திருமுடி சூட்டு படலத்தின் பாடல்கள்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

திருமுடி சூட்டு படலம்

இராமன் தம்பியரோடு நந்தியம் பதியை அடைந்து, சடை நீக்கி, நீராடி கோலம்கொள்ளுதல்
 
நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மற்றைத்
தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார். 
 
தம்பிமாருடன் இராமன் அயோத்தி புகுதல்
 
ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால் நிறக் கவரி பற்ற,
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் கொள்ளப் போனான். 
 
தேவரும் முனிவரும் மலர் மழை பொழிதல்
 
தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த
ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கிக்
கேவல மலராய், வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்,
பூ எனும் நாமம், இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே. 
 
சேனைகள் முதலியவற்றின் மகிழ்ச்சி
 
கோடையில் வறந்த மேகக் குலம் எனப் பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத பணை முகப் பரும யானை,
காடு உறை அண்ணல் எய்த, கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின, உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததேபோல். 
 
துருவத் தார்ப் புரவி எல்லாம், மூங்கையர் சொல் பெற்றென்ன,
அரவப் போர் மேகம் என்ன, ஆலித்த; மரங்கள் ஆன்ற
பருவத்தால் பூத்த என்னப் பூத்தன; பகையின் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிறப் பசலை பூத்த. 
 
தாய் மார் முதலியோரை வணங்கி, இராமன் அரண்மனையை அடைதல்
 
ஆயது ஓர் அளவில், செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் களி நடம் செய்யக் கண்டான். 
 
நகர மாந்தரின் மகிழ்ச்சிப் பெருக்கு
 
வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர், கரத்தின் பல்கால்
தாங்கினர் என்ற போதும், மைந்தரும் தையலாரும்,
வீங்கிய உவகை மேனி சிறக்கவும், மேன் மேல் துள்ளி
ஓங்கவும், களிப்பால் சோர்ந்தும், உடை இலாதாரை ஒத்தார். 
 
வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற, வெற்றிப்
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்துச் சுற்ற,
வாசம், மென் கலவைச் சாந்து, என்று இனையன, மயக்கம்தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார், பூசலார் புகுந்துளோரும். 
 
இறைப் பெருஞ் செல்வம் நீத்த ஏழ்-இரண்டு ஆண்டும், யாரும்
உறைப்பு இலர் ஆதலானே, வேறு இருந்து ஒழிந்த மின்னார்,
பிறைக் கொழுந்து அனைய நெற்றிப் பெய் வளை மகளிர், மெய்யை
மறைத்தனர் பூணின், மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற.
 
விண் உறைவோர்தம் தெய்வ வெறியோடும், வேறுளோர்தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால்,
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும்,
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே. 
 
இராமன் திருமுடி சூடும் நாள் குறித்து எங்கும் செய்தி அனுப்புதல்
 
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற
மந்திர விதியினாரும், வசிட்டனும், வரைந்து விட்டார்-
சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன் தாமச்
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி. 
 
மூவுலகத்தாரும் அயோத்தியில் வந்து குழுமுதல்
 
அடுக்கிய உலகம் மூன்றும், ஆதரத் தூதர் கூற,
இடுக்கு ஒரு பேரும் இன்றி, அயோத்தி வந்து இறுத்தார் என்றால்,
தொடுக்குறு கவியால் மற்றைத் துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான் முகத்து ஒருவற்கு உண்டோ ? 
 
பிரமன் ஏவலால், மயன் முடி சூட்டு மண்டபம் அமைத்தல்
 
நான்முகத்து ஒருவன் ஏவ, நயன் அறி மயன் என்று ஓதும்
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன், வணங்கு நெஞ்சன்,
கோல் முகத்து அளந்து, குற்றம் செற்று, உலகு எல்லாம் கொள்ளும்
மான் முகத்து ஒருவன், நல் நாள் மண்டபம் வயங்கக் கண்டான். 
 
அனுமன் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வருதல்
 
சூழ் கடல் நான்கின் தோயம், எழு வகை ஆகச் சொன்ன
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன, ஆம் என்று,
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி, அன்றே
ஏழ் திசை நீரும் தந்தான், இடர் கெட மருந்து தந்தான். 
 
இராமன் நீராடுதல்
 
தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய,
ஐயம் இல் சிந்தையான் அச் சுமந்திரன் அமைச்சரோடும்
நொய்தினின் இயற்ற, நோன்பின் மாதவர் நுனித்துக் காட்ட,
எய்தின இயன்ற பல் வேறு, இந்திரற்கு இயன்ற என்ன, 
 
வசிட்டன் இராமனுக்குத் திருமுடி புனைதல்
 
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி. 
 
வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின், நல்ல ஓரையின், உலகம் மூன்றும்
துள்ளின களிப்ப, மோலி சூடினான்-கடலின் வந்த
தெள்ளிய திருவும், தெய்வப் பூமியும், சேரும் தோளான். 
 
மூவுலகத்தாரும் மகிழ்தல்
 
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர்த் தெய்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும், மேன்மை
ஒத்த மூஉலகத் தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின்,
தம் தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது, அத் தாம மோலி. 
 
பல் நெடுங் காலம் நோற்று, தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற
பின் நெடுங் கணவன் தன்னைப் பெற்று, இடைப் பிரிந்து, முற்றும்
தன் நெடும் பீழை நீங்கத் தழுவினாள், தளிர்க் கை நீட்டி,
நல் நெடும் பூமி என்னும் நங்கை, தன் கொங்கை ஆர. 
 
பரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுதல்
 
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி,
வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும்
கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ. 
 
உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
எம் பெருமான்! என்று ஏத்தி, இறைஞ்சி நின்று, ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும், தரணி காத்தான்-
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல். 
 
நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி,
குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ,
சுருதி ஒத்தனைய வெள்ளைத் துரகதக் குலங்கள் பூண்டு,
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணித் தேரின் ஆனான். 
 
...
வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி! 
 
இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே.