மூலபல வதைப் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

மூலபல வதைப் படலம்

(இராவணனுக்கும் அவன் குலத்தினருக்கும் மூல பலமாக இருந்த படையை இராமபிரான் ஒருவனே தனித்து நின்று அழித்ததை விளக்குகின்ற செய்தியைச் சொல்லும் படலம் இது. அதனால் தான் இதனை மூலபல வதைப் படலம் என்கிறோம்)
இராமலக்ஷ்மணரையும் வானர சேனைகளையும் அழிப்பதற்கு கோபத்துடன் வீரவாதம் பேசிவிட்டுப் போருக்குப் புறப்பட்டுச் சென்றனர் ஏழுலக சேனாதிபதிகள். அப்போது இராவணனும் வானர சேனையைத் தாக்கி அழிக்கும் எண்ணத்தில் தனது திவ்வியத் தேரில் புறப்பட்டுச் சென்றான்.
இது இப்படி இருக்க பல லோகங்களில் இருந்தும் தங்கள் படைகளுடன் புறப்பட்டுச் சென்ற சேனாபதிகள் இலங்கையின் யுத்த களத்தை அடைந்தார்கள். அதற்கு உள்ளாக இராவணன் தன்னுடைய மூலப்படையை யுத்த களத்திற்கு அனுப்பி இருந்தான். அந்த மூலப்படை தான் இராவணனிடம் இருந்த கடைசி படை. இனிமேல் அவனிடம் போர் புரிய அரக்கவீர்களே இல்லை. அவ்வாறு இராவணனால் அனுப்பப் பட்ட மூலப்படை போருக்கு விரைந்தது.
போருக்கு விரைந்த இராவணனின் மூலப் படை பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்டு இருந்தது. அந்தப் படை எண்ணிக்கையிலும் பெரிதாகக் காணப்பட, அந்தப் படை வீரர்களில் பலர் பூமியில் கால் பதிக்க இடம் இல்லாமல் எங்கும் அரக்க சேனை பரவி இருந்ததால், ஆகாய மார்க்கமாக விரைந்து சென்றார்கள். அதனால், பூமியை மூடிய அரக்க போர்வைகள் போலக் காணப்பட்டார்கள். அவர்கள் அவ்வாறு வானில் சென்றதால் சூரியன் மறைந்து காணப்பட்டான்.
அத்துடன் அந்த மூலப்படையில் உள்ள அந்த அரக்க வீரர்கள், தருமத்தை சோறாக உண்டு விட்டு, கருணையை நீராகக் குடித்து விட்டு, அதருமத்தை மேற்கொண்டு, கொடிய பாவத்தை மனைவியாகக் கட்டிக் கொள்கின்ற மாப்பிள்ளைகள் ஆவார்கள். அத்துடன் அந்த அரக்கர்கள் மேகம் போன்ற கரிய இருண்ட நெஞ்சத்தை உடையவர்கள்; நெருப்புக்கு நெருப்பு போன்ற கோபத்தைக் கொண்டவர்கள்; செம்பட்ட மேகத்தைப் பெற்றவர்கள்; கொலைத் தொழிலில் சிறந்து யமனாலும் கொண்டாடக் கூடியவர்கள். பெரிய கடல் நீரைக் கையினால் இறைத்து விட்டு, வேண்டிய மீனுடனே மகரங்களையும் தமது வாயில் போட்டு விழுங்குபவர்கள்; மேகத்தால் உண்டாக்கப் படுகின்ற பேரிடிகளைக் காதிலே அணிகலமாக அணிந்து இருப்பவர்கள்; வேளைக்கு உண்பதற்குத் தகுந்த இறைச்சி கிடைக்காவிட்டால், திசை யானைகளை வாயில் போட்டு உண்ணுவதற்குத் தகுந்த பசியை உடையவர்கள்; தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால், மேகத்தைப் பிழிந்து நீருண்டாக்கித் தாகத்தை தீர்த்துக் கொள்பவர்கள்; மழைப் பாம்புகளினால் கட்டிய சிலம்பை அணிந்தவர்கள்; வானத்தின் மேல் எல்லையில் பறந்து போகின்ற கருடனும் கொடிய காற்றும் வெட்கும் படியான வேகத்தை உடையவர்கள்; யானையைக் கொண்டு வந்து கட்டியது போன்ற நடையைக் கொண்டவர்கள்; மந்திர மலையயே பொடியாக்கும் கூறிய வேலைக் கொண்டவர்கள்; பிறைச் சந்திரனால் தமது உடம்பைச் சொறிந்து தினவு தீரப் பெற்றவர்கள்; மலைகளில் தண்டாயுதத்தை அறைந்து, தமது வலிமையைப் பெருக்கிக் கொண்டவர்கள்; இடி போன்ற பேர் ஒலியை தங்கள் வாயினால் எழுப்பக் கூடியவர்கள்; தமது கையிலே அவர்கள் சூலத்தை ஏந்தினாலும், மழுவை எறிந்தாலும்; வாளைப் பிடித்தாலும்; வில்லை ஏந்தினாலும்; வேலைப் பிடித்தாலும்; தண்டாயுததத்தைக் கொண்டாலும்; சக்கராயுதத்தை தாங்கினாலும், யமன் திருமால் சிவபெருமான் குமரக் கடவுள் ஆகிய இவர்களையும் வென்று விடுவார்கள்; ஒருலகத்தை ஒருவரே வெல்வதற்குப் போதுமான வலிமையைப் பெற்றவர்கள்; ஏழு உலகங்களையும் வெல்வதற்கு இருவரே போதுமானவர்கள். அவர்கள் உலவுவாரானால், கூடவே நெடுநிலமும் சேர்ந்து திரியும்; நேரே வருவாரானால், அவர்களுடைய நடையின் வேகத்தால் கூடவே கடல்களும் தொடர்ந்து பின் வரும்!
