இப்படியும் ஒரு சம்பவம்

bookmark

மோகன் ராம் ஐ. டி. துறையில் பல வருடங்களாக பணிபுரிபவர். இவருக்கு திருமணமாகி "மாலதி" என்ற மகள் பள்ளியில் பிளஸ் டூ படித்துக் கொண்டு இருந்தாள். சில நாட்களாகவே மாலதியின் நடவடிக்கைகளில் பல மாற்றங்களைக் கண்டார் மோகன் ராம். மாலதி அடிக்கடி 'எனக்கு கப்பக்கிழங்கு வேணும்' 'டீ வேண்டாம். கட்டங்காபி போதும்' என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தாள். பிளஸ் டூ படிக்கும் அவளுடைய இந்த நடவடிக்கை மாறுதல்களைப் பார்த்து மோகன் ராம் புலம்ப 'கூட படிக்கற பொண்ணுக யாராவது மலையாளீஸ் இருப்பாங்க. அவ வீட்டுக்குப் போய் பழகியிருக்கலாம்' என்று சமாதானப் படுத்தினார்கள் உடன் பணி புரிந்த நண்பர்கள்.

சில நாட்கள் கடந்த பிறகு மோகன் ராம் அலுவலக வேளையில் பிஸியாக இருந்த போது அவருடைய மனைவியிடமிருந்து "ஏன்? எதற்கு என்று கேட்காமல் உடனே வாருங்கள்" என்று அலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. போய்ப் பார்த்ததில் மதிய உணவுக்கு உட்கார்ந்த மகள் தட்டில் இருந்த சோறை வீசி எறிந்து 'எனக்கு புழுங்கலிரிசி தான் பிடிக்கும்னு ஒனக்குத் தெரியாதா? எத்தனை நாளா இந்த கேடுகெட்ட சாப்பாட்டை சாப்பிடறது?' என்று கத்தியிருக்கிறாள். கத்தியது சுத்தமான மலையாளத்தில். மோகன் ராமுக்கோ, அவரது வீட்டாருக்கோ மலையாளம் தெரியவே தெரியாது. குரல் வேறு அடியோடு மாறிவிட்டிருந்தது. சிறிது நேரத்தில் மாலதி மயங்கி விழுந்தாள்.

உடனே பயந்து போய் அவர்கள் வீட்டாரும், அக்கம்பக்கத்தவரும் என்னென்னவொ சொல்ல, அதையெல்லாம் நம்பாத மோகன் ராம் நல்ல மருத்துவரிடம் தனது மகளை அழைத்துச் சென்றார். அப்போது மாலதியின் உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால் அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று முதலில் க்ளூக்கோஸ் ஏற்றுமாறு மருத்துவர் பணித்தார். அதன் படி தனது மகளை மருத்துவ மனையில் சேர்த்தார் மோகன் ராம் (அது வரையில் மாலதி மயக்கத்தில் தான் இருந்தாள்) திடீரென விழித்துக் கொண்ட அவள் 'அவனை உள்ள வரவேண்டாம்னு சொல்லு. அவனை உள்ள வரவேண்டாம்னு சொல்லு' என்று மலையாளத்தில் மீண்டும் கூச்சல் போட்டாள்.

என்னவென்று மோகன் ராமும் அவரது மனைவியும் வெளியே சென்று பார்த்தபோது இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மோகன் ராமின் நெருங்கிய நண்பர் ஒருவர் சர்ச்சிலிருந்து பாதிரியாரை அழைத்து வந்திருந்தார். பாதிரியாரும் அறையினுள் காலடி எடுத்து வைக்க மறுத்து "ஒரு பிசாசு அவகிட்ட இருக்கு. நீங்க சாயந்திரமா ஜெபக்கூட்டத்துக்கு அவளை எப்படியாவது கூட்டீட்டு வாங்க" என்று கூறி திரும்பச் சென்று விட்டார்.

அதற்குப் பிறகு மாலதியை பல சங்கடங்களுக்கு நடுவில் பாதிரியாரின் ஜபக் கூட்டத்து அவளது பெற்றோர்கள் வேறு வழி இல்லாமல் அழைத்துச் சென்றார்கள். மோகன் ராமுக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், மகளுக்காக அந்த தேவாலயத்துக்குச் சென்றார். பாதிரியார் புனிதத் தண்ணீரை தெளித்து விசாரித்ததில் வந்த பேயின் பெயர் மிஸ்டர்.ராஜீவ் மேனன். அவரது பூர்வீகம் கோழிக்கோடு. அவர் காதலித்த பெண்ணை வேறு யாருக்கோ கல்யாணம் செய்து வைத்ததால் ராஜீவ் தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த ராஜீவின் முன்னாள் காதலியும், அன்னாள் யாரோவின் மனைவியுமான அந்த அபலைப் பெண்ணும் குற்ற உணர்வில் தற்கொலை செய்து கொண்டாள். தற்கொலை செய்து கொண்ட தனது முன்னாள் காதலியைத் தேடி ராஜீவ் ஊர் ஊராக, நாடு நாடாக ஆன்ம ரூபத்தில் அலைந்து திரிந்து உள்ளார். மோகன் ராமின் மகள் சற்றேறக்குறைய ராஜீவின் முன்னாள் காதலியின் சாயலை ஒத்து இருப்பதால் அவளை பிடித்துக் கொண்டதாகச் சொல்லியது அந்த ராஜீவ் ஆவி.

அதனைக் கேள்விப்பட்டு மோகன் ராம் கண்டபடி அந்த ஆத்மாவை திட்டித் தீர்த்தார். அதனை தடுத்த அந்தப் பாதிரியார் "இப்படி எல்லாம் சொல்லி அந்தப் பிசாசை நாம் உசுப்பேற்றக் கூடாது. நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள்" என்று மெல்ல மோகன் ராமின் காதுகளில் முணுமுணுத்தார். பிறகு மீண்டும் அந்த ஆத்மாவிடம் 'இதோ பார்.. இந்தப் பெண் உன் காதலியின் சாயலில் இருக்கிறாளல்லவா.. இவளை நீ இப்படித் துன்புறுத்தலாமா?' என்று கேட்டு பக்குவமாக அந்த ஆவியை சத்தியம் வாங்கிக் கொண்டு துரத்தி அடித்தார் (அந்தப் பாதிரியார்).

அதன் பிறகே மாலதி தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாள்.