இலங்கை எரியூட்டு படலம்

சுந்தர காண்டம்
கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
இலங்கை எரியூட்டு படலம்
அனுமான் இலங்கையில் தீ வைத்தல்
அனுமனது வாலின் தீ இலங்கை நகரத்தில் எஞ்சி இருந்த மாளிகைகளையும், விதானத்தையும் கொளுத்தியது. அந்த தீ தீயோர்களை எல்லாம் அழிக்கத் தொடங்கியது. அந்தத் தீயில் வெந்து மடிவதை விட, தப்பி உயிர் பிழைப்பதே மேல் என்று அரக்கர், அரக்கியர்கள் அனைவரும் அங்கும், இங்குமாக ஓடத்தொடங்கினர். ஆனால், சத்தியத்துக்கு கட்டுப்பட்ட அந்தத் தீ இலங்கையின் பெரும்பான்மையான இடத்தை அழித்தாலும், அந்தத் தீ சீதாபிராட்டியின் இருப்பிடத்தை ஒன்றும் செய்ய வில்லை. மாறாக, அனுமனின் வாலில் இருந்து புறப்பட்ட அந்தத் தீ, அரக்கியர்கள் பார்க்க சீதையை வலம் வந்து சென்றது. அது கண்ட அரக்கியர்கள் "இவள் உண்மையில் ஒரு பதி விரதை தான்" என்று தங்களுக்குள் கூறிக் கொண்டனர். சீதையும், அவ்வாறு வலம் வரும் அக்கினியைக் கண்டு பயப்படவோ, பதரவோ இல்லை. மாறாக, சீதா பிராட்டி அவர்கள் இருப்பிடத்தில் சுகமாக அமர்ந்து இருந்தார்கள். இலங்கை நகரம் முழுவதையும் எமனின் நரகம் போல அந்தத் தீ தகிக்கச் செய்தாலும். சீதை அமர்ந்து இருக்கும் அசோக வனத்தின் பகுதிகள் இமயத்தை விட குளிர்ந்து காணப்பட்டன. அது கண்ட இலங்கையின் அரக்கர் குலத்துப் பிரஜைகள் பலர் ஆச்சர்யம் அடைந்தனர்.
அதுபோலவே, அந்தத் தீ தர்மத்தின் வழி நடக்கும் விபீஷணனின் மாளிகையையும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், விபீஷணனின் மாளிகைக்கு அருகில் இருந்த பல இரத்தின மாளிகைகள் தீக்கு இரையானது. அந்தத் தீயில் இருந்து புறப்பட்ட பெரும் புகை வானத்தையும் மறைத்துக் கொண்டது. அந்தத் தீயின் புகையால் பிராணவாயு இல்லாமல் மூச்சுத் திணறி இறந்த அரக்கர், அரக்கியர்கள் பலர்.
அனுமன் வைத்தத் தீயின் வெப்பத்தால், இலங்கையின் தங்க மாளிகைகள் பல உருகி தங்க மலைகளைப் போலக் காணப்பட்டன. இலங்கை நகரத்து தரை கூட வெந்து உருகியது. சில அரக்கர், அரக்கியர் அந்தத் தீயில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள, நீர் நிலைகளில் விழ, அந்த நீர் நிலைகள் கூட அந்த தீயின் தாக்கத்தால் கொதித்தப் படி இருந்ததால், அவர்கள் விழுந்தவுடன் உயிர் விட்டு மிதந்தனர்.
அனுமன் வைத்தத் தீயால் அரக்கர்களின் ரதங்கள் பல எரிந்து சாம்பல் குவியல்கள் ஆனது. மேலும், இலங்கையின் மதில் சுவரையும் அந்தத் தீ விட்டு வைக்க வில்லை. அந்தத் தீயின் கணல் வானுலகம் வரை சென்று சூரிய மண்டலத்தை சூழ்ந்தது. அதனால், அக்கரையில் இருந்த அங்கதன் தலைமையிலான வானரப் படை இலங்கையில் இருந்து புறப்பட்ட தீயையும் பெரும் புகையையும் கண்டனர். அக்கணமே, அவர்கள் நடந்த சம்பவங்களை ஒருவாறு அனுமானித்துக் கொண்டு, அனுமனை வாழ்த்தினார்கள்.
