கடல் காண் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
கடல் காண் படலம்
(எழுபது வெள்ளம் வானர சேனை சூழ, இராமபிரான் கடலைக் காணுதலும் - பிராட்டியின் நினைவால் வருந்துதலும் - கடலின் தோற்றமும் – மேல்விளைவை எண்ணி இராமபிரான் சிந்தித்தலும் இப்படலத்துள் கூறப்படும் செய்திகளாகும்)
இராமபிரானுடன் சென்ற எழுபது வெள்ளம் வானர சேனைகளும் தென்திசைக் கடற்கரையில் சென்று தங்கின. அவற்றின் பாரத்தைத் தாங்க முடியாமல் தென்திசை தாழ்ந்தது. அதனால் வடதிசையில் உள்ள இமயம் போன்ற பெரிய மலைகளும், வடகடலும், வடதிசைப் பூமியும் வான்முட்ட மேலே எழுந்தன. சங்கு போன்ற தூயவளான சீதையைப் பிரிந்த பின்பு, தமக்கு இனமான தாமரைகள் இதழ்களைக் கோவித்து உறங்கத் தொடங்கிய இராப்பொழுதிலும், ஸ்ரீ இராமபிரானின் திருக்கண்கள் தூங்குவதை மறந்திருந்தன. அக்கண்களிலே இப்போது மகிழ்ச்சி தோன்றியது. அந்த மகிழ்ச்சியுடன் தமது கண்களால் வானரப் பெரும் படை தங்கிய கடலைக் கண்டார்.
அப்போது அந்தக் கடல், தென்றலால் அலையைப் பரப்பியது! கடல் அலைகளின் மேல் ஊர்ந்து வந்து கொண்டிருந்த தென்றல் காற்று, இராமரைக் கண்டு சிறிதும் இரக்கம் கொள்ளவில்லை. அவருடைய உடம்பின் மேல் தென்றல், புன்னை மலர்களின் நறுமணமுள்ள மகரந்தப் பொடியை பூசிச் சென்றது. அதிலும் சீதையின் ஸ்பரிசத்தை அவர் உணர்ந்தார்
கடலில் தோன்றிய முத்துக்கள் கரையிலே ஒதுங்கி இருந்தன. அவைகள் சீதையின் முறுவல் போல் தோன்றி இராமபிரானுக்கு வருத்தத்தைத் தந்தன. அப்போது தமது மனதிற்குள் ஸ்ரீ இராமர், " ஏ முத்தே! மயில் போன்ற சாயலை உடையவளான சீதை தங்கி இருக்கும் இடம் வெகு தூரத்தில் இல்லை. அதனால், நெஞ்சம் அவளிடத்தில் செல்லப் பார்க்கவும், பகைவனைக் கொல்லாது அவனிடத்தில் இருப்பவளிடம் செல்வது தகாது என்று தம் வீரத்தின் மானம் அம்மனத்தைத் தடுத்து நிறுத்தவும், நாள்தோறும் பிரிவுத் துன்பத்தால் இளைப்பவனான என்னிடம் பிராட்டியின் பல்லொளி வெளியே தெரிகின்ற புன்சிரிப்பைக் காட்டி எனது உயிரைக் கவர்ந்து செல்ல வருகிறாயோ? நீ அப்படிச் செய்ய, இரக்கமில்லாத அரக்கருடன் உனக்கு ஏதேனும் உறவு உண்டோ?" என்று சொல்லிக் கொண்டார்.
இராமபிரானின் திருவடிகளில் தனது அலைக் கரங்களால் கடல் வந்து தொட்டு வணங்கிச் சென்ற படி இருந்தது. அப்படிச் சென்ற ஒவ்வொரு கணமும், அக்கடல் சீதையின் துன்பத்தை தன்னிடம் எடுத்து சொல்வது போல இராமபிரான் உணர்ந்தார். அது மட்டும் அல்ல, இன்னொரு வகையில் கரை தொட்டுச் செல்லும் அந்தக் கடல் அலைகளை தான் பார்த்த ஒவ்வொரு கணமும், அரக்கர்களைக் கொன்று, சீதா பிராட்டியை அழைத்துச் செல்ல வரும் தன்னை பெரியோர்கள் பலர் சேர்ந்து வரவேற்பது போல உணர்ந்தார். இவ்வாறாக தமிழகத்தின் கடற் கரையில் நின்ற படி ஸ்ரீ இராமர் ஒவ்வொரு கணமும் சீதையை நினைத்து ஏங்கிக் கொண்டு இருந்தார்.