த கிராமத்திலேயே இவரது வீடு தான் பங்களாவாக இருந்தது. பங்களா நரேந்தர் என்று சொன்னால் போதும் இவர் வீடு வரையில் விருந்தாளிகளை கொண்டு வந்து விடுவார்கள் கிராமத்து மக்கள். அந்த ஊரில் அப்படி ஒரு பிரபலமாக வாழ்ந்து வந்தவர் தான் நரேந்தர். நரேந்தர் காளி சிலைகள் மட்டும் அல்லாமல் அனேக சிலைகளை கலைநயத்துடன் செய்து விற்பவர். ஆனால் உண்மையில் இவர் ஒரு நாத்திகவாதி. கடவுள் சிலைகளை பொம்மைகளாக மட்டும் தான் பார்க்கத் தெரிந்தவர். ஆனால் இவரது மனைவி யசோதா தேவி அதீத தெய்வ பக்தி கொண்டவர்கள். துளசி, வில்வம், புத்து என அனைத்தையும் கடவுளாகப் பார்ப்பவர்கள். அடிக்கடி யசோதா தனது கணவனின் நாத்தீக எண்ணத்தை குறை கூறி வந்தார். ஆனால் அவள் கணவரோ யசோதாவின் தெய்வ நம்பிக்கையை மூடநம்பிக்கையாக அடிக்கடி சுட்டிக் காட்டி கிண்டல் செய்வார். இருவருக்குள் இது சம்மந்தமாக அடிக்கடி சிறு, சிறு சண்டைகள் வந்து போகும். இவர்களுக்கு "விமல்" என்று ஆறு வயது மகனும், "ஐஸ்வர்யா" என்ற பதிமூன்று வயது மகளும் இருந்தார்கள்.

இது இப்படி இருக்க, நரேந்தர் தனது வீட்டில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க கிணறு வெட்ட முடிவு செய்தார். ஆழாமாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த போது ஒரு விசித்திரமான சிலை ஒன்று பூமிக்கு அடியில் இருந்து கிடைத்து. பார்ப்பதற்கு விலங்கின் முகமும் ஒரு பூதத்தின் உடலும் கொண்டு இருந்தது அந்த சிலை. யசோதா அந்த சிலையை பற்றிக் கேள்விப்பட்டு அதுவும் ஒரு தெய்வம் தான் போல, என்று நினைத்து ஆட்கள் மூலம் அதனை வீட்டுக்குள் கொண்டு வந்து வணங்கத் தொடங்கினாள். அந்த சிலை வீட்டில் வந்த அடுத்த நாளே. அவர்கள் வீட்டில் இருந்த பசுமாடு இறந்தது. இது யசோதாவுக்கு அபசகுனமாகப் பட்டது. இருந்தும் அந்த சிலையை சுமார் ஒரு மாத காலமாக பூஜை செய்து வணங்கி வந்தாள் யசோதா. அந்த சிலைக்குப் படையல்கள் பல படைத்தாள். இப்படி இருக்கும் போது, தசரா பண்டிகை ஆரம்பம் ஆனது. எப்போதும் தசரா ஆரம்பிக்கும் ஒரு மாதத்திற்கு முன்னமே நரேந்தரின் காளி சிலைகளுக்கு உலக அளவில் அதிக தேவைகள் இருக்கும். அதனால் பெரிய லாபத்தை அந்த குறப்பிட்ட நேரத்தில் மட்டும் நரேந்தர் சம்பாதித்து விடுவார். ஆனால் தசரா பண்டிகை அடுத்த நாள் தொடங்கப் போகும் சூழ்நிலையிலும் நரேந்தரின் காளி சிலைகள் ஒன்று கூட விற்பனை ஆகவில்லை. இது எப்படி என்று நரேந்திரனுக்கே புரியாத புதிராக இருந்தது. இந்த நிலையில் நரேந்தர் வாங்கிய கடன்களுக்கு அவரால் சரியாக வட்டியை செலுத்த முடியவில்லை. இதனால் அந்தத் தனியார் வங்கியில் இருந்து, அன்று அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. வங்கி மேலாளர் "நரேந்தர்! நீங்கள் வாங்கிய கடன் தொகைக்கு, சரியாக வட்டி வந்து சேரவில்லை. அதனால் வங்கி உங்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டது. உங்கள் கடன் தொகையையும், வட்டியையும் சரியான நேரத்தில் கட்ட முடியாத காரணத்தால் உங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்கிறோம்" என்று கூற. நரேந்தர் திகைத்தார்.

