வேலேற்ற படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

வேலேற்ற படலம்

(இராவணன் விபீஷணன் மார்பிலே தான் வரத்தினால் பெற்ற வேலை ஏறிய அதனை லக்ஷ்மணன் தான் முன் வந்து தனது மார்பிலே தாங்கி விழுகிறான். அவனை பழைய நிலைக்குக் கொண்டு வர, விபீஷணன் சொற்படி மீண்டும் அனுமார் சஞ்சீவினி மலையைக் கொண்டு வந்து லக்ஷ்மணனின் உயிரைக் காக்கிறார். அது கேள்விப்பட்ட ஸ்ரீ இராமர் நெகிழ்ந்து அனுமனைப் பாராட்டுகிறார். இவையே இப்படலத்தில் காணக் கிடைக்கும் செய்திகள் ஆகும்)
ஸ்ரீ இராமர் இராவணனின் மூல பலமான அப்பெரும் சேனையை தனது பாணத்தால் அழித்து ஒழித்து விட்டு லக்ஷ்மணன் இருக்கும் திசை நோக்கி விரைந்தார். ஆனால், அதற்குள் இராவணன் தனது திவ்விய ரதத்தில் வந்து யுத்தகளத்தில் பெரும் போரை லக்ஷ்மணனுடன் நிகழ்த்திக் கொண்டு இருந்தான்.
போர்களத்துக்கு வந்து சேர்ந்த இராவணன் லக்ஷ்மணனுடன் கடும் யுத்தம் செய்ய, மறுபக்கம் இராவணனை பின் தொடர்ந்து வந்த அரக்கர் சேனையை வானரப் படைகள் எதிர்கொண்டு தாக்கின. அதனால், யுத்தகளம் முழுக்க இரத்தம் வெள்ளமாக, நெருப்பிலே உருக்கின செம்பு போல கடலை நோக்கிப் பாய்ந்து சென்றது.
லக்ஷ்மணன் தொடர்ந்து தனது பாணங்களை அரக்கர் சேனையின் மீது பிரயோகித்துக் கொண்டு இருந்தான். அந்த அம்புகளால் யானைகள் தமது குடல் வெளிவர விழுந்து இறந்து இரத்தக் கடலிலே மிதந்தன; தேர்கள் சிதைந்தன; குதிரைகள் கனைப்பொலி செய்து மாண்டன! தனது பெருஞ்சேனை அழிந்து குறைந்து வருவதை இராவணன் கண்டான். கண்டதும்," இந்த லக்ஷ்மணன் இன்னும் சற்று நேரத்திற்குள் எனது படைகளை எல்லாம் அழித்து விடுவான். ஆகையால், இப்போரிலே ஒரு கணத்திலே நான் லக்ஷ்மணன் உட்பட இந்தப் பகைவர்களை எல்லாம் கொன்று, வெற்றி பெற்றுத் திரும்புவேன்!" என்று கோபத்துடன் சபதம் செய்தான்.
மறுகணம் இலங்கேஸ்வரன் கணக்கற்ற சுடுசரங்களை முறை முறையாக விரைந்து செலுத்தினான். இராவணனுடைய கொடிய அம்புகளால் வானர சேனைக் கடல் நிலை கெட்டது. அஞ்சி புறமுதுகு காட்டி ஓடியது. அவ்வாறு ஓடிய வானரர்களைக் கண்ட லக்ஷ்மணன் அவர்களை நோக்கி," வானரர்களே! அஞ்சாதீர்கள்! அஞ்சாதீர்கள்!" என்று கருணை செய்து தடுத்து, போருக்கு மீண்டும் அவர்களைத் தாயாராக்கினான். பின்பு, கொடுங்கோபத்துடன் அனுமனின் தோளில் ஏறிக் கொண்டு, இராவணன் முன்னே சென்று அவனை எதிர்த்தான்.
இளைய பெருமாளுக்கும் இராவணனுக்கும் போர்த் தொடங்கிற்று! இராவணன் கொடிய நெருப்பு உமிழ்கின்ற நூறு கோடிக்கும் மேலான அம்புகளை லக்ஷ்மணன் மேல் செலுத்தினான். அதே கணத்தில் லக்ஷ்மணன காற்றுக்கு முன் ஓடின பஞ்சு போலத் திசைகள் தோறும் அரக்கனின் அம்புகள் சிதறி ஓடும் படியாக தனது அம்புகளைச் செலுத்தி, அவற்றை விளக்கினான். அதனால் கொடிய கோபம் கொண்ட இராவணன், " இந்த லக்ஷ்மணனை சாதாரண அம்புகள் கொண்டு வீழ்த்த முடியாது. திவ்ய பாணம் கொண்டே வீழ்த்த முடியும். அந்த பாணமும் இவனை மாயையில் ஆட்படுத்தும் படி இருக்க வேண்டும். ஆக இவனை மாயையில் ஆழ்த்தியே கொல்ல வேண்டும் " என்ற முடிவுக்கு வந்தான். அக்கணமே லக்ஷ்மணன் மீது மோகனாஸ்த்திரத்தை பிரயோகித்தான்.
மோகனாஸ்த்திரம் லக்ஷ்மணனை நோக்கி வருவதைக் கண்டான் விபீஷணன். உடனே லக்ஷ்மணனிடம் விரைந்து சென்று," லக்ஷ்மணா! இராவணன் இப்போது ஏவி இருக்கும் அஸ்த்திரம் மோகனாஸ்த்திரம் இதனை திருமாலின் படையை ஏவி அழிப்பாயாக" என்று, அவனுக்குச் சொன்னான்.
விபீஷணனின் மேற்கண்ட வார்த்தையின் படியே திருமாலின் அஸ்த்திரத்தை ஏவி இராவணனின் மோகனாஸ்த்திரத்தை லக்ஷ்மணன் அழித்தான். அதனால், இராவணன் மிகவும் கோபம் கொண்டான். உடனே தனது அஸ்த்திரத்தை, லக்ஷ்மணனிடம் காட்டிக் கொடுத்த விபீஷணனை கொல்லத் தீர்மானித்தான். அக்கணமே, தனது கைகளில் இருந்த வேலை விபீஷணன் மீது குறி தவறாமல் வீசினான். அந்த வேல், காற்றை கிழித்துக் கொண்டு பெரும் நெருப்பை கக்கிக் கொண்டு விபீஷணன் மீதுப் பாய்ந்தது. அதனால் விபீஷணன் மிகவும் பயந்தான். லக்ஷ்மணனிடம்," நான் இதில் இருந்து தப்பிக்க வழி இல்லை லக்ஷ்மணா! காரணம், இது பரமசிவனால் இராவணனுக்கு அளிக்கப் பட்ட எண்ணற்ற ஆயுதங்களுள் ஒன்று. அதனால், இது நிச்சயம் உயிர் பழி கொள்ளாமல் போகாது" என்றான்.
அப்போது அது கண்ட லக்ஷ்மணன், விபீஷணனிடம்," விபீஷணா! நீ கவலை கொள்ளாதே இந்த அஸ்த்திரத்தை தடுக்கும் மார்க்கத்தை நான் அறிவேன்" என்றான். உடனே இன்னொரு திவ்விய அஸ்த்திரத்தை அந்த வேலின் மீது எய்தான். ஆனால், இராவணன் எய்த அந்த வேல் மிகவும் சக்தி வாய்ந்து இருந்ததால், அது லக்ஷ்மணனின் அந்த பாணத்தை வானிலேயே முறித்து எறிந்து இன்னும் விரைவாக விபீஷணனை நோக்கி விரைந்து வந்தது.
அப்போது வானில் நின்ற தேவர்கள்," இனி விபீஷணன் இந்தக் கொடிய வேலில் இருந்துத் தப்பிப் பிழைப்பானோ" என்று கூறிக் கொண்டனர். அப்போது லக்ஷ்மணன் விபீஷணனிடம்," விபீஷணா! நீ எனது அண்ணன் ஸ்ரீ இராமபிரானிடம் அடைக்கலமாக வந்து சேர்ந்தவன். உனக்கு ஒரு ஆபத்து என்றால், அதனை நான் எனது உயிரைக் கொண்டு காப்பேன். அதனால், நீ கவலை கொள்ளாதே" என்றான்.
அவ்வாறு விபீஷணனிடம் மேற்கண்ட வார்த்தையை சொன்னவுடன் லக்ஷ்மணன் விரைந்து வந்து இராவணன் செலுத்திய அந்த வேலைத் தனது மார்ப்பில் ஏற்றுக் கொள்ள முன் வந்தான். அது கண்ட ஹனுமான்," இளையபெருமாளுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது" என்று கூறி, இளையபெருமாளை தள்ளிவிட்டுத் தான் அந்த வேலை வாங்க விரைவாக முன் வந்தான். அதனை அங்கதன் கண்டான், உடனே " எனது உயிரினும் மேலான மாருதிக்கு எதுவும் ஆகி விடக் கூடாது. அவன் சஞ்சீவி மலையையே கொண்டு வந்து வானர சேனைகளுக்கு உயிர் கொடுத்தவன் அவன் .அதனால், இந்த வேல் ஹனுமானைத் தாக்குவதற்குள் நான் சென்று இதனை எனது மார்பிலே வாங்கிக் கொள்வேன்" என்று கூறி மிகவும் விரைந்து வந்து ஹனுமானைத் தள்ளி விட்டு இராவணனின் கூறி வேலின் முன்பாக தனது மார்பைக் காட்டிக் கொண்டு நின்றான்.
அக்கணம் இளையபெருமாள் லக்ஷ்மணன்," எனது அண்ணன், விபீஷணனை காப்பதாக வாக்கு அளித்தார். அதனை நான் தான் நிறைவேற்ற வேண்டும். ஆக, வாலியின் மகன் அங்கதனுக்கு எதுவும் நேர்ந்து விடக் கூடாது. அவன் கிஷ்கிந்தையின் நாளைய அரசன். தவிர வாலி இறந்த பிறகு அங்கதன் தான், இப்போதைக்கு வாலியின் மனைவிக்கு ஆறுதல் அளிப்பவன். அதனால், அவன் எனது அண்ணனின் வாக்கை காக்க உயிர் விடுதல் தர்மம் இல்லை" என்று சிந்தித்தான். அதற்குள் இராவணனின் கூர்பட்டக் கொடும் வேல் அங்கதனின் மார்பை நெருங்கியது. அக்கணமே, பாய்ந்து வந்த லக்ஷ்மணன் அந்த வேலை தனது மார்பில் வாங்கிக் கொண்டான். அதனால் லக்ஷ்மணன் இரத்த வெள்ளத்தில் விழுந்தான். மயங்கினான். வெகுவாக சில கணங்களில் அவனது உயிர் நாடி மெல்ல அடங்கத் தொடங்கியது.
அதனைக் கண்ட இராவணன் வந்த வேலை முடிந்து விட்டது எனக் கூறி மிகவும் சந்தோஷம் அடைந்தான். பிறகு போர்களத்தை விட்டுத் தனது இரதத்தில் செல்லத் தொடங்கினான். அவன் அவ்வாறு புறப்பட்டதைக் கண்ட விபீஷணன்," அடேய்! நில்லடா ! இளையபெருமாளைக் கொன்று விட்டு நீ எங்கு தப்பிச் செல்ல நினைத்தாய். இதோ எனது தண்டத்திற்கு நீ பதில் சொல்" என்று கூறிய படி இராவணன் அருகில் ஓடி வந்து தனது கைகளில் இருந்த தண்டாயுதத்தால் இராவணனின் தேரை அடித்து உடைத்தான். அத்துடன் இராவணனின் தேர்பாகனையும், குதிரைகளையும் கொன்றான். அதனால் இராவணன் அது கண்டு மிகுந்த கோபம் கொள்ள, அக்கணமே விபீஷணனை ஓங்கி ஒரு அறை அறைந்தான். அந்த ஒரு அடியிலேயே விபீஷணன் படு காயம் அடைந்தான்.