இராவணனுடைய சதுரங்கச் சேனையிலே, பிரமனால் படைக்கப் பட்ட அண்டத்திற்க்குள் விரிந்த மேகங்கள் எத்தனை இருக்கின்றனவோ, அத்தனை யானைகள் இருந்தன; அந்தச் சேனையில் உள்ள தேர்களும் மிகப் பல. எத்தனைத் தேர்கள் இருந்தனவோ, அத்தனைக் குதிரைகள் இருந்தன; குதிரைகள் எத்தனை இருந்தனவோ; அத்தனை வீரர்கள் இருந்தார்கள்!
போருக்கு எழுந்து சென்ற இராவணனுடைய சேனைகளின் வேகத்தால், பவளத்தின் நிறத்தை ஒத்த பெரும் புழுதிப் படலம் வானில் எழுந்தது. அவ்வாறு போன புழுதிப் படலம் வான்முகட்டை மறைத்ததனால். குற்றமற்ற மேகமும் தனது கருநிறத்தை நீங்கிச் செந்நிறத்தைப் பெற்றது. மற்றும் யானைகளின் மதநீர் பெருகி வெள்ளமாக ஓடி உப்புக் கடலிலே கலக்க, அக்கடல் தனது உப்புச் சுவை நீங்கியது!
உலகங்களை எல்லாம் உண்டு பின்பு உமிழ்ந்த திருமாலின் வாயைப் போன்று விளங்குகின்ற இலங்கை நகரின் பெரிய வாயிலின் வழியாக, போருக்குப் புறப்பட்ட மூலச்சேனைகள் வெளிவந்தன. பாற் கடலில் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்ட போது அதன் வேகத்தைத் தாங்க முடியாமல் நிலைகெட்டு ஓடிய தேவர்களைப் போல, மூலச் சேனைகளைக் கண்டு வானரர்கள் அஞ்சி நிலை கெட்டு ஓடி வடகரையில் தங்கினார்கள். அப்போது அண்டம் வெடித்திடும் படி மேன்மேலும் விளங்கித் தோன்றியது ஒரு பெரும் ஒலி. அது அரக்க வீரர்கள் ஆரவாரித்த ஓசையோ? தேர்ச் சக்கரங்களின் அதிர்ப்பு ஒலியோ? யானைகளின் வீறிடும் முழக்கமோ? குதிரைகளின் கனைப்பொலியோ? எல்லா ஒலிகளையும் அடக்குகின்ற பலவகையான போர் வாத்தியங்களின் ஒலியோ? மேலும் அந்தச் சேனை மதயானையாகிய முதலை முழங்கப் பெற்றது; அலையாகிய குதிரையை உடையது; முரசங்களின் ஓசையாகிய பேரோசயைக் கொண்டது; அஞ்சா நெஞ்சம் கொண்ட அரக்கர்களின் பெரும் கோபத்தால் விழுங்கும் சுறா மீனைப் போன்றது! மற்றும் அந்தச் சேனையில் இருந்த பல வீரர்கள் வான் வழியே சென்றார்கள். அதனால் இலங்கை குழை சேறுபட்டு அழியாது தப்பித்துக் கொண்டது!
மறுபுறம் விண்ணிலே போர் காண வந்து நின்று இருந்த தேவர்கள், அரக்கர் பெரும் சேனையைக் கண்டதும்," உலகத்தில் நம்மை இல்லாத உருவங்கள் எல்லாம் அரக்கர்களின் வடிவமாகி, எண்ணிக்கைக்கு அடங்காத பல ஆயுதங்களை ஏந்திப் போருக்கு எழுந்தனவோ? இல்லை, ஏழு கடல்களும் சென்று விதியினால் அளவற்ற பல உருவங்களைப் படைத்தனவோ?" என்று சந்தேகித்துச் சொன்னார்கள்.
