மீட்சிப் படலத்தின் பாடல்கள்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

மீட்சிப் படலம்

வீடணன் புட்பக விமானம் கொணர்தல்
 
ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் அயின்,
மாண்டதாம் இனி என் குலம், பரதனே மாயின்;
ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ ? என, இன்றே
தூண்டு மானம் உண்டு என்று, அடல் வீடணன் தொழுதான். 
 
இயக்கர் வேந்தனுக்கு அரு மறைக் கிழவன் அன்று ஈந்த,
துயக்கு இலாதவர் மனம் எனத் தூயது, சுரர்கள்,
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே
மயக்கு இலான் சொல, கொணருதி வல்லையின் என்றான்
 
அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து, ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க,
கண்டை ஆயிர கோடிகள் மழை எனக் கலிப்ப,
கொண்டு அணைந்தனன் நொடியினின், அரக்கர் தம் கோமான், 
 
இராமன் புட்பக விமானத்தில் ஏற, தேவர்கள் மலர்மாரி பொழிந்து வாழ்த்துதல்
 
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு, இனி நம்
வினையம் முற்றியது என்று கொண்டு ஏறினன்; விண்ணோர்
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள் புகன்றே. 
 
சீதையும் இலக்குவனும் விமானத்தில் ஏறுதல்
 
வணங்கு நுண் இடைத் திரிசடை வணங்க, வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி, ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்குதான் என இருத்தி என்று, ஐயன்மாட்டு அணைந்தாள்;
மணம் கொள் வேல் இளங் கோளரி மானம் மீப் படர்ந்தான். 
 
விமானத்தில் நின்ற இராமன் வீடணன் முதலிய துணைவர்க்கு விடை தரல்
 
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து, அனிலன்
சண்ட வேகமும் குறைதர, நினைவு எனும் தகைத்தாய்,
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்மேல்
கொண்ட கொண்டல், தன் துணைவரைப் பார்த்து, இவை குனித்தான்: 
 
வீடணன் தனை அன்புற நோக்குறா, விமலன்,
தோடு அணைந்த தார் மவுலியாய்! சொல்வது ஒன்று உளது; உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி, நீள் அரசின்,
நாடு அணைந்தவர் புகழ்ந்திட, வீற்றிரு நலத்தால்.
 
நீதி ஆறு எனத் தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்!
ஆதி நான்மறைக் கிழவன் நின் குலம் என அமைந்தாய்!
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள், இனி நீ
போதியால் எனப் புகன்றனன்-நான் மறை புகன்றான்
 
சுக்கிரீவ! நின் தோளுடை வன்மையால் தசம் தொகு
அக்கிரீவனைத் தடிந்து, வெம் படையினால் அசைந்த
மிக்க வானரச் சேனையின் இளைப்பு அற மீண்டு, ஊர்
புக்கு, வாழ்க! எனப் புகன்றனன்-ஈறு இலாப் புகழோன். 
 
வாலி சேயினை, சாம்பனை, பனசனை, வயப் போர்
நீலன் ஆதிய நெடும் படைத் தலைவரை, நெடிய
காலின் வேலையைத் தாவி மீண்டு அருளிய கருணை
போலும் வீரனை, நோக்கி, மற்று அம் மொழி புகன்றான்
 
ஐயன் அம் மொழி புகன்றிட, துணுக்கமோடு அவர்கள்,
மெய்யும் ஆவியும் குலைதர, விழிகள் நீர் ததும்ப,
செய்ய தாமரைத் தாள் இணை முடி உறச் சேர்த்தி,
உய்கிலேம், நினை நீங்கின் என்று இனையன உரைத்தார். 
 
அயோத்தியில் ஐயன் திருமுடிசூடுதலைக் காண விரும்பி உரைத்தல்
 
பார மா மதில் அயோத்தியின் எய்தி, நின் பைம் பொன்
ஆர மா முடிக் கோலமும் செவ்வியும் அழகும்,
சோர்வு இலாது, யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து
பேரவே அருள் என்றனர்-உள் அன்பு பிணிப்பார். 
 
