மாயாசீதைப் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

மாயாசீதைப் படலம்

(இந்திரஜித்து மாயையினால் சீதை போன்ற உருவமொன்றனைச் செய்து அதனை அனுமனின் முன்னால் வெட்டிக் கொன்றதையும் அதனால் விளைந்தவற்றையும் கூறும் படலம் இது. எனவே மாயசீதைப் படலம் எனப் பெயர் பெற்றது)

இராவணன் மந்திரசாலைக்கு வந்து சேர்ந்தவுடனே இந்திரஜித்தும், மகோதரனும், மந்திரிப் பிரதானிகளும், சேனாபதிகளும் அங்கே வந்து சேர்ந்தார்கள். வந்து சேர்ந்த அவர்களிடம் நடந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம் தானே விளக்கமாக எடுத்திக் கூறினான் இராவணன்.

அதனைக் கேட்டதும் இராவணனைப் பார்த்து," இறந்து போன நமது சேனை வீரர்களை எல்லாம் கடலில் எடுத்துப் போட்டு இருக்காவிட்டால் அவர்களும் உயிர் பெற்று இருக்க, இப்போது போருக்குச் செல்வார்கள் அல்லவா? பிரம்மாஸ்த்திரமும் பழுது பட்டதால், பகைவர்களின் சேனைகள் எல்லாம் திரும்பவும் நம் மேல் போருக்கு வரும். இனி அந்தச் சேனைகளுக்கு இடையூறு இல்லை.மேலும், ஸ்ரீ இராமபிரானின் கருணையினால் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தவன் அனுமனாகத் தான் இருக்க வேண்டும். அனுமன் சிறந்த வீரன். அவனால் இந்த உலகத்தையே நொடிப் பொழுதில் அழிக்க இயலும். எனினும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டே அவன் அமைதியாக இருக்கிறான். இந்த உலகத்தை ஆளும் மும்மூர்த்திகளே அனுமனின் ரூபத்தைப் பெற்று வந்து உள்ளார்கள்.

ஐயனே, இதை எல்லாம் நான் எதற்க்குச் சொல்கிறேன் என்றால், அனுமான் போன்ற வீரர்கள் நமது பக்கத்தில் இல்லையே! அப்படி இருந்து இருந்தால் இந்நேரம் யுத்தத்தில் நமது கை அல்லவா ஓங்கி இருந்திருக்கும். சரி போகட்டும்! இறந்த நமது சேனைகள் ஒரு பொழுதும் அந்த வானர வீரர்களைப் போல, உயிர் பெற்றுத் திரும்பி வரப் போவது இல்லை. மேலும், அந்த வானர வீரர்கள் உயிர் பெற்ற அதிசயத்தைக் கண்டாவது தர்ம தேவதை அந்த இராமனின் பக்கத்தில் இருக்கிறாள் என்ற உண்மையை நான் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அந்த உண்மையைப் புரிந்து கொண்ட மாத்திரத்திலாவது நாம் இனியும் தாமதிக்காமல் சீதா தேவியை இராமனிடத்திலே கொண்டு போய் சேர்த்துவிட்டு மன்னிப்பு வேண்டி நிற்போம். அதை விடுத்து வேறு ஒரு உபாயம் எனக்குத் தோன்றவில்லை, மேலும் நான் சொன்னபடி செய்யாவிட்டால் நாம் இனி பிழைக்கப் போவதும் இல்லை. இதுவே சத்தியம்" என்று மேலே நடக்கக் கூடியதை ஆராய்ந்து அறியும் அறிவு படைத்தவனாகிய மாலியவான் கூறினான்.

மாலியவான் அவ்வாறு சொன்னதும் இராவணன் மிகுந்த கோபம் கொண்டான். அவன் பற்கள் தெரிய சிரித்து, அச்சம் தோன்றும் படி, பற்களை நற நறவென்று கடித்து, தான் கொண்ட கோபத்துடன் மாலியவானைப் பார்த்து," நீ கூறிய சொல் நன்றாக இருக்கிறது! மிக நன்றாக இருக்கிறது!" என்று சீறிக் கூறினான்.