வங்கியில் நேரில் சென்று விளக்கம் தர முயற்சி செய்தார். ஆனால் அங்கு அவரது விளக்கத்தை கேட்க யாரும் தயாராக இல்லை. வங்கி மேலாளரிடம் தவணை காலத்தை அதிகரிக்கும் படி கெஞ்சியும் பார்த்தார். மூன்று மாதத்திற்கு முன்னமே இது பற்றி உங்களுக்கு தகவல் அனுப்பிவிட்டோம். இனி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார் வங்கி மேலாளர். இந்நிலையில் நரேந்தரின் வீட்டில் யசோதா தேவி வெளியே காய்கறி வாங்க சென்று இருந்தாள். அன்று வீட்டு வேலைக்காரியும் வரவில்லை. நரேந்தரின் மகள் ஐஸ்வர்யா படித்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவளை யாரோ அழைப்பது போல இருந்தது. தன்னை மறந்த நிலையில் எழுந்தாள் ஐஸ்வர்யா. அப்படி எழுந்தவளை அந்தக் குரல் மாடிக்கு அழைத்துச் சென்றது. அங்கிருந்து அவள் கீழே விழுந்தாள். அதில் அவளது கைகளும், கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு முறிந்து போனது. உடனடியாக ஐஸ்வர்யா ICU வில் சேர்க்கப்பட்டாள். ரத்தம் நிறைய போய்க் கொண்டு இருந்தது. இந்தத் தகவல் நரேந்தருக்கு இன்னொரு பேர் இடியாக இருந்தது. தனது குடும்பத்துக்கு என்ன தான் நேர்ந்து கொண்டு இருக்கிறது என்று நரேந்தர் கலங்கித் தவித்தார்.

யசோதா தேவி காளி கோயிலுக்குச் சென்றாள். காளியை மனம் உருக வேண்டி அழுதாள். தனது மகள் நல்ல படியாகப் பிழைக்க வேண்டும் என்று அந்தக் கோவிலிலேயே தவம் கிடந்தாள். அப்போது அந்தக் கோவிலில் இருந்த பூசாரி "நிவல்கர்" காளி மாதாவின் பிரசாத்தை யசோதாவிடம் கொடுத்தார். அதில் காளிக்கு அர்ச்சனை செய்த குங்குமமும், மிட்டாயும் இருந்தது. அப்போது யசோதாவுக்கு ஐஸ்வர்யா பிழைத்து விட்டதாக தகவல் கிடைத்தது. "எல்லாம் காளி மாதாவின் கருணை" என்று பூரித்துப் போனாள். மருத்துவமனைக்கு சென்ற பிறகு தான் யசோதாவுக்கே தெரியும் அவள் மகளால் இனி நிரந்தரமாக நடக்க முடியாது என்று. அதனைக் கேட்டு அதிர்ந்து போனாள். செய்வது அறியாமல் திகைத்தாள். அப்போது கணவனின் வியாபாரமும் நொடிந்து போனதால் சோகத்தில் ஆழ்ந்தாள்.

காளி கோயில் பண்டிதர் நிவல்கரை சந்தித்து தனது சோகத்தை பகிர்ந்து கொண்டாள். நிவல்கர் ஓமம் ஒன்று செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறி யசோதாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது தான் அங்கிருந்த விசித்திர சிலையை நிவல்கர் பார்த்தார். விவரம் கேட்டார். யசோதா அனைத்தையும் கூறினாள். அப்போது நிவல்கர் யசோதாவிடம் "அம்மா இந்த சிலை தெய்வத்தின் சிலை என்று தோன்றவில்லை. இதில் ஏதோ கெட்ட சக்தி உள்ளது. இதனை வெளியில் தூக்கி எறிந்து விடுங்கள். அப்படியே நான் பூஜித்துத் தரும் தேவியின் சிலையை வீட்டில் வைத்து வணங்குங்கள். இனி எந்தக் கெடுதலும் உங்களுக்கு வராது" என்று கூறினார். இத்துடன் நிவல்கர் ஓமம் செய்ய அந்த வீட்டில் யாகம் வளர்த்தார். ஆனால், யாகத் தீ அணைந்து போனது, கொண்டு வந்திருந்த பழங்கள் அனைத்தும் கண நேரத்தில் அழுகின. எல்லாமே விசித்திரமாக நிவல்கருக்குப் பட்டது. அப்போது தான் யசோதா, தான் அந்த சிலையைக் கொண்டு வந்து எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டோம் என்பதை உணர்ந்தாள். உடனே அந்தச் சிலையை தூக்கி ஏறிய தனது கணவனிடம் வேண்டினாள். அப்போது தான் நரேந்தர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனது மகளை சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துக் கொண்டு வந்தார். உடனுக்குடன் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கேள்விப்பட்டு அந்த சிலையை தூக்க நரேந்தர் மிகவும் முயற்சி செய்தார். ஆனால் கொண்டு வந்த போது மிகவும் லேசாக இருந்த சிலை இப்போது கனமாக இருந்தது. நரேந்தரால் அதனை நகர்த்தக் கூட முடியவில்லை. பிரமித்துப் போனார்.

