திருவடிதொழுத படலம்

bookmark

 சுந்தர காண்டம்

கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

திருவடிதொழுத படலம்

(அனுமன் மீண்டும் கரை கடந்து சென்று அங்கதன் உள்ளிட்ட வீரர்களை சந்தித்து, தான் பிராட்டியைக் கண்டதையும் அத்துடன் இலங்கையில் நடந்தவற்றையும் பகிர்ந்து கொள்கிறான். பிறகு, வானர வீரர்கள் அங்கதனிடம் பசி என்று கேட்க. அங்கதன் அனைத்து வானர வீரர்களின் பசியைப் போக்க சித்தம் கொண்டு சுக்கிரீவனின் மனம் கவர்ந்த வனமான மதுவனத்தில் உள்ளப் பழங்களை உண்ணுமாறு அனுப்புகிறான். அக் குரங்குப் படை மதுவனத்தில் சந்தோஷித்து திளைக்கின்றன. அதனால், ஆத்திரம் அடைந்த அந்த வனத்தின் பாதுகாவலனான ததி முகன் அங்கதனைத் தாக்க. அங்கதன் பதிலுக்கு ததிமுகனை நாலு சாற்று, சாற்றி, " நான் உன்னை அடித்ததை சுக்கிரீவ அரசனிடம் போய் சொல். சுக்கிரீவ மகாராஜா, உனக்கு விளங்காததை, விளங்கிக் கொள்வார்" என்றான்.)
ததிமுகன் அங்கதன் கையால் வாங்கிய அறையில் பற்கள் விழுந்து ரத்தம் வர, கன்னம் வீங்க சுக்கிரீவனிடத்தில் போய் அங்கதன் செய்த காரியத்தை சொல்கிறான். ஒரு கணம் யோசித்த சுக்கிரீவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அருகில் இருந்த இராமபிரானைப் பார்த்து "ஐயனே, உங்கள் கவலைக்கு விடை கிடைத்து விட்டது. தென்திசை சென்ற வானர வீரர்கள் தவணை நாட்கள் பல கடந்தும் நேராக இங்கு வராமல், எனது உயிரினும் மேலான மதுவனத்தை அடைந்து அங்குள்ள பழங்களை உண்டு அதனை நாசம் செய்து மகிழ்ந்து, களிப்பில் உள்ளனர் என்றால் என்ன அர்த்தம்? அவர்கள் பிராட்டியைக் கண்டு பிடித்து விட்டார்கள் என்று தானே அர்த்தம்" என்றான். சுக்கிரீவனின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீ ராமன் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்.
பிறகு இராமபிரானை அனுமன் கண்டு, முதலில் பிராட்டி இருக்கும் திசையை வணங்கி பிறகு ஸ்ரீ இராமனையும் வணங்கி தான் பிராட்டியைக் கண்ட செய்தியைக் கூறுகிறான். அப்படியே, பிராட்டி தன்னைக் கண்டதற்கு அடையாளமாகக் கொடுத்த சூளாமணியை ஸ்ரீ இராமனிடம் தருகிறான். அது கண்டு ஸ்ரீ இராமர் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். உடனே, நண்பன் சுக்கிரீவனிடத்தில் வேண்டி, வானர வீரர்களை அணிவகுத்து இலங்கையைத் தாக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கூறுகிறார். இதுவே இப்படலத்தில் காணக் கிடைக்கும் செய்திகள் ஆகும்.
சீதா பிராட்டியிடம் இருந்து விடை பெற்றுச் சென்ற அனுமான் ஆகாய மார்க்கமாக சென்று கொண்டு இருக்கும் போது நடுக் கடலில் மீண்டும் மைனாக மலை அனுமனின் முன் தோன்றி, "வாயுவின் வீரப் புதல்வனே! வெற்றி என்னும் வார்த்தைக்கு உரியவனே! இப்போதாவது என்னிடத்தில் தங்கி களைப்பு தீரச் செல்லலாம் அல்லவா?" என்றான்.
அனுமனும் சீதா பிராட்டியைக் கண்ட மகிழ்ச்சியில், மைனாக மலையின் வேண்டுகோளுக்கு இணங்க, அம்மலையில் இறங்கி சில கணங்களே ஓய்வு எடுத்து விட்டு. அப்படியே, இலங்கையில் நடந்த விவரங்களையும் மைனாக மலையிடம் பகிர்ந்து விட்டு, மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தான்.
அவ்வாறு தனது பயணத்தைத் தொடர்ந்த வீர அனுமான். அங்கதன் தங்கி இருக்கும் மகேந்திர மலையின் ஒரு பகுதியில் மீண்டும் குதித்தான். அப்போது, அனுமன் குதித்ததால் பெரும் ஓசை கேட்க, வானர வீரர்கள் அந்த ஓசை கேட்ட திசை பக்கம் ஓடிவந்து பார்க்க, அங்கே அனுமன் நிற்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அனுமனைக் கண்ட மகிழ்ச்சியால் சில வானர வீரர்கள் அழுதார்கள்; சிலர் அனுமன் எதிரில் நின்று அவனை வரவேற்பது போல ஆரவாரம் செய்தனர்; சிலர் இன்னும் அனுமனை நெருங்கி, அவன் முன்பு எடுத்த விசுவரூபத்தால் அவனை கடவுளாக பாவித்து வணங்கினார்கள்; சில வானர வீரர்கள் அனுமனை விழுங்கி விடுவது போலச் சூழ்ந்து கொண்டார்கள்; சிலர் அவனைத் தழுவிக் கொண்டார்கள்; இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட வானர வீரர்கள் ஒரு படி மேலே போய் அனுமனைத் தங்கள் தலைமேல் தூக்கிக் கொண்டு கூத்தாடினார்கள்.