இப்படியும் கூட ஒரு பேய

bookmark

சாரதா, சதாசிவம் ஆகிய இருவரும் புதிதாக திருமணம் ஆனவர்கள். சதாசிவம் பட்டணத்தில் அரசு வேலை பார்ப்பவர். அதவாது ரயில் வேயில் இன்ஜின் டிரைவராக பணிபுரிபவர். சாரதா கிராமத்தில் வளர்ந்து இருந்தாலும் பட்டப் படிப்பு முடித்தவள். இவர்கள் இருவரின் திருமணம் முடிந்த கையோடு பட்டணத்தில் ஒரு தனி வீடு பார்த்துக் குடி ஏறினார்கள். நல்ல பெரிய வசதியான வீடு.

பெரும்பாலும் சதாசிவம் இன்ஜின் டிரைவராக பணிபுரிவதால் சில சமயங்களில் ஷிப்ட் மாறி, மாறி இருக்கும். அப்படி இருக்கும் போது ஒரு நாள் இரவு சாரதா வீட்டில் தனியாக படுத்து உறங்கிக் கொண்டு இருந்தாள். இரவு பன்னிரண்டு மணி வீட்டின் வாசல் கதவு தட, தட வென அடித்தது. அந்த சமயம் தெருவியில் வரிசையாக நாய்கள் ஊளை இடும் சத்தம் அதிகமாகக் கேட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சாரதா விழித்து எழுந்தாள். அந்த நடு இரவு ஜாமத்தில் தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு காற்று கூட இல்லாத நிலையில் பூட்டிய வாசல் கதவுகள் தனது கண் முன்னாலேயே அதிர்வதைக் கண்டு அலறினாள். செய்வதறியாது திகைத்தாள். அன்று இரவு முழுவதும் அவள் தூங்கவே இல்லை.

அடுத்த நாள் காலை அவள் வீட்டுக்கு காய்கறி விற்கும் பெண் வந்தாள். அவள் பெயர் மாரியம்மாள். சாரதாவிடம் கொஞ்சம் நன்றாகப் பேசிப் பழகுவாள். அவளிடம் சாரதா நள்ளிரவில் காரணம் இல்லாமால் பூட்டிய கதவுகள் ஆடுவதை எடுத்து உரைத்தாள். அதனைக் கேட்ட மாரியம்மாள்," அம்மா! நான் முன்பே உங்களிடம் சொல்லி இருக்க வேண்டும். நீங்கள் இப்போது குடியிருக்கும் வீட்டில் முன்னொரு காலத்தில் ராணுவத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது மனைவியுடன் குடி இருந்தார். ராணுவத்தில் எதிரிகளுடன் நேர்ந்த சண்டையில் அவர் இறந்து விட்டார். இதனைக் கேள்விப்பட்ட அவரது மனைவி இதே வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல். சில நாட்களுக்கு முன்பு கூட சிலர் ஒரு பெண் அடிக்கடி இரவு பன்னிரண்டு மணிக்கு முக்காடு போட்டுக் கொண்டு தெருவில் அழுது கொண்டே நடப்பதாக சொல்லிக் கேள்விப் பட்டு இருக்கிறேன். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது நீங்கள் எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள் அம்மா" என்று கூறிச் சென்றாள்.

மாரியம்மாளின் பேச்சை கேட்ட சாரதாவுக்கு இன்னமும் பயம் அதிகமாகியது. கணவர் வரட்டும் எனக் காத்துக் கொண்டு இருந்தாள். ஆனால் கணவர் அடுத்த நாள் இரவு தான் வருவார். அதுவரை என்ன செய்வது என்று சாரதா திகிலுடன் யோசித்துக் கொண்டு இருந்தாள். அந்த யோசனையில் அன்றைய பொழுது மெல்ல விடைபெற்றுச் சென்றது. மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் தெய்வப் படங்களுக்கு பூஜை செய்து கந்த ஷஷ்டி கவசம் படித்தாள் சாரதா. இரவு வேளையும் வந்தது. கடவுளை நன்கு வேண்டி படுக்கச் சென்றாள், புரண்டு, புரண்டு படுத்தவள் ஒருவழியாக சிறிது நேரம் கண் அசந்தாள். வீட்டில் இருந்த கடிகாரம் சரியாக பன்னிரண்டு மணியை அடித்து முடித்து. வழக்கம் போல வெளியில் சத்தம். கூர்ந்து கவனித்தாள் சாரதா, அப்போது நாய்கள் அனைத்தும் ஊளையிட்டு அழுதன. சிறிது நேரத்தில் வாசல் கதவுகள் மிக வேகமாக அதிர்ந்தன. அப்போது சாரதா அடுத்த நிமிடம் என்ன ஆகும் என்று அனுமானிக்கத் தெரியாமல் திகைத்து நின்றாள். மாரியம்மாள் அன்று காலை சொன்ன விஷயங்கள் அனைத்தும் அவளுக்கு நினைவு வந்தது. உத்திரத்தை பார்த்தாள். அப்போது கதவுகள் இருக்க, இருக்க பலமாக அதிர்ந்து கொண்டே இருந்தது. சரியாக பத்து நிமிடங்கள் கழித்து தானாக நின்றது.