இராமன் உடன்பட்டுக் கூற, யாவரும் மகிழ்தல்
 
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும், அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும், நோக்கி, நீர் துளங்கல்;
முன்பு நான் நினைந்திருந்தது அப் பரிசு; நும் முயற்சி
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன்-பெரியோன். 
 
ஐயன் வாசகம் கேட்டலும், அரி குலத்து அரசும்,
மொய் கொள் சேனையும், இலங்கையர் வேந்தனும், முதலோர்,
வையம் ஆளுடை நாயகன் மலர்ச் சரண் வணங்கி,
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார். 
 
யாவரும் புட்பகத்தின்மேல் ஏறுதல்
 
அனையது ஆகிய சேனையோடு அரசனை, அனிலன்
தனயன் ஆதியாம் படைப் பெருந் தலைவர்கள் தம்மை,
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை, வந்து இங்கு
இனிதின் ஏறுமின், விமானம் என்று, இராகவன் இசைத்தான். 
 
சொன்ன வாசகம் பிற்பட, சூரியன் மகனும்,
மன்னு வீரரும், எழுபது வெள்ள வானரரும்,
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும்,
துன்னினார், நெடும் புட்பகமிசை ஒரு சூழல். 
 
பத்து நால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும், வெற்றிடம் மிகுமால்;
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால்,
இத் தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே! 
 
புட்பக விமானத்தில் இராமன் விளங்கிய காட்சி
 
எழுபது வெள்ளத்தாரும், இரவி கான்முளையும், எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும், வான் பெரும் படையும், சூழ
தழுவு சீர் இளைய கோவும், சனகன் மா மயிலும், போற்ற,
விழுமிய குணத்து வீரன் விளங்கினன், விமானத்து உம்பர். 
 
அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்,
எண் தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதேபோல்,
புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ. 
 
இராமன் சீதைக்கு வழியிலுள்ள காட்சிகளைக் காட்டிச் செல்லுதல்
 
குட திசை மறைந்து, பின்னர்க் குண திசை உதயம் செய்வான்
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப, மானம்
தடை ஒரு சிறிது இன்று ஆகி, தாவி வான் படரும் வேலை,
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான்
 
சேதுவைக் காட்டி, அதன் தூய்மையைப் புகழ்தல்
 
இந்திரற்கு அஞ்சி, மேல் நாள், இருங் கடல் புக்கு, நீங்கால்
சுந்தர சயிலம், தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி, இவண் கிடப்ப கண்டாய்;
பைந்தொடி! அடைத்த சேது பாவனம் ஆயது என்றான்.
 
கங்கையோடு, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி,
பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே. 
 
நெற்றியின் அழலும் செங் கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையில் மேவு கங்கையும், "சேது ஆகப்
பெற்றிலம்" என்று கொண்டே, பெருந்தவம் புரிகின்றாளால்;
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது?-மலர்க்கண் வந்தாய்! 
 
வருணன் சரணம் அடைந்த இடத்தைக் காட்டுதல்
 
தெவ் அடும் சிலைக் கை வீரன் சேதுவின் பெருமை யாவும்,
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங் கண் செவ் வாய்,
நொவ் இடை, மயில் அனாட்கு நுவன்றுழி, வருணன் நோனாது
இவ் இடை வந்து கண்டாய், "சரண்" என இயம்பிற்று என்றான். 
 
பொதிய மலை முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்
 
இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம்; முன் தோன்று
அது வளர் மணிமால் ஓங்கல்; உப் புறத்து, உயர்ந்து தோன்றும்
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர, அனுமன் தோன்றிற்று
எது? என, அணங்கை நோக்கி, இற்று என இராமன் சொன்னான்: 
 
அனுமனைச் சந்தித்த இடம், கிட்கிந்தை ஆகியவற்றைக் காட்டுதல்
 
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகர நீர் சூழ்
வேலையைக் கடக்கப் பாயும் விறல் உடையவனை வீட்டி,
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர்-
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான்.
 
வானர மகளிரையும் உடன் அழைத்துச் செல்ல, சீதை விரும்பி மொழிதல்
 
கிட்கிந்தை இதுவேல், ஐய! கேட்டியால்: எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ, ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து என்றாள். 
  
இராமன் ஆணைப்படி சுக்கிரீவன் அனுமனை அனுப்பி, மகளிர்களை அழைத்து வரச் செய்தல்
 
அம் மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப, அன்னான்
மெய்ம்மை சேர அனுமன் தன்னை நோக்கி, நீ விரைவின், வீர!
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன,
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன், சென்று மன்னோ. 
 
வானர மகளிர் மங்கலப் பொருள்களுடன் வந்து முறைப்படி வணங்குதல்
 
வரிசையின் வழாமை நோக்கி, மாருதி மாதர் வெள்ளம்
கரைசெயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன், கணத்தின் முன்னம்;
விரைசெறி குழலினார் தம் வேந்தனை வணங்கி, பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது, நின்றார். 
 
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும்
அங்கு அவர் வைத்து, பெண்மைக்கு அரசியைத் தொழுது சூழ,
நங்கையும் உவந்து, வேறு ஓர் நவை இலை, இனி மற்று என்றாள்;
பொங்கிய விமானம் தானும், மனம் என, எழுந்து போன. 
 
கோதாவரி, தண்டகாரணியம், முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்
 
போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்,
சூது ஆர் முலைத் தோகையை நோக்கி, முன் தோன்று சூழல்
கோதாவரி; மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை,
பேதாய்! பிரிவுத் துயர் பீழை பிணித்தது என்றான். 
 
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை! கேள்: இது நீள்
தரத்து உவாசவர், வேள்வியர், தண்டகம்; அதுதான்
வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம்;
பரத்துவாசவன் உறைவிடம் இது எனப் பகர்ந்தான். 
 
மின்னை நோக்கி, அவ் வீரன் ஈது இயம்பிடும் வேலை,
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து, தன் அகத்தின்,
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா,
துன்னு மா தவர் சூழ்தர, எதிர் கொள்வான், தொடர்ந்தான்.
 
பரத்துவாசன் ஆச்சிரமத்தில் இறங்குதல்
 
ஆதபத்திரம், குண்டிகை, ஒரு கையின் அணைத்து,
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய,
மா தவப் பயன் உருவு கொண்டு எதிர் வருமாபோல்,
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன், நெடியோன். 
 
எண் பக, தினை அளவையும் கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி, மா மேரு
விட்பு அகத்து உறை கோள் அரி எனப் பொலி வீரன்,
புட்பகத்தினை வதிகென நினைந்தனன், புவியில். 
 
இராமன் முதலியோர் முனிவனைத் தொழ, முனிவனும் இராமனை உபசரித்தல்
 
உன்னும் மாத்திரத்து, உலகினை எடுத்து உம்பர் ஓங்கும்
பொன்னின் நாடு வந்து இழிந்தெனப் புட்பகம் தாழ,
என்னை ஆளுடை நாயகன், வல்லையின் எதிர் போய்,
பன்னு மா மறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான்.
 
அடியின் வீழ்தலும் எடுத்து, நல் ஆசியோடு அணைத்து,
முடியை மோயினன் நின்றுழி, முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர, தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம் அது ஆட்டினன், நெடியோன். 
 
கருகும் வார் குழல் சனகியோடு இளவல் கை தொழாதே,
அருகு சார்தர, அருந் தவன் ஆசிகள் வழங்கி,
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன், உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து, உளம் களித்தனன், பரிவால். 
 
வானரேசனும், வீடணக் குரிசிலும், மற்றை
ஏனை வீரரும், தொழும்தொறும் ஆசிகள் இயம்பி,
ஞான நாதனைத் திருவொடு நன் மனை கொணர்ந்தான்,
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே. 
 
பன்ன சாலையுள் புகுந்து, நீடு அருச்சனை பலவும்
சொன்ன நீதியின் புரிந்த பின், சூரியன் மருமான்-
தன்னை நோக்கினன், பல் முறை கண்கள் நீர் ததும்ப,
பின் ஒர் வாசகம் உரைத்தனன், தபோதரின் பெரியோன்: 
 
முனிவர் வானவர் மூவுலகத்துளோர் யாரும்
துனி உழந்திடத் துயர் தரு கொடு மனத் தொழிலோர்
நனி மடிந்திட, அலகைகள் நாடகம் நடிப்ப,
குனியும் வார் சிலைக் குரிசிலே! என், இனிக் குணிப்பாம்?
 
விராதனும், கரனும், மானும், விறல் கெழு கவந்தன் தானும்,
மராமரம் ஏழும், வாலி மார்பமும், மகர நீரும்,
இராவணன் உரமும், கும்பகருணனது ஏற்றம் தானும்,
அராவ அரும் பகழி ஒன்றால் அழித்து, உலகு அளித்தாய்-ஐய! 
 
இராமன் அனுமனைப் பரதனிடம் அனுப்பல்
 
இன்று நாம் பதி போகலம்; மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன், நெடியோன்;
நன்று எனா, அவன், மோதிரம் கைக் கொடு நடந்தான். 
 
தந்தை வேகமும், தனது நாயகன் தனிச் சிலையின்
முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகி,
சிந்தை பின் வரச் செல்பவன், குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம், கூறி, மேல் வான் வழிப் போனான். 
 
இன்று இசைக்கு இடம் ஆய இராகவன்
தென் திசைக் கருமச் செயல் செப்பினாம்,
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம்: 
 
நந்தியம் பதியில் பரதன் இருந்த நிலை
 
நந்தியம்பதியின் தலை, நாள்தொறும்
சந்தி இன்றி நிரந்தரம், தம்முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா,
இந்தியங்களை வென்றிருந்தான் அரோ. 
 
துன்பு உருக்கவும், சுற்றி உருக்க ஒணா
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய்,
முன்பு உருக் கொண்டு ஒரு வழி முற்றுறா
அன்பு உருக் கொண்டது ஆம் எனல் ஆகுவான்; 
 
நினைந்தவும் தரும் கற்பக நீரவாய்
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும், அக்
கனைந்த மூலமும் காயும் கனியும், அவ்
வனைந்த அல்ல அருந்தல் இல் வாழ்க்கையான்; 
 
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்;
ஏக்குற்று, ஏக்குற்று, இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான்; வரும், வரும் என்று, உயிர்
போக்கிப் போக்கி, உழக்கும் பொருமலான்;
 
உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்,
எண்ணும் கீர்த்தி இராமன், திரு முடி
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி,
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான். 
 
இராமன் வரவேண்டிய நாள் குறித்து சோதிடரை அழைத்துப் பரதன் வினவுதல்
 
அனையன் ஆய பரதன், அலங்கலின்
புனையும், தம்முனார் பாதுகைப் பூசனை
நினையும் காலை, நினைத்தனனாம் அரோ,
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள்.
 
யாண்டு வந்து இங்கு இறுக்கும்? என்று எண்ணினான்,
மாண்ட சோதிட வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த் தருக என்ன, வந்து எய்தினார்,
ஆண் தகைக்கு இன்று அவதி என்றார் அரோ. 
 
இராமன் வாராமையால் பரதன் அவலமுற்றுப் பலவாறு சிந்தித்தல்
 
என்ற போதத்து, இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ் உரை, செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன்,
கொன்ற போதத்த உயிர்ப்புக் குறைந்துளான். 
 
மீட்டு எழுந்து, விரிந்த செந் தாமரைக்
காட்டை வென்று எழு கண் கலுழிப் புனல்
ஓட்ட, உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும், அவலத்து அழிந்தான் அரோ. 
 
எனக்கு இயம்பிய நாளும், என் இன்னலும்,
தனைப் பயந்தவள் துன்பமும், தாங்கி, அவ்
வனத்து வைகல் செய்யான்; வந்து அடுத்தது ஓர்
வினைக் கொடும் பகை உண்டு என விம்மினான். 
 
மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும்,
பூவகத்தில், விசும்பில், புறத்தினில்,
ஏவர் கிற்பர் எதிர் நிற்க, என்னுடைச்
சேவகற்கு? என ஐயமும் தேறினான். 
 
என்னை, "இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின், அவன் அது கொள்க" என்று
உன்னினான்கொல், உறுவது நோக்கினான்?
இன்னதே நலன் என்று இருந்தான் அரோ.
 
உயிர் துறக்கக் கருதிய பரதன், தூதரை அனுப்பி, சத்துருக்கனை அழைத்தல்
 
அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக;
வனத்து இருக்க; இவ் வையம் புகுதுக;
நினைத்து இருந்து நெடுந் துயர் மூழ்கிலேன்;
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன். 
 
என்னப் பன்னி, இளவலை என்னுழைத்
துன்னச் சொல்லுதிர் என்னலும், தூதர் போய்,
உன்னைக் கூயினன், உம்முன் எனா முனம்,
முன்னர்ச் சென்றனன், மூவர்க்கும் பின் உளான். 
 
தொழுது நின்ற தம்பியிடம் பரதன் வரம் வேண்டல்
 
தொழுது நின்ற தன் தம்பியை, தோய் கணீர்
எழுது மார்பத்து இறுகத் தழுவினான்,
அழுது, வேண்டுவது உண்டு, ஐய! அவ் வரம்,
பழுது இல் வாய்மையினாய்! தரற்பாற்று என்றான். 
 
"என்னது ஆகும்கொல், அவ் வரம்?" என்றியேல்,
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்;
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்;
மன்னன் ஆதி; என் சொல்லை மறாது என்றான். 
 
சத்துருக்கன் வருந்தி உரைத்தல்
 
கேட்ட தோன்றல், கிளர் தடக் கைகளால்
தோட்ட தன் செவி பொத்தி, துணுக்குறா,
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்;
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான். 
 
விழுந்து, மேக்கு உயர் விம்மலன், வெய்து உயிர்த்து,
எழுந்து, நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?
அழுந்து துன்பத்தினாய்! என்று அரற்றினான்-
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான். 
 
கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; "போனவன் தான் வரும் அவதி போயிற்று" என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா! 
 
"மன்னின் பின், வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே, பரதன் என்னும்
சொல் நிற்கும்" என்று அஞ்சி, புறத்து இருந்தும், அருந் தவமே தொடங்கினாயே!
"என்னின் பின் இவன் உளனாம்" என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும்,
உன்னின் பின் இருந்ததுவும், ஒரு குடைக் கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான். 
 
சத்துருக்கனுக்குப் பரதன் சமாதானம் கூறி, எரி அமைக்குமாறு பணித்தல்
 
முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு வெள்ளிக் கொழு நிறத்து, முளரிச் செங்கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, அவன் இங்குத் தாழ்க்கின்ற தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன்பின், இவ் உலகை உலைய ஒட்டான்;
அத் திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும் அரசு; எரி போய் அமைக்க என்றான்.
 
செய்தி அறிந்து கோசலை விரைந்து ஓடி வருதல்
 
அப்பொழுதின், அவ் உரை சென்று, அயோத்தியினின் இசைத்தலுமே, அரியை ஈன்ற
ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள், வயிறு புடைத்து, அலமந்து ஏங்கி,
இப்பொழுதே உலகு இறக்கும், யாக்கையினை முடித்து ஒழிந்தால், மகனே! என்னா,
வெப்பு எழுதினாலனைய மெலிவுடையாள் கடிது ஓடி, விலக்க வந்தாள். 
 
