மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவத்தை காண்போம்

மத்தியப் பிரதேசத்தில் பாவ்ரா கிராமத்தில் சிவராஜ் சோப்ரா என்ற வியாபாரி வாழ்ந்து வந்தார். அவருக்கு சுனில் என்ற மகன் இருந்தான். அவன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். ஆனால், அவனது காதலுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கப் படவில்லை. இத்தனைக்கும் சுனில் ஒரு கிறிஸ்துவப் பெண்ணை காதலித்தான். ஆனால், ஜாதி, மதம் இவற்றுக்கு அப்பாற்பட்டு சிவராஜ் சோப்ரா மகனின் காதலை பெருந்தன்மையாக அங்கீகரித்தார்.
சுனிலின் திருமணம் பாவ்ரா கிராமமே வியக்கும் படியாக நல்ல முறையில் நடந்து முடிந்தது. அவர்கள் வழக்கப்படி திருமணம் முடிந்தவுடன் மகன் தந்தையுடன் வசிப்பது கேவலமாக கருதப்படும். அதன்படி சுனில் தனது புது மனைவியுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட போபாலில் இருக்கும் ஒரு புது வீட்டுக்கு குடிபோனான். மிகவும் வசதியான வீடு, ஆனால் மிகக் குறைவான வாடகை. சுனிலின், வாழ்க்கை ஆரம்பத்தில் என்னமோ அற்புதமாகத் தான் போய்க் கொண்டு இருந்தது.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அடிக்கடி சுனில் உறக்கத்தில் தன்னை அறியாமல் எழுந்து நடந்தான். அவனது மனைவிக்கும் சில கெட்ட சொப்பனங்கள் வந்து போயின. காரணம் இன்றி உறக்கத்தில் எழுந்து அலறுவாள். அடிக்கடி அந்த வீட்டில் துர்நாற்றம் வீசியது. சுனிலுக்கும் அவன் மனைவிக்கும் ஒன்றுமே புரியவில்லை.
ஒரு நாள் இரவு நன்றாக தம்பதிகள் இருவரும் உறங்கிக் கொண்டு இருந்தார்கள். எப்போதும் போல சுனிலின் மனைவி கெட்ட சொப்பனம் கண்டு அலறினாள், அருகில் படுத்து இருந்த சுனிலிடம் அவள் கண்ட சொப்பனத்தைக் கூறினாள். ஆனால் அவளுக்குத் தெரியாது கணவன் உருவத்தில் (அன்றைய இரவில்) அருகில் படுத்திருப்பது உண்மையில் அவளது கணவன் இல்லை என்று. இந்த விஷயம் அவளுக்கு அடுத்த நாள் காலை தான் தெரிந்தது.
நடந்த விஷயம் இது தான்...
சுனில் அன்று இரவு உறக்கத்தில் இருந்தபோது ஒரு குரலை கேட்டு வசியம் ஆனது போல தூக்கத்தில் நடத்து சென்று உள்ளான். அப்போது தெருவில் பிரமை பிடித்தவன் போல நடந்து சென்றவனை ஒரு கார் மோதி சென்றது. அதில் அவனது கைகளில் இருந்த எலும்புகள் முறிந்தது. பிறகு மருத்துவ மனையில் தான் அவன் சுய நினைவு பெற்று வீடு திரும்பினான்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சுனிலின் மனைவி அதிர்ந்து போனாள். "எனில் இரவு முழுவதும் தன்னிடம் பேசிய அந்த சுனில் யார்? இது ஒருவேளை மனப் பிரமையா?" என்றெல்லாம் தோன்றியது அவளுக்கு. அப்போது அவள் வீட்டு அருகில் அடிக்கடி வந்து போகும் வேலைக்காரி ஒருத்தி மூலமாக சற்றுத் தொலைவில் தேவாலயத்தில் இருந்த "மதர் மார்கிரெட்" என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டாள்.
மதர் மார்கிரெட் கிறிஸ்துவுக்காக தன்னை சிறு வயதில் இருந்தே அற்பணித்தவர்கள். தனது வாழ் நாளின் பெரும்பகுதியை கிறிஸ்துவுக்காக செலவழித்தவர். எந்தப் பிரச்சனைகளையும் தனது இறை பக்தியால் தீர்க்கக் கூடியவர். மதர் மார்கிரெட் பற்றி கேள்விப்பட்டவுடன் சுனிலை அழைத்துக் கொண்டு அவன் மனைவி அவ்விடம் சென்றாள். மதரிடம் அனைத்து விவரங்களையும் எடுத்துச் சொன்னாள்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட மதர் தியானத்தில் ஆழ்ந்தார்கள். வேதாகமத்தின் சில பகுதிகளை வாசித்து ஜெபம் செய்தவர்கள் சுனில் பக்கம் திடீரென திரும்பினார்கள். அக்கணம் சுனிலிடம், "சகோதரரே! உடனடியாக தாங்கள் தங்கி இருக்கும் வீட்டை காலி செய்து விடுங்கள். அங்கு ஒருவர் தூக்கில் தொங்கி இறந்து இருக்கிறார். நான் இறந்த அந்த நபரின் பிரேத ஆத்மாவை தியானத்தில் பார்த்தேன். பல கனவுகளுடன் இருந்த அந்த வாலிபர். ஏதோ ஒரு விரக்தியால் இறந்து இருக்கிறார்" என்று கூறினார்கள்.
இதனைக் கேட்ட சுனிலும் அவனது மனைவியும் அதிர்ந்து போனார்கள். சுனிலுக்கு இப்போது புரிந்தது ஏன் அவ்வளவு பெரிய அந்த வீடு மிகக் குறைந்த வாடகையில் தனக்குக் கிடைத்தது என்று. உடனே வீட்டு உரிமையாளரிடம் விசாரித்தார் சுனில். சுனில் கேட்ட கேள்வியால் அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ந்தார். அவரால் இதற்கு மேல் உண்மையை மறைக்க முடியவில்லை.
பிறகு சுனிலிடம் அந்த வீட்டு உரிமையாளர், "இது உங்களுக்கு எப்படித் தெரிந்தது? அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு கூட இது பற்றித் தெரியாதே! உண்மையில் பத்து வருடத்திற்கு முன்னாள் இங்கு ஒரு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உண்மை தான்" என்றார்.
சுனிலும் அவரது மனைவியும் உடனே வீட்டை காலி செய்து வேறு இடம் சென்றார்கள். அத்துடன் தம்பதியர் இருவரது பிரச்சனையும் முடிவுக்கு வந்தது. அவர்கள் இன்னொரு புது வீட்டில் தங்கள் இயல்பு வாழ்க்கையை புதிதாக பிரச்சனை இன்றித் தொடங்கினார்கள்.
இந்தக் கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது :-
ஒரு பொருள் அது ஒரு வாடகை வீடாகவே இருந்தாலும் கூட குறைவான பணத்திற்குக் கிடைத்தால், நன்கு அதுபற்றி ஆராய்ந்து முடிவெடுக்கவும்.
இது பற்றி மனோதத்துவ நிபுணர்கள் சொல்வது:-
மதர் மார்கிரெட் தனது வாழ்வில் ஒழுக்கமாக இருந்து இருக்கிறார்கள். அதிக நேரம் தியானம் மற்றும் பிரார்த்தனையில் செலவழித்து இருக்கிறார்கள். மனதை ஒர்முகப் படுத்தி இருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் பல வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்களைக் கூட தனது மனத்தால் பார்க்க முடிந்தது.