மறுபக்கம் தேர் அழிந்ததும் இராவணன் கணத்தில் வானில் சென்று, சீற்றத்துடன் விபீஷணனின் உடம்பிலே புகும் படி சீறிப் பாய்கின்ற பத்து கணைகளைத் தொடுத்தான். மற்றும் அனுமன் மேல் ஆயிரம் அம்புகளை எய்தான். பின்பு," போர் முடிந்தது!" என்று சொல்லிவிட்டு, இலங்கையை நோக்கிச் சென்றான். விபீஷணன் உடனே இராவணனைத் தொடர்ந்து சென்று," அடைக்கலமாக வந்த என் பொருட்டு உனது வேலை ஏற்று இளையபெருமாள் வாடிப் போய் இருக்கிறான். இப்படியான பின்பு, வஞ்சக எண்ணத்தினால் நீ எங்கேயடா ஓடிப் போவது? உன்னோடு போரிடுவேன். போரிட்டு உன்னைக் கொல்வேன். பின்பு, நானும் உயிர் மடிவேன்!" என்று கூறி வெகுண்டான்.
விபீஷணன் அப்படிக் கூறி வெகுண்ட போது இராவணன் ' வெற்றியோ எனது வசமாகி விட்டது. விபீஷணனாகிய பசுவைக் கொன்று இனிப் பயன் இல்லை!" என்று எண்ணி, அவனை ஏறெடுத்துப் பார்க்காமலும், எதிர்த்து நிற்காமலும் சினத்தை விட்டவனாகி விரைந்து சென்று, தனது நகரினுள்ளே புகுந்தான்.
இராவணன் சென்று விட்டதும், விபீஷணன் திரும்பிக் கதறிக் கொண்டே வந்து லக்ஷ்மணனின் பாதத்தில் விழுந்து பலவாறு புலம்பி அழுதுத் துடித்தான். பிறகு," இளையபெருமாளே இறந்த பிறகு எனக்கு மட்டும் இந்தப் பூமியில் என்ன வேலை? நானும் இப்போதே இறக்கிறேன்" என்று கூறி தனது உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தான்.
அக்கணம் விபீஷணன் சாகப் போவதைக் கண்ட ஜாம்பவான் விபீஷணனை தடுத்து," என்ன காரியம் செய்யத் துணிந்தாய் விபீஷணா? இளையபெருமாளான லக்ஷ்மணனின் நாடி முழுவதும் இன்னும் அடங்கவில்லை, அதவாது லக்ஷ்மணன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான். அது மட்டும் அல்ல, உலகம் முழுவதையும் கண நேரத்தில் என்னிலும் வேகமாக சுற்றி வரும் இயல்பு கொண்ட மாருதி இருக்கும் போது நீ ஏன் லக்ஷ்மணன் இறந்து விட்டதாக நினைத்து உயிர் விட வேண்டும். அனுமனால் மீண்டும் சஞ்சீவினி மலையைக் கொண்டு வந்து லக்ஷ்மணனின் உயிரைக் காக்க முடியும். அதனால், இளையபெருமாள் மீண்டும் உயிர் பெற்றுத் திரும்புவார், நீயும் கூட அதனைக் காண்பாய்" என்றான்.
