இன்னொரு நண்பர் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறா

அன்று பார்த்த மர்ம உருவம்:-
காரில் எப்பொழுதும் நான் வேலைக்கு போய் வருவது வழக்கம்… கடந்த ஒன்றரை வருடமாக ஒரு பிரபலமான தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன்.
எப்பொழுதுமே அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து நான் வேலைக்கு கிளம்பிவிடுவது வழக்கம். அன்றும் அப்படித் தான் காரில் போய்க்கொண்டிருந்தேன்…
அது ஒரு அமெரிக்கத் தெரு என்பதனால் சந்திச் சமிக்ஞை விளக்குகள் தானாக ஒளிர்ந்து மூடும்... பராமரிப்பாளர்களோ காவலர்களோ யாரும் இருப்பதில்லை.
அதிகாலையில் பனிப்பொழிவு கொஞ்சம் இருந்தமையால் நான் வழமைக்கு மாறாக மெதுவாகப் போய்க்கொண்டிருந்தேன். வழக்கமாக நான் போய்வரும் பாதை என்பதால் எனக்கு மேடு - பள்ளம் எங்கிருக்கும் என்பதெல்லாம் அத்துப்படி... இருப்பினும் பனிக்கால எச்சரிக்கையாக கொஞ்சம் மெதுவாகவே நான் காரைச் செலுத்தினேன். குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும் நான் பார்த்த அந்தச் சம்பவம் என்னை நிலைகுலைய வைத்தது.
இது நடந்து ஒரு வருடம் கடந்து விட்டாலும் இன்னும் என் மனக்கண் முன் அது நிழலாடுகின்றது...
இந்த இரண்டரை வருட அமெரிக்க வாழ்வில் நான் பல நிகழ்வுகளைச் சந்தித்திருந்தாலும் என்னை ஒருகணம் உறைய வைத்த வினோத நிகழ்வு அது...
ஒருகணம் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை... என் கண்கள் இருட்டத் தொடங்கின. காரின் வேகம் படிப்படியாக குறைந்து அடங்கிப் போகும் நிலைக்கு வந்துவிட்டது... கை கால்கள் பதறத் தொடங்கின…
அதனைப் பேய் என்றும் சொல்ல முடியவில்லை.... பிசாசு.... தேவதை... அப்படி எதுவும் இருப்பதாகவும் நான் நம்பவில்லை.
அப்படியாயின் அது என்னவாக இருக்கும் கிட்டத்தட்ட ஒரு மனிதன் போலவும்... ஆடுபோலவும்... கரடிபோலவும் சிலசமயம் மூன்றும் கலந்த உருவம் போலவும் அது இருந்தது...
கண்களில் அவ்வளவு ஒரு பிரகாசம் காரின் வெளிச்சத்துக்கு அது தன் முகத்தைத் திருப்பியபோது நான் அதிர்ந்து போனேன்...
அதன் கண்களில் இருந்து எதோ ஒன்று என்னுள் தாக்கியது. ஒரு கணம் என்ன நடக்கிறது என்பதைக் கூட என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒரு மின்னல் பொழுதுதான்... அடுத்த கணமே அது வீதியைத் தாண்டி மறுகரைக்குச் சென்று மறைந்துவிட்டது.
பின்னர் மீண்டும் என்னை இயல்பு நிலைக்குத் திருப்பி ஒரு சீருக்குக் கொண்டு வந்த நான்...
அன்றையநாள் வேலைக்கு போய்விட்டேன்... அன்றிலிருந்து இன்றுவரை அதே பாதையில் தான் வேலைக்கு போய் வருகிறேன்...
மீண்டும் ஒரு முறையாவது நான் அதனைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் அதைத் தினமும் தேடுகிறேன்....
குறிப்பிட்ட அந்த இடம் வந்ததும் என்னையும் அறியாமல் என் கண்கள் அதைத் தேடியலைவதை என்னால் உணர முடிகின்றது...
ஒரு வருடமாகியும் பார்க்க முடியாத ஒன்றை மீண்டும் என் வாழ் நாளில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை....
அமேரிக்காவில் இருந்து நண்பர் ஒருவர் ஒரு சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டது..