மேலும் அவன், "பெரும்பாலான அரக்கர் சேனை இறந்து போனார்கள் என்பது உண்மை. நாம் வைத்திருந்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டது என்பதும் உண்மை. ஆனால், நாம் வாழும் மிகச் சிறந்த வாழ்க்கை அழிந்து போய்விடவில்லை. இன்னும் அந்தச் சிறப்பு மாறாமல் அது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியிருக்க , நீர் மேற்சொன்ன சொற்ப காரணங்களால் நான் சீதையை விட்டு விட மாட்டேன். அது மட்டுமா! அவளுடன் இனிது வாழ வேண்டும் என்ற ஆசையினாலேயே அவளைக் கொண்டு வந்தேன். அதை விடுத்து சீதையை விட்டு, விடவா நான் அவளைக் கவர்ந்து வந்தேன்? மாட்டேன் ஒரு போதும் மாட்டேன். உயிர் மட்டுமே வாழ நினைக்கும் கோழைகள் அனைவரும் உயிர் பிழைத்தவர்களாகப் போங்கள். நான் நாளை தனியே யுத்தம் செய்து அந்த அனுமனையும், அந்த இரு மனித பிறப்புக்களான இராமலக்ஷ்மணர்களையும் கொன்று வருகிறேன்!" என்றான்.

உடனே இந்திரஜித்து தந்தையை நோக்கி," நான் சொல்வதை உண்மையாக உணர்ந்து கொள்வீரானால், சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது.அது யாதெனில், அன்று இராமனையும் அழிக்குமாறு தான் அந்த பிரம்மாஸ்த்திரத்தை ஆவாகனம் செய்து பிரயோகித்தேன். ஆனால், எல்லை இல்லா சீற்றத்துடன் சென்ற அந்த அஸ்த்திரம் அவனது மேனியைக் கூட நெருங்காமல் திரும்பி வந்து விட்டது. இது என்ன விசித்திரம் தலைவா! பிரம்மாஸ்த்திரம் அவனைத் தீண்ட வில்லை. ஆக, இதில் இருந்தே இராமன் சாதாரண மனிதன் இல்லை என்பது தங்களுக்குப் புலப்படவில்லையா? எனினும் தந்தையே, அதற்காக நான் அவனுடன் யுத்தம் செய்ய பயப்படுகிறேன் என்று மட்டும் தாங்கள் தவறாக நினைத்து விடாதீர்கள். நான் சொல்வது யாதெனில், அந்த இராமனை தந்திரத்தாலும், அரக்கர்களின் அதர்வண யாக முறைப்படியும் தான் வெல்ல முடியுமே தவிர, அதனை விடுத்து நேருக்கு, நேர் நின்று செய்யும் போரினால் அல்ல. அதற்கு நான் உடனே விரைந்து புறப்பட்டுப் போய், நிகும்பலை என்னும் இடத்தை அடைந்து குற்றமற்ற யாகத்தைச் செய்து அங்கு வாசம் செய்து கொண்டு இருக்கும் நிகும்பலை தேவியின் அருளைப் பெற்றால் உமது எண்ணம் ஈடேறும். உமது மனத் துன்பமும் ஒழிந்து விடும்!" என்றான்.

மகனின் வார்த்தைகளைக் கேட்டு, இராவணன் அவனிடம்," நீ சொன்னது நல்லதே! அபப்டியே செய்வாய்!" என்றான்.

"தந்தையே! நான் செய்யப் போகும் இந்த யாகத்தைப் பற்றி உளவறிந்து உமது தம்பி விபீஷணன் பகைவர்களிடம் கூறி, இதனை நிறைவேறாதபடித் தடுக்க முயல்வாரே!"

"ஆம் செய்வான்! அவன் வராதபடித் தடுக்க என்ன வழி செய்யலாம்?"

"மாயையினால் ஜானகியின் உருவம் ஒன்று படைப்போம். பின்பு, அந்த மாய உருவத்தை அனுமனின் முன்பாக வாளால் வெட்டிக் கொல்வோம். நானும் அயோத்தியின் மீது படை எடுத்துப் சென்று உள்ளது போல, ஒரு பொய்யான வதந்தியைக் கிளப்பி விடுவோம். இப்படிச் செய்தால், நமது பகைவர்கள் அனைவரும் மேலே செய்ய இயலாத காரியத்தை சிந்திக்க அறிவற்றவர்களாகி துன்பம் அடைவார்கள். மேலும், சீதையே மாண்ட பிறகு அதற்கு மேல் இங்கு போர் செய்ய விரும்பாமல், எஞ்சியவர்களையாவது காப்போம் என்று அயோத்தியைக்கு விரைவார்கள். ஒரு வேளை அவர்கள் அங்கு போக விரும்பாவிட்டாலும், குறைந்த பட்சம் அனுமனையாவது அயோத்திக்கு அனுப்பி நடந்த விவரத்தை அறிந்து வரச் செய்வார்கள். அந்த இடைப்பட்டக் காலம் எனக்குப் போதும், அதற்குள் நான் யாகத்தை வெற்றிகரமாக முடித்து கொடிய அஸ்த்திரங்களை நிகும்பலை தேவியின் அருளால் பெற்று பகைவரைக் கொன்று வெற்றியை ஈட்டிவிடுவேன்!" என்று சொல்லி முடித்தான் இந்திரஜித்து.