பிறகு தேவர்கள் அஞ்சி சிவபெருமானிடம் சென்று அவரை வணங்கியபடி ," ஐயனே! இலங்கையில் புதிதாக வந்துள்ள அரக்கர் படை எங்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. தேவாதி தேவனே! அந்த அரக்கர்கள் ஒவ்வொருவரையும் கொல்வதற்கே ஆயிரம் இராமன் தேவைப் படும் போல இருக்கிறதே! நாங்கள் என்ன செய்ய? எங்கள் குறை தீரும் என்றல்லவா நாங்கள் இதுவரையில் நம்பி இருந்தோம். ஆனால், இலங்கைக்கு வந்து இருக்கும் இந்தக் கொடிய அரக்கர்கள் கொஞ்சம் விட்டால் எங்களையே உண்டு ஏப்பம் விட்டு விடுவார்கள் போல இருக்கிறதே!" என்று சொல்லிப் புலம்பித் தவித்தார்கள்.
அது கேட்ட சிவபெருமான் மெல்ல புன்னகைத்தபடியே ," தேவர்களே! நீங்கள் இப்படி அஞ்சலாமா? ஸ்ரீ இராமரின் திறமையை நீங்கள் இதுவரையில் கண்டு உள்ளீர்கள் அல்லவா? அப்படிக் கண்டும் கூட இவ்வாறு நீங்கள் பேசுவது சரியோ? ஒரு சத்தியத்தை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், இந்த அரக்கர்கள் இங்கு தானாக வந்து கூடவில்லை. இவர்களது விதி தான் இவர்களை, இவர்களின் மரணத்தை நோக்கியபடி அழைத்து வந்து உள்ளது. அதனால், இவர்கள் அனைவரும் ஸ்ரீ இராமபிரானின் அம்புகளால் மரணிக்கப் போவது உறுதி" என்று கூறித் தேற்றினார்.
இலங்கையில் வந்து இறங்கிய வலிய அரக்கப் படைகளின் பெருக்கத்தைக் கண்ட தேவர்களின் நிலையே இப்படி என்றால் வானர வீர்களின் நிலை கேட்கத் தான் வேண்டுமோ? அவ்வாறு வானில் பறந்து வந்த இராவணனின் மூலப்படை ஒரு பக்கம் தங்களைத் தாக்க வர. மறுபுறம் இலங்கேஸ்வரனின் ஆணையை ஏற்று ஈரேழு பதினான்கு உலகங்களிலும் இருந்து கூடிய அந்தப் பெரும் அரக்க சேனை இன்னொரு புறத்தில் இருந்து தங்களை தாக்கத் துடங்க, அனைத்து வானர வீரர்களும் தங்கள் தளபதிகளுடன் ஓட்டம் பிடித்தனர்.
அவ்வாறு ஓட்டம் பிடித்த வானர வீரர்களில் சிலர்," கடலைக் கடப்பதற்கு நான் கட்டிய பெரிய அணையே நமக்கு உயிரழிவை உண்டாக்கிவிட்டது .அதனால் நம்மை அந்த அரக்கர்கள் பின் தொடர்ந்து வராதபடி, அதனை உடைத்து விட்டுப் போவோம்!" என்றார்கள். மற்றும் சில வானரர்கள்," வானிலும் நம்மை அந்த அரக்கர்கள் தாக்குவார்கள்" என்றார்கள். இன்னும் சிலரோ, " பிரமனால் படைக்கப்பட்ட திசைகள் தோறும் அரக்கர்கள் நிரம்பியுல்லார்கள்!" என்று அச்சத்துடன் சொன்னார்கள்.
அவ்வாறு ஓடிய வானரர்களில் ஓடாத வீரர்கள் என்று பார்த்தால் அவர்கள் சுக்கிரீவனும், அனுமனும், அங்கதனும் ஆகிய மூன்று பெயர்கள் மட்டுமே. அவ்வாறு வானரர்கள் புழுதி படிய ஓட்டம் பிடிப்பதை கண்டார் ஸ்ரீ இராமர். மேலும், அவரும் இராவணனால் ஏவப் பட்ட அந்தப் பெரும் சேனைக் கண்டார். அக்கணமே விபீஷணனிடம்," விபீஷணா! இந்தப் பெரும் சேனை இதுவரையில் எங்கு இருந்தது? இந்தச் சேனையைப் பற்றி எனக்குச் சொல்ல முடியுமா? "என்று கேட்டார்.
அதற்கு விபீஷணன்," வீரரே! இராவணனுடைய கொடிய தூதுவர்கள் எல்லாத் திசைகளிலும் ஏழு பெரிய தீவுகளிலும் சென்று அழைத்திட, அரக்கர்களின் இந்தப் பெரிய சேனை வந்து உள்ளது. பாதாள லோகத்தில் இருந்தும் சேனைகள் வந்து இருக்கிறது. தவிர அந்தத் திசையில் ஆவேசத்துடன் வந்து கொண்டு இருப்பது தான், இராவணனின் மூல பல சேனையாகும். இந்த சேனையையும் தாங்கள் வெற்றிகரமாக அழித்து விட்டீர்கள் என்றால் இதன் பிறகு இராவணனிடம் தங்களை எதிர்க்க வேறு ஒரு சேனை இல்லை. இப்படைகள் அனைத்தும் தாங்கள் செய்த ஊழ்வினை காரணமாகவே மரணத்தை நோக்கி ஓடிவருவது போல எனக்குப் படுகிறது" என்று கூறி முடித்தான்.