மந்திரியர், தந்திரியர், வள நகரத்தவர், மறையோர், மற்றும் சுற்ற,
சுந்தரியர் எனப் பலரும் கை தலையில் பெய்து இரங்கித் தொடர்ந்து செல்ல,
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த,
அந்தர மங்கையர் வணங்க, அழுது அரற்றி, பரதனை வந்து அடைந்தாள் அன்றே. 
 
கோசலை பரதனைத் தீயில் விழாதபடி பற்றிக் கொண்டு, தடுத்துக் கூறுதல்
 
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஓசிய, மேனி தள்ள,
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து,
சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள் தொடருதலும், துணுக்கம் எய்தா,
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான், அவள் புகுந்து, பற்றிக்கொண்டாள்.
 
மன் இழைத்ததும், மைந்தன் இழைத்ததும்,
முன் இழைத்த விதியின் முயற்சியால்;
பின் இழைத்ததும், எண்ணில், அப் பெற்றியால்;
என் இழைத்தனை, என் மகனே? என்றாள். 
 
நீ இது எண்ணினையேல், நெடு நாடு எரி
பாயும்; மன்னரும் சேனையும் பாய்வரால்;
தாயர் எம் அளவு அன்று; தனி அறம்
தீயின் வீழும்; உலகும் திரியுமால். 
 
தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றிக் கண்டிலம், கண்களால்;
அருமை ஒன்றும் உணர்ந்திலை; ஐய! நின்
பெருமை, ஊழி திரியினும், பேருமோ? 
 
எண் இல் கோடி இராமர்கள் என்னினும்,
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்,
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? 
 
இன்று வந்திலனே எனின், நாளையே
ஒன்றும் வந்து, உனை; உன்னி, உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல்; பிழைத்தான் எனின்,
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள்.
 
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு, ஊழி வாழ்
பெரு நிலத்துப் பெறல் அரும் இன் உயிர்க்
கருவும் மாண்டு அறக் காணுதியோ?-கலைத்
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்! 
 
"இறக்கையும், சிலர் ஏகலும், மோகத்தால்
பிறக்கையும், கடன்" என்று, பின் பாசத்தை
மறக்கைகாண், மகனே! வலி ஆவது; என்,
துறக்கைதானும்? என்றாள்-மனம் தூய்மையாள். 
 
கோசலையின் உரையைப் பரதன் மறுத்து உரைத்தல்
 
"மைந்தன் என்னை மறுத்து உரைத்தான்" எனல்;
எந்தை மெய்ம்மையும், இக் குலச் செய்கையும்,
நைந்து போக, உயிர் நிலை நச்சிலேன்;
முந்து செய்த சபதம் முடிப்பெனால்
 
யானும், மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய்,
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்;
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்?
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ?
 
தாய் சொல் கேட்டலும், தந்தை சொல் கேட்டலும்,
பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கலும்,
ஈசற்கே கடன்; யான் அஃது இழைக்கிலேன்;
மாசு அற்றேன், இது காட்டுவென், மாண்டு என்றான். 
 
அனுமன் தோன்றுதல்
 
என்று தீயினை எய்தி, இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோருடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு,
குன்று போல் நெடு மாருதி கூடினான். 
 
இராமனது வருகையை உரைத்து, அனுமன் எரியை அவித்தல்
 
ஐயன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்,
உய்யுமே, அவன்? என்று உரைத்து, உள் புகா,
கையினால் எரியைக் கரி ஆக்கினான். 
 
ஆக்கி, மற்று அவன் ஆய் மலர்த் தாள்களைத்
தாக்கத் தன் தலை தாழ்ந்து வணங்கி, கை
வாக்கின் கூடப் புதைத்து, ஒரு மாற்றம் நீ
தூக்கிக் கொள்ளத் தகும் எனச் சொல்லினான். 
 