இது ஒரு புறம் இருக்க, நிவல்கர் யசோதாவிடம் நாளை வந்து தான் பூஜித்து தரும் காளி சிலையை தன்னிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு சொல்லிவிட்டுப் போனார். அன்று இரவு யசோதாவால் தூங்கக் கூட முடியவில்லை. மெல்ல எழுந்தவள் தனது படுக்கை அறையை விட்டு வெளியில் வந்தாள். ஒரு உருவம் அவளுக்கு பின்னால் நடந்தது போல இருந்தது. அது அவளது மகன் விமலின் அறைக்குச் சென்றதாக அவள் உணர்ந்தாள். அடுத்த நொடி விமலுக்கு என்ன நேர்ந்ததோ என்ற சிந்தனையில் விமலின் அறைக்கு ஓடினாள். அந்த உருவம் விமலின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தது. யசோதா கத்தி கூச்சல் போட்டாள். அந்த உருவம் மறைந்தது. விமல் பிழைத்துக் கொண்டான்.

அடுத்த நாள் விடிந்தது, நரேந்தரின் வீட்டில் அன்று இரவு யாரும் தூங்கவில்லை. உடனே எழுந்து தனது வேலைகளை முடித்து விட்டு, நரேந்தருடன் நிவல்கரை சந்தித்து காளி சிலையை பெற யசோதா கோவிலுக்குச் சென்று இருந்தாள். நிவல்கர் காளி சிலையை யசோதாவிடம் கொடுத்தார். அதனைக் காரில் வைத்து நரேந்தரின் குடும்பம் எடுத்துச் சென்றனர். ஆனால் நரேந்தர் தனது வீட்டை அடையும் சமயம் பத்தடி தூரத்தில் அந்தக் கார் நின்று போனது. காரை பரிசோதனை செய்ததில் எந்தக் கோளாறும் இல்லை. ஆனால், நரேந்தரின் பெட்ரோல் டேங் இல் இருந்து பெட்ரோல் சிந்திக் கொண்டு இருந்தது. அதனை நரேந்தரனே கவனிக்கவில்லை. கீழே சிந்திய பெட்ரோல் மெல்ல, மெல்ல ஊர்ந்து அருகில் குப்பைகள் எரிக்கப்படும் இடம் நோக்கி நகர்ந்தது.

மறுபுறம் சரி! வீடு அருகில் தானே உள்ளது என்று நரேந்தர் உட்பட அனைவரும் காளி சிலையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நடந்து செல்ல முடிவு செய்து அதன் படியே நடந்து சென்றனர். அவர்கள் இறங்கி சிறிது தூரம் நடந்ததும். அவர்களது கார் வெடித்துச் சிதறியது. நரேந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், தெய்வத்தை நம்பாத நரேந்தர், முதன் முதலில் தனது குடும்பம் காக்கப் பட்டது தெய்வத்தின் கருணையே என்பதை உணர்ந்தான். வீட்டுக்குள் காளி சிலையை கொண்டு வந்து பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது பூஜை முடிந்ததும் நரேந்தருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அது வங்கி மேலாளரிடம் இருந்து தான். நரேந்தர் கொடுக்க வேண்டிய கடன்களின் வட்டித் தொகையை ஒரு வயதான அம்மா வந்து செலுத்தி விட்டதாகவும். அதனால் வங்கி அவருக்கு கடன்களை அடைக்க கூடுதல் அவகாசம் தருவதாகவும் சொன்னார். அது கேட்டு நரேந்தர் காளியின் கிருபையை உணர்ந்து கொண்டார். அந்த சமயம் நிவல்கரும் வீட்டுக்கு வந்தார். அவரும் காளிக்கு பூஜை செய்தார். அப்போது மீண்டும் யசோதாவிடம் நீங்கள் அப்போது நரேந்தர், தன்னால் அந்த பூதத்தின் சிலையை அசைக்கக் கூட முடியவில்லை என்ற விவரத்தை சொல்ல, இப்போது நிவல்கர் முயற்சி செய்தார், ஆனால் அந்த சிலை அப்போது பூ போல மிகவும் இலகுவாக எடுக்க வந்தது. இத்தனைக்கும் நிவல்கர் எழுபது வயதைத் தாண்டியவர். அசந்து போனார் நரேந்தர், எல்லாமே காளி மாதா வீட்டில் வந்த நேரம் தான் என்று மனதில் சொல்லிக் கொண்டார். அந்த பூதத்தின் சிலையை நிவல்கர் அகற்றி வெளியில் எறிந்தார். அன்று முதல் காளி மாதாவின் அருளால் நரேந்தரின் குடும்பத்திற்கு நல்லதே நடந்தது.

இந்தக் கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது :-

பூமியில் கிடைக்கும் பொருள்கள் எல்லாமே கடவுளின் வடிவம் ஆகிவிடாது. அதே சமயத்தில் நரேந்தர் போல நாத்திகவாதியாகவும் இருக்கக் கூடாது. எப்போதும் மனதை ஆத்திகத்துக்கும், நாத்திகத்துக்கும் இடையில் சமநிலையில் வைப்பதே புத்தி சாலித்தனம்.