விபீஷணன் கூறியதைக் கேட்ட ஸ்ரீ இராமர் கோபமும், புன்னகையும் தோன்ற," விபீஷணா! இந்த அரக்கர்கள் படும் பட்டை ஒரு நொடியில் காண்பாய்!" என்று சொல்லிவிட்டுப் பிறகு அங்கதனிடம்," ஆற்றலில் சிறந்தவனே! அஞ்சி ஓடுகின்ற வானர சேனையின் அச்சத்தைப் போக்கி, இங்கே அழைத்து வருவாய்!" என்றார்.
வாலியின் புதல்வன் அந்தக் கணத்தில் அச்செயலைக் செய்து முடிக்க ஓடினான். அவன் சென்று வானர வீரர்களைக் கண்டு," அஞ்சி பற்பல பக்கங்களிலும் சிதறி ஒடுபவர்களே! நான் சொல்வதைச் சற்றே நின்று கேளுங்கள். அதன் பின் போக வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் போய் விடுங்கள்!" என்றான்.
ஆனால் வானர வீரர்களோ, அவன் பேச்சைக் கேட்க விரும்பவில்லை. இன்னும் அவர்கள் அச்சத்தோடு நடுங்கிக் கொண்டு இருந்தார்கள். ஆகையால், அவர்கள், " நாங்கள் ஒன்றையும் கேட்க மாட்டோம்!" என்று பதில் சொன்னார்கள்.
அங்கதன் அதனால் சிறிதும் சோர்ந்து போய் விடவில்லை. மீண்டும் அவன் தனது பேச்சு வன்மையைக் காட்டினான். அவனுடைய பேச்சைக் கேட்ட வானர சேனாதிபதிகள் ஓடுவதில் இருந்து நீங்கி, துணிவு பெற்று அவன் முன்னே வந்து நின்றார்கள். அவர்களை நோக்கி அங்கதன் ," வானர சேனாதிபதிகளே! எதனால் நீங்கள் அஞ்சி நிலை கெட்டு ஓடினீர்கள்?" என்று கேட்டான்.
உடனே அவர்கள்," அங்கதா! நீ அறியாததா? நாங்களோ வானரர்கள் ஆனால், வந்து இருப்பவர்களோ இதுவரையில் நாம் சந்திக்காத பெரும் அரக்கர்கள். நம்மால் அன்று ஒரு கும்பகர்ணனையே சந்திக்க முடியவில்லை, படாத பாடுகள் எல்லாம் அக்கொடியவனிடம் பட்டோம். ஆனால், இன்றோ இங்கு உள்ள ஒவ்வொரு அரக்கனும் எங்களுக்கு கும்பகர்ணன் போலவே காட்சி அளிக்கிறான். எங்கள் உயிர் போனால் திரும்பி வருமா? நீயோ இளைஞன் அதனால் இளம் கன்றான நீ பயம் அறியாமல் இருக்கிறாய்! நாங்கள் அவ்வாறு இருக்க முடியுமா? எங்களை நம்பி எங்கள் உறவுகள் அக்கரையில் அக்கறையுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும், அன்று இராவணனுக்கு பத்து தலைகளும், இருபது கைகளும் உள்ளன என்று கேள்விப் பட்ட மாத்திரத்தில் அஞ்சினோம், இருந்தாலும் ஸ்ரீ இராமர் இருக்கிறார் என்ற தைரியத்தில் நாங்கள் இருந்தோம். ஆனால், இப்போதோ இங்கு இருக்கும் ஒவ்வொரு அரக்கனும் பல தலைகளுடன் காணப்படுகின்றானே! அதுவும் ஒவ்வொரு தலையும், ஒவ்வொரு விதமாக அமைந்து உள்ளதே. அவர்கள் கைகளில் உள்ள ஆயுதங்கள் அவர்களைக் காட்டிலும் விசித்திரமாக உள்ளதே! நாமோ வால் கொண்ட வானரர்கள் அப்படிப் பட்ட நம்மால் இவர்களை வாள் கொண்டு எதிர்க்க இயலுமோ? ஐய்யா அங்கதா! உன்னை வேண்டி நிற்கிறோம் அறிவில் சிறந்த ஜாம்பவானே எங்கள் கூற்றை ஒப்புக் கொண்டு எங்களுடன் ஓடி வந்து கொண்டு இருக்க, நீர் ஏன் ஐய்யா எங்களை தடுக்கிறீர்? எங்களை விடும் ஐய்யா?" என்றார்கள்.