தனது புதல்வன் சொன்ன திட்டத்தை இராவணன் மகிழ்ந்து ஆமோதித்தான். தந்தையின் அனுமதி அவ்வாறு கிடைத்த மாத்திரத்திலேயே மாயா சீதையைத் தோற்றுவிக்கும் பொருட்டு விரைந்து சென்றான் இந்திரஜித்து.

இலங்கை மாநகருக்குள் இப்படியிருக்க, வெளியே போர்க்களத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கவனிப்போம்-

ஸ்ரீ இராமபிரானிடம் சுக்கிரீவன்," இலங்கையின் காவல் கெடும் படி, அதற்கு விரைவில் தீ மூட்டுவோம்!" என்றான்.

சுக்கிரீவனுடைய கருத்துக்கு இராமர் ஒப்புதல் தெரிவித்தார்.

அந்தக் கணத்தில் சுக்கிரீவன் இலங்கை நகரத்துக் கோபுரத்தின் மீது தாவிச் சென்று நின்றான். எழுபது வெள்ளம் வானர வீரர்களும் எல்லா உலகங்களும் காணும்படியாகக் கொள்ளிக் கட்டைகளை எடுத்துக் கொண்டார்கள். அக்கணமே, தங்களது கைகளில் இருந்த கொள்ளிக் கட்டைகளை இலங்கை நகரத்தின் மீது வீசினார்கள். " ஸ்ரீ இராமன் செலுத்திய ஆக்னேய அஸ்த்திரமோ!" என்று அரக்கர்கள் அஞ்சும் படியாக அந்தக் கொள்ளிக் கட்டைகள் அரக்கர்களின் மாளிகைகளின் மீது விழுந்தது. அதனால், அரக்கர்களின் மாளிகைகள் அனைத்தும் பற்றி எரியத் தொடங்கியது. அது முன்பு அனுமான் தனது வாலில் வைத்த தீ கொண்டு இலங்கை மாநகரத்தை சுட்டு எரித்தது போலக் காட்சி அளித்தது. அதில் பசும் சோலைகள் கூட பற்றி எரிந்தன. அங்கு வாழ்ந்து வந்த பறைவகள் அனைத்தும் கூட வெம்மை தாங்காமல் பரிதாபமாக சிறகை விரித்துப் பறந்து சென்றன.

அக்கணம் ஸ்ரீ இராமரும், இராவணனை யுத்தத்திற்கு அழைக்கும் படியாக, தமது பாணங்களை, இலங்கை மாளிகையின் இராஜ கோபுரம் மீது பிரயோகித்தார். அதனால், அந்த இராஜகோபுரம் இடிந்து விழுந்தது. மறுபக்கம் சஞ்சீவி மலையை முன்பு இருந்த இடத்தில் வைத்து விட்டு அனுமான் இலங்கையின் யுத்த களத்திற்குத் திரும்பினான். அக்கணமே போர்க்களத்தில் அவன் கண்ட காட்சிகளால் மிகுந்த உற்சாகம் அடைந்து அரக்கர்கள் நடுங்க மிகுந்த ஆரவாரத்தைச் செய்தான்.

பின்பு அனுமான் இலங்கையின் மேற்றிசை வாயிலை அடைந்தான். அங்கே அந்தச் சமயத்தில் இந்திரஜித்தும் வந்து சேர்ந்தான். அவன் வரும் பொழுதே, அவனால் உண்டாக்கப்பட்ட மாயா சீதையின் கூந்தலை ஒரு கையால் பற்றி இழுத்து வந்தான். அவனுடைய மற்றும் ஒரு கையிலே கொடிய வாள் மின்னிற்று. இந்திரஜித்து மாயா சீதையின் கூந்தலை விடாமல் பற்றிய படியே அனுமனிடத்தில்," இந்தச் சீதையின் பொருட்டே நீங்கள் அனைவரும் இங்கு வந்து போர் புரிகின்றீர்கள் அல்லவா? ஒரு வேளை, இந்த சீதை இறந்து விட்டால்! அதாவது இவளை நான் கொன்று விட்டால் என்ன செய்வீர்கள்?" என்று கோபத்துடன் கூறினான்.