இன்னம் நாழிகை எண்-ஐந்து உள, ஐய!
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்;
இன்னது இல்லைஎனின், அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து, இவ் எரியில் முடிவெனால். 
 
ஒன்றுதான் உளது; உன் அடியேன் சொலால்,
நின்று தாழ்த்தருள், நேமிச் சுடர் நெடுங்
குன்று தாழ்வளவும்; இது குன்றுமேல்,
பொன்றும், நீயும், உலகமும்-பொய் இலாய்! 
 
எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்,
பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால்,
அங்கு வைகினன் அல்லது, தாழ்க்குமோ?
இங்கண், நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால்: 
 
அனுமன் இராமனது மோதிரத்தை அடையாளம் காட்ட, அங்குள்ளார் அனைவரும் மகிழ்தல்
 
அண்டர் நாதன் அருளி அளித்துளது
உண்டு ஓர் பேர் அடையாளம்; உனக்கு அது
கொண்டு வந்தனென்; கோது அறு சிந்தையாய்!
கண்டு கொண்டருள்வாய் எனக் காட்டினான். 
 
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்,
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம் அரோ,
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும்,
 
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன;
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின;
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன;
தொழுகின்ற, கை எலாம், காலின் தோன்றலை. 
 
மோதிரம் பெற்ற பரதனது பெரு மகிழ்ச்சி
 
மோதிரம் வாங்கி, தன் முகத்தின்மேல் அணைத்து,
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ? எனா
ஓதினர் நாண் உற, ஓங்கினான்-தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான். 
 
ஆதி வெந் துயர் அலால், அருந்தல் இன்மையால்,
ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்,
ஏதிலன் ஒருவன்கொல் என்னல் ஆயது;
மாதிரம் வளர்ந்தன, வயிரத் தோள்களே. 
 
அழும்; நகும்; அனுமனை ஆழிக் கைகளால்
தொழும்; எழும்; துள்ளும், வெங் களி துளக்கலால்;
விழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்
குழுவொடும் குனிக்கும்; தன் தடக் கை கொட்டுமால்.
 
ஆடுமின், ஆடுமின்! என்னும்; ஐயன்பால்
ஓடுமின், ஓடுமின்! என்னும்; ஓங்கு இசை
பாடுமின், பாடுமின்! என்னும்; பாவிகாள்!
சூடுமின், சூடுமின், தூதன் தாள்! எனும். 
 
வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்
துஞ்சுவர், இனி எனத் தோளைக் கொட்டுமால்;
குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற,
அஞ்சனக் குன்றின் நின்று ஆடும், பாடுமால்.
 
வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்;
தாதியர்தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;-
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! 
 
பரதன் அனுமனைப் பாராட்டி, நீ யார்? எனல்
 
அத் திறத்து ஆண்தகை, அனுமன் தன்னை, நீ
எத் திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!
முத் திறத்தவருளே ஒருவன்; மூர்த்தி வேறு
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் என்றான்.
 
மறையவர் வடிவு கொண்டு, அணுக வந்தனை;
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென்;
"துறை எனக்கு யாது எனச் சொல்லு, சொல்!" என்றான்;
அறை கழல் அனுமனும் அறியக் கூறுவான்: 
 
அனுமன் தன் வரலாற்றை உரைத்து, பெரு வடிவையும் காட்டுதல்
 
காற்றினுக்கு அரசன் பால் கவிக் குலத்தினுள்
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து, நும் முனாற்கு
ஏற்றிலா அடித் தொழில் ஏவலாளனேன்;
மாற்றினென் உரு, ஒரு குரங்கு, மன்ன! யான். 
 
அடித் தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்
கடித் தடந் தாமரைக் கண்ணின் நோக்கு எனா,
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்,
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான். 
 