வானரத் தலைவர்களின் பேச்சைக் கேட்ட அங்கதன் சற்றே அமைதியானான். ஆனால், அவனால் ஜாம்பவானும் அந்த வானர வீரர்களுடன் ஓட்டப் பந்தயத்தில் ஓடுவது போல புறமுதுகு காட்டி ஓடுகிறான் என்பதை தான் தாங்க முடியவில்லை. உடனே அங்கதன் ஜாம்பவானைப் பார்த்து," ஜாம்பாவான் அவர்களே தாங்களும் கூடவா உம் பெருமை மறந்து இவர்களுடன் ஓடுகின்றீர். உமது கீர்த்தி என்ன? பலம் என்ன? அறிவுப் பிரகாசம் என்ன? நீர் விஷ்ணு வாமன அவதாரம் எடுக்கும் பொழுது இந்த அண்ட கோலத்தையே பதினாறு முறை வலம் வந்தீரே! அவை எல்லாம் இந்த அரக்கர்களைக் கண்ட மாத்திரத்தில் மறந்தீரோ?" என்றான்.
அது கேட்ட ஜாம்பவான்," அங்கதா! அவை எல்லாம் பழைய கதை. இன்றோ எனக்கு மிகுந்த வயதாகி விட்டது. தவிர, இந்த அரக்கர்கள் ஒவ்வொருவருடைய உருவத்தையும் பார். இவர்களைக் கண்டால் தேவர்களும் கூட ஓடுவார்கள். பரமசிவன் கூட இவர்களை எதிர்க்கத் துணிய மாட்டார். நான் உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரையில் எத்தனையோ தேவாசுர யுத்தங்களை எல்லாம் கண்டு இருக்கிறேன். அதில் இரண்யன், இரண்யாக்ஷன், பலி, மதுகைடபன் போன்ற எண்ணற்ற வலிமையான அரக்கர்களை எல்லாம் எனது கண்கள் கொண்டு பார்த்து இருக்கிறேன். ஆனால், இவர்களோ அவர்களைக் காட்டிலும் வலிமை கொண்டு உள்ளார்களே! நான் என்ன செய்ய? இவர்கள் இது வரையில் எங்கு இருந்தார்களோ? இப்போது நம்மை பயம் கொள்ளச் செய்ய எங்கு இருந்து வந்து உள்ளார்களோ? நானும் கூட அறியவில்லையே "என்றான்.
அது கேட்ட அங்கதன் அவர்கள் எல்லோரது மனதிலும் தைரியம் எழும்பிட பேசினான். அத்துடன் ஸ்ரீ இராமனின் வீரத்தை எல்லாம் மீண்டும் அவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்கள் ஒவ்வொருவருடைய வீரத்தையும் அவர்களுக்கே அறிமுகம் செய்து வைத்தான். அத்துடன் லக்ஷ்மணன், அனுமான், சுக்கிரீவன் போன்றவர்கள் இதுவரையில் அரக்கர்களை அழித்த விதங்களை எல்லாம் அவர்களுக்கு மீண்டும் ஞாபகப் படுத்தி தேற்றினான். இறுதியில், உண்மையை உணர்ந்த அவர்கள், பயம் என்னும் மாயையில் இருந்து அங்கதனின் வீரம் மிகுந்த பேச்சால் விடுபட்டு, அங்கதனுடன் மீண்டும் யுத்த களம் திரும்பி அந்த அரக்க சேனையுடன் கடும் யுத்தத்தை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தார்கள்.
அப்போது ஜாம்பவான் அங்கதனிடம்," அங்கதா! நீ சொல்வதை நாங்கள் ஒப்புக் கொண்டு யுத்தம் வர சம்மதம் தெரிவித்து விட்டோம். ஆனால், எங்களுக்குள் ஒரு கேள்வி, நாங்கள் ஸ்ரீ இராமரை யுத்த களத்தில் தனியே விட்டு விட்டு தோற்று பயந்து ஓடிவந்ததை ஸ்ரீ இராமர் பார்த்து இருப்பாரே. இனி அவரது முகத்தில் நாங்கள் எப்படி விழிப்போம்" என்றான்.
அது கேட்ட அங்கதன் ஜாம்பவானிடம் ,"ஜாம்பவான் அவர்களே வெற்றியும், தோல்வியும் எல்லோருக்கும் சமமானதே அதனால் அதைப் பற்றித் தாங்கள் கவலைப் பட வேண்டாம். இந்த அரக்கர்களைக் கண்டால், அவர்களைக் கண்ட மாத்திரத்தில் தேவர்களும் பயப்பட நாம் பயந்தது இயல்பே, அப்படி இருக்க ஸ்ரீ இராமர் ஒரு போதும் நம்மைத் தவறாக நினைக்க மாட்டார். அரக்கர்களே எத்தனை முறை நம்மைக் கண்டு ஓடி இருக்கிறார்கள். அதனால், இவை எல்லாம் நினைத்து நீர் கவலை படத் தேவை இல்லை. ஸ்ரீ இராமர் பெரும் தன்மை கொண்டவர். அவருக்கு தவறாக எதையும் நினைக்கத் தெரியாது" என்றான்.
மேலும், ஜாம்பவானை தேற்றிய அங்கதன் வானர வீரர்களை மீண்டும் அழைத்து வருமாறு அவனிடம் கூற. அதன்படி ஜாம்பவான் அனைத்து வானரத் தளபதிகளிடமும் பேசி அவர்களை மீண்டும் யுத்தகளம் புகுமாறு செய்தான். அவ்வாறு மீண்டும் எழுபது வெள்ளம் வானர சேனையும் யுத்த களத்திற்குத் திரும்பியது.