பிறகு ஜாம்பவான் அனுமனின் பக்கம் திரும்பி, மெல்ல அவனது உடலை துளைத்து இருந்த பாணங்களை எல்லாம் எடுத்துப் போட்டு ," அனுமானே! இளையபெருமாள் ஒரு வேளை இறந்து போனால், ஸ்ரீ இராமர் உயிருடன் இருப்பார் என்று நினைக்கின்றாயா?அப்படி இருக்கப், பிறகு ஏன் பார்த்துக் கொண்டு நிற்கிறாய்? உடனே போய் மருந்து கொண்டு வா!" என்றான்.
அக்கணமே மாருதி,” ஜாம்பவான் சொன்னதே சரி” எனக் கூறி சஞ்சீவி மலையைக் கொண்டு வரப் புறப்பட்டான். எஞ்சி இருந்த வானர வீரர்களோ ஜாம்பவானின் அறிவுரைப் படி இறந்து போன அரக்கர்களின் உடலை எல்லாம் கடலின் ஆழத்தை போய்த் தொடும் படியாக பாறைகளை அந்த உடல்களின் மீது கட்டி வீசினார்கள்.
மறுபக்கம் சஞ்சீவி மலையைக் கொண்டு வரப் புறப்பட்ட அனுமான் கண நேரத்தில் அந்த மலையுடன் இலங்கையின் யுத்தகளத்திற்க்குத் திரும்பினான். அப்போது , அந்த சஞ்சீவினி மலையின் மீது வாயு பகவான் தனது காற்றை பரப்பி அந்த மூலிகையின் சாரத்தை எல்லாம் காற்றின் மூலம் கொண்டு வந்து லக்ஷ்மணன் மட்டும் அல்லாது யுத்த களத்தில் இறந்து கிடந்த வானர வீர்களும் அந்த மூலிகைக் காற்றை சுவாசிக்கும் படிச் செய்தான். அதனால், மீண்டும் இளையபெருமாள் முன்போலவே உயிர்த் தெழுந்தார். அப்படியே வானர வீரர்களும் சஞ்சீவினி மூலிகைக் காற்று பட்டதால் உயிர்த் எழுந்தார்கள். அவர்களும், லக்ஷ்மணனைப் போல தங்கள் காயங்களும், அலுப்பும் நீங்க புத்துணர்வு பெற்று பழைய நிலைக்குத் திரும்பினார்கள். அதனால் அனைவரும் மகிழ்ந்தனர்.
மறுபுறம், யுத்த களத்தில் இராவணனும், அவனைத் தொடர்ந்து வந்த அரக்க வீரர்களும் லக்ஷ்மணன் இறந்து விட்டதாகக் கருதி சென்று விட்டதாலும், யுத்த களத்தில் யாரும் இல்லாத காரணத்தாலும் வானர வீரர்கள் அனைவரும்," அறம் வெல்லும்! பாவம் தோற்கும்!" என்று கூறி ஸ்ரீ இராமபிரானிடம் திரும்பிச் சென்று அவரை அனைவரும் வணங்கி நடந்த விவரங்கள் அனைத்தையும் அவரிடம் உள்ளது, உள்ளபடியாகக் கூறினார்கள். அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீ இராமன், தனது வாக்கை காப்பாற்ற தனது உயிரையே கொடுக்கத் துணிந்த லக்ஷ்மணனை பெருமையுடன் பார்த்து அவனை கட்டித் தழுவிக் கொண்டு போற்றிப் புகழ்ந்து ஆசிர்வதித்தார்.
பின்னர் அன்றைய யுத்தம் முடிந்ததால் தான் கொண்டு இருந்த போர்க் கோலத்தை களைந்து விட்டு அத்துடன் தனது கோதண்டத்தையும் நம்பிக்கைக் குரிய அனுமனிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொன்னார் ஸ்ரீ இராமர். அதன் பிறகு மேகம் நிறைந்த குன்றம் ஒன்றுக்குச் சென்று தங்கித் தமது உடல் தளர்ச்சி தீர இளைப்பாறினார்!