இதையெல்லாம் பார்த்த சாரதா அடுத்த நாள் காலை கடும் காய்ச்சலில் படுத்தாள். அப்போது காய்கறி சுமக்கும் மாரியம்மாள் வந்தாள். கதவைத் தட்டினாள். சாரதா மெல்ல சென்று கதவைத் திறந்தாள். நடந்த விஷயங்கள் அனைத்தையும் மாரியம்மாளிடம் சாரதா பகிர்ந்தாள். பிறகு சாரதா மாரியம்மாளிடம் "மாலை எனது கணவர் திரும்பும் வரையில் என்னைப் பார்த்துக் கொள். அனைத்துக் காய் கறிகளையும் நீ சொல்லும் விலைக்கு நானே வாங்கிக் கொள்கிறேன். நீ உனது வியாபாரத்தைப் பற்றிக் கவலைப் படதே" என்று சொல்ல. மாரியம்மாள் அதற்கு சம்மதித்தாள்.

அன்று முழுவதும் மாரியம்மாள், சாரதாவை நன்கு கவனித்துக் கொண்டாள். மாலைப் பொழுது முடிந்து இரவு வந்தது. சதாசிவம் வீடு திரும்பினார். அவரிடம் சாரதாவும், மாரியம்மாளும் அனைத்து விவரத்தையும் கூறினார்கள். பிறகு மாரியம்மாள் விடைபெற்றாள். மறுபுறம், சதாசிவம் அதனைக் கேள்விப்பட்டு திடுக்கிட்டார். ஆனால், அவருக்கு பேய், பிசாசுகள் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை. எனினும், தனது மனைவி பொய் கூற வேண்டிய அவசியம் இல்லை என்பததையும் அவர் அறிந்து இருந்தார். இறுதியில் மனைவிக்கு ஆறுதல் சொல்லி தூங்க வைத்தார். கணவர் உடன் இருக்கும் தைரியத்தில் சாரதா நன்றாக உறங்கிவிட்டாள். மணி பன்னிரண்டு அடித்தது அதே போல நாய்கள் ஊளையிட கதவுகள் தானாக அதிர்ந்தது. இப்போது இது கண்டு சதாசிவமே திடுக்கிட்டார். அப்போது சாரதாவும் எழுந்தாள்.

"பார்த்தீர்களா! நான் சொன்னதை நீங்கள் நம்பவில்லையே. இப்போது என்ன சொல்கின்றீர்கள்?" என்றாள். சதாசிவம், சாரதா பின்தொடர மெல்ல கதவிடம் சென்றார். கைகளில் ஒரு டார்ச் லைட் மட்டுமே இருந்தது. நன்றாக கூர்ந்து கவனித்தார். சூழ்நிலைய புரிந்து கொண்டார். அதிரும் கதவை தொட்டு நிறுத்தி காதுகள் வைத்து வெளியில் நடப்பதை கேட்டார். அப்போது எங்கோ வெடி, வெடிக்கும் சத்தம் கேட்டது. நன்றாக அதனை கூர்ந்து கவனித்ததில் அது சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கல் குவாரியில் இருந்து வெளிவரும் டைனமெட் வெடிக்கும் சத்தம் தான். அந்த சத்தத்தை கேட்டுத் தான் நாய்கள் பயந்து ஊளையிடுகிறது என்று புரிந்து கொண்டார். மனைவிக்கு சாட்சியுடன் இதனை விளக்கினார். சாரதா புரிந்து கொண்டாள். ஆனால் அவளுக்கு கதவு ஆடுவது புதிராக இருந்தது. அது பற்றி அவள் சதாசிவத்திடம் கேட்டாள். சதாசிவம் கதவுகளை கூர்ந்து கவனித்தார். அச்சமயம் கதவில் இருக்கும் ஸ்க்ரூ கழன்று நிற்பதை கவனித்தார். மனைவிடம் அதனைக் காண்பித்து, "பார்த்தாயா சராதா, அருகில் இருக்கும் கல் குவாரியில், பாறையை பிளக்க வெடி வெடிக்கிறார்கள். பத்து முதல் பதினைந்து நிமிடம் வரையில் நீ அந்த வெடி சத்தத்தை கேட்கிறாய். அச்சமயத்தில் ஏற்படும் பூமி அதிர்ச்சியாலும், கதவில் ஸ்க்ரூ கழன்று நிற்பதாலுமே கதவு அதிர்ந்து ஆடுகிறது. வெடி சத்தம் நின்றவுடன் கதவின் அதிர்வும் பத்துப் பதினைந்து நிமிடங்களில் நின்று விடுகிறது. இதற்குப் போய் பயந்தாயே?" என்று சொல்ல, சாரதா அது கேட்டு வெட்கித் தலை குனிந்தாள்.