மறுபுறம் யுத்த களத்தில் நின்று இருந்த ஸ்ரீ இராமர் மீண்டும் வந்து இருந்த அரக்கர் சேனையை நெடிது நோக்கினார். பின்பு தம்பியிடம்," அன்புத் தம்பியே லக்ஷ்மணா! அரக்கர் என்ன, அவுணர் என்ன, இவர்கள் எத்தனை பேர்களாக இருந்தாலும் சரியே. நான் வில்லை வளைத்து அம்பு தொடுத்த போது, நெருப்புக் கூட்டத்திலே விழுந்த பஞ்சுப் பொதிகளைப் போல இவர்கள் யாவரும் அழிந்து போவார்கள். இதனை நீ அறிவாய் அன்றோ! எனது ஆற்றலுக்கு ஏற்ற தடங்கல் உண்டென்று, எனது அறிவுக்குத் தோன்றுவது எதுவும் இல்லை! காப்பற்றுவதற்கு யாரும் இல்லாததைக் கண்ட கலக்கத்தினாலேயே குரங்குச் சேனை போர் புரியாமல், அஞ்சி நிலை கெட்டு ஓடி தமது வாழிடங்களில் புகுந்து கொள்கிறது. ஆகையால், நான் இந்த அரக்கச் சேனையை முற்றிலும் அழிக்கும் வரையில், நீ போய்க் குரங்குச் சேனையை அரக்கர்கள் வந்து நெருங்காதபடிக்குக் காப்பாய்! இங்கே இக்கொடிய சேனை ஏவி விட்டு, அங்கே வந்து இராவணன் வானர சேனையை தாக்கும்படியான வாய்ப்பும் உள்ளது. அப்படி இராவணன் செய்தால் அவனை அம்பெய்து தடுக்கக் கூடிய வீரன் உன்னை அன்றி வேறு யார் உள்ளார்கள்?அத்துடன் நீ செல்லும் பொழுது சுக்கிரீவனையும், விபீஷணனையும், அத்துடன் மாருதியையும் உடன் அழைத்துச் செல். ஒருவேளை அரக்கர்கள் சதித் திட்டம் செய்தால் அதில் இருந்து உன்னை மீட்பான் தம்பி வீபிஷணன். அதுபோல, மாருதி இருக்கும் இடத்தில் தான் வெற்றியும் இருக்கும். சுக்கிரீவனின் வீரத்தை நீயே பல முறை கண்டு உள்ளாய். எனவே, உனது வெற்றிக்கு இந்த மூவரும் உனக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீ சென்று அரக்கர்களை வென்று வா!" என்றார்.
அதன்படியே லக்ஷ்மணன் அண்ணனின் ஆணையை ஏற்று முன் செல்ல, அவனைத் தொடர்ந்து அனுமானும், சுக்கிரீவனும், விபீஷணனும் இராமபிரானிடம் ஆசி பெற்றுச் சென்றார்கள். அவ்வாறு எல்லோரும் சென்ற பிறகு, ஸ்ரீ இராமபிரான் போர்கோலம் கொண்டார். கையில் எடுத்த வில்லை வணங்கி அதில் இவ்வுலகம் நடுங்கும்படியாக நாணேற்றி அரக்கர்களை யுத்தம் செய்ய அழைத்தார். அக்கணமே ஸ்ரீ இராமரை அரக்கர் படை சூழ்ந்து தேவர்களும் நடுநடுங்க பல்வேறு ஆயுதங்களை அவர் மீது வீசி எறிந்து தாக்கியது. அவ்வாறு போர் தொடங்கியது.
அப்போது இராமபிரானைப் பார்த்த அரக்கர்கள்," இவன் என்ன மாவீரனோ? நம்மை தனியாக எதிர்த்து நிற்கிறானே! ஒரு வேளை இவன் சாகத் துணிந்தவனோ?" என்றார்கள். மறுபுறம், அரக்கர்கள் ஒன்று சேர்ந்து தனியே நிற்கும் இராமரை தாக்க, அக்காட்சியைக் கண்ட சப்த ரிஷிகளும் ," பாவிகள் அனைவரும் தோற்க! இராமனே இம்முறையும் வெல்லட்டும்" என்று ஆசி வழங்கினார்கள்.
மறுபுறம் ஸ்ரீ இராமரின் கணைகள் அரக்கர்களின் மீது பாய்ந்து விஷ்ணுவின் சுதர்ஷணச் சக்கரத்தைப் போல, அவர்கள் உடல்களை எல்லாம் சிதறடித்தது. அதனால், கைகளை இழந்தவர்கள் பலர், கால்களை இழந்தவர்கள் பலர், படுகாயம் அடைந்தவர்கள் பலர், மேலும், ஸ்ரீ இராமரின் அம்புகள் பட்ட அரக்கர் கூட்டம் ஒரு பக்கம் மாய்ந்தது என்றால் அவர் ஒவ்வொரு முறையும் தொடுத்த பாணத்தினால், அவரது கைகளில் பிடித்து இருந்த கோதண்டத்தின் நாண் ஒலி கேட்டு பயத்தில் இறந்த அரக்கர்கள் பலர்.