அது கேட்டு அனுமான் அஞ்சி மனம் தளர்ந்தான். பதற்றம் அடைந்தான். அந்த பதற்றத்தில் இந்திரஜித்து கைகளில் அகப்பட்டு தவித்துக் கொண்டு இருப்பது மாய சீதை என்பதை அவன் அறியாதவன் ஆனான். அதனால் மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். அவனுக்கோ ஒரு வழியும் புலப்படவில்லை. அவனது உயிர் அவனிடமே இல்லை. துக்கத்தால் நாக்கு வறண்டு பறி தவித்தான். கடைசியில் அனுமன், இந்திரஜித்தைப் புகழ்வதே சீதையை அவனிடமிருந்து மீட்பதற்கான வழி எனத் துணிந்தான். மறுகணம் அவன் அந்தக் கொடியவனைப் பார்த்து," குணத்தில் சிறந்தவனே! நீ இவ்வாறு பெண்களிடத்தில் வீரத்தைக் காட்டலாமா? அது உன்போன்றவருக்கு அழகோ? பிற்காலத்தில் உலகம் உன் போன்ற வீரனை தூற்றுமே! அது உனக்குத் தகுமோ! பெண் கொலை புரிவது பாவம் இல்லையோ!" என்றான்.

ஆனால் இந்திரஜித்தோ அனுமன் மேற்சொன்ன எதையும் காதில் வாங்காதவனாக சீதையின் தலையை தனது மறு கையில் இருந்த வாளால் அறுக்கத் தொடங்கினான். அக்கணம் அந்த மாயா சீதை ஸ்ரீ இராமனின் நாமத்தை சொல்லி கதறி அழுதாள். அனுமான் தனது காதுகள் கொண்டு மாயா சீதையின் அந்தக் கதறலைக் கேட்டான். அக்கணமே அவன் செய்வதறியாது தவித்தான். அவனது பலம் எல்லாம் சோர்ந்து விழுந்து ஜடம் போல ஆனான். சிந்திக்கும் ஆற்றலையும் இழந்தான். மறுபக்கம் மாயா சீதையின் கழுத்தை முழுவதுமாக அறுத்து தலையையும், உடலையும் தனது தேரிலேயே வைத்து எடுத்துஸ் சென்றான் இந்திரஜித்து. அப்போது அவன் அனுமானிடத்தில், " ஏய் மாருதி ! இதோ பார் சீதையின் தலை. சீதை இறந்து விட்டால், இனி அவள் திரும்பப் போவதில்லை. இனி சீதை என்ன? அவளது உடல் கூட அந்த இராமனுக்குக் கிடைக்காதவாறு எடுத்துஸ் சென்று கடலில் உள்ள மீன்களுக்கு இறை ஆக்கப் போகிறேன். இன்னொன்றையும் கேள், நான் எனது பகையை இத்துடன் முடித்துக் கொள்ளப் போவதில்லை. இப்போதே எனது சேனைகளுடன் அயோத்தி நகரம் நோக்கிச் செல்லப் போகிறேன். அங்கு தானே, அந்தக் காட்டு வாசியான இராமனின் தாய், தம்பியர்கள் உள்ளனர். அவர்களை மாயப் போர் செய்து கொன்று வரப் போகிறேன்" என்றான்.

பிறகு, இந்திரஜித்து அயோத்தி இருக்கும் திசை நோக்கித் தனது சேனைகளுடன் வான் வழியே பறந்து செல்வது போல அனுமானின் முன்பு பாவனை செய்து விட்டு, ரகசியமாக அவன் முன்பு இராவணனிடம் சொன்ன நிகும்பலை என்னும் இடத்தை அடைந்தான். அங்கு தனது யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்யத் தொடங்கினான்.

இது இப்படி இருக்க சீதை இறந்து விட்டதாகவே அனுமான் நினைத்துக் கதறித் துடித்தான். தான் ஒரு மாவீரன், முன்பு சஞ்சீவினி மலையையே சுமந்து வந்த ஆற்றல் படைத்தவன் என்பதை எல்லாம் கணப் பொழுதில் மறந்து சிறு குழந்தையைப் போல," என் தாய், போய்விட்டார்களே! நான் என்ன செய்வேன்? ஸ்ரீ இராமபிரானிடத்தில் என்ன சொல்லுவேன்?" என்று கூறி மண்ணில் விழுந்து புரண்டு அழுதான்.