அத்துடன், அனுமன் வைத்தத் தீ கடலையும் உஷ்ணப் படுத்தியது. மேலும், அத்தீயினால் இலங்கையில் இருந்து புறப்பட்ட சாம்பல் கடலில் விழுந்து, அதனால் அந்தக் கடல் உவர் கடல் போலக் காணப்பட்டது. அப்போது வானில் வெகு தூரத்தில் பறந்த வெண்ணிறம் கொண்ட அன்னப் பறவைகள் கூட, அந்த சாம்பலால் கருமை நிறம் பெற்றது. அது கண்ட காக்கைகள் கும்மாளம் போட்டன.
அந்தத் தீ இலங்கை முழுவதும் எரித்தது போதவில்லை என்பதால் கொடிய இராவணனின் மாளிகைக்குள் புகுந்தது. அதனால், அந்த மாளிகைகளில் வாழ்ந்த இராவணனின் மனைவிகள், பிற மகளிர், ஆசை நாயகிகள் என அனைவரும் அந்தத் தீயைக் கண்டு பயந்து அலறினார்கள். இராவணனின் மாளிகைகளில் இருந்த குங்குமப் பூக்கள், சந்தனக் கட்டைகள், அகிற் கட்டைகள் உட்பட மேலும் பல நறுமணப் பொருட்கள் அந்தத் தீயால் எரிந்தது. அதனால், புறப்பட்ட நறுமணம் அனைத்து உலகங்களையும் சூழ்ந்தது.
மறுபுறம், அச்சம் கொண்ட அரக்கர்கள் பலர் இராவணனை வணங்கி," தலைவனே! கடலை விட நீண்ட வாலிலே நாம் கொளுத்திய நெருப்பைக் கொண்டு அந்தக் குரங்கு நம் இலங்கை மாநகரைத் தீக்கிரையாக்குகிறது!" என்று தெரிவித்தார்கள்.
அதனைக் கேட்டு இராவணன்," தேவர்களையே வென்று, நமக்கு ஏவல் செய்யும் பணியாளர்களாக நியமித்துப் பெருமை பெற்ற நாம் போயும், போயும் ஒரு குரங்கால் இவ்வாறு நிலை குலைந்தோம் என்று அறிந்தால், அதனைப் பார்த்து அந்தத் தேவர்களே பரிகசிக்க மாட்டார்களோ? சரி. குறைந்தபட்சம் அந்தக் குரங்கையாவது பிடித்துக் கொன்று வாருங்கள். அதன் மூலமாவது நமக்கு ஏற்பட்ட இந்தக் களங்கம் துடைக்கப்படட்டும்" என்றான்.
உடனே, இராவணனின் ஆணைப்படி அனுமனைக் கொல்ல அரக்க வீரர்கள் பலர் வில் போன்ற ஆயுதங்களுடன் புறப்பட்டு இலங்கையின் எல்லையை அடைந்தனர். அவர்களைக் கண்ட அனுமான்," மீண்டும் சாவதற்க்காகவே முண்டி அடித்து வந்து உள்ளீர்களா?" என்று பரிகசித்துக் கூற. அது கேட்ட அரக்கர் கூட்டம் மிகுந்த கோபம் கொண்டு அனுமனை தாக்கத் தொடங்கியது. அனுமனோ, தனது வாலில் எஞ்சி இருந்த நெருப்பையே ஆயுதம் ஆக்கி அவர்களை வளைத்துக் கொண்டு, அருகில் இருந்த பெரிய மரத்தைப் பிடுங்கி அவர்களை அந்த மரம் கொண்டு அடித்தே கொன்றான்.
பிறகு அனுமான் தனது வாலில் இருந்த நெருப்பை கடலில் தோய்த்து அணைத்தான். அதனால் அந்தக் கடலே கொதிப்படைந்தது. பிறகு அனுமான், மீண்டும் சீதா பிராட்டியை சந்தித்து விடை பெற்றான். அப்போது சீதை அனுமான் செய்த வீரச் செயல்களை பாராட்டினாள். பிறகு அனுமான் தான் வந்த வழியே, ஸ்ரீ இராமனிடம் சீதா பிராட்டி பற்றிக் கூற வாயுவைக் காட்டிலும் வேகத்துடன் பறந்து சென்றான்.
அனுமான் இருக்கும் தைர்யத்தில் இலங்கையை எரித்த அக்கினி தேவன். இப்போது அனுமன் இலங்கையை விட்டுப் பறந்து சென்றதால், மீண்டும் இராவணன் மீது கொண்ட பயம் காரணமாக அமைதியாக அணைந்தான்.