ஸ்ரீ இராமரின் கோதண்டத்தின் நாண் ஒலியால் அரக்கர்களின் யானைகள் மதம் பிடித்து அந்த அரக்கர்களையே கொன்று போட்டது. அத்துடன், அந்த அரக்கப் படைகளில் இருந்த குதிரைகள் யாவும் நிலை கெட்டு ஓடிப், படுகாயம் அடைந்து கீழே விழுந்த அரக்கர்களை எல்லாம் மிதித்துக் கொன்றது.
அது கண்டு வானில் நின்ற தேவர்கள் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தனர். ஸ்ரீ இராமர் அப்போது தமது வில்லை வளைத்து அரக்கர்களின் மீதும், யானைகளின் மீதும், குதிரைகளின் மீதும், அரக்கர்களின் தேர்கள் மீதும் எண்ணற்ற பாணங்களைத் தொடுத்தார்.
அவ்வாறு தொடுக்கப்பட்ட இராம பாணங்களால் கோபமுள்ள யானைகள் மலை விழுந்தது போலத் தரையிலே விழுந்தன; அரக்கர்களின் வலிய கொடிகள் விழுந்தன; இராமரைச் சினந்து விழித்த அரக்கர் தம் விழிகள் விழுந்தன; அரக்கர்களின் பழித்த வாய்கள் அவர்கள் தம் தலைகளுடன் விழுந்தது. அத்துடன் அரக்கர்களின் ஆயுதங்களோ, பாணங்கலோ ஸ்ரீ இராமரை ஒன்றும் செய்ய வில்லை. அவைகள் ஸ்ரீ இராமனின் பாணங்களுக்கு முன்னாள் தூள், தூளாக சிதறியது. இவ்வாறு ஸ்ரீ இராமரின் கொடிய வீரத்தினால் அரக்கர் சேனையில் பெறும் அழிவு ஏற்பட்டது.
அப்படி ஸ்ரீ இராமர் தனது பாணங்களை இடை விடாது தொடுத்தார். அவர் வில்லில் இருந்து புறப்பட்ட ஒவ்வொரு பாணமும் லட்சம் பாணங்களாக மாறி அரக்கர்களை வதைத்து ஒழித்தது. அப்போது ஸ்ரீ இராமபிரானின் வீரத்தையும் செயலையும் கண்ட அரக்கர்ப்படை தலைவனான மாலி, சேனாதிபதிகளைப் பார்த்து," வலிமை தேய்ந்த இந்த மனிதன் அரக்கர் படையைக் கொல்வதோ? வலிமை மிகுந்துள்ள நாமெல்லாம் அவனை வெல்ல முடியாமையினால், சும்மா பார்த்துக் கொண்டு பல்லை மெல்வதோ? இவனுடைய அம்புகள் புறப்படும் முன்னர், இவன் மேல் நாம் விழுந்தாலும் அழிந்து போய்விடுவான். கால் விழுந்த மழை போலத் தோன்றுகின்ற காட்சியுடையீர். நீர் அறிவு மயங்கி, திக்பிரமைக்கு உட்பட்டீர் போலும்? இவனுடைய பாணங்களால் நமது ஆயிரம் வெள்ளம் சேனையும் அழிந்துவிடும். நமது சேனை அழிந்த பின்பு, நாம் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது? ஆகவே , உடனே மனவுறுதி பெற்று இவன் மேல் பாயுங்கள்!" என்றான்.
மாலி அப்படிச் சொன்னது தான் தாமதம் பெரும் அரக்கர் சேனை ஸ்ரீ இராமரை சூழ்ந்து கொண்டு தாக்கியது. அவரின் மேல் வலிமை வாய்ந்த கொடிய ஆயுதங்களை எல்லாம் எறிந்தது. தம்மேல் வந்த ஆயுதங்களை எல்லாம் அழிக்க இராமர் சர மழைகளைப் பொழிந்தார். அடுத்த வினாடி பகைவர்களின் ஆயுதங்கள் தூளாகின! அதனால் பெரும் ரத்தக் கடலும் தோன்றியது. அதிலே பேய்கள் குதித்து மகிழ்ந்து கூத்தாடியது. அந்த ரத்தக் கடலின் நிறத்தை பூமாதேவியும் பெற்று செந்நிற உடுப்பை உடுத்தி இருப்பது போலக் காணப்பட்டாள். மேலும், ஸ்ரீ இராமர் ஒருமுறை வில்லை வளைத்து அம்பைத் தொடுக்க, சென்று பாய்கிற அம்புகளோ ஒரு கோடியாக இருந்தது .அப்போது வளைந்த இராமரின் வில்லோ பிறைச் சந்திரனைப் போலக் காட்சி அளித்தது.