எனினும் கடைசியில் அனுமன் ஒருவாறு மனம் தேறி," இப்போது இங்கே நடந்ததை உடனே ஸ்ரீ இராமபிரானுக்குத் தெரிவிப்பேன். அது கேட்டு அவர் இறந்து போவாரானால் நானும் அவருடன் இறந்து போவேன்" என்று கூறிக் கொண்டு இராமபிரான் இருக்கும் திசை நோக்கி விரைந்தான். அவ்வாறு சென்ற மாருதி ஸ்ரீ இராமனைக் கண்டான் அவரது பாதத்தில் விழுந்து குழந்தை போலக் கதறி அழுதான்.

தமது காலடியில் மிக்கத் துன்பத்துடன் வந்து விழுந்த அனுமனை நோக்கி ஸ்ரீ இராமர்," நடந்ததைச் சொல்க!" என்றார்.

அனுமான் அந்த வினாடியில் பிராட்டியின் தலையை துண்டித்து இந்திரஜித்து கொன்ற விஷயத்தை ஸ்ரீ இராமரிடம் தெரிவித்தான். அந்தச் செய்தியை கேட்டது தான் தாமதம் ஸ்ரீ இராமர் உடம்பை அசைக்கவில்லை; அவரது கண்கள் இமைக்கவும் இல்லை; அவரது உதடுகளோ மேற்கொண்டு அசையவில்லை; சில நேரத்திற்கு அப்படியே சிலை போல நின்று, மண்ணில் மயங்கி விழுந்தார்; அது கண்டு தேவர்களும் ஸ்ரீ இராமருக்கு என்ன நேர்ந்ததோ என்று அச்சம் கொண்டார்கள்.

மறுபக்கம் மாருதி சொன்னதைக் கேட்டு வானரர்களும் நெஞ்சம் திடுக்கிட்டார்கள்; உணர்வு தளர்ந்தார்கள்; வாடைக் காற்றில் அடிபட்ட மரம் போல ஆனார்கள். அப்போது விபீஷணனும் அதனைக் கேட்டு மனம் கலங்கினான். 'இராமலக்ஷ்மணரை வெல்வது கடினம். இவளாலேயே அழிவு உண்டாயிற்று' என்று எண்ணி இந்திரஜித்து சீதா பிராட்டியைக் கொன்று இருக்கலாம் என்று விபீஷணன் ஒருவாறு சந்தேகித்தான். ஆயினும், அவன் சற்றே மனம் தெளிந்து, இராமரின் முகத்திலே குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து தெளித்தான். மேலும், அவருடைய மயக்கத்தை தெளிவிப்பதற்க்கான எல்லாச் செயல்களையும் விரைந்து செய்தான். அவருடைய கைகளையும், கால்களையும் மெல்லப் பிடித்தான். விபீஷணன் அவ்வாறு செய்த மாத்திரத்தில் ஸ்ரீ இராமர் ஒருவழியாகக் கண்களைத் திறந்தார். அருகில் இருந்த அனைவரையும் கண்கள் கலங்கியபடி பார்த்தார்.

பிறகு ஸ்ரீ இராமர் "சீதை இறந்து விட்டால், இனி நாமும் இந்த உலகத்தில் வாழத் தான் வேண்டுமோ?" என்று சிந்தித்தார் .

தமையனார் மயக்கம் தெளிந்து விழித்து பார்த்ததைக் கண்டதும் லக்ஷ்மணன் அவரது மன ஓட்டத்தை அறிந்தவனாக ,"கண்கலங்க மனம் நொந்து, நடந்ததை அறிந்து, தாங்க முடியாமல் மிகவும் வருந்துகின்றவராயிருந்தும், இவர் பகைவரை அழிக்க மாட்டார். மானத்தினால் உயிர் போக வருந்துகின்றார்' என்று நினைத்தான். அந்நினைவு தோன்றியது தான் தாமதம். உடனே இராமரைத் தேற்ற எண்ணி, அவரை நோக்கி லக்ஷ்மணன் ," விதிப்படி முடிவு காலம் நெருங்கிவிட்டால், துன்பக் கடலில் மூழ்கிக் கிடப்பதே சிறியோர்கள் இயல்பு. ஆனால், தாம் அவ்வாறு இருப்பது அழகில்லை. அது உமக்குப் பழியைத் தேடித் தரும். அதனால், நாம் இறந்தாலும் பகைவரைக் கொன்று ஒழித்து விட்டே இறக்க வேண்டும். ஏனெனில், நாம் இப்போது துயரமிகுதியால் உயிரைப் போக்கிக் கொண்டாலும், பிராட்டியாரைக் கொன்ற பகைவர்களை, கொல்கின்ற வலிமை இல்லாததால் தான் நாம் இறந்தோம் என்று உலகம் நம்மைப் பழிக்கும் படி ஆகும். அதனால், எழுந்திருங்கள் அண்ணா! பகை வெல்ல, வில்லை எடுங்கள் பாணத்தைத் தொடுங்கள். அதை விடுத்து அறிவற்றவர் போல் துயரத்தினால் நீர் வீணே அமர்ந்து இருப்பது என்னே!" என்று கூறினான்.