வடிவு கண்டோர் அஞ்ச, பெரு வடிவைச் சுருக்குமாறு பரதன் வேண்டுதல்
 
வெஞ் சிலை இருவரும், விரிஞ்சன் மைந்தனும்,
எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார்;
துஞ்சிலது ஆயினும், சேனை துண்ணென
அஞ்சினது, அஞ்சனை சிறுவன் ஆக்கையால்.
 
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின், உலப்பு இல் யாக்கையை
வாங்குதி, விரைந்து என, மன்னன் வேண்டினான். 

அனுமனுக்குப் பரதன் பரிசு கொடுத்தல்

 

சுருக்கிய உருவனாய்த் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன்,
பொருக்கென நிதியமும், புனை பொன் பூண்களின்
வருக்கமும், வரம்பு இல நனி வழங்கினான். 

 

கோவொடு தூசு, நல் குல மணிக் குழாம்,
மாவொடு கரித் திரள், வாவு தேர் இனம்,
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்,
எவரும் சிலை வலான், யாவும் நல்கினான். 

 

அனுமன் விமானத்திலுள்ளாரைப் பரதனுக்குச் சுட்டிக் காட்டுதல்

 

அன்னது ஓர் அளவையின், விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினார் என,
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்,
மன்னவர்க்கு அரசனும், வந்து தோன்றினார். 

 

அண்ணலே! காண்டியால்-அலர்ந்த தாமரைக்
கண்ணனும், வாரைக் கடலும், கற்புடைப்
பெண் அருங் கலமும், நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும், வருகின்றார்களை. 

 

ஏழ்-இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ் புறம் கிடப்பது, படி இன்றாயது, ஓர்
சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்
ஊழியான் என்று கொண்டு, உணர்த்தும் காலையே. 

 

இராமனைக் கண்டவர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தல்

 

பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மின் ஒளிர் மேகம்போல் வீரன் தோன்றலும்,
அந் நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு, இராவணன்
தென் நகர்க்கு அப் புறத்து அளவும் சென்றதால். 

 

இராமனைப் பரதன் காணுதல்

 

ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தியார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான்.

 

ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன், தொழுத கையினன்,
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன்,
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் தோன்றினான். 

 

இராமனும் தம்பியைக் கண்டு மகிழ்தல்

 

தோன்றிய பரதனைத் தொழுது, தொல் அறச்
சான்று என நின்றவன், இனைய தம்பியை,
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை,
ஈன்றவள் பகைஞனை, காண்டி ஈண்டு எனா, 

 

காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால்,
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தியார்
கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். 

 

புட்பக விமானம் நிலத்தைச் சார்தல்

 

ஆனது ஓர் அளவையின், அமரர்கோனொடும்
வானவர் திரு நகர் வருவது ஆம் என,
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். 

 

இராமனது வருகையால் தாயர் முதலியோர் உற்ற நிலை

 

தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான். 

 

எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்;
ஒளி வரப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். 

 

ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும், நகரமும், கலந்து வாழும்
மா இயல் ஒண்கணாரும், மைந்தரும், வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர், உணர்வு பெற்றார். 

 

சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரி வளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலின மா விலாழியும், எண் இல் யானை
வண்ண வார் மதமும், நீரும், மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே. 

 

அடியில் வீழ்ந்து வணங்கிய பரதனை இராமன் அன்புறத் தழுவுதல்

 

சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி,
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான். 

 

தழுவினன் நின்றகாலை, தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் செவ்வி
வழுவுற, பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து, கன்று காண் கறவை அன்னான். 

 

இலக்குவன் பரதனது பாதங்களில் விழுந்து வணங்குதல்

 

அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன்-படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான். 

 

சத்துருக்கனையும் இராமன் தழுவி, பரத சத்துருக்கனர்களைத் துணைவர்களுக்கு அறிமுகப்படுத்தல்

 

பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங் கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத் தம்பிமாருக்கு,
இன் உயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான்; இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார்.