இவ்வாறு, ஸ்ரீ இராமர் அரக்கர் கூட்டத்தை தொகை, தொகையாக அழிக்க. இராவணனின் அரக்க சேனையும் தொகை, தொகையாக அவரை வந்து சூழ்ந்து தாக்கியது. ஸ்ரீ இராமர் சலிக்காமல் அவரது தோல் வலிமை குன்றாமல் அவ்வாறு தன்னைத் தாக்க வந்த அரக்கர் படையின் மீது கடும் போரைச் செய்தார். அதனைக் கண்ட தேவர்களும் உவகை அடைந்து மகிழ்ந்தனர். ஒரு கட்டத்தில் இராவணனின் சேனைகள் அஞ்சி ஓடத் தொடங்கினர்.
தமது சேனை அஞ்சி ஓடியதைக் கண்டதும் அரக்கச் சேனாதிபதிகள்," அசாதாரணமானவர்களே! திரும்புங்கள்... திரும்புங்கள்! " என்று அதட்டிக் கூறினார்கள். அவர்களின் குரலுக்குக் கட்டுப்பட்ட வீரர்கள் திரும்பி, இராமபிரானை நெருங்கிப் போரிடத் தொடங்கினார்கள்.
அவ்வாறு ஸ்ரீ இராமருக்கும் அரக்கர்களுக்கும் கொடிய போர் மீண்டும் தொடங்கிற்று. அப்போரிலே ஸ்ரீ இராமர் தான் வெற்றி பெற்றார் என்பதையும் சொல்லத் தான் வேண்டுமோ? அனைத்து அரக்கர்களும் தொகை, தொகையாக இராம பாணங்களால் அழிய அதைப் பார்த்த புஷ்கரத் தீவின் மன்னனான வன்னி மிகுந்த கோபம் கொண்டான். உடனே எஞ்சி உயிருடன் நின்ற அரக்கர்களைப் பார்த்து," இன்னும் ஏன் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்? எல்லோரும் வாருங்கள் முன்னேறிச் செல்வோம். பகைவரால் கொல்லப்படுவதற்கு நாம் அஞ்சினோமானால், திரும்பிப் போய் இராவணன் முகத்திலே எப்படி முழிப்போம்? இப்போது நமக்கு இருக்கும் நிலையில் ஒன்று நாம் போராடி இந்த இராமனை வதைக்க வேண்டும். இல்லையேல் இவனது கைகளால் செத்து மடிய வேண்டும். இவ் இரண்டில் ஒன்றையும் செய்யாமல் நம்மை, நாம் பார்த்துக் கொண்டு இருப்பதால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது" என்றான்.
வன்னியின் சொற்படியே அவன் தலைமையிலான அரக்கர்கள் இராமனை நெருங்கி யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். ஸ்ரீ இராமரின் மேல் மழுக்களையும், தண்டுகளையும், அம்புகளையும், வாள்களையும், வேல்களையும், ஈட்டிகளையும், தோமரங்களையும் இன்னும் பலப் பல ஆயுதங்களையும் வீசி எறிந்தனர். அப்போது ஸ்ரீ இராமர் தனது கோபம் கொண்ட கணைகளால் மேற்கண்ட ஆயுதங்களை விளக்கினார். மேலும், ஸ்ரீ இராமர் அப்போது பிரயோகித்த காந்தர்வாஸ்த்திரத்தால் எண்ணற்ற அரக்கர்கள் மடிந்தனர். அத்துடன் இராமர் பிரயோகித்த ஆக்னேய அஸ்த்திரத்தாலும் எண்ணற்ற அரக்கர்கள் எரிந்தனர். ஒரு கட்டத்தில் ஸ்ரீ இராமரின் தனுர் வித்தையால் இராவணனின் மூலபல சேனை முற்றிலும் அழிந்தது. மேலும், இராவணன் எட்டுத் திசைகளில் இருந்தும், பாதாளத்தில் இருந்தும் திரட்டிய அரக்கர் சேனையும் ஸ்ரீ இராமரின் பாணத்தால் அழிந்தது
அதனால், பூமிதேவி தனது வலிய பாரம் என்னும் சுமையை நீங்கப் பெற்றாள். தேவர்களும் கூட தங்கள் துன்பம் நீங்கப் பெற்று மகிழ்ந்தனர். பூமியைத் தாங்கும் ஆதிசேஷனும் தனது தலையின் மீது அது நாள் வரையில் சுமத்தப் பட்டு இருந்த பாரம் நீங்கி சற்றே தலையை நிமிர்த்தினான். மறுபக்கம், அரக்கர்களின் அனைத்து சேனைகளையும் துவம்சம் செய்து அழித்த ஸ்ரீ இராமர் தேவர்கள் துதிக்க போர் களத்திலே நின்றார். அவர் மேல் மலர்களை பொழிந்தனர் தேவர்கள். அவ்வாறு தேவர்களின் உபசாரத்தை கணப் பொழுதிலேயே ஏற்ற ஸ்ரீ இராமர். உடனுக்குடன் தம்பி லக்ஷ்மணனின் நிலை காண எண்ணி, அவன் இருக்கும் திசை நோக்கி விரைந்தார்.