இளையபெருமாளின் வார்த்தைகளைக் கேட்ட சுக்கிரீவன்," இளையபெருமாள் கூறுவதே சரி. நாம் உடனே பகைவர்களைத் தாக்கப் புறப்படுவோம். அவர்களது மார்பில் நமது கால்களைப் பதித்து மிதித்தே கொல்வோம்" என்று வீர ஆவேசமாகக் கூறினான். அது கேட்ட வானர வீரர்கள், அதன் படியே செய்வோம் என்று ஆர்பரித்தார்கள்.

அப்போது அனுமான் ஸ்ரீ இராமபிரானைப் பார்த்து," இன்னொரு செய்தியும் சொல்ல வேண்டியது உள்ளது" என்று தொடங்கி, ஸ்ரீ இராமபிரானிடம் இந்திரஜித்து அயோத்தி மீது போர்த் தொடுத்துச் சென்றுள்ளான் என்பதையும் கூறினான்.

அனுமான் கூறியதைக் கேட்டவுடனே, தமது தம்பிமார்களுக்கும், தாய்மார்களுக்கும் புதிதாக ஏற்பட்டுள்ள தீங்கினை எண்ணி, இராமர் மிகுதியாகத் துன்பம் கொண்டார். அதனால், சற்று முன் சீதை இறந்து விட்டாலே என்று அவர் கொண்ட அந்த துக்கம் மறைந்தது. சீதையைப் பற்றிய சோக சாகரத்தில் இருந்து கரையேறி, அவர் தணியாத ஜுவாலையுடன் கூடிய கோபத் தீயும் நடுக்கமும் மனத்திலே குடி கொள்ள கலக்கம் கொண்டு நின்றார்.

பின்பு ஸ்ரீ இராமர் லக்ஷ்மணனைப் பார்த்து, " லக்ஷ்மணா! எனது தீவினை இத்துடன் முடிந்து போய் விடக் கூடாதா? அயோத்தி வரையில் தொடர வேண்டுமா? அப்படியானால் சரி, இந்திரஜித்தின் படை வீரர்கள் அயோத்திக்கு சென்று தாக்குதல் நடத்துவதற்குள், நாம் அங்கு விரைந்து சென்று வழியிலேயே அரக்க சேனையைத் தடுக்க வேண்டும்.அதற்கு ஏதேனும் உபாயம் உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு இளைய பெருமாள்," ஐயனே! பரதன் அங்கு இருக்கும் வரையில் யாரால் அயோத்தியை அழிக்க முடியும்? மூன்று உலகமும் சேர்ந்து போரிட வந்தாலும், பரதனால் அதனை சமாளித்து வெற்றி கொள்ள முடியும். அப்படி இருக்க நீர் இங்கு புலம்பித் தவிப்பது ஏனோ?" என்றான்.

லக்ஷ்மணன் அவ்வாறு பரதனின் ஆற்றலைப் பற்றி நம்பிக்கையுடன் கூறியதைக் கேட்டும் ஸ்ரீ இராமர் சமாதானம் அடையாமல் வருந்துவதைக் கண்டான் அனுமான். அக்கணமே ஸ்ரீ இராமரை நோக்கி," ஐயனே! இளையபெருமாள் கூறுவதைக் கேட்டும் தாங்கள் சமாதானம் அடையாமல் இருப்பீர்களானால், ஒன்றும் பிரச்சனை இல்லை, எனது தோளின் மீது ஏறிக் கொள்ளுங்கள். நான் உங்களை விரைந்து அழைத்துஸ் செல்கிறேன். இந்திரஜித்தை வழியில் வைத்தே மடக்கி விடலாம்" என்றான்.

அதன்படியே ஸ்ரீ இராமர் "அனுமன் கூறியதே சரி" என்று முடிவு செய்து அவனுடைய தோள்களில் ஏற சம்மதம் தெரிவித்த போது, இளையபெருமாளான லக்ஷ்மணனும் ஸ்ரீ இராமபிரனுக்குப் பாதுகாப்பாக உடன் வருவதாகக் கூற, இருவரையும் அழைத்துஸ் செல்ல அனுமான் பேர் உருவம் கொள்ள முடிவு செய்தான்.

அக்கணம் விபீஷணன் அனுமான் உட்பட இராம லக்ஷ்மணர்களைத் தடுத்தான். பிறகு ஸ்ரீ இராமபிரானிடம் விபீஷணன்," ஐயனே! நானும் உங்களைப் போல சில குழப்பங்களில் ஆழ்ந்து இருந்தேன். ஆனால், இப்போதோ அதில் இருந்து மீண்டுவிட்டேன். அதன் படி நான் சொல்லும் விஷயத்தைக் கேட்பீராக. முதலில் இந்திரஜித்து பிராட்டியாரை வெட்டிய செயலே ஒரு மாயம் என்று தான் எனக்குப் படுகிறது. காரணம், கொடிய இராவணன் சீதையை ஒரு போதும் கொல்லச் சொல்லி உத்தரவு பிறப்பிக்க மாட்டான். சீதைக்காக அனைவரையும் கொல்லுவானே தவிர யாருக்காகவும் சீதையை கொல்லத் துணியமாட்டான். ஏனெனில் அவன் சீதை மீது அவ்வளவு மோகத்தைக் கொண்டு இருக்கிறான். ஆகவே, சீதை உயிருடன் தான் இருக்க வேண்டும் என்று எனக்குப்படுகிறது. தவிர, இந்திரஜித்து ஒரு போதும் அயோத்தியைத் தாக்கும் முட்டாள் தனத்தை செய்ய மாட்டான். மேலும், அவன் பழைய எதிரிகளை ஒழிக்கத்தான் வழி தேடுவானே தவிர அதைவிடுத்து, அயோத்தியை தாக்கி இப்போது இருக்கும் சூழ்நிலையில் புதிய எதிரிகளை ஒரு போதும் உருவாக்கிக் கொள்ள மாட்டான். மேலும், அவன் ஏதோ ஒரு திட்டத்தை செயல் படுத்தவே இந்த நாடகத்தை இப்போது அரங்கேற்றி வருகிறான். அதனால் நான் வண்டின் ரூபத்தில் உரு மாறி அசோகவனம் சென்று உண்மையைத் தெரிந்து கொண்டு வருவதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்" என்றான்.

ஸ்ரீ இராமர் அதற்கு," அனுபவத்தில் சிறந்த விபீஷணன் கூறுவதே சரி" என்று சொல்லி அவனுக்கு அசோக வனம் செல்ல அனுமதி அளித்தார். அதன் படி விபீஷணனும் வண்டு ரூபம் கொண்டு அசோக வனத்தை அடைந்தான். அச்சமயம், சீதை அசோகவனத்தில் அமர்ந்து இருந்து, தனது மகள் திரிசடையுடன் ஏதோ பேசிக் கொண்டு இருப்பதைக் கண்டான். அதனால், " சீதை உயிருடன் தான் இருக்கிறாள்!" என்று சொல்லிக் கொண்டு அதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். மேலும் அந்த இந்திரஜித்து, தான் நிகும்பலையில் யாகம் புரிந்து கொண்டு இருக்கையில் பகைவர்களுடன் போர் செய்யக் கூடிய வீரர்கள் இலங்கையில் இல்லை என்ற காரணத்தினாலேயே, சீதையைக் கொல்வது போலவும், அயோத்திக்கு செல்வது போலவும், இப்படி மாயச் செயல் புரிந்து சென்றான் என்பதையும் புரிந்து கொண்டான்.

அவற்றை எல்லாம் புரிந்து கொண்டதும் விபீஷணன் மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பி, போர்க்களத்தில் உள்ள இராமபிரானை நோக்கி விரைந்து சென்றான். அவருடைய திருவடிகளிலே தனது தலை முடி படுமாறு வணங்கி எழுந்தான். பிறகு ஸ்ரீ இராமரிடம்," ஐயனே! பிராட்டியார் அசோகவனத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நான் அதனை எனது கண்கள் கொண்டு நேரிலேயே கண்டேன். அதனால், தாங்கள் இனியும் கவலை கொள்ளத் தேவை இல்லை. மேலும், கற்புக்கரசியான சீதைக்குத் தான் அழிவு உண்டோ? உண்மையில் நான் முன்பே சொன்னபடி இந்திரஜித்து நம்மை வருத்தும் படி மாயச் செயல் புரிந்து, நம்மை ஏமாற்றி விட்டு நிகும்பிலைக்குச் சென்று இருக்கிறான். மேலும், அங்கே நமை எல்லாம் அடியோடு அழிப்பதற்காக நிகும்பலை தேவியை மகிழ்வித்து யாகம் ஒன்றைத் தொடங்கி செய்கிறான். அப்படி ஒரு வேளை, அவன் நிகும்பலை தேவியை மகிழ்வித்து யாகத்தில் வெற்றி பெற்றால், பிறகு அவனை அந்தத் திருமாலாலும் வெல்லுதல் இயலாது. அதனால், இப்போதே தாமதிக்காமல் இளையபெருமாளுடன் சென்று இந்திரஜித்தையும், அவன் செய்யும் யாகத்தையும் அழிக்க விடை கொடுங்கள் !" என்று கூறி முடித்தான்.

சீதை உயிருடன் இருக்கிறாள் என்று விபீஷணன் வந்து கூறியவுடனேயே, ஸ்ரீ இராமபிரான் தமது சந்தேகம் நீங்கப் பெற்றார். அவனை இறுகத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பின்பு விபீஷணின் வார்த்தைகளை ஆராய்ந்து, அதில் உள்ள விபரீதத்தை அறிந்தவராக, அருகில் நின்று இருந்த லக்ஷ்மணனை அழைத்தார். அக்கணமே ஸ்ரீ இராமர் அருகிலே வந்து நின்றான் லக்ஷ்மணன். அப்போது ஸ்ரீ இராமர் லக்ஷ்மணனிடம்," லக்ஷ்மணா! உடனே விபீஷணன் துணையுடன் செல், கொடிய இந்திரஜித்தை வதைத்து வா! ஆனால், ஒரு விஷயம் எதிரி முதலில் பிரம்மாஸ்த்திரத்தைப் பயன்படுத்தாத வரையில் நீ, ஒருபோதும் அந்த அஸ்த்திரத்தை முதலில் பயன்படுத்திவிடாதே. அதுபோல, ஈசனின் பாசுபதாஸ்த்திரத்தையும், திருமாலின் நாராயண அஸ்த்திரத்தையும் எதிரி ஒன்று இணைந்து பயன் படுத்தினால், அப்போதே நீயும் அந்த அஸ்த்திரங்களை முறையே பயன்படுத்தி எதிரிகளைக் கொல்வாயாக. மொத்தத்தில் எதிரின் பாணங்களைப் பொறுத்தே நீ பாணங்களை எய்து அவற்றை அழிப்பாயாக!" என்று கூறினார்.

திரும்பவும் அவர் இளையபெருமாளைப் பார்த்து," ஐயனே ! இதோ, திருமாலின் வில். இதனைப் பெற்றுக் கொள்வாய். வெற்றியையும் பெறுவாய்! இந்த வில்லைப் பற்றி முன்பு அகத்திய முனிவர் கூறியவற்றை எல்லாம் நன்கு மனத்தில் படும் படியாக கேட்டு இருக்கின்றாய் அல்லவோ? இந்த வில், ஆயிரம் திருமுகங்களைக் கொண்ட பரம புருஷனின் உண்மையான வில்லாகும். இது உனது கைகளில் உள்ள வரையில் யாரால் தான் உன்னை வெல்ல முடியும்?" என்று சொல்லி, கவசத்துடன் அந்த வில்லைக் கொடுத்தார்.

அத்துடன் திருமாலின் அம்புராத் துணியையும் கொடுத்து, இன்னும் பல உறுதிகளையும் கூறி, சிவ பெருமானைப் போன்ற கோபத் தோற்றத்தையுடைய லக்ஷ்மணனைத் தழுவிக் கொண்டார். அந்தக் கணத்தில் தேவர்கள்," எங்கள் சிறுமைகள் நீங்கின!" என்றார்கள்.

அப்போது திரிபுரத்தை மிக்க உக்கிரத்துடன் எரிப்பதற்காக எழுந்த சிவபெருமான் போல, லக்ஷ்மணன் தோன்றிக் காட்சி அளித்தான்.

இறுதியாக ஸ்ரீ இராமர்," வீரனே! விபீஷணன் உட்பட மாருதி முதலான வானரத் தலைவர்களுடனே நீ செல்வாய்!" என்று, லக்ஷ்மணனுக்கு விடை கொடுத்தார். லக்ஷ்மணனும் அண்ணனை மீண்டும் ஒரு முறை வணங்கி யுத்தம் செய்யப் புறப்பட்டுஸ